Published:Updated:

விசா வேண்டாம்... விவசாயம் போதும்!

வீ.கே.ரமேஷ், படங்கள்: எம்.விஜயகுமார்

##~##

டம்: கோல்டன் கேட்ஸ் பள்ளி, ஏற்காடு.

நிகழ்வு : சுற்றம் 2013.

'பள்ளி மாணவர்களுக்கான சூழல் திருவிழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வை ஏற்பாடு செய்திருந்தார்கள், ஆக்கம் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர். தமிழர்கள் மறந்த, இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி.

ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ள கோல்டன் கேட்ஸ் பள்ளிக்கு ஏரியாவில் பெரும் மரியாதை. கான்வென்ட் தர கல்வி, மிகக் கண்டிப்பான நிர்வாகம், நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் குழந்தைகள் என 'டாப் கிரேடு’ அந்தஸ்துடன் செயல்படும் பள்ளி.  அந்தப் பள்ளி மாணவர்கள், ஆங்கில ரைம்ஸ் பாடி கலை நிகழ்ச்சியை அரங்கேற்றுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்திருக்க, அழகிய தமிழில் பேசி அசத்தினார்கள். அவர்கள் பேசிய சங்கதிகள் இன்னும் அழகு!

''நாங்கள், காலையில் காபி குடிக்க மாட்டோம். பனங்கற்கண்டு பால்தான் குடிப்போம். காலையில் கம்மங்கூழ், கடித்துக்கொள்ள நெய் மிளகாய். பர்கர், பீட்சாவுக்குப் பதில் ராகி ரொட்டி, பல தானியக் கொழுக்கட்டைதான் எங்கள் ஸ்நாக்ஸ். மதியம் குதிரைவாலி தயிர் சாதம், தினை உப்புமா. இரவு, சோளப் பணியாரம். இப்படி, ரசாயன உரங்கள் இடாத இயற்கையான பாரம்பரியமிக்க சிறு தானியங்களைக்கொண்டு சமைக்கப்பட்ட உணவுகளைத்தான் நாங்கள் சாப்பிடுகிறோம். இதனால் எங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. எங்களை எந்த வியாதியும் தாக்குவது இல்லை. ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் உணர்கிறோம். எங்கள் அப்பா-அம்மா நாங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று காட்டும் அக்கறை இது!'' என்று அந்தக் குழந்தைகள் சொல்வதை, ஆச்சர்யமாகக் கேட்டனர் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தவர்கள்.

விசா வேண்டாம்... விவசாயம் போதும்!

தொடர்ந்து, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், பாரம்பரிய உணவுகளின் அருமைகளைப் பட்டியலிட்டார்.

''எல்லா நிலங்களையும் தரிசாக்கிட்டோம். மாடுகள் மலடாகிருச்சு. உணவு எல்லாம் விஷமாகிருச்சு. இந்த சூழ்நிலையை மாணவர்கள் மனசுல நல்லாப் பதியவெச்சு, அவங்க மூலமா ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கணும்.

ஃபாஸ்ட் புட் உணவுகள் எங்கிருந்து வருது? அது ஆரோக்கியமா? இது எதையும் நாம யோசிக்கிறதே இல்லை. அந்த உணவுகள் 2,500 கிலோமீட்டர் கடந்து நம்ம தட்டுக்கு வருது. அவை கெட்டுப்போகாமல் இருக்க ஒரு கெமிக்கல், சுவைக்கு ஒரு கெமிக்கல், நிறத்துக்கு ஒரு கெமிக்கல்னு கலந்துவருது. அதைச் சாப்பிட்டா, நோய்தான் வரும். உணவுகள், நம் மண்ணுக்கு உரியதா, செயற்கை நிறமிகளோ ரசாயனங்களோ சேர்க்கப்படாமல் இருக்கணும்'' என்றார்.

மருத்துவர் கு.சிவராமன் தன் பேச்சில், ''கடந்த 10 வருஷமா தொற்றுநோய்களைவிட தொற்றாத வாழ்வியல் நோய்கள்தான் அதிகமாப் பரவுது. அதுக்கு ரசாயன உரங்களும், ரசாயன வித்துக்களும், அந்நிய உணவுகளுமே காரணம். உணவுகள், பசிக்கும் ருசிக்கும் மட்டுமானது அல்ல; மண்ணுக்கும் மரபுக்கும் உரியது. அதனால நம் முன்னோர்கள் பயன்படுத்திய சிறு தானியங்களை நாமும் பயன்படுத்தணும். ஒவ்வொரு வருஷமும் பல டன் அளவிலான விஷத்தை நம்ம நிலத்தில் கொட்டிட்டு இருக்கோம். அதைத் தடுக்கும் பொறுப்பு உணர்ச்சியை மாணவர்களின் மனங்களில் விதைக்கணும்!'' என்றார்.

கருத்துப் பகிர்தலுக்கு இடையில் மகிழினி மணிமாறன் குழுவினரின் பறை இசை, முகாமில் ஆரவார உற்சாகத்தை விதைத்தது.

விசா வேண்டாம்... விவசாயம் போதும்!

உழவருக்குக் கடன் கொடுக்கும் பல்லவன் வங்கி, கஞ்சமலை பாதுகாப்பு இயக்கம், சேலம் முழுக்க மரங்களை வளர்த்துவரும் அசோகர் பசுமை இல்லத்தைச் சார்ந்த  கணபதி, சரபங்கா நதிக்காகப் போராடிவரும்... அருள் என சுற்றுச்சுழல் போராளிகளைக் கௌரவித்து நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

அன்றைய இரவு உணவுக்கான மெனு அட்டகாசம்... சாமை சாம்பார் சாதம், குதிரைவாலி தயிர் சாதம், சீரகச்சம்பா பிரியாணி, வாழைத்தண்டு பச்சடி, சிவப்பு அவல் பிரட்டல், பானகம், பல தானியக் கொழுக்கட்டை, கதம்பக்காய் கூட்டு, கம்பு தோசை, நிலக்கடலை துவையல், தினை பாயசம் என மூக்குப்பிடிக்க தடபுடல் விருந்து. சிறுவர்களும் பெரியவர்களும் ஆர்வமாக வாங்கிச் சாப்பிட, உணவோடு செய்முறை விளக்கமும் பரிமாறப்பட்டது.

விசா வேண்டாம்... விவசாயம் போதும்!

ரண்டாம் நாள் நிகழ்ச்சியில் 'நீயா... நானா... கோபிநாத் பங்கேற்று மாணவ, மாணவிகளோடு கலந்துரையாடினார். அதில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பல கருத்துகளை விவாதித்தார். இரண்டே நாள் நிகழ்வு, பார்வையாளர்களின் மனங்களில் கடல் அளவிலான மாற்றத்தை உண்டாக்கி இருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது!

விசா வேண்டாம்... விவசாயம் போதும்!

''மாணவர்களே... மாணவர்களே...

விசாவை நோக்கிச் செல்லாதீர்கள்

விவசாயத்தை நோக்கிச் செல்லுங்கள்.

நிலாவில் கொடி நடுவதைவிட

பூமியில் செடி நடுங்கள்.

செயற்கைக்கோளைச் செலுத்துவதை விட்டுவிட்டு,

ஏர் உழுவதில் ஆர்வம் செலுத்துங்கள்...

மாற்றங்கள் முதலில் நம்மிடம் இருந்துதான்

தொடங்க வேண்டும்...

நாங்கள் மாறத் தொடங்கிவிட்டோம்!''

அடுத்த கட்டுரைக்கு