Published:Updated:

தமிழகம்... இருளகம்!

டி.அருள்எழிலன், ஓவியம்: ஹாசிப்கான்

தமிழகம்... இருளகம்!

டி.அருள்எழிலன், ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
##~##

 மின்வெட்டில் புதுப்புது பரிமாணங்களை அறிமுகப்படுத்தியபடி இருக்கிறது தமிழக அரசு. இரண்டு மணி நேரம், நான்கு மணி நேரம், எட்டு மணி நேரம் என்று தாவித் தாவி, 12 மணி நேர மின்தடை என மிரட்டுகிறது நிலவரம். அதிலும் முன்னர் கோடை காலத்தில் தான் மின்வெட்டு நிகழும். ஆனால், இந்த ஆண்டு குளிர்காலத்திலேயே குறிவைத்து வெளுக்கிறார்கள்!  

'பருவமழை பொழிந்தால் சரியாகும்’ என்றார்கள். பிறகு, 'காற்று வீசினால் கரன்ட் வரும்’ என்றார்கள். ஆனால், எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. இடையில் சில காலம் 'பரவாயில்லை’ ரேஞ்சில் இருந்த மின்வெட்டு, இப்போது தமிழகத்தை மறுபடியும் இருண்ட காலத்துக்குத் தள்ளியிருக்கிறது. சென்னையில் இரண்டு மணி நேரம், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் அனைத்திலும் 12 மணி நேரம் மின்வெட்டு. சென்னைவாசிகள் தவிர்த்தவர்கள் நரகத்தில் வாழ்வதைப்போல் தத்தளிக்கின்றனர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இருண்ட தமிழகத்தில் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

''சமையல்கூட பண்ண முடியலைங்க. தேங்காய் சட்னியை அரைக்கும்போதே பாதியில் கரன்ட் போயிடுது. பசிக்கும்போது சமையல் செஞ்சு சாப்பிட்டதுபோக, கரன்ட் இருக்கும்போது சமையல்

தமிழகம்... இருளகம்!

செய்யவேண்டியதா இருக்கு. எதையும் சூடா செஞ்சு சாப்பிட முடியலை. தொட்டியில தண்ணி ஏத்த முடியலை. எனக்குக் குழந்தை பிறந்து 10 மாசம்தான் ஆகுது. குழந்தை தூங்கணுமேனு இன்வெர்ட்டர் போட்டோம். ஆனா, அது சார்ஜ் ஆகக்கூட கரன்ட் வர மாட்டேங்குது!'' என்று அலுத்துச் சலிக்கிறார் மதுரையில் வசிக்கும் சைந்தவி.

காற்றாலை மின் உற்பத்தியில் கணிசமான பங்கு வகிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே எட்டு மணி நேர மின்வெட்டு. '''கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்தி ஆரம்பிச்சிருச்சு’னு சொல்றாங்க... ஆனா, உற்பத்தியாகும் மின்சாரம் எங்கே போகுதுன்னே தெரியலை. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலை எதுவும் கிடையாது. ரப்பர், தென்னை விவசாயம், மீன் பிடி... இந்த மூணும்தான் பிரதானத் தொழில். ஆனா, இப்போ மூணுமே முடங்கிக்கிடக்கு!'' என்கிறார் குமரிவாசி பிரான்சிஸ்.

பொதுவாக மின் தேவையை வீட்டுத் தேவை, விவசாயத் தேவை, தொழில் தேவை, வியாபாரத் தேவை என்று நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இந்த நான்கு தரப்பினருமே இன்று மின்வெட்டால் கதிகலங்கி நிற்கிறார்கள்.

