Published:Updated:

டாலி... டாலி!

டி.அருள் எழிலன், படங்கள்: கே.ராஜசேகரன்

##~##

 '''அன்பு மேகமே இங்கு ஓடிவா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்தராத்திரி  சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா...

- எனக்கு நல்லா நினைவிருக்கு. அப்போ  ரேடியோவுல அடிக்கடி இந்தப் பாட்டு போடுவாங்க. நான் அடிக்கடி என் டாலிக்கு இந்தப் பாட்டைப் பாடினதெல்லாம் இப்பவும் நல்லா நினைவிருக்கு!'' - அழகாகப் பாடி உருகுகிறார் சாந்தி. ஓவியர் வீர சந்தானத்தின் காதல் மனைவி, இப்போது... மனதளவில் அவர் ஒரு குழந்தை!  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''என் மூத்த அண்ணன் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவருக்குத் தெரியாம என் டாலிக்கு நான் பாத்ரூம்ல இருந்து லவ் லெட்டர் எழுதுவேன். அவனும் எழுதுவான். இவன் எழுதின லெட்டர்லாம் வெச்சிருந்தேன். அப்பப்போ டாலியோட சண்டை வந்துச்சுன்னா,  ஒவ்வொரு லெட்டரா எடுத்து கிழிச்சுப் போட்ருவேன்!'' -  சிரிக்கிறார் சாந்தி. தொடர்பறுந்து வந்து விழும் வார்த்தைகளை எடுத்துக் கோத்தால், வீர சந்தானம் - சாந்தி வாழ்வில் ஒளிந்திருக்கும் ஓர் அற்புதமான காதல் தெரியும்!

நவீன ஓவியராக, சமூகப் போராளியாக அறியப்பட்ட வீர சந்தானத்தின் வாழ்வில் யாரும் அறியாத இன்னொரு பகுதி இது. வீடு முழுக்க இறைந்துகிடக்கின்றன ஓவியங்கள். முகம் மறைத்துப் புரளும் மீசை, தாடியை நீவியபடியே தன் கதை சொல்கிறார்...

''கும்பகோணம் பக்கம் உப்பிலியப்பன் கோவில்தான் என் சொந்த ஊர். வீட்டில் நானும் தங்கச்சியும்தான். அப்போ அது ஒரு பஞ்ச காலம். ஒரு நாளைக்கு ஒருவேளை போஜனம்தான்.    18 வருஷம் கோயில் சோறு சாப்பிட்டு வளர்ந்தவன். கும்பகோணம்னா கோயில் ஊர் என்பதால், சிற்பமும் இசையும் அதோட ஆன்மாவா இருந்தது. பள்ளிக்கூடத்துக்குப் போனப்போ, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துக்கிட்டேன். 'சாகும்போது தமிழ் படித்துச் சாக வேண்டும். என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’னு எப்பவும் எழுச்சியோட திரிஞ்சாலும், பள்ளிப் பாடத்தில் என்னால் தேற முடியல. 'தொழிலாளி’ படத்தில் எம்.ஜி.ஆர். பஸ் கண்டக்டராக இருந்து, செக்கர் ரேஞ்சுக்கு உயர்வார். அதைப் பார்த்துட்டு எனக்கும் செக்கர் வேலைதான் சரிவரும்னு தோணுச்சு. ஆனா, செக்கர் ஆக முடியாதுங்கிற உண்மை தெரிஞ்சப்போ, நான் எம்.ஜி.ஆர். இல்லைங்கிற உண்மையும் புரிஞ்சது.

டாலி... டாலி!

அப்புறம்  கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன். பணம் இல்லாம, படிக்க முடியாம, ஓடிவந்துட்டேன். அப்புறம் அப்படி இப்படினு அலைபாய்ஞ்ச வாழ்க்கை, ராஜஸ்தானுக்கு அனுப்பி பிரஸ்கோ ஓவியத்தைக் கத்துக்கவெச்சது. அதுக்குக் காரணம் தனபால் சாரும் அவங்க துணைவியாரும்தான். ஒரு தேவதூதன் மாதிரி ஆதிமூலம் அண்ணனும் என் வாழ்வில் வந்தார்!'' என்கிற வீர சந்தானம், 'மியுரல்ஸ்’ எனப்படும் புடைப்பு ஓவியங்களின் பிரம்மன். 1990-ல் இந்திய அரசின் தேசிய விருது பெற்றவர்.

டாலி... டாலி!

''ஓவியர் ஆதிமூலம் அண்ணன் வழிகாட்ட, மத்திய நெசவாளர் சேவை மையத்தின் சென்னைப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தேன். 1973-ல் எனக்கு 850 ருபாய் சம்பளம். அவ்வளவு பணத்தை மொத்தமா பார்த்தப்போ, நிஜமாவே கதறி அழுதிட்டேன். பட்டினியா அலைஞ்ச காலம் மாறி வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பிச்சது. அங்கே வேலை பார்த்துட்டு இருக்கும்போதுதான் கவிஞர் அறிவுமதி மூலமா, பாலுமகேந்திரா நட்பு கிடைச்சது. 'சந்தியாராகம்’ படத்தில் என்னை நடிக்க வெச்சார். சினிமா நடிகன் ஆனது அப்படித்தான். 80-களில் ஈழம் தொடர்பான போராட்டங்கள்ல ரொம்ப உணர்வாளனா பங்கெடுத்துக்கிட்டேன். அப்போ என்னை மும்பை அலுவலக சகாக்கள் 'டைகர் ஆயா’னு சொல்லித்தான் கூப்பிடுவாங்க. 'புலி வருது’னு அர்த்தம். காதல், ஈழம்னு பூவும் போர்க்களமுமா வாழ்ந்த நாட்கள் அவை!  

