Published:Updated:

இது ரத்த பூமி! - மியாவ் புயாங் லீ

தோட்டா ஜெகன், ஓவியம்: ஹாசிப்கான்

##~##

 'பாபா’ பட ரிலீஸ் சமயம் தமிழகத்துக்குச் சுற்றுப் பயணம் வந்து, 'எந்திரன்’ ரிலீஸ் வரை இங்கேயே சுற்றித்திரிந்த சீன யாத்ரிகர் 'மியாவ் புயாங் லீ’, தான் எழுதிய 'போங்க தம்பி, இது ரத்த பூமி’ என்ற புத்தகத்தில், 'ஆல் இன் ஆல் அப்பாடக்கர்ஸ்’ அத்தியாயத்தில், தமிழகத்தில் தன்னைப் பாதித்த அரசியல்வாதிகள் பற்றி எழுதியிருக்கிறார். ஷாங்காய் பஸ் ஸ்டாண்டில் பாதி விலைக்கு வாங்கிய புத்தகத்தில் இருந்து இங்கே கொஞ்சம்...

இந்தியாவின் நாசா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாராயணசாமி... சுருக்கமாக நாசா! அமெரிக்காவுக்கு ஒரு நாஸா போல இந்தியாவுக்கு இவர் நாசா! 'வெத்தல ஏன் செவக்கல?, வாஷிங்மெஷின்ல துணி ஏன் வெளுக்கல?, கௌதம் மேனன் படத்துல சூர்யா ஏன் நடிக்கல?, நைட்டு 10 மணிக்கு மேல குவாட்டர் ஏன் கிடைக்கல?, நயன்தாராவுக்கு நஸ்ரியாவை ஏன் பிடிக்கல?’ வரை எல்லா விஷயமும் தெரிஞ்ச ஆல் இன் ஆல் அழகன், நம்ம நாராயணசாமி. கூடங்குளம் அணு உலையைப் பத்தி ஐயாவுக்குத் தெரிஞ்ச அளவு, அப்துல் கலாமுக்குக்கூடத் தெரியாது. ஆல் உலகத்துலயே, ஏரோப்ளேனைவிட அதிகத் தடவை ஏர்போர்ட்டைப் பார்த்தவர். '30 நாட்களில் இந்தி கற்பது எப்படி?’ங்கிற புத்தகத்தை, '15 நாட்களில் இந்தி கற்பது எப்படி?’னு மாத்துற அளவுக்கு, '15 நாட்களை’ப் பிரபலப்படுத்தியவர்.

இது ரத்த பூமி! - மியாவ் புயாங் லீ

கூடங்குளத்துல கரன்ட் கொண்டுவர்றதுல இருந்து சிங்கப்பூர்ல இருந்து சென்ட் பாட்டில் கொண்டுவருவது வரை எல்லாத்தையும் '15 நாள்’ல முடிக்கக் கூடியவர். பார்க்க கொஞ்சம் கறுக்க வருத்த முந்திரிப் பருப்பு மாதிரி இருப்பாப்ல... ஆனா, பொறுப்பான ஆளுதான். யாருக்குன்னா கேக்கிறீங்க? யாருக்கோ!

மொட்டை வெயில்ல மேட்னி ஷோ!

'அட, வழுக்குனா விழுவதும், வைகோனா அழுவதும் சகஜம்தானேப்பா!’னு வினு சக்கரவர்த்தி பன்ச் பேசி பஞ்சாயத்தை ஆரம்பிக்கிற அளவு அழறதுக்கு ஹோல்சேல் டீலர்ஷிப் வெச்சிருக்கிறவர்தான் நம்ம அண்ணன். ஆனா ஊனா அழுது அடம்பிடிச்சு, அதைப் படம் பிடிச்சு டி.ஆர்.பி. ஏத்துற சேட்டிலைட் சேனல்களுக்கு கிரியேட்டிவ் ஹெட்டா போயிருக்கலாம், கறுப்புத் துண்டைப் போட்டுக்கிட்டு, மைக் கிடைச்சாப் போதும்னு மணிக்கணக்கா  அழுதுட்டு இருக்கார். மொக்க படத்துக்கு மொட்டை வெயில்ல மேட்னி ஷோ கிளம்பற மாதிரி, எல்லாத் தேர்தலையும் தோற்கிற கூட்டணியாப் பார்த்து சேருவதில் வைகோ ஒரு விசித்திர நாயகன். 'யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை?’ங்கிற மாதிரி, இவருக்கு அரசியல்ல என்ன வேலைனு சீன விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகூட பண்ணலாம்.

