Published:Updated:

சிங்கப்பூர் தமிழர்கள்... எதிர்காலம் என்னவாகும்?

டி.அருள் எழிலன்

சிங்கப்பூர் தமிழர்கள்... எதிர்காலம் என்னவாகும்?

டி.அருள் எழிலன்

Published:Updated:
##~##

'ஆசியத் தொழிலாளர்களின் சொர்க்கம்’ என்று வர்ணிக்கப்பட்ட சிங்கப்பூர், இப்போது சிவந்துகிடக்கிறது. கடந்த 44 ஆண்டுகளில் சிங்கப்பூரின் அமைதி முதன்முதலாகக் குலைந்திருப்பதாகப் பொங்குகின்றனர் சிங்கப்பூர்வாசிகள்.

புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடிச் சத்திரத்தைச் சேர்ந்த குமாரவேல் என்கிற 33 வயது இளைஞர், ஒரு பேருந்தில் சிக்கி இறந்துபோக, அதைத் தொடர்ந்து நடந்த மூன்று மணி நேரக் கலவரம், சிங்கப்பூரில் தமிழகத் தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கி விட்டது. கலவரத்தில் ஈடுபட்டதாக 24 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், 'இனிமேல் தமிழர்கள் சிங்கப்பூருக்குச் சென்று வேலை செய்ய முடியாமல் போய்விடுமோ?’ என்ற பதற்றம் பரவுகிறது. மறுபக்கம் சிங்கப்பூரில் உழைத்துக்கொண்டிருக்கும் தங்கள் உறவுகள் நலமாக இருக்கிறார்களா என ஒவ்வொரு நாளும் இங்கு பதறுகின்றனர் தமிழர்கள். என்னதான் நடக்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

716 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள சிங்கப்பூரில், மலாய், சீனர், தமிழர் உள்ளிட்ட பல இனத்தவர்களும் வாழ்கிறார்கள். திறந்த பொருளாதாரச் சந்தையைக்கொண்டுள்ள சிங்கப்பூரின் பிரதான வருவாய், அந்நிய முதலீட்டின் மூலமும், மின்னணு சாதன விற்பனையிலும், சுற்றுலா மூலமும் வருகிறது. பல்வேறு படிநிலைகளைக்கொண்ட இந்த நாட்டில் தமிழர்கள் பெரும்பாலும் அடிமட்ட உழைப்பாளிகள் மட்டுமே. பளபளப்பான சிங்கப்பூரின் மேனி அழகை மெருகேற்றுவதில் இவர்களின் பாத்திரம் மிக முக்கியமானது. பெரும்பாலும் கட்டடத் தொழிலாளர்களாக, இத்தனை ஆண்டுகளாக சிங்கப்பூரின் ஒழுங்கை உழைத்து உருவாக்கியவர்கள் இவர்கள்தான். இப்போது இவர்கள் மீது வன்முறையாளர் முத்திரை.

சிங்கப்பூர் தமிழர்கள்... எதிர்காலம் என்னவாகும்?

சீனர்களுக்கு சீனா டவுன், மலாய்களுக்கு கெய்லாங், தமிழர்களுக்கு லிட்டில் இந்தியா என, கடின உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் வார இறுதியில் ரிலாக்ஸ் செய்துகொள்வது இந்த இடங்களில்தான். சுமார் 1,000 கடைகளைக்கொண்ட லிட்டில் இந்தியாவில் 'இந்தியர்கள்’ என்றால், அது பெரும்பாலும் தமிழர்களையே குறிக்கும். லிட்டில் இந்தியாவுக்கு வந்துவிட்டால், சொந்தபந்தங்கள் அனைவரையும் சந்திக்கலாம். இதனால் தமிழர்கள் வாரம் தவறாமல் வந்துவிடுவார்கள். ஊருக்குச் செல்பவர்கள் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வதும், ஊருக்குப் பணம் அனுப்பு வதும் இங்கு இருந்துதான். பெரும்பாலானோர் உழைப்பின் களைப்பைப் போக்க மது அருந்துவார்கள். இங்குள்ள கட்டுமான நிறுவனங்களுக்கு ஒப்பந்த ஊர்திகளை இயக்குகிறவர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு வெள்ளி (சிங்கப்பூர் டாலர்) பணம் பெற்றுக்கொண்டு இந்தத் தொழிலாளர்களை அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் இருந்து அழைத்து வந்து, இரவு மீண்டும் அவர்களைக் கொண்டுபோய் சேர்ப்பார்கள். அப்படி ஒரு தனியார் பேருந்தில் அடிபட்டுதான் குமாரவேல் இறந்திருக்கிறார்.

சிங்கப்பூர் தமிழர்கள்... எதிர்காலம் என்னவாகும்?

''குமாரவேல், முன் சக்கரத்தில் தடுமாறி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. அதுபற்றி சிங்கப்பூர் அரசு நடத்தும் உயர்மட்ட விசாரணையில் உண்மை தெரிந்துவிடும். சம்பவம், இரவு சுமார் 9.30 மணிக்கு நடந்துள்ளது. போலீஸும் அந்த இடத்துக்கு உடனடியாக வந்துவிட்டது. ஆனால், வாகனங்களுக்கும் ஆம்புலன்ஸுக்கும் தீ வைக்கப்பட்டபோது ஏன் அதை போலீஸார் வேடிக்கை பார்த்தார்கள் என்று தெரியவில்லை. லேசான தடியடி நடத்தியிருந்தாலே, அந்தக் கும்பலைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். 'லிட்டில் இந்தியா’ என்பது குடியிருப்புப் பகுதியும்கூட.

வாரம்தோறும் ஏராளமான தொழிலாளர்கள் கூடி கேளிக்கைகளில் ஈடுபடுவதால், இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் யாரும் குடியிருக்கவோ, வீடுகளை விலைக்கு வாங்கவோ விரும்புவது இல்லை. இது தொடர்பாக இந்தப் பகுதி மக்கள் சிங்கப்பூர் அரசுக்கு ஏற்கெனவே புகார் கொடுத்துள்ளனர். அதன் விளைவாக லிட்டில் இந்தியாவின் கேளிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. அது இப்போது கிடைத்து விட்டது. ஆனால், இது கேளிக்கