Published:Updated:

ஸ்ரீஜித் எனும் இளவரசன்!

பிரேமா நாராயணன், படங்கள்: உசேன்

ஸ்ரீஜித் எனும் இளவரசன்!

பிரேமா நாராயணன், படங்கள்: உசேன்

Published:Updated:
##~##

 ''இவன்தான் ஸ்ரீஜித்... எங்க வீட்டு இளவரசன்!'' - முகம் மலர தன் மகனை அறிமுகப்படுத்துகிறார் தீபா ராமகிருஷ்ணன். குட்டியாகப் பட்டு வேஷ்டியும் மை நீலத்தில் பட்டுச் சட்டையும் அணிந்துகொண்டு, அப்பா ராமகிருஷ்ணனின் மடியில் சாய்ந்திருந்த ஸ்ரீஜித்துக்கு எட்டு வயது. 'நான்காவது படிக்கும் பையனாக இருக்கும்’ என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஸ்ரீஜித்துக்கு இன்னும் கழுத்து நிற்கவில்லை; எழுந்து நிற்க முடியாது; யார் உதவியும் இல்லாமல் உட்கார முடியாது; குறிப்பாகப் பேச முடியாது. பிறந்தது முதல் எட்டு வருடங்களாக இதே நிலைதான். பார்ப்பது, கேட்பது, உணர்வது, உணர்த்துவது அனைத்தும் புலன்களின் செயல்பாடுகளின் மூலம்தான். ஆனால், அந்த இனிய இல்லத்தின் குட்டி இளவரசன்... ஸ்ரீஜித்!

அவனுடைய இந்த நிலைக்காக வீட்டில் யாரும் அழுவதோ, புலம்புவதோ, பரிதாபப் படுவதோ கிடையாது. அன்றாடம் காலையில் காபி போடுவதில் இருந்து கார்த்திகைக்கு விளக்கு ஏற்றுவது வரை வீட்டில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அவனுக்கு உணர்த்தப்படுகின்றன. அவன் சிந்தனைக்கு எட்டிய வரையில் புரிந்துகொண்டு 'ரியாக்ட்’ செய்கிறான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பிறந்து பத்து நாள் நார்மலாத்தான் இருந்தான். பதினோராவது நாள், நிறுத்தாமல் அழுதான். பால்கூட குடிக்காம, தூங்காம தொடர்ந்து அழுகை! பரிசோதனை பண்ணிப் பார்த்தா, மூளையில் மிக நுண்ணிய மாறுபாடு இருந்துச்சு. மூணு மாசத்துக்குப் பிறகும் தலை நிக்கலை. அதனால குப்புத்துக்கிறது, தவழ்றதுனு எதுவும் நடக்கலை. அப்புறம்தான் அவனுக்கு செரிப்ரல் பால்ஸி  மென்டல் ரிட்டார்டேஷன் குறைபாடு இருக்குனு கண்டுபிடிச்சாங்க.  'பிரசவத்தின்போது தொப்புள்கொடி இறுக்கமாகச் சுத்திப் பிறந்ததால், மூளைக்குப் போற ஆக்சிஜன் தடைபட்டு, அதனால் இயங்கு திசுக்கள் (மோட்டார் செல்ஸ்) எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கு’னு சொன்னாங்க. 'முழுக்க முழுக்க தெரபி யால் மட்டுமே அவனை ஓரளவுக்காவது நார்மல் ஆக்க முடியும்’னும் சொன்னாங்க.

ஸ்ரீஜித் எனும் இளவரசன்!