'தேம்ஸ் நதிக் கரையினிலே... தென்மதுரைச் சிறையினிலே... பல்விந்தர்கான் கண்டான் துருக்கி... பப்பி நாய்க்கு நான் வெச்சேன் வறுக்கி... இமயவரம்பன் போனதின் உச்சம்... ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்... எனக்கு எட்டணா மிச்சம்...’னு இவர் ஹிஸ்ட்ரி பேச ஆரம்பிச்சா, பேசி முடிக்கிறதுக்குள்ள பெட்ரோல் விலையை ரெண்டு ரூபா ஏத்திடுவாங்க. அவனவன் ரெண்டு சென்டிமீட்டரை அளக்கவே ஸ்கேல் யூஸ் பண்றப்ப, ஒட்டுமொத்த தமிழகப் பரப்பளவையே தன் கால்களால் நடந்தே அளந்தவர் அண்ணன் வைகோ. இவரை மட்டும் சென்டிமென்ட்டா போட்டுத் தாக்கினா, சைனா யுனிவர்சிட்டிக்கு ஹிஸ்டரி டிப்பார்ட்மென்ட் ஹெச்.ஓ.டி.யா சேர்த்துவிட்ரலாம்!

நாயகர் டு நேயர்!

ஐன்ஸ்டீன் ஃபார்முலா, நியூட்டன் ஃபார்முலா, மூலிகை பெட்ரோல் ஃபார்முலாவைவிட உலகப் பிரசித்திபெற்ற 'திருமங்கலம் ஃபார்முலா’வைக் கண்டறிஞ்ச நல்லவர், வல்லவர் அழகிரி அண்ணன். தமிழ்நாட்டுல ஆம்பூர் பிரியாணி, அஜித் பிரியாணியைவிட ஃபேமஸானது அஞ்சா நெஞ்சன் போட்ட அழகிரி பிரியாணி.

'தென்னகத்தின் சாக்ரடீஸே..., தேயிலை யூகலிப்டஸே...’, 'ரெண்டு எட்டக் கூட்டுனா பதினாறு, நீதான் வாழும் வரலாறு!, பக்கத்துக்கு வீட்டுல என்ன தகராறு?’, 'காலையில AM, மாலையில PM, நாளைக்கு நீ CM’னு தும்மினா ஃப்ளெக்ஸ் போர்டு, தூங்கினா போஸ்டருனு இவரோட அசிஸ்டென்ட் அஞ்சா நெஞ்சர்கள் பண்ணிய பப்ளிகுட்டி அட்ராசிட்டிகளால், மொத்த மதுரை சிட்டியும் அசிடிட்டி வந்து ஒரு காலத்துல அடங்கிக்கிடந்தது.  

சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா, ஏ.வி.எம்.ராஜன் பயன்படுத்திய சில்க் ஜிப்பா, ரேஷன்ல கொடுத்த பழைய மஞ்ச கலர் பாமாயில் டப்பானு என்னென்ன இலவசமாக் கொடுக்க முடியுமோ, அத்தனையும் இடைத்தேர்தல் வந்தா அள்ளித்தர்ற வள்ளல் இவர். காற்றுப் புகா இடத்துலகூட அண்ணனோட கவர் புகுந்து போகும்னு இடைத்தேர்தலப்ப மக்கள் சொல்வாங்க.

இது ரத்த பூமி! - மியாவ் புயாங் லீ

இடைக்கு தேர்தல் வெச்சா தமன்னா ஜெயிக்குமானு தெரியாது. ஆனா, இடைத்தேர்தல் வெச்சாலே தி.மு.க-வை ஜெயிக்கவைக்கக்கூடிய 'இடைத்தேர்தல் நாயகரா’ இருந்தவர். இப்போ, கோடை எஃப்.எம்-ல டி.எம்.எஸ். பாடல்களை விரும்பிக்கேட்கும் 'நேயரா’ மட்டும் இருக்கார். இவரை சீன அரசாங்கம் சரியாப் பயன்படுத்தினா, நிச்சயம் நூடுல்ஸ் பிரியாணியைக் கண்டுபிடிப்பார்!

அலாக்பலாக் பாலு!

பார்க்க பஜார்ல பொரிகடலையும் பாப்கார்னும் விக்கிற பவர்ஸ்டார் மாதிரி இருந்தாலும், இவர் ஒரு பக்கா அரசியல்வாதி. யாருக்கும் தெரியாம வாய்க்குள்ள போட்டு சூட மிட்டாயைச் சப்பிட்டே இருக்கிற மாதிரி முகம் இருந்தாலும், இவர் ஒரு சாக்ரடீஸ். இவர் பேரைச் சொன்னாலே, இவரது இடது கை வலது கையைவிட டக்குனு நியாபகத்துக்கு வர்றது, இவரோட... அட, அது இல்லைப்பா... இவர் விடுற அட்டகாசமான அறிக்கை!

