Published:Updated:

சரிகமபதநி டைரி 2013

வீயெஸ்வி, படங்கள்: பா.கார்த்திக்

##~##

 ரெடி... ஒன்... டூ... த்ரீ...

டிசம்பர் முதல் தேதி, சென்னையில் இரண்டு மாரத்தான்கள் ஆரம்பம். விப்ரோ-சென்னை மாரத்தான் 41 கிலோமீட்டருக்கு  ஒரே நாளில் நடந்து முடிந்துவிட்டது. இரண்டாவது சங்கீத மாரத்தான். கிட்டத்தட்ட 40 நாட்கள், இசைக் கலைஞர்களும் ரசிகர்களும், பாடவும் கேட்கவும் சபா சபாவாக மூச்சுமுட்ட ஓடிக்கொண்டிருப்பார்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிரபலமான ஒரு சபாவின் உயரமான செயலரை அண்மையில் சந்தித்தேன். சீஸன் பட்டியலுக்கு இறுதிவடிவம் கொடுத்துக்கொண்டே ஒருவித விரக்தியுடன் அவர் சொன்னது-

''வருடாவருடம் எதற்கு இத்தனை கஷ்டப்படறோம்னு தெரியலே. ஒரே செட் வித்வான்கள்தான் பாடிட்டு வர்றாங்க. ஒரே மாதிரியான ஜனங்கள்தான் கேட்கிறாங்க. இதனால சங்கீதம் வளர்ச்சி அடைவதாகவும் தெரியலே. ஆனா, அறிவிச்ச முதல் நாளே எல்லா டிக்கெட்டும் விற்றுத் தீர்ந்துடுது. அதேசமயம், எல்லாக் கச்சேரிகளுக்கும் எல்லோரும் வந்துவிடுவது இல்லை. செலெக்ட் பண்ணித்தான் வர்றாங்க. நானும் 25 வருஷமா தொடர்ந்து சீஸன் நடத்திட்டு வர்றேன். ஆனா, இதை 'சங்கீத சேவை’னு சொல்லிவிட முடியாது!''

சுதா ரகுநாதனுக்கு 'சங்கீத கலாநிதி’ விருது கிடைப்பதில் பலருக்கும் மகிழ்ச்சி. கூடவே எதிர்ப்பும் உண்டு. மிருதங்க வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன், மியூசிக் அகாடமியின் நிபுணர்கள் குழுவில் இருந்து விலகிவிட்டார். காரணம், சீனியரான தன்னை விருதுக்கு பரிசீலிக்கவில்லை என்ற கோபம். அதுமட்டுமல்ல, ஒருசில பாடகர்கள் (குறிப்பாக, 'கிகள்’) அமெரிக்கா போனபோது, 'இந்த விருது வாங்க சுதாவுக்கு என்ன தகுதி இருக்கு?’ என்று தங்கள் மனக்கசப்பைப் பதிவுசெய்துவிட்டு வந்ததாகத் தகவல். உள்ளூரில் இவர்கள் பாசாங்காகக் கைக் குலுக்குவார்கள்!

சரிகமபதநி டைரி 2013

ந்த சீஸனிலும் டி.எம்.கிருஷ்ணாவின் அனைத்துக் கச்சேரிகளுக்கும் அனுமதி இலவசம். மியூசிக் அகாடமியில் இவர் பாடப்போவது இல்லை. இதற்கும், இங்கு சுதா ரகுநாதன் விருது பெறுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 'ஆல் ஆர் வெல்கம்’ என்றாலும், தங்கள் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்ற அகாடமியினரின் கண்டிஷனில் கிருஷ்ணாவுக்கு உடன்பாடு இல்லை. அதனாலேயே புறக்கணிப்பு. பதிலாக, ஜனவரியில் அகாடமி நடத்தும் தியாகராஜர் ஆராதனை நாளில் பாடுவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்.