அதைக் கேட்ட நொடி, என் மனசு பதறுச்சு. 'என்ன செய்யப் போறோம்’னு தவிச்சுப்போனோம். ஆனா, உடனே மனசுல ஒரு தெளிவு வந்தது. அவன் எங்க பையன். அவனுக்கு முடிஞ்சவரை சௌகரியமான வாழ்க்கையையும் பாசிட்டிவான உலகத்தையும் மட்டுமே காட்டணும்னு உறுதி எடுத்தோம். இதோ... இந்த நிமிஷம் வரை அவனை அப்படித்தான் வளர்க்கிறோம். அவன்தான் எங்க உலகம். அவனை மையப்படுத்திதான் எங்க இயக்கம்!'' என்று சொல்லும் தீபா, தலை கவிழ்ந்திருக்கும் ஸ்ரீஜித்திடம் நான் வந்திருப்பதைத் தெரிவிக்கிறார். புரிந்தது போன்றதான ஓர் உடல்மொழி ஸ்ரீஜித்திடம் வெளிப்படுகிறது!

ஸ்ரீஜித் எனும் இளவரசன்!

தீபா, ஓர் ஆசிரியை. தன் மகனின் மனநிலையைப் புரிந்துகொள்வதற்காக ஸ்பெஷல் எஜுகேஷனில் பி.எட்., படிப்பை முடித்திருக்கிறார்.

''இவனைக் கைக்குழந்தையா, ஒவ்வொரு டாக்டர்கிட்டயும் தூக்கிட்டுப் போறப்ப... அங்கே, வாயில் எச்சில் வழியத் தலையைத் தொங்கப் போட்டபடி இருக்கிற குழந்தைகளைப் பார்த்து எனக்கு வயித்தைப் பிசையும். சிறப்புக் குழந்தைகளின் பிரச்னைகளைப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக்க விரும்பி சிறப்புக் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான கல்வியைப் படிச்சேன். தரமணி, ஸ்பாஸ்டின் சிறப்புப் பள்ளிக்கு என் மகனை அழைச்சுட்டுப் போய்ட்டு வந்தப்போதான், அந்தக் குழந்தைகளின் உலகம் எவ்வளவு அழகானதுனு புரிஞ்சுது. ஸ்ரீஜித்தை ஏழரை வயசு வரை ஸ்பெஷல் ஸ்கூலுக்கு அழைச்சிட்டுப் போனேன். அப்புறம் சில காரணங்களால் போக முடியலை. ஆனா, அந்தக்  குழந்தைகளுக்கு கல்வி ரெண்டாம்பட்சம்தான். சிகிச்சைக்குத் தான் முன்னுரிமை கொடுக்கணும். மத்தக் குழந்தைங்க மாதிரி இவங்களை, ஒரு வகுப்பில் 30 பேரை உக்கார வெச்சுச் சொல்லித்தர முடியாது. ஒவ்வொருத்தருக்கும் அவங்கவங்க குறைபாடுகள், ஏற்புத்திறன், கிரகிக்கும் திறன் ஆகியவற்றைப் பொருத்து தனித்தனியாத்தான் சொல்லித்தர முடியும். அதனால் பெற்றோர்கள்தான் அவரவர் குழந்தைகளுக்கான, பாடங்களைத் தயாரிக்கணும். 'பிரைட் கலர்’னா, ஸ்ரீஜித் கண்களை விரிச்சுப் பார்ப்பான். அதனால் எங்க வீட்டு சுவர்கள், பெட்ஷீட், தலையணை உறை எல்லாமே அடிக்கிற நிறங்களில்தான் இருக்கும்.  

ஸ்ரீஜித் எனும் இளவரசன்!

பொதுவா சிறப்புக் குழந்தையின் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், 'இது என் தங்கை/தம்பி’னு சொல்லத் தயங்குவாங்க. ஆனா, மனதளவில் அவங்களைத் தயார்ப்படுத்தணும். என் மகள் ஸ்னேகா, நண்பர்களுக்கு தன் தம்பி ஸ்ரீஜித்தை பெருமிதமா அறிமுகப்படுத்துவா. அவ டூர் போறப்ப, ரயில்வே ஸ்டேஷனுக்கு அவனையும் அழைச்சிட்டு வந்து டாட்டா காட்டணும்னு சொல்லி வரவைப்பா. அவனுக்கு டிரெஸ் பண்ணிவிடறது, தலை வாரிவிடுறதுனு பார்த்துப் பார்த்து அலங்கரிப்பா. எங்க வீட்டில் கணவர், மகள், எங்க பெற்றோர்கள்னு எல்லோருமே ஸ்ரீஜித்தைக் கொண்டாடுறப்போ, இது வரம்னு தோணும்!'' என்று நெகிழும் தீபா, சின்ன இடைவெளிவிட்டுத் தொடர்கிறார்.  