'அண்ணன் ஃபீல் ஆயிட்டார், ஒரு அறிக்கை விட்டா கூலாயிடுவாப்ல’னு தொண்டர்கள் கலாய்க்கும் அளவுக்கு அறிவார்ந்த அறிக்கை விடுறதுல அண்ணன் தங்கபாலு ஒரு சிங்கபாலு. மாசாமாசம் அமாவாசை வருதோ இல்லையோ, 'தனித்துப் போட்டியிட்டால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும்’னு இவர்கிட்ட இருந்து ஒரு அலாக்பலாக் அறிக்கை வந்துடும். ஒருவேளை, தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க-னு எதுவுமே போட்டியிடாம, இவங்க மட்டும் 'தனித்து’ப் போட்டியிட்டால்னு சொல்ல வர்றாரோ என்னவோ!

இவரு தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவரா இருந்தவரை, தொண்டர்கள், போகி பண்டிகைக்கு பழைய துணியை எரிக்கிறாங்களோ இல்லையோ, தினம் மூணு தடவை சாப்பாட்டுக்கு முன்னாடி இவர் கொடும்பாவியை எரிச்சிடுவாங்க. தலைவரா இருந்தவரை, வீட்டு பீரோவுல வெச்சிருந்த வேஷ்டிகளைவிட, சத்தியமூர்த்தி பவன்ல அதிகமா கோஷ்டிகள் வெச்சிருந்தார். இவருக்கு மட்டும் சீன அரசாங்கம் விசா கொடுத்தா, தன் சீரியஸான அறிக்கைகள் மூலமா சீன மக்களை நிச்சயம் சிரிக்கவெப்பார்!

ஃபை ஃபை ஃபை... குனிஞ்சுஃபை!

பணியறதுலயும் குனியறதுலயும் பூஸ்டர் பேக் போட்ட கராத்தே மாஸ்டர் இவர். விசேஷ வீட்ல நம்மளை யாருமே கண்டுக்காதப்ப, யாரோ ஒரு தூரத்துச் சொந்தம் நம்மளைக் கண்டுபிடிச்சு நலம் விசாரிச்சு, கையைப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போய் பந்தியில உக்கார வெக்கிறப்ப, அவரோட அக்கறையை நினைச்சு நம்ம முகத்துல ஒரு ஆனந்தமான ஃபீலிங்ஸ் இருக்குமே,  அப்படி ஒரு ஆல்டைம் திருப்தியான முகத்தோட 365 நாளும் சுத்துற ஒரே அ.தி.மு.க-காரர். அம்மா ரூமைக் கடக்கும்போதெல்லாம், பணிவு காட்ட இவர் குனிஞ்சுட்டே போறதைப் பார்த்து, ஏதோ ஈரோடு ஈமு கோழி ஒண்ணு எக்குத்தப்பா கோட்டைகுள்ள வந்துருச்சோனு பரபரப்பாகிட்டாங்கன்னா பாருங்களேன்.

போன வருஷம் பட்ஜெட் உரையில கமா, ஃபுல்ஸ்டாப் வரவேண்டிய இடத்துல எல்லாம், 'இதயதெய்வம், புரட்சித்தலைவி, கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதல்வர்’னு யாரோ மாத்தி எழுதியதைக்கூட கண்டுபிடிக்காம, அப்படியே படிக்கிற அளவுக்கு ரொம்ப அப்பாவி.  

வெறும் காலை மட்டும் காட்டி படம் எடுக்கிற மிஷ்கின் இவரைப் படமெடுத்தாலும், மூணு சீன்லயாவது முகத்தைக் காட்டிடுவார் பன்னீர் சார். ஏன்னா, அரை மணி நேரத்துக்கு ஒரு தரம், ஆட்டோமேட்டிக்கா தரையில விழுறதுபோல இவரோட மைண்ட்ல  புரோகிராம் செட் ஆயிருக்கு.'The king of  குனிஞ்சு fy’-னு இவர் போட்டோ போட்ட ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் ஒண்ணு, கூகுள் பிளேல செம கல்லா கட்டுது. இந்தியப் பிரதமர் தன் குலதெய்வமா நினைச்சுக் கும்பிடும் இவரை, சீனாவுக்குள்ள விடாம இருக்கிறதே நமக்கு நல்லது!

முதலாம் குட்கா முகேஷ்

ஒலிம்பிக்ல ஓடவிட்டிருந்தா, 'அய்யா’ அவர்கள் நீளம் தாண்டுதல், அகலம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், சிகரம் தாண்டுதல், தகரம் தாண்டுதல், நகரம் தாண்டுதல்னு சீனாவுக்கு எதிராப் பதக்கத்தைக் குவிச்சு, தைலாபுரம் தோட்டத்துல பொதைச்சுவெச்சிருப்பார். சீனாவோட நல்ல நேரம், அரசியலுக்குள்ள போயி இப்போ தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மட்டும் தாவிக்கிட்டு இருக்கார்.