கடலூர் துறைமுகம், மிக முக்கியமான மீன்பிடிக் கேந்திரம். மீன்பிடித் தொழிலை நம்பி இங்கு பல உபதொழில்களும் நடக்கின்றன. ''பல மணி நேர மின்வெட்டு காரணமாக, மீன்களைப் பதப்படுத்தத் தேவையான ஐஸ் தயாரிக்கும் தொழில் முடங்கியிருக்கிறது. ஜெனரேட்டர் உதவியுடன் உற்பத்தி செய்தால், ஒரு பார் ஐஸுக்கே மீன் விலை கொடுக்க வேண்டியிருக்கும். இதனால், கடலில் கஷ்டப்பட்டுப் பிடித்த மீன்களைச் சேமித்து வைத்து விற்க முடியவில்லை. கடலை நம்பி நடத்தப்படும் தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன'' என்கிறார் கடலூரைச் சார்ந்த பத்மநாபன்.

சிவகாசியில் தீப்பெட்டி - அச்சுத் தொழிலும், கோவையில் இயந்திரத் தொழிலும், ஈரோடு, கரூர், பின்னலாடைத் தொழிலும், நாமக்கல் முட்டைத் தொழிலும், கல்லிடைக்குறிச்சி அப்பளத் தொழிலும், திண்டுக்கல் பூட்டுத் தொழிலும் முடங்கியிருக்கின்றன. டாலர் நகரமான திருப்பூரிலும் இதே நிலைதான்.

'பவர்கட்’ என்று பேசத் தொடங்கியதுமே பெரும் சலிப்புடன் பேசுகிறார் திருப்பூரில் அச்சுக்கூடம் நடத்தும் எழில் சுப்பிரமணியன்.

''பஞ்சு ஆலையில் நெய்யப்படும் நூல், நூற்பாலைக்கு வந்து தொழிற்சாலையில் துணியாகி, சலவைப்பட்டறைகளில் பிளீச்சிங் செய்யப்பட்டு, டையிங், கேஸ்டிங், எம்பிராய்டரி என்று ஒரு சட்டையாக உருமாறி, அதை அட்டைக்குள் அடைத்து லேபிள் ஒட்டும் வரை... ஒரு சாதாரண சட்டையை உருவாக்கவே பல நிலைகளில்  மின்சாரம் தேவை. ஆனா, அப்பப்போ சில மணி நேரங்கள் மட்டுமே வரும் மின்சாரத்தை நம்பி ஒரு சட்டைகூட தயாரிக்க முடியலை. அதுவும் நூல் ஓடிட்டு இருக்கும்போது பாதியில மின்சாரம் போச்சுனா, அந்த லாட் அவ்வளவுதான்.

தமிழகம்... இருளகம்!

சட்டு சட்டுனு கரன்ட் போயிட்டு வந்துட்டும் இருப்பதால், இயந்திரங்களும் அடி வாங்கிருது. இதனால் குறு, சிறு, நடுத்தர ஆலை முதலாளிகள் தொழிலை மூடிட்டு வேற வேலைகளுக்குப் போயிட்டாங்க. இதனால பல்லாயிரம் கூலித் தொழிலாளர்களுக்கும் வேலை போகும். அதனால்தான் நாங்க, 'மின்தடை இல்லா மின் விடுமுறை கொடுங்க’னு கேட்குறோம். அதாவது வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் இத்தனை மணி நேரத்தில் இருந்து இத்தனை மணி நேரம் வரை மின்வெட்டு இருக்காது. மத்த நாட்கள்ல வழக்கத்தைவிட அதிகமா இருக்கும்னு சொல்லிட்டா, குறிப்பிட்ட நாள்ல மட்டும் இயந்திரத்துக்குச் சேதாரம் இல்லாம தொழில் நடத்துவோம். ஆனா, இதை யாரும் கேட்பார் இல்லை!'' என்று ஆற்றாமையுடன் பொருமுகிறார் அந்தச் சிறு முதலாளி.