ஸ்ரீஜித் எனும் இளவரசன்!

''இப்படியான சில குறைபாடுகளோட பிறக்கும் குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டுக்கிட்டு, 'என் குழந்தையைக் கொன்னுடுங்க’னு சொல்ற பெற்றோர்களைப் பத்தி அப்பப்போ செய்திகளை வாசிக்கிறப்ப மனசு ரொம்ப கனமாயிடும். இத்தனை வருஷம் ஸ்ரீஜித்தை நான் பராமரித்ததில் புரிஞ்சுக்கிட்டது ஒண்ணுதான்.. இந்தச் சிறப்புக் குழந்தைகள் நாம வசிக்கும் சராசரி உலகத்துல சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சா, அது ரொம்பக் கஷ்டம். ஆனா, அவங்க உலகத்துக்கு நாம போய்ட்டா, அங்கே சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை!''

பிசியோதெரபி சிகிச்சையின் ஒரு பகுதியாக 'ஸ்டாண்டிங் சேரில்’ மணிக்கணக்கில் தலை கவிழ்ந்து நின்றுகொண்டிருக்கும் ஸ்ரீஜித்தின் முடியைக் கோதி முத்தம் இடுகிறார் தீபா. அவன் மேனியெங்கும் சின்னப் புல்லரிப்பு நிகழ்கிறது... என் மனதிலும்!  

சிறப்புக் குழந்தைகள் பராமரிப்புக்கான அரசின் சலுகைகள்:

• குழந்தைக்கு என்ன குறைபாடு, எத்தனை சதவிகிதம் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான அரசு மருத்துவரின் சான்றிதழை வைத்து, 'தேசிய மற்றும் மாநில மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை’ பெறலாம். அதன் மூலம் இந்தியா முழுக்க மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளைப் பெறலாம்.

• தமிழக அரசு, சிறப்புக் குழந்தைகளுக்கு மாதந்தோறும் பராமரிப்புத் தொகை ரூபாய் 1,000 வழங்குவதோடு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, பள்ளி சென்று வர, பயணப்படியும் வழங்குகிறது.  

• மத்திய அரசாங்கம் 'நிரமயா’ எனும் மருத்துவக் காப்பீடு வசதியை வழங்குகிறது. இதன் மூலம் அறுவைசிகிச்சைக்கான மருந்துகள், பிசியோதெரபி சிகிச்சைக் கட்டணங்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

• பெற்றோரின் வருமானத்துக்கு, சிறப்பு வருமான வரிவிலக்கு உண்டு.

• மாதப் பராமரிப்புத் தொகை வாங்காதவர்களுக்கு, 'பென்ஷன்’ சலுகை உண்டு.

• 'செரிப்ரல் பால்ஸி’ பாதித்தவர்களுக்கான நாற்காலி, மற்ற செயற்கை உபகரணங்கள் அனைத்தும் இலவசம்.

• ரயில் கட்டணச் சலுகை, பேருந்துக் கட்டணச் சலுகைகள் உண்டு.

• கடந்த 30 வருடங்களாக, சிறப்புக் குழந்தைகளின் பரமாரிப்புக்குத் தேவையான வழிகாட்டலை தன்னலம் பாராது செய்துவருபவர் திருமதி அம்புஜம். சிறப்புக் குழந்தைகளுக்கு அரசாங்க சார்பில் வழங்கப்படும் சலுகைகளைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள இவரை, 9962378089 என்ற எண்ணில் அழைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism