Published:Updated:

காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்!

ப.திருமாவேலன்

##~##

 துரை வீதியில் தா.கிருட்டிணன், தன்னைத்தானே வெட்டி, தற்கொலை(!) செய்துகொண்டதைப் போலவே... காஞ்சி கோயிலில் சங்கர்ராமனும் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு சாவைத் தழுவியதாகச் சரித்திரம் எழுதப்பட்டால், வருங்காலம் நம்மைக் காறி உமிழும். இரண்டு வழக்குகளிலுமே உண்மையான குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்கப் படாதது, கலிகாலக் கொடுமை!

ஆச்சாரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். அது... சாதாரண காஞ்சிபுரம் அல்ல, நகரேஷ§ காஞ்சி. வைணவர்களுக்குத் தெரியும்... சங்கர்ராமன் கொலை நிகழ்ந்த வரதராஜப் பெருமாள் கோயில், சாமான்ய மானது அல்ல. சங்கர்ராமன் கொலை செய்யப்பட்டு ரத்தக் குளத்தில் கிடந்த இடத்தில் கோயில்கொண்டுள்ள வரதராஜப் பெருமாளுக்கு, 'பேரருளாளன்’ என்று பெயர். திருப்பதியிலும் ஸ்ரீரங்கத்திலும் இருக்கும் பெருமாளுக்குக்கூட இந்த அடைமொழி இல்லை. 'எனக்கு ஏதோ ஒண்ணு நடக்கப் போகுது. வீட்டுல இருக்கிறதைவிட கோயில்ல இருந்தா பாதுகாப்பு’ என்று தனக்கு அறிமுகமான காஞ்சிபுரம் வழக்கறிஞர் ஒருவரிடம் சொல்லிவிட்டு, வரதராஜப் பெருமாள் கோயிலிலேயே அதிகம் தங்கிவந்தார் சங்கர்ராமன். ஆனால், அந்தக் கோயிலிலேயே கொடியவர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள். அந்தக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 25 பேருக்கும் இப்போது விடுதலை!

நான்கு மாதக் காலம், 479 பேரிடம் விசாரணை நடத்தி, 712 ஆவணங்களுடன் தயாரித்த 1,873 பக்கக் குற்றப்பத்திரிகையை (2005 ஜனவரி-21) வரதராஜப் பெருமாள் கோயில் கர்ப்பக்கிரகத்தில் வைத்து, பூஜை செய்துவிட்டு வெளியே வந்த வழக்கின் விசாரணை அதிகாரி எஸ்.பி., பிரேம்குமார், ''எங்கள் கடமையை நாங்கள் முடித்துவிட்டோம். இனி வழக்கை வரதராஜப் பெருமாள் பார்த்துக்கொள்வார்'' என்று சொன்னார். இப்போது இதைப் பார்க்க பிரேம்குமார் உயிரோடு இல்லை. சங்கர்ராமன் மனைவி பத்மா, இப்போதும் நம்பிக்கையை இழக்கவில்லை. ''எல்லாத்தையும் கடவுள் பார்த்துண்டுதான் இருக்கார்'' என்கிறார். ஆம்... கடவுள் கவனிக்கத்தான் வேண்டும். ஏனென்றால் சங்கர்ராமன், இந்த நாட்டின் சட்டங்களைவிட பெருமாளையும், மகா பெரியவரையும்தான் முழுமையாக நம்பினார்!

காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்!

'பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த என் பெற்றோரை அழைத்த ஸ்ரீபெரியவாள், 'ராமேஸ்வரம் போ... பிள்ளை பிறக்கும்’ என அருளுரைத்து, ஸ்ரீமடத்தின் மூலம் பயண ஏற்பாடும் செய்தார். பரமசிவன் அவதாரமான ஸ்ரீபெரியவாள் அருளால் ராமேஸ்வரம் சென்றுவந்த பிறகு நான் பிறந்ததால் 'சங்கர்ராமன்’ எனப் பெயரிட்டனர். எனக்கும் ஸ்ரீபெரியவாளுக்கும் குரு-சிஷ்ய நிலையைவிட தாத்தா-பேரன் பாவமே இருந்தது. பல நேரங்களில் மணிக்கணக்கில் புராணம், சாஸ்திரம், சரித்திரம், சட்டம், நிர்வாகம், மொழி, மக்கள்குறித்த செய்திகளை என்னிடம் கூறியுள்ளார். சிறியவனான எனக்கு, ஏன் அவர் இவற்றை மணிக்கணக்கில் சொல்ல வேண்டும் என நான் வியந்தது உண்டு. இந்தத் தகவல் ஜெயேந்திரருக்கு நன்றாகத் தெரியும்’ - கொலை செய்யப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன் சங்கர்ராமன் எழுதிய கடிதத்தில் உள்ள வாசகங்கள் இவை.

