Published:Updated:

உப்பு வெச்ச இடம்தான் மிச்சம்!

டி.அருள் எழிலன், படங்கள்: கே.குணசீலன்

##~##

 ''யாரு... டேப்பு காதரைக் கேக்கிறீங்களா? மூச்சுவிடாமப் பாடித் திரிஞ்ச மனுஷனப்பா. இப்போ அதோ அந்தக் குச்சுக்குள்ள முடங்கிக்கிடக்குறாரு!'' என்று ஒரு குடிசையைக் காட்டுகிறார்கள் தஞ்சையின் உப்பிலி மானோஜிப்பட்டி ஏரியாவாசிகள்.

குனிந்து குடிசைக்குள் போன நம்மைக் கண்டதும் எழுந்திருக்க முயல்கிறார் காதர். முடியவில்லை. முதுமையின் வீச்சத்தை நிறைத்திருக்கும் அந்தக் குடிசைகூட அவருடையது அல்ல. இறுதிக் காலத்தை இரவலாகக் கழிக்கும் டேப் காதர், தமிழகத்தில் மிக அரிதாக மிஞ்சியிருக்கும் லாவணிக் கலைஞர். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே பாடத் தொடங்கி, ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும், பின்னர் மார்க்சிஸ்ட் கட்சிக்காகவும் தமிழகமெங்கிலும் தெருத் தெருவாக முழங்கி ஓய்ந்துபோன காதரை, இப்போது கட்சியும் கவனிக்கவில்லை; குடும்பத்தினரும் விலக்கிவிட்டார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தனது 87-வது வயதில், செருப்பு தைக்கும் தொழிலாளி ராஜேந்திரன் - செல்வி தம்பதியரின் வயதான  குழந்தையாக இருக்கும் டேப் காதருக்கு பூர்வீகம் கும்பகோணம் அருகே மேலகாவிரி.

''வீட்ல எனக்கு வெச்ச பேரு, அப்துல் காதர். 'டேப்’புங்கிறது கை விரலால தாளம்போடும் ஒரு வாத்தியம். இஸ்லாமிய பக்கீர்கள் பயன்படுத்தி வந்த அதை, இப்போ என்னை மாதிரி லாவணிக் கலைஞர்கள் பயன்படுத்துறாங்க. அதனால 'டேப் காதர்’ ஆகிட்டேன் நான். என் அம்மா நெல் அவிச்சு அரிசி வியாபாரம் பார்த்தாங்க. அப்பாவுக்கு மாந்திரீகத் தொழில். மந்திரிச்சு கயிறு கட்ட நிறையப் பேர் வீட்டுக்கு வருவாங்க. நான் பள்ளிப் படிப்பை அஞ்சாப்போட நிறுத்திட்டேன். என் தாய்மாமன் ஷேக் தாவூத், நல்ல லாவணிப் பாடல் கலைஞர். அவர்கிட்ட இருந்துதான் லாவணிக் கலைஞர் ஆகும் ஆசை எனக்குத் தொத்திக்கிச்சு. பகல் முழுக்க வேலை பார்த்துட்டு, சாயங்காலத்துக்கு மேல லாவணிப் பாட்டு கத்துக்கப் போவேன்!'' என்று நிறுத்தி மூச்சு வாங்கிக்கொள்கிறார்.

உப்பு வெச்ச இடம்தான் மிச்சம்!

லாவணிப் பாடல் என்பது, வயல் வேலை பார்ப்பவர்கள் பதிலுக்குப் பதிலாகப் பாடிக்கொள்ளும் எசப்பாட்டு வடிவம் கொண்டது. தஞ்சை மண்ணுக்கே உரிய பிரத்யேக சொத்தான இந்த லாவணிப் பாடல்களை, இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய கலைஞர்களே பாடுகிறார்கள்.

''மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு தயாரிக்கும் கம்பெனில நான் ஹெல்ப்பர் வேலைக்குப் போனப்போ, அங்கே தொழிலாளர் பிரச்னை வந்தது. அந்தச் சச்சரவுதான்,  தொழிற்சங்கவாதி டி.எஸ்.சோமரா விடம் என்னைக் கொண்டுபோய் சேர்த்தது. நான் பாடுவதையும், இயல்பா  பழகுவதையும் பார்த்த அவர், என்னை கம்யூனிஸ்ட் கட்சியில சேரச் சொன்னார்; சேர்ந்தேன்!  

நாடு சுதந்திரம் அடைய இருந்த நிலையில், தெலங்கனா உள்ளிட்ட சில இடங்களில் கட்சி, ஆயுதப் போராட்டம் நடத்தியது. அதனால கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை பண்ணிட்டாங்க. அந்த சமயம் நான் கிராமம் கிராமமாப் போய் ஐஸ் வியாபாரம் செஞ்சிட்டு இருந்தேன். அப்போ தலைமறைவா இருந்த தோழர்களுக்கு ஐஸ் பெட்டிக்குள்ள மறைச்சுவெச்சு செய்தியை எடுத்துட்டுப் போய் கொடுக்குறதுதான் என் வேலை. அது தெரிஞ்சதும் போலீஸ் என்னைத் தேடவும், நான் மும்பைக்குத் தப்பிச்சுப் போயிட்டேன். கட்சிக்குத் தடை நீங்கிய பிறகு, தஞ்சாவூருக்குத் திரும்பினேன்.