நான் வேலைபார்த்த  சென்னை சேமியர்ஸ் சாலை அலுவலகத்தின் ஜன்னலோரம் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தேன். ரொம்ப அழகா இருந்தா. அதுக்கு முன்னாடி பல காதல்களைக் கடந்து வந்ததுபோல இதுவும் ஒரு காதலா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, இந்தக் காதல் வேறு மாதிரி இருந்தது. அந்தப் பெண்ணின் முகம் ஜன்னலில் இருந்து என் இதயத்தில் வந்து அமர்ந்துகொண்டது. வசீகரமான ஒரு வாழ்வையும் கனவையும் பரிசளித்தது அந்தக் காதல். காலையில் எட்டு மணிக்கெல்லாம் ஆபீஸ் வந்து பார்வைகளால்  காதல் வளர்த்தோம்.

அவங்க வட இந்தியாவில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன்பே தமிழகத்தில் குடியேறின குடும்பம். சாந்தியோட தாத்தா, வெள்ளையர் காலத்தில் செங்கல்பட்டு          சப்-கலெக்டர். அப்பா, ஒரு பைலட். கூடப் பிறந்தவங்க ஏழு பேர். இவதான் கடைசி. அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்கனு தெரிஞ்சதும், நான் அவளைத் திருமணம் செஞ்சுக்க முடிவெடுத்தேன்.

டாலி... டாலி!

எங்க காதல் வாழ்வுக்கு சாட்சியாக இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றோம். சாதாரணமான ஆளாப் பிறந்து, கோயில் மாடு மாதிரி வளர்ந்து, வேப்பங்குச்சியில் பல் துலக்கிய என்னை, முதன்முதலா பேஸ்ட் பிரஷ்ல பல் துலக்கவெச்சதே சாந்திதான். கரடு முரடா வளர்ந்துகிடந்த என் தலை மயிரை செதுக்கி சீராக்கி, டை கட்டி, பேன்ட், ஷூ போடக் கத்துக்கொடுத்தவ சாந்தி. என்னை மனுஷனாக்கியது சாந்தியோட காதலும் அன்பும்தான். இரண்டு குழந்தைகளையும் தனி மனுஷியா வளர்த்து ஆளாக்கினா. பிள்ளைகளுக்கு சாமி தெரியும். ஆனா, சாதி, மதம் தெரியாது. ரெண்டு பெண் குழந்தைகளுக்கும் விருப்பத் திருமணம் பண்ணிக் கொடுத்தோம். எல்லாமே என் சாந்தி முடிவுதான். அவ சொன்னா, அது சரியா இருக்கும்னு எனக்கு நம்பிக்கை. நான் வேலையில் இருந்தப்போ 15 வருஷம் இந்தியா முழுக்க டிரான்ஸ்ஃபர்ல சுத்திட்டே இருந்தேன்.  அதனால என் சாந்திகூடவே இருக்க முடியாமப்போச்சு. அப்பா அம்மா இல்லாம  இருந்த சாந்திக்கு அது ரொம்பக் கஷ்டம் கொடுத்திருக்கும்னு இப்போ ஃபீல் பண்றேன்.   உடன் பிறந்த ஆறு பேர்ல அஞ்சு பேர்  அடுத்தடுத்து இறந்துட்டாங்க. அதுவும் ஒரு பெரிய பாதிப்பை சாந்திக்கு உருவாக்கி,  தூக்கமே இல்லாமப்போயிருச்சு. அது மன ரீதியிலான பாதிப்பை உருவாக்கி என் சாந்திக்கு மன அழுத்தத்தை உண்டாக்கிருச்சு. நினைவுகள்  சிதைந்து, உடல் நலம்

டாலி... டாலி!

பாதிக்கப்பட்டு ஒரு குழந்தையாகிட்டா!'' என வேதனையை, புன்னகையோடு பகிர்கிறார் வீர சந்தானம்.

''சுடுமண்ணில் செய்த ஒரு யானை சிற்பத்தை வாங்கி தன்கூடவே வெச்சிருக்கா சாந்தி. எப்பவும் அதைத் தூக்கிட்டே நடக்கிறா, திரியிறா, கொஞ்சுறா, தூங்குறா. யாராவது, 'அந்த யானையைக் கொஞ்சம் கீழே வையேன்’னு சொன்னா, 'ம்ம்... இது என் டாலி... என் டாலி’னு மறுத்துடுறா. அவ மனசுல நான்தான் அந்த யானை.

சாந்தி எனக்கு இப்போ ஒரு குட்டிப் பாப்பா. சாந்திக்கு நான் ஒரு குட்டி யானை. இது துயரமாத் தெரிஞ்சாலும், பிரியம் எவ்வளவு பெருசு பாருங்க!'' என்பவரைப் பிரிய மனசு வருமா?

அழகழகிது!