'A Southern Music’ என்று தலைப்பிட்டு கர்னாடக இசைப் பற்றி புத்தகம் ஒன்று எழுதியிருக்கிறார் கிருஷ்ணா. கடந்த இரண்டு வருடங்களில் தொடர் கச்சேரிகள், அதை ஒட்டிய பயணங்களுக்கு நடுவில் பிரத்யேகமாக இவர் எழுதிய 27 கட்டுரைகள் அடங்கிய இந்த நூலை, வரும் 16-ம் தேதி கலாஷேத்ராவின் ருக்மிணி அரங்கில் வெளியிடுபவர் அமர்தியா சென். கவனிக்க... இந்தப் புத்தகம் இலவசம் இல்லை!

சீஸனில், எந்த சபாவிலும் அருணா சாய்ராம் கச்சேரி செய்யப்போவது இல்லை. அமெரிக்காவில் இருக்கும் அவருடைய மகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், ஒரு தாயாக கூடவே இருக்கவேண்டிய நிர்பந்தம்தான் காரணம். இன்று ரசிகர்கள் கூட்டத்தைக் கவர்ந்து இழுக்கும் இசைக் கலைஞர்களை எண்ணுவதற்கு பத்து விரல்கள் தேவை இல்லை. ஐந்தாறு போதும். அவர்களில் அருணாவும் ஒருவர். பாவம், அவருடைய விசிறிகளுக்குத்தான் ஏமாற்றம். 'இன்னும் சில மாதங்களில் கச்சேரி மேடைக்கு வந்துவிடுவேன்’ என்று முகநூலில் நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார் அருணா.

''இந்த விருது எனக்குக் கிடைக்கணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். இப்போ அது கிடைச்சதில் மகிழ்ச்சி...'' என்று பூரித்தார், கார்த்திக்கில் 'இசைப் பேரொளி’ விருதுபெற்ற நிஷா ராஜகோபாலன். எனில், சில வருடங்கள் கழித்து 'சங்கீதக் கலாநிதி’ விருதுக்கு இவர் ஆசைப்பட்டால், அதுவும் கிடைத்துவிடும். இந்த இடத்தில் 'நடனமாமணி’ விருதுபெற்ற உமா (நம்பூத்ரி பாட்) சத்யநாராயணன், சித்ரா விஸ்வேஸ்வரனின் மாணவி. இருவருக்கும் அன்றைய தினம் வரவு, தலா ஒன்றே கால் லட்சம். ஏனோ உமாவை ஏற்புரை வழங்க அழைக்கவில்லை. பதிலாக, சிறந்த சபா நிர்வாகி விருது வாங்கிய ஒய்.பிரபு (கிருஷ்ண கான சபா), விரிவாக நன்றி நவின்றார்!

சரிகமபதநி டைரி 2013

ரண்டு டஜனுக்கு ஒன்று கம்மி. டி.என்.சேஷகோபாலன், அனிதா ரத்னம், எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட 23 பேருக்கு விருதுகள் வழங்கி தன்னைக் கௌரவப்படுத்திக்கொண்டது பாரத் கலாச்சார்.

சிறிசுகளுக்கு வழங்கும் 'யுவ கலா பாரதி’ விருது பற்றி குறிப்பிடும்போது, ''இங்கு இந்த விருதைப் பெறுபவர்கள், ஒருசில வருடங்களுக்குள் பெரிய பெரிய விருதுகளை வாங்கி உச்சத்துக்குப் போய்விடுகிறார்கள். ஆனால், அவர்களுடைய தேதிதான் எங்களுக்குக் கிடைப்பது இல்லை...'' என்று வருத்தப்பட்டார் செயலர் ஒய்.ஜி.மகேந்திரா.

ஆன்மிகச் சொற்பொழிவாளரின் பெயரைக்கொண்ட அந்த இரண்டு எழுத்துப் பாடகியும் முன்பு இங்கு 'யுவ கலா பாரதி’ கிடைக்கப் பெற்றவர். இந்த சீஸனில் அவர் பாரத் கலாச்சாருக்குத் தேதி கொடுக்கவில்லை!

டெய்ல் பீஸ்:

பிரபல கர்னாடக இசைப் பாடகர் சஞ்சய் சுப்ரமண்யன் வீட்டு லேண்ட் லைன் போனில், ஹலோ டியூனாக ஒலிக்கும் பாட்டு: 'தேவுடா... தேவுடா... ஏழுமலை தேவுடா!’

- டைரி புரளும்...