Published:Updated:

இதயக்கனிகளை இயக்கும் டிக்...டிக்... டிக்!

டி.அருள் எழிலன், படங்கள்: கே.ராஜசேகரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

ளிங்குக் கற்களால் மூடப்பட்டுள்ளது எம்.ஜி.ஆர். சமாதி. அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம். அத்தனை பேரும், 'எம்.ஜி.ஆரின் கைக்கடிகார ஓசை கேட்கிறதா?’ என இன்னமும் சமாதியில் காதை வைத்துக் கேட்கிறார்கள்.

''லேசாக் கேட்குது. வெளில சவுண்டு ஜாஸ்தியா இருக்குல்ல. அதனால சரியாக் கேக்கல...'' - இது தஞ்சையிலிருந்து வந்திருந்த சண்முகத்தின் வாக்குமூலம்.

கைக்கடிகாரச் சத்தத்தைக் கேட்க முற்பட்டு சமாதி மேல் காதுகளை அழுத்தி அழுத்திக் கேட்ட ஒரு குடும்பம், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சமாதானமாகி, ''கேட்ட மாதிரிதான் இருக்கு... காலைல வந்து கேட்டா... டிக்கு... டிக்கு... டிக்குனு கேட்குமாம்!'' என்றனர் மையமாக.

பெயின்டர் சுந்தர் உற்சாகமாக இருக்கிறார். ''வாரத்துக்கு ரெண்டு வாட்டி தலைவரோட சமாதிக்கு வந்துடுவேன். தலைவருக்காக ஸ்பெஷலா அமெரிக்காக்காரன் கண்டுபிடிச்சது அந்த வாட்ச். அதான் தலைவர் இறந்த பிறகும் வாட்ச் ஓடிட்டு இருக்கு. ஆனா, எங்கப்பா, 'இன்னும் எம்.ஜி.ஆர். சாகலே’ங்கிறாரு... அது வேற குழப்பமா இருக்கு!'' என்கிற சுந்தருக்கு வயது 26.

இதயக்கனிகளை இயக்கும் டிக்...டிக்... டிக்!

இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த கிராமத்துப் பெரியவர் ஒருவர், மீண்டும் மீண்டும் கல்லறை மீது காதை வைத்துக் கேட்டார். அவர் கண்கள் எதையோ தேடின. திருப்தியற்றவராக மீண்டும் மீண்டும் காதை வைக்கிறார். அவரைப் பார்த்து 'என்ன கேட்குதா?’ என்று சைகையில் கேட்டோம். சுற்றிச் சுற்றி யாரும் நம்மைக் கவனிக்கிறார்களா என்று பார்த்தவர், மையமாகச் சிரித்துக்கொண்டார்.

''புரட்சித் தலைவர், நம்ம நாட்டைப் பத்தின எல்லா ரகசியங்களையும் வாட்ச்சுக்குள்ளதான் வெச்சிருந்தாரு. அதைத் திறந்தா, நம்ம நாட்டு ரகசியம் எல்லாம் லீக் ஆயிடும்னு வாட்சை ஆஃப் பண்ணிட்டாங்க!'' என்று போகிறபோக்கில் புது செய்தி ஒன்றைச் சொல்லிச் சென்றார் கன்னியாகுமரியில் இருந்து வந்திருந்த அந்தோணி. இப்படித்தான் அனுதினமும் அங்கு ஆயிரமாயிரம் யூகங்கள் உருவாக்கப்படுகின்றன.

எம்.ஜி.ஆர். மறைந்து 26 ஆண்டுகள் ஆன பிறகும் லட்சக்கணக்கான பேர் காதுகொடுத்துக் கேட்க முயற்சிக்கிறார்கள், அந்தக் கடிகாரத்தின் ஓசையை!

இதயக்கனிகளை இயக்கும் டிக்...டிக்... டிக்!

தி.நகர் நினைவு இல்லத்தில், எம்.ஜி.ஆர். பயன்படுத்திய சில கடிகாரங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

''புரட்சித் தலைவருக்குக் கைக்கடிகாரம் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஏராளமான கடிகாரங்களை அவர் பயன்படுத்தினார். வலது கையில் வாட்ச் கட்டும் பழக்கம் உள்ளவர் புரட்சித் தலைவர். தட்பவெப்பம் முதல் வெளிநாட்டு நேரங்கள் வரை காட்டும் அந்தக் கடிகாரங்கள், மிகவும் விலை மதிப்புள்ளவை. அவரை தகனமேடையில் வைத்தபோது, தலையில் தொப்பி, கண்ணாடி, வலது

இதயக்கனிகளை இயக்கும் டிக்...டிக்... டிக்!

கையில் ஒரு கடிகாரம், கைவிரலில் ஒரு மோதிரம் ஆகியவற்றுடனே புதைத்தார்கள். 'அவர் உடலில் இருந்து எதையும் எடுக்க வேண்டாம்!’ என்று மூத்த அமைச்சர் ஒருவர் உத்தரவிட, அவரை அப்படியே சந்தனப் பெட்டியினுள் வைத்து, உப்பைக் கொட்டியே புதைத்தார்கள். அதற்கு மேல் பளிங்கு மேடை அமைத்தார்கள்.

'26 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கடிகாரம் இயங்கிக்கொண்டிருக்குமா?’ என்பது ஒரு கேள்வி. இன்னொன்று, அப்படியே கடிகாரம் ஓடிக்கொண்டிருந்தாலும், பளிங்கு மேடையை மீறி கேட்கவே வாய்ப்பு இல்லை. இது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி!'' என்கிறார் 'இதயக்கனி’ விஜயன்.

ஆனாலும் என்ன, தலைமுறைகள் கடந்தாலும் எம்.ஜி.ஆர் அபிமானிகளின் இதயங்களில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது அந்த டிக்... டிக்... டிக்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு