Published:Updated:

தண்ணீர்... தங்கம்... தமிழகம்!

சார்லஸ், படங்கள்: பொன்.காசிராஜன்

##~##

நீச்சல் போட்டிகளில் இந்தியாவின் தங்கத் தொட்டி... தமிழகம். ஆர்வமும் வேகமும்கொண்ட நீச்சல் வீரர்களை தேசிய, சர்வதேசப் போட்டிகளுக்கு அனுப்புவதற்காக, சென்னை நீச்சல் குளங்கள்  தளும்பிக்கொண்டே இருக்கின்றன.  

இந்த மாத இறுதியில் கேரளாவில் தொடங்கவிருக்கும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளுக்காக தமிழகத்தின் டாப் ஸ்விம்மர்களுக்குப் பயிற்சி தருகிறார்கள் முகுந்தன் மற்றும் கிரிஷ்.

''ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் மாணவர்களுக்குக் கட்டாய நீச்சல் பயிற்சி உண்டு. ஆனால், உண்மையில் தமிழகத்தில்தான் நீச்சலைக் கட்டாயமாக்கி இருக்க வேண்டும். வருடத்தின் பெரும்பாலான நாட்கள் வெயில் வாட்டியெடுக்கும் தமிழகத்தில், டீன் ஏஜ் வயதில் இருப்பவர்களுக்கு நீச்சல்தான் சரியான விளையாட்டு. ஆனால், தமிழகத்தில் நிலைமை தலைகீழ். குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள்தான் நீச்சல் கற்க வருகிறார்கள். ஆனாலும் அவர்களை வைத்துக்கொண்டு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகப் பதக்கங்களை வென்று வருகிறோம். இன்னும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயிற்சிக்கு வந்தால், நிச்சயம் ஒலிம்பிக்ஸ் வரை கலக்கலாம்'' என்கிறார் முகுந்தன்.

தேசிய நீச்சல் போட்டியில் இந்த முறை ஒரு டஜன் தமிழக வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். சேது மாணிக்கவேல், முக்தா, நிவ்யா ராஜா, ஸ்ருதி, அபாசுதின், ஜெயவீணா, மீனாட்சி, குல்னாஸ்... ஆகியோர் பதக்கம் வெல்வார்கள் என்று     இப்போதே பேச்சு.

தண்ணீர்... தங்கம்... தமிழகம்!
தண்ணீர்... தங்கம்... தமிழகம்!

''பெண்கள் பிரிவில் எப்போதுமே டெல்லியைச் சேர்ந்த ரிச்சா மிஷ்ராதான் பட்டம் தட்டுவார். ஆனால், இந்தப் போட்டியில் தமிழகத்தின் ஜெயவீணா வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. ஜெயவீணாவுக்கு இப்போது வயது 15-தான். அதனால் எதிர்காலத்தில் அவர் இன்னும் பல சாதனைகளைப் படைப்பார்!'' என்கிறார் கிரிஷ்.

''நீச்சல் பயிற்சிக்கு அனுப்பினால், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பார்கள் என்று பெற்றோர்களுக்கு பயம்.  அதனால் தங்கள் குழந்தைகளைப் பயிற்சிக்கு அனுப்ப யோசிக்கிறார்கள். உண்மையில் நீச்சல் மனதை ஒருமுகப்படுத்தும். போட்டிகளில் கலந்துகொள்ளாவிட்டாலும் ஆரோக்கியமான எதிர்காலத்துக்காக உங்கள் குழந்தைகளை நீச்சல் பயிற்சிக்கு அனுப்புங்கள்!'' என்கிறார் முகுந்தன்.

தமிழகத்திலிருந்து ஒரு மைக்கேல் ஃபெல்ப்ஸ், ஒரு ஸ்டாஃபெனி ரைஸ் உருவாக வேண்டாமா?