Published:Updated:

“வாழ்க்கை இரும்படிக்கும்போது கலை பூப்பறிக்கலாமா?”

ஷிவா, படம்: கே.ராஜசேகரன்

##~##

டிசம்பர் சீஸன் மேடையை தீந்தமிழால் தீப்பிடிக்கவைக்க வருகிறார் வைரமுத்து. தமிழ் அன்னையின் கரம் பிடித்து, இயற்கை அன்னையிடம் பிராது வாசிக்கும் கவிதையை கவிஞர் தீட்டியிருக்க, அந்த வரிகளுக்கு தன் பரத அபிநயங்கள் மூலம் உயிர் கொடுக்கவிருக்கிறார் ஸ்ரீநிதி கார்த்திக் சிதம்பரம்.

வழக்கமான ஆலாபனைகள், பழகிய அபிநயங்களுக்கு இடையில், மனிதனின் பேராசைச் செயல்கள் இயற்கைச் சீற்றத்தைத் தூண்டும் விளைவுகளைப் பற்றிய விழிப்புஉணர்வுக் கருத்துகளை விவாதத்துக்கு வைக்கிறது வைரமுத்து - ஸ்ரீநிதி கூட்டணி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெருவெள்ளம் உண்டாக்கிய பேரழிவுகளை பாடுபொருளாகக்கொண்டு வைரமுத்து இயற்றியிருக்கும் கவிதைக்கு, ஸ்ரீநிதி கார்த்திக் பரதம் ஆடவிருக்கிறார்.

வருடாவருடம் பேனர் எழுத்துகள் மட்டுமே மாற்றம் காணும் டிசம்பர் சீஸன் கச்சேரிகளில் புதுமையைப் புகுத்தவிருக்கும் இந்த முயற்சி குறித்து இருவரிடமும் பேசினேன். முதல் கேள்வியை எதிர்கொண்டார் வைரமுத்து...

''ஒரு நாட்டியக் கலையின் கருப்பொருளாக உத்தரகாண்ட் வெள்ளத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது?''

''காலத்தின் கண்ணாடிதானே 'கலை’ என்பது! கவிதை - ஓவியம் என்ற கலை வடிவங்கள் நிகழ்காலத்தின் சாட்சிகளாக நிற்கும்போது, நாட்டிய மரபு மட்டும் எப்படிப் பின்தங்கலாம்? எனவே, நிகழ்காலத்தின் மக்கள் பிரச்னையைத் தள்ளிவைத்துவிட்டு கலைகள் முழுமைபெற முடியாது. வாழ்க்கை இரும்படித்துக்கொண்டிருக்கும்போது, கலை பூப்பறித்துக்கொண்டிருக்க முடியுமா? மக்கள், கலைகள் மீது ஆண்டாண்டு காலம் கொண்ட ஆதங்கம் இது.

“வாழ்க்கை இரும்படிக்கும்போது கலை பூப்பறிக்கலாமா?”

அட, மகாகவி பாரதியாரே வருந்தி எழுதியிருக்கிறாரே!

கச்சேரி தொடங்குகிறது. வித்வான் 'வாதாபி கணபதிம்’ என்று ஆரம்பிக்கிறார். 'ராமா நீ சமானமெவெரு...’, 'மரியாத காதுரா...’ உடனே பாரதி கதறுகிறார், 'அய்யய்யோ! அய்யய்யோ! ஒரே கதை. தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாட்டுகளையே வருஷக்கணக்கில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்!’ - ஆக, இது பாரதியின் போன நூற்றாண்டு வருத்தம். பாரதியின் வருத்தம் தீர்க்கும் முயற்சிகளுள் ஒன்றுதான் இப்போது நானும் ஸ்ரீநிதியும் முனைந்திருப்பது!''

அந்த இடத்திலிருந்து தொடர்ந்தார் ஸ்ரீநிதி.

''நாங்க ஏதோ பழைமையைப் புறக்கணிக்கிறோம் என யாரும் நினைக்க வேண்டாம். பழைமையின் பாரம்பரியம்தான் நம்ம எல்லோருக்குள்ளும் பொதிந்திருக்கு. அதில் சில புதிய விஷயங்களை மட்டும் டாப்-அப் பண்ற மாதிரியான முயற்சி இது. ஏன்னா, எந்தப் புதுமைக்கும் இடம்கொடுக்காத கலையின் ஆயுள் குறைவு.