அஜித்தும் கோபிநாத்தும் கோட் மாத்தினத்தைவிட மருத்துவர் அய்யா தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாத்தினது அதிகம்னு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கடந்த காலக் கணக்கெடுப்பு சொல்லுது. சாலை விபத்துகளைத் தடுக்க ஹைவே முழுக்க மரங்களை வெட்டி ஸ்பீடு பிரேக்கர் போட்ட வில்லேஜ் விஞ்ஞானி, நல்ல காதல், கள்ளக் காதல் தெரிஞ்ச தமிழனுக்கு 'நாடகக் காதல்’னு ஒண்ணு இருப்பதைக் கண்டறிந்து சொன்ன மெய்ஞானி.

இது ரத்த பூமி! - மியாவ் புயாங் லீ

ஆட்சிக்கு பாஸ் மார்க் மட்டும் போட்டுக்கிட்டே இருப்பவர், தொழில் மந்தமா இருந்தா, அப்பப்போ டாஸ்மாக்குக்குப் பூட்டுப் போடவும் கிளம்பிடுவார். சும்மா சொல்லக் கூடாது, மேடையில 'லொள்ளு சபா’ நடத்தவே கோ.க.மணி, அன்புமணி, காடுவெட்டி குருனு 11 பேர் கொண்ட குழுவை கைக்காசு போட்டு நடத்திக்கிட்டு வர்றார். புகையிலை விழிப்பு உணர்வுப் பிரசாரங்களில் இவரது தன்னிகரற்ற உழைப்பைக் கண்டு, இரண்டாம் குலோத்துங்கன், நான்காம் ராஜராஜசோழன் வரிசையில், 'அய்யா’தான் 'முதலாம் குட்கா முகேஷ்’னே சொல்லலாம். நம்ம சீனாவில் குங்ஃபூ கலையைக் கற்றுத்தந்த போதி தர்மருக்கு இவர் சொந்தம்னு சொல்லிக்கிறதுனால, இவரை நம்பி நாம விசா தரலாம்!

மேன் வித் மெடிக்கல் மிராக்கிள்

பஜ்ஜி சுடவே ரெண்டு ஆளு தேவைப்படுறப்ப, ஒரே ஆளை வெச்சுக்கிட்டு தனிக் கட்சியே நடத்தியவர்தான் இந்த சுப்பிரமணியன் சுவாமி. மேன் வித் மெடிக்கல் மிராக்கிள். இட்லிக் கடைப் பூட்டை உடைக்கிறதுல ஆரம்பிச்சு, கட்சி ஆபீஸை காலையில கூட்டுறது வரை தனியா செய்யும் ஒன் மேன் ஆர்மி. தமிழகத்தின் தலைசிறந்த ஸ்டாண்ட்-அப் காமெடியன். ஆண்டிப்பட்டியில காணாமப்போன ஆட்டுக்குட்டி முதல் அமெரிக்காவுல காணாமப்போன அழுக்கு ஜட்டி வரை எல்லா குற்றங்களின் பின்னணியும் இவருக்குத் தெரியும்.

இவர், பல்லு துலக்குற பேஸ்ட்ல உப்பு இருக்கோ இல்லையோ, ஆனா எல்லாத்துலயும் துப்பு இருக்கும். தக்காளி, முட்டை, விளக்கெண்ணெய், மிளகாய்னு அண்ணன் உடம்பை மசாஜ் பண்ணாத உணவுப்பொருள்களே உலகத்தில் இல்லை. இவரைப் பத்தி அங்கோலா அறிஞர் எர்வாமாட்டீன், Born with silver spoon, but became a bafoon’னு சொல்லியிருப்பதில் இருந்தே இவரது திறமை, விம் பவுடர் போட்டுத் துலக்காமலேயே விளங்கும்.

பல பேர் இவரை, 'அமெரிக்க ஏஜென்ட், ஆப்பிரிக்க ஏஜென்ட்’னு சொல்றாங்க. ஆனா, இவரைப் பார்த்தா ஆட்டோவுல பேசிட்டுப் போற பழைய லாட்டரி சீட்டு ஏஜென்ட் போலத்தான் இருக்கும்.

நம்ம சீன தேசத்துக்கு டைம்பாஸுக்கு வேணா ஞானதேசிகன் சாரை வெச்சுக்குவோம். இவரு வேணாம். ஏன்னா, இந்தப் புத்தகத்தை நான் எழுதிக்கிட்டு இருக்கிறப்பவே, அவருக்கும் ஒரு காப்பி போயிருக்கும்!

******