'சோமசேகர கனபாடிகள், தெற்கு மடவிளாகம், ஜம்புகேஸ்வரர் ஷேத்திரம், திருச்சி’ என்ற அநாமதேய முகவரி போட்டு கடிதம் அனுப்பிய சங்கர்ராமன், கடைசியில் அநாதையாகவே இறந்துபோனார். ஒன்பது ஆண்டுகள் கழிந்த நிலையிலும் 'யார் கொலைகாரன்?’ எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்கும் அக்கறையும் எவருக்கும் இல்லை!

கொலை செய்யப்பட்டவர் ஓர் இந்து. கொலை நடந்த இடம் பிரசித்திபெற்ற இந்துக் கோயில். ஆனால், இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்கான அவதாரப் புருஷர்களாக, மதத்தின் காவல் அரண்களாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் கண் மூடிக் கிடக்கிறார்கள். சங்கர்ராமன் வீட்டில் பி.ஜே.பி. உறுப்பினர் அட்டை இல்லையா? பத்மா, பெரும் பணக்காரராக இல்லையா? வசதி படைத்த, அரசியல் அதிகாரம்கொண்டவர்கள் கொலைகளுக்கு மட்டுமே நீதி கேட்பவர்கள், அப்பாவி சங்கர்ராமன் சாவுக்கு ஒரு பூ வைக்கக்கூட வரவில்லையே... ஏன்? செத்தவர் ஏழை என்பதாலா? கொன்றவன், 'அதிகாரம் படைத்தவனாக இருப்பானோ?’ என்ற அச்சத்தினாலா?

'என் கணவரைக் கொன்றுவிட்டதைப் போல என்னையும் என் பிள்ளைகளையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள்’ என்று பத்மா கதறியபோது, 10 பேர் அவர் வீட்டுக்கு முன் திரண்டிருந்தால், அந்த விதவைப் பெண்ணுக்கு நெஞ்சில் கொஞ்சமாவது தைரியம் வந்திருக்குமே? 'எங்களை மறுவிசாரணை செய்ய வேண்டும். அன்று, பலரும் எங்களை மிரட்டியதால் மாற்றிச் சொல்லி, பிறழ்சாட்சி சொல்லவேண்டியதாயிற்று. இப்போது சரியாகச் சொல்லத் தயாராக இருக்கிறோம்’ என்று சங்கர் ராமனின் மகன் ஆனந்த் சர்மா, அலறியபடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தபோது, இரண்டு பேர் அவர்களுக்குப் பக்கத்தில் போய் நின்றிருந்தால், பயம் இல்லாமல் குற்றவாளிகளை அடையாளம் காட்டி இருப்பார்களே? கோயில், ஆச்சாரம், அனுஷ்டானம், பழம்பெருமை, ஸ்ரீபெரியவாள், ஸ்ரீமடம் என்று பேசிக்கொண்டே இருந்த ஒருவரை, அநாதையாகப் பலி கொடுத்துவிட்டு, அவரது குடும்பத்தைப் பரிதவிக்கவிட்டு... இந்த இந்துக்களைக் காப்பாற்றாமல் எந்த மதத்தைக் காப்பாற்றப்போகிறீர்கள்?

ந்த ஒரு வழக்கிலும் இத்தனை பேர் பிறழ்சாட்சிகளாக ஆனது இல்லை. குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி, காவல் துறை அதிகாரி முன்புதான் குற்றம்சாட்டப்பட்டவர்கள், ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பார்கள். பிறகு, 'போலீஸ் அடித்ததால் இப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தேன்’ என்று நீதிமன்றத்தில் மாற்றிச் சொல்வார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று உணர்ந்த எஸ்.பி., பிரேம்குமார், ஒப்புதல் வாக்குமூலம் அனைத்தையும், பிரிவு 164-ன்படி நீதித் துறை நடுவர் முன்னிலையில் பதிவு செய்தார். அதுவும் இந்த வழக்கில் செல்லுபடி ஆகவில்லை. 'நீதிபதி மிரட்டினார்... நான் இப்படிச் சொன்னேன்’ என்று சொல்ல முடியாது என்பதால், 'வெளியில் போலீஸ்காரர்கள் நின்றுகொண்டு மிரட்டி உள்ளே அனுப்பினார்கள்’ என்று விசாரணையின்போது சொல்லிவிட்டார்கள். அதனால் அனைவருமே விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். அதிகாரம் பொருந்திய அனைத்து வழக்குகளிலும் இதுதான் நடக்கிறது.

காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்!