தமிழகத்தில் தயாராகும் மின்சாரத்தைப் பயன்படுத்த உள்ளூர் நிறுவனங்களுக்குக் கடும் கட்டுப்பாடு விதிக்கப் பட்டிருக்கிறது. அதேநேரம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தடைஇல்லா மின்சாரம் தருவதுடன், எப்போதேனும் தப்பித்தவறி மின்தடை ஏற்பட்டால், அதற்காக அரசு அவர்களுக்கு இழப்பீடு தர ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால், உள்ளூர் தொழில்முனைவோர் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்தினால், அரசு அபராதம் விதிக்கும்.

இதைவிடவும் அதிர்ச்சியான செய்தி ஒன்று தொழில்முனைவோருக்குக் காத்திருக்கிறது. 2003-ல் மத்திய அரசு கொண்டுவந்த மின்சாரச் சட்டத்தின் ஓர் அங்கமாக, விரைவில் மின்சார வினியோகம் 25 ஆண்டுகளுக்கு தனியார் வசம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக மக்கள் வரிப் பணத்தில் மெள்ள, மெள்ளக் கட்டமைக்கப்பட்ட மின் வினியோக அமைப்பை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள தனியார்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். மாநில அரசுகளின் கைமீறிச் சென்றுகொண்டிருக்கிறது மின்கொள்கை. இப்படி மின் வினியோகத்தில் தனியார் நுழைந்தால், நிலைமை இன்னும் படுமோசம் ஆகும் என்பது உறுதி.

தமிழகத்தின் சகல தேவைகளுக்கும் தோராயமாக 12,000 மெகாவாட் மின்சாரம் தேவை. இப்போதைக்கு 8,000 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்படும் நிலையில், பற்றாக்குறை 4,000 மெகாவாட்தான் மின்வெட்டு மூலமாகச் சமாளிக்கப்படுகிறது. நிலவரத்தை ஓரளவுக்கேனும் சமாளிக்க, குஜராத் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, அங்கு இருந்து மின்சாரத்தைப் பெற தமிழக அரசு முயற்சித்து வருகிறது. இதுதான் மின்சார உற்பத்தி, பயன்பாடு குறித்து தமிழக அரசு தெரிவிக்கும் நிலவரம். ஆனால், அதன் பின்னணி குறித்தும் அதிர்ச்சி கிளப்புகிறார் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முன்னாள் பொறியாளர் காந்தி.  

''சுதந்திரத்துக்குப் பின்னர் 1948-ல் இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட மின்சார வழங்கல் சட்டம், மின்சார வினியோகத்தை பொதுத் துறை நிறுவனங்கள் வசமாக்கியது. 1948-ல் இருந்து 1973-ம் ஆண்டு வரை மத்திய அரசைவிட மாநில அரசுகளே மின் வினியோகத்தில் கோலோச்சின. மாநில மின்வாரியங்களும் கடன் இன்றி இயங்கின. 73-ல் மத்திய அரசு சில பவர் கார்ப்பரேஷன்களை உருவாக்கியது. 90-களில் புதிய மின் உற்பத்திக்கான முதலீட்டுத் தொகை அரசிடம் இல்லை என்றும், தனியாரிடம்தான் உள்ளது என்றும் கருத்துகளைத் தொடர்ந்து பரப்பி, 1998-ல் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்டது.

தனியாருக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்ட அதேநேரம், புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்க மத்திய அரசு அனுமதியும் வழங்கவில்லை. அதுவரை மாநில அரசுகள் கையாண்டுவந்த மின் வினியோக உரிமையையும் முழுமையாகக் கட்டுப்படுத்திய மத்திய அரசு டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களின் மின்வினியோக உரிமைகளைத் தனியாரிடம் கொடுத்தது. தமிழகத்தில் அப்போது ஆட்சி செய்த தி.மு.க., ஏழு தனியார் மின் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி அளித்தது. இந்தத் தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் 15 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தமும் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் 1 யூனிட் 18 ரூபாய்க்கு வாங்கிய மின்சாரத்தை, பின்னர் ஏழு, எட்டு ரூபாய் அளவுக்குக் கொண்டுவந்தார்கள். இதற்கிடையில், 2003-ல் மின்சாரச் சட்டம் கொண்டுவந்து மின்வாரியத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்றது மத்திய அரசு. ஒரு பக்கம் தனியார்கள், இன்னொரு பக்கம் அதிகாரமற்ற மாநில மின்வாரியம் என, 'மின்சாரம்’ மக்களின் அடிப்படைத் தேவை என்ற நிலையிலிருந்து பன்னாட்டு நிறுவனங்கள் பணம் கொழிக்கும் ஒரு பண்டமாக மாறத் தொடங்கியது அப்போது இருந்துதான்.

