Published:Updated:

இவள் மலாலா!

வீயெஸ்வி

##~##

'நான் மலாலா’ (I AM MALALA) என்ற தலைப்பில், இதுவரையிலான தனது உணர்ச்சிமிகு அனுபவங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டு இருக்கிறார், தலிபான்களால் சுடப்பட்ட பாகிஸ்தான் பெண் மலாலா. சண்டே டைம்ஸ் பத்திரிகையாளர் கிரிஸ்டினா லாம்ப் (Christina Lamb) உடன் இணைந்து இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. மலாலாவின் வார்த்தைகளின் வழியே அவரை வாசிப்போம்...

'நான் பிறந்தபோது, எங்கள் கிராமத்தில் அனைவரும் என் அம்மா மீது கருணை பொழிந்தார்கள். அப்பாவுக்கு யாரும் வாழ்த்து சொல்லவில்லை. மருத்துவமனைக்கும் மருத்துவச்சிக்கும் அப்பாவிடம் பணம் இல்லை. பக்கத்து வீட்டில் இருந்தவர்தான் பிரசவத்துக்கு உதவிசெய்தார். ஆண் குழந்தை பிறந்தால், பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். பெண் குழந்தைகளை திரைச்சீலைக்குப் பின்னால் மறைத்துவிடுவார்கள். சமைப்பதும், குழந்தைகளைப் பெற்றுக்கொடுப்பதும் மட்டுமே அவர்களுக்கு வேலை, இப்படியான ஒரு சூழலில்தான் நான் பிறந்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆப்கானிஸ்தான் பெண் போராளியாகத் திகழ்ந்த 'மலாலாயின் பெயரை எனக்கு வைத்தார் என் அப்பா. மற்றவர்கள் கிண்டல் அடித்தது பற்றி அவர் கவலைப்படவில்லை. 'இந்தக் குழந்தை வித்தியாசமானவள் என்பது எனக்குத் தெரியும்’ என்றார். நான் படுத்திருந்த தொட்டிலில் பழங்களையும், இனிப்புகளையும், காசுகளையும் வைக்கும்படி தன் நண்பர்களிடம் சொன்னார். ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே இப்படிச் செய்யப்படுவது உண்டு.

இவள் மலாலா!
இவள் மலாலா!

ழாவது வயதில் நான்தான் வகுப்பில் முதலாவதாக வருவேன். பாட்மின்ட்டன், நாடகம், கிரிக்கெட், ஓவியம் என்று எல்லாவற்றிலும் கலந்துகொள்வேன். மால்கா-இ-நூர் என்ற பெயருடைய புது பெண், என் வகுப்பில் சேர்ந்தாள். 'பாகிஸ்தான் ராணுவத்தின் முதல் பெண் தலைமை அதிகாரியாக, தான் பதவி வகிக்க வேண்டும்’ என்பாள். வருடக் கடைசியில் வகுப்பில் அவள் முதலாவதாக வந்தபோது எனக்கு அதிர்ச்சி. வீட்டில் தொடர்ந்து அழுதேன். அம்மா என்னைச் சமாதானப்படுத்தினார்.

ங்கள் நாட்டிலேயே பெரிய நியூஸ் சேனல் என்று கருதப்பட்ட 'ஜியோ’, சிறுமி ஒருத்தியை பேட்டி எடுக்க விரும்பியது. பேட்டிக்கொடுக்க சின்னப் பெண்கள் பயந்தார்கள். அப்படியே தைரியசாலியான சிறுமிகள் பேட்டிக்கொடுக்க இருந்தாலும் பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள். என் தந்தை தைரியமானவர். எப்போதும் எனக்குத் துணை நிற்பவர். என் உரிமைகளுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் நான் பேசுகிறேன் என்றால் தவறு ஏதும் இல்லை என்று நினைப்பவர். அப்படியான சூழ்நிலைகளில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பதை அறிய கடவுள் விரும்புகிறார். 'வஞ்சகமும் பாசாங்கும் மறைய வேண்டும். அப்போது உண்மை நிலைத்து நிற்கும்’ என்று குரானில் வாசகம் உண்டு. 'ஒருவரால் எல்லாவற்றையும் அழிக்க முடியும் என்றால், ஒரு பெண் ஏன் அதை மாற்ற முடியாது?’ என்ற நினைப்பேன். அதுவே எனக்கு மனவலிமையைத் தந்தது. அதற்காக ஒவ்வோர் இரவும் இறைவனிடம் வேண்டிக் கொள்வேன்.

னது 13-வது வயதில் என் உடல் வளர்ச்சி நின்றுவிட்டது. திடீரென்று என் தோழிகள் அனைவரும் என்னைவிட உயரமாகிவிட்டார்கள். நான் உயரமாக வேண்டும் என்று அல்லாவிடம் ஒவ்வோர் இரவும் வேண்டிக்கொள்வேன். நிறைய இடங்களில் நான் உரை நிகழ்த்தி வருகிறேன். ஆனால், நான் குள்ளமாக இருப்பதால் அதிகாரத் தோரணையுடன் பேச முடிவது இல்லை. சில சமயங்களில் சாய்வு மேஜைக்கு மேல் பார்ப்பதுகூட எனக்குக் கடினமாக இருக்கும். ஹை-ஹீல் ஷூக்கள் எனக்குப் பிடிக்காது. வேறு வழியின்றி அவற்றைப் போட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று.’

புத்தகத்தின் முடிவு அத்தியாங்களில், குண்டடிபட்ட பிறகு நினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்து சிறப்பு விமானத்தில் லண்டன் சென்று, அங்கு சிகிச்சையைத் தொடர்ந்தது பற்றியெல்லாம் நெகிழவைக்கும் வகையில் ஆவணப்படுத்தி இருக்கிறார் மலாலா.

'கண்ணாடியில் என்னைப் பார்த்து ஒரு விநாடி சிந்தித்தேன். நான் ஓரிரு அங்குலம் உயர வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். ஆனால், வானளவு என்னை உயர்த்திவிட்டார் அவர். இனி என்னை அளந்து பார்த்துக்கொள்ள முடியாது. வளர்ந்தால் செய்வேன் என்று சத்தியம் செய்து கொடுத்ததுபோல், கூடுதலாக நூறு தடவை பிரேயர் செய்கிறேன்.

கடவுளை நான் நேசிக்கிறேன். அல்லாவுக்கு நன்றி. தினமும் அவருடன் உரையாடுகிறேன். மக்களைச் சென்றடைய இந்த உயரத்தை எனக்குக் கொடுத்த அவர், எனக்குப் பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தெருவிலும், கிராமத்திலும், நாட்டிலும் அமைதி நிலவ வேண்டும் - இது என் கனவு. உலகில் உள்ள ஒவ்வொரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் கல்வி அவசியம். பள்ளியில் தோழிகளுடன் உட்கார்ந்து பாடங்களைப் படிப்பது என்னுடைய உரிமை. மனிதகுலத்தில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியின் புன்னகையோடு இருப்பதைப் பார்க்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

நான் மலாலா. என் உலகம் மாறிவிட்டது; ஆனால் நான் மாறவில்லை!’

என்று நூலை நிறைவு செய்கிறார் இந்த அற்புதப் பெண்.