கடற்படையின் முன்னாள் தளபதி நந்தாவின் பேரன் சஞ்சீவ் நந்தா, கார் ஓட்டிச் சென்றபோது மோதி, ஆறு பேர் இறந்துபோனார்கள். சம்பவத்தை நேரில் பார்த்த மூன்று பேருமே பிறழ்சாட்சிகளாக ஆனார்கள். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முன் வந்தபோது, அவர் அளித்த தீர்ப்பு, இப்போது இப்படியான வழக்குகளில் பின்பற்றத்தக்கது.

'தற்போது முக்கியமான சில வழக்குகளில் சாட்சியம் அளிப்பவர்கள் பிறழ்சாட்சிகளாக மாறிவிடும் போக்கு அதிகரித்துவருகிறது. பணம் மற்றும் சில கவர்ச்சிகரமான சலுகைகளுக்கு மயங்கிப் பிறழ்சாட்சியங்கள் ஆகிவிடுகின்றனர். இது ஆரோக்கியமானது அல்ல. இந்தப் போக்கு அதிகரித்தால், நீதித் துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை படிப்படியாகக் குறைந்துவிடும். இந்த நடைமுறையை அனுமதிக்கக் கூடாது. பிறழ்சாட்சியாக மாறுவோரைப் பார்த்துக்கொண்டே அமைதியாக இருக்கவும் கூடாது. உண்மையை வெளிக்கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் அந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம்தான் மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

'தங்கள் முன் உள்ள சாட்சி, முன்பு கூறியதை மாற்றிச் சொன்னால், அவரைக் குடைந்து குடைந்து... கேள்வி எழுப்பி உண்மையை வரவழைக்கவேண்டிய பெரும் பொறுப்பு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கும் நீதிபதிக்குமே இருக்கிறது’ என்கிறது உச்ச நீதிமன்றம். எல்லோரும் பிறழ்சாட்சிகள் ஆகிவிட்டார்கள் என்று விடுவிக்க ஆரம்பித்தால், சிறைச்சாலைக்கு பூட்டுகள் தேவையே இல்லை!

'திரு.சங்கர்ராமன் கொடூரமாகக் கொல்லப்பட்டதிலும், இவ்வாறு கொலை செய்வதற்குக் கூலியாக காஞ்சி மடத்தின் வங்கிக் கணக்கில் இருந்து பெரும் தொகை கை மாறியதிலும், வழக்கின் போக்கைத் திசைதிருப்பும் தந்திரமாக, குற்றம் செய்ததாகப் பொய்யாக ஒப்புதல் அளித்து ஐந்து போலி நபர்கள் சரண் அடைந்ததிலும், கொலைக் கூட்டாளிகளுடன் தொலைபேசி மூலம் உரையாடியதிலும் காஞ்சி சங்கர மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு உள்ள தொடர்பு பற்றிய உறுதியான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன!’ - 2004 நவம்பர் 17 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இப்படிக் கூறினார் முதல்வர் ஜெயலலிதா. அவரது அந்தக் கூற்று புதுவை நீதிமன்றத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 'சட்டரீதியாகத்தான் நடவடிக்கை எடுத்தேன்’ என்று அன்று சொன்ன ஜெயலலிதாவுக்கு, இப்போது இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து பதில் அளிக்கவேண்டிய கடமை நிச்சயம் இருக்கிறது. ஏனெனில், புதுவை நீதிமன்ற தீர்ப்பு, ஜெயலலிதாவின் அரசு தாக்கல் செய்த வழக்கின் தன்மையையே நிலைகுலையவைத்துள்ளது. எது உண்மை என்பதை உலகத்துக்குச் சொல்ல, ஜெயலலிதா முன்வருவாரா?

'இந்த யுகத்திலே மிகப் பெரிய அபாயம் எது தெரியுமா?’ என்று கேட்டு, அதற்கு பதிலும் சொல்லிச் சென்றுள்ளார் மகா பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.

'அபாயகரமான வஸ்து ஒன்று, கண்ணுக்குத் தெரியாமல் அதுவே நல்லது மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு மயக்குவதுதான் கலியுகத்தில் மிகப் பெரிய ஆபத்து. மனுஷர்களின் மூளைக்குள்ளேதான் அசுரர்களும் ராட்சதர்களும் புகுந்துகொண்டுவிட்டார்கள்!’

தா.கிருட்டிணன், சங்கர்ராமன் கொலைகளில் சம்பந்தப்பட்ட அபாயகரமான வஸ்து எது என்று தெரியாமல், அச்சத்திலும் குழப்பத்திலும் உறைந்து போயிருப்பவர்கள்... அப்பாவிப் பொதுமக்கள்தான். அந்த அச்சத்தையும் குழப்பத்தையும் சட்டம் மட்டுமல்ல, 'சாமி’யும் சேர்ந்தே தீர்த்துவைக்க வேண்டும்!