இந்தியக் காற்றாலை மின் உற்பத்தியில் 46 சதவிகிதம் தமிழகத்தின் பங்கு. ஆனால், இதன் மூலம் சில மாதங்களைச் சமாளிக்க முடிகிறதே தவிர, நிரந்தரமாக மின்வெட்டைச் சமாளிக்க முடியாது. கோடையோ, மழையோ தங்குதடையற்ற மின்சாரத்தை எப்போது வழங்க முடிகிறதோ அப்போதுதான் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறும்!'' என்கிறார் காந்தி.

31.3.2011 நிலவரப்படி, தமிழ்நாடு மின்வாரியத்தின் மொத்த இழப்பு சுமார் 40,375 கோடி ரூபாய் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். தனியாரிடம் தமிழக அரசு வாங்கும் மின்சாரத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 10,000 கோடியைக் கொட்டிக்கொடுக்கிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயில் இது 70 சதவிகிதம்!

தமிழகம்... இருளகம்!

அனுதினம் அல்லும்பகலும் மின்வெட்டு காரணமாக தமிழக மக்கள் நொந்துகொண்டிருக்க, 'மின்தடை எப்போது நீங்கும்?’ என்று விளக்கம் அளிக்க அரசாங்கத் தரப்பிலோ, அரசுத் தரப்பிலோ யாரும் தயாராக இல்லை. மின்சாரத் துறை அமைச்சர் 'நத்தம்’ விஸ்வநாதனிடம் விளக்கம் பெற பல முயற்சிகள் எடுத்தும் பலிக்கவில்லை. மின்வாரியத் துறை அதிகாரிகளும் பதில் அளிக்க முன்வர முடியாத பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தனர். இவர்களின் இத்தனை பரபரப்பு செயல்பாடுகளுக்கு இந்நேரம் எக்குதப்பு மெகாவாட் மின்சாரம் தமிழகத்தில் அனலாகப் பொழிந்திருக்க வேண்டும். ஹ்ம்ம்..!  

கடும் போராட்டத்துக்குப் பிறகு ஒரு மின்வாரிய அதிகாரியிடம் பேசினேன். தன் பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் பேசினார் அவர். ''தமிழகத்தில் பழுதடைந்துள்ள அனல்மின் நிலையங்களைச் சரிசெய்ய ஐந்து புதிய இயந்திரங்கள் வாங்கிப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மின் உற்பத்தி நிலையங்களைச் சரிசெய்து புதிய உற்பத்திகளும் வந்தால், தமிழகத்தில் மின்வெட்டு விரைந்து சரியாகிவிடும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் 400 மெகாவாட் மின்சாரத்தில், 200 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்கிறது. முழு வீச்சில் அணு உலை உற்பத்தியைக் கொடுத்தால், அதுவும் சேர்ந்து அடுத்த சில மாதங்களில் மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். மற்றபடி இந்த மின் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் மக்களுக்கு மின்சாரம் கொடுக்கவும், மின்சார ஒழுங்குமுறை ஆணைய அனுமதியின் பேரில் சுமார் 1,500 மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் வாங்கப்படுகிறது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு இது தவிர்க்க முடியாதது!' என்று பட்டும்படாமல் முடித்துக்கொண்டார்.