இப்போ உத்தரகாண்ட் வெள்ளத்தின் விளைவுகளை பரதத்தில் புகுத்தினால், அது ஒரு சர்வதேசப் படைப்பா மாறிவிடும். ஏன்னா, குளோபல் வார்மிங்தான் இன்னைக்கு உலகமே பயப்படும் ஒரு விஷயம். அதன் விளைவுகளைக் கட்டுப்படுத்த, உலகம் முழுக்க விவாதிச்சுட்டு இருக்காங்க. நாங்க எங்கள் பங்குக்கு பரதம் மூலமா அதை இளைய தலைமுறையிடம் கொண்டுசேர்க்கிறோம்.

'இயற்கைத் தாயே
ஏனிந்தச் சீற்றம்?
இந்திய மண்ணில்

“வாழ்க்கை இரும்படிக்கும்போது கலை பூப்பறிக்கலாமா?”

ஏனிந்த ஆட்டம்?’னு தொடங்கும் கவிதை, இயற்கை சீற்றம் உண்டாக்கிய பேரழிவுகளை பட்டியல் போட்டு மனிதன், இயற்கையிடம் புலம்புவதுபோல அமைந்திருக்கும். அதுக்கு இயற்கை பதில் சொல்வதுபோல இப்படி வரும் சில வரிகள்..

'காடு தொட வேண்டாம் - நான்
வீடு தொட மாட்டேன் - புவி
சூடு பட வேண்டாம் - நான்
நாடு தொட மாட்டேன்
புகை சூழ வேண்டாம் - நான்
பகை சூழ மாட்டேன்
இயற்கையை நேசி - நான்
இடர் சூழ மாட்டேன்!’

இது ரொம்ப சிம்பிள் மெசேஜ்தான். ஆனா, யாருமே யாருக்கும் சொல்லாமப் போயிட்டோம். அதுதான் பிரச்னை.

இதுக்கு முன்னாடி வேலைக்கும் போயிட்டு குழந்தைகளையும் கவனிச்சுக்கும் டபுள்ரோல் பண்ணும் பெண்களைப் பற்றி 'அவசரத் தாலாட்டு’னு ஒரு பாடலுக்கு ஆடினேன். அதை ரொம்ப ரசிச்சு ரிசீவ் பண்ணாங்க பெண்கள். அந்த மாதிரி இந்த வருஷம் சுற்றுச்சூழல் கரிசனம் பத்தி பேசுறோம்!'' என்று சொல்லிவிட்டு வைரமுத்துவைப் பார்க்க, அவர் தொடர்ந்தார்.

'' 'மரபுகளை உடைக்கப் பார்க்கிறீர்களா’ என்று சிலர் கேள்வி கேட்கலாம். இல்லை. அப்படி இல்லை. ஆனால், விடுவிக்கப் பார்க்கிறோம். காலங்காலமாக ராதைகளுக்குக் கிருஷ்ணன் ஊதிய புல்லாங்குழல், இன்று இத்துப்போய் மேலும் சில ஓட்டைகள் கண்டுவிட்டது. கண்ணனுக்காக ஆடி ஆடி மூத்துப் போன ராதைகளுக்கு மூட்டு வலி வந்துவிட்டது. கூறியது கூறல் ஒரு குற்றம் என்றாகும்போது, ஆடியது ஆடல் குற்றம் என்றாகாதா? வந்து பாருங்கள். இது இளைஞர்களுக்கு மத்தியில் கணிசமான அதிர்வலைகளை ஏற்படுத்துமென்றே கருதுகிறோம்!

இந்த இடத்தில் ஸ்ரீநிதியின் ஆர்வத்தையும் உத்வேகத்தையும் பாராட்ட வேண்டும். புதுமை செய்ய வேண்டும் என்ற வேட்கை உள்ள ஸ்ரீநிதி, ஏற்கெனவே எனது சில நவீன கவிதைகளை அவர் நாட்டியத்துக்கு எடுத்தாண்டிருக்கிறார். அடுத்த ஆண்டும் இப்படியான வித்தியாசமான முயற்சிகள் தொடரும்!''

''அடுத்த ஆண்டு என்ன செய்வதாக உத்தேசம்?''

''நமது இசை, நாட்டிய, சிற்ப மரபுகள் எல்லாம் பெரும்பாலும் மத வழிப்பட்டவை. இல்லாத கதை மாந்தர்களே பெரும்பாலும் கலைகளுக்குக் கருப்பொருளாகியிருக்கிறார்கள். இலங்கையில் நடந்த இனப் படுகொலை ஏன் இந்தக் கலையாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லை? அடுத்த ஆண்டு இதற்குத்தான் நான் முனைவேன். அதற்காக என்னை முன்மொழியும் கலைஞர்களை நான் வழிமொழிவேன்; துணையிருப்பேன்!''