உப்பு வெச்ச இடம்தான் மிச்சம்!

1952-ல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடந்தது. அப்போ கம்யூனிஸ்ட்களை பொதுமக்கள் கொஞ்சம் பயத்தோடதான் பார்ப்பாங்க. ஏன்னா, காங்கிரஸ்காரங்க சிவப்புக் கட்சிக்காரங்க மேல அந்தளவுக்கு பீதியை உருவாக்கிவெச்சிருந்தாங்க. அப்போ தேர்தல் பிரசாரத்துக்காக நான் தஞ்சாவூர் முழுக்க போய் பாடுவேன்...

'காங்கிரஸ் கட்சியிலே கொழுத்த பண முதலைகள்
கட்டாயம் தேர்தலில் நிப்பாங்க நிப்பாங்க...
இவங்கக் கருதி வந்துங்களிடம்
காசுக்கு ஓட்டு கேட்டால்
காரித் 'தூ’ என்று துப்புங்க... துப்புங்க’னு
பாடி பிரசாரம் செய்வேன். அது அப்போ பாட்டாளி மக்களிடம் நல்ல மாறுதலை ஏற்படுத்துச்சு!'' என்று அப்போதைய நினைவுகளில் மூழ்கி மௌனமாகிறார் டேப் காதர்.

ஒரு லாவணிப் பாடகராகக் கட்சிக்குள் வந்த டேப் காதர், தஞ்சை நகரச் செயலாளராகவும் மார்க்சிஸ்ட் கட்சியில் சில காலம் இருந்திருக்கிறார்.

''ரேஷன் அரிசி கடத்தல், வாய்க்கால் தகராறு, தீண்டாமைனு எல்லாப் பிரச்னையிலும் கட்சி தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுச்சு. களத்தில் நானும் நின்னேன். 1969-ல் சிவப்பு நாயக்கன் வாரி என்ற ஊரிலிருந்து ஜமீலானு ஒரு பொண்ணைப் பிடிச்சுட்டு வந்து காவல் நிலையத்தில் வெச்சு, 14 போலீஸ்காரங்க ரேப் பண்ணிட்டாங்க. அந்தப் பொண்ணு செத்துப்போச்சு. 'விஷம் குடித்து தற்கொலை’னு வழக்கு பதிஞ்சு ஜமீலாவைப் புதைக்கப் பார்த்தாங்க. நான் மக்களைத் திரட்டி ஊர்வலம் போனேன். அப்போ தமிழக முதல்வரா இருந்த கலைஞர், இந்த விவகாரம் தொடர்பா போலீஸ் கொடுத்த அறிக்கையை சட்டமன்றத்தில் வாசிச்சார். எங்களின் போராட்டம் காரணமா, மறு விசாரணைக்கு உத்தரவாகி அந்தக் குறிப்பிட்ட காவல் நிலையத்தின் மொத்த போலீஸாரும் சஸ்பெண்ட் ஆனாங்க. ஆனா, இப்படி அரசியல்ல நல்ல பேர் வாங்கினாலும், ஒரு வெத்துக் காகிதம் கணக்காதான் என்னை மதிச்சாங்க வீட்டு ஆளுங்க.

உப்பு வெச்ச இடம்தான் மிச்சம்!

'கால் காசுக்குப் பெறாத கம்யூனிஸ்ட் உன் அப்பன். நீங்களும் அப்படி ஆகிடாதீங்கடா’னு சொல்லிச் சொல்லித்தான் என் அஞ்சு பிள்ளைங்களையும் வளர்த்தாங்க என் மனைவி. அதனால பிள்ளைங்களும் என்னை மதிக்கலை. ஒரு கட்டத்தில் அந்த அவமானம் பொறுக்காம, வீட்டைவிட்டு வெளியேறிட்டேன். அதுவும் 30 வருஷம் ஆகிப்போச்சு!'' சின்ன இடைவெளி கொடுத்து தொடர்கிறார்.

''மூணு வருஷத்துக்கு முன்னாடி வரை நான் பாடிட்டுதான் இருந்தேன். கடைசியா ம.க.இ.க. மேடையில் பாடினேன். இப்போ இடுப்புல ஒரு ஆபரேஷன் பண்ணிட்டதால, நடக்க முடியாமப்போச்சு. பெத்த புள்ளைங்க என்னை மதிக்கலைனோ, உசுரைக் கொடுத்த வளர்த்தக் கட்சி என்னை மறந்துருச்சுன்னோ புகார் சொல்லலை. ஒரு கம்யூனிஸ்ட்டா திருப்தியா, சந்தோஷமான ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கேன். அந்த மனநிறைவு போதும் எனக்கு. எந்திரிச்சு நடக்கவே முடியாத என்னை செல்வித£ன் ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கிறா. அவதான் என் மக!'' என்றபடி பாடத் தொடங்குகிறார் காதர்.

'உப்பக் கூடவா திருடுவாங்கனு
கடைக்கு வெளியே வெச்சது
அந்தக் காலம் ஓ அந்தக் காலம்...
இப்போ விக்கிற விலையில
வெளியில வெச்சா
வெச்ச இடம்தான் மிச்சம்
இந்தக் காலம் ஓ இந்தக் காலம்’

காதரின் பாடல் காற்றில் கலக்க, நிரம்பிக்கிடந்த காதரின் சிறுநீர் பையை சுத்தம் செய்ய எடுத்துப்போகிறார் செல்வி.