ஒட்டுமொத்த தமிழகமும் மின்சாரம் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்க, ஏற்காட்டில் மட்டும் மின்வெட்டே இல்லாமல் இடைத்தேர்தல் முடிந்திருக்கிறது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் மின்வெட்டு தொடர்பாக பட்டிமன்றம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் இருவருக்கும் இடையிலான மின்னொளிப் போட்டியை,  இருளில் நிற்கும் மக்கள் ரசிக்கவில்லை. அவர்கள், மின்சாரம் வந்தால் வீட்டுக்குப் போய்விடுவார்கள். ஏனென்றால், அவர்கள் நிம்மதியாகத் தூங்கி பல நாட்கள் ஆகின்றன!

தமிழகம் மிக மோசம்!

இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி 2,25,798 மெகாவாட். ஆனால், பற்றாக்குறையோ பல மடங்கு எனும் நிலையில், மாநிலங்களில் நிலவும் மின் பற்றாக்குறையை ஆய்வுசெய்ய மத்திய அரசு அமைத்த 'சுங்குலு’ கமிட்டி அறிக்கை, மின் பற்றாக்குறை அதிகபட்சமாக நிலவும் மாநிலங்களாக உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ஆந்திரா, கேரளா, தமிழகம் ஆகியவற்றைப் பட்டியலிட்டிருக்கிறது. இந்த ஆறில் மிக மோசமான இடம் தமிழகத்துக்கு என்கிறது சுங்குலு கமிட்டி!

கூடங்குள மின்சாரத்தில் சரிபாதி தமிழகத்துக்கு!

'கூடங்குளம் அணு உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறதா? அதில் எத்தனை சதவிகிதம் தமிழகத்துக்கு அளிக்கப்படுகிறது?’ கேள்விகளுக்குப் பதில் கேட்டு கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தருக்கு போன் செய்தால்... 'ஆஹா... ஆஹா... அணுசக்தி... அழகாய் தருது மின்சக்தி...’ என்று காலர் டியூன் ஒலிக்கிறது. அவர் சொன்ன கணக்கு இதோ...

''இந்த வருடம் நவம்பர் 10-ம் தேதி முதல் கூடங்குளம் அணுமின் நிலையம், தன் உற்பத்தியைத் தொடங்கி தடை இல்லாமல் மின்சாரத்தைத் தயாரித்து வருகிறது. இதுவரை 17.5 கோடி யூனிட் மின்சாரத்தை நாங்கள் உற்பத்தி செய்திருக்கிறோம். தொடர்ச்சியாக 400 மெகாவாட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், மின்சார உற்பத்தி மட்டுமே எங்கள் வேலை. வினியோகிப்பது எங்கள் பொறுப்பு அல்ல. மத்திய மின்துறை அமைச்சகம் எங்களுக்கு வழங்கிய தகவலின்படி, இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 54.41 சதவிகிதம் தமிழகத்துக்கும், 15.65 சதவிகிதம் கேரளத்துக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்!''

தமிழக மின் உற்பத்தி எவ்வளவு?

தமிழக மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களும் அவற்றின் உற்பத்தித் திறனும்:

• அனல்மின் நிலையங்களில் இருந்து - 2970 மெகாவாட்.  

•  நீர்மின் நிலையங்களில் இருந்து - 2288 மெகாவாட்.

•  மரபுசாரா எரிசக்தியில் இருந்து - 996 மெகாவாட்.

• அரசு காற்றாலைகளில் இருந்து - 19 மெகாவாட்.

•  தனியார் காற்றாலை மற்றும் நிறுவனங்களிடம் இருந்து 7,388 மெகாவாட் மின்சாரம்.

•  மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்குக் கிடைப்பது 3045 மெகாவாட்.

(தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் சுமார் 17,000 மெகாவாட். ஆனால், இவை எப்போதும் சீரான மின் உற்பத்தியைக் கொடுக்காததால் கடும் பற்றாக்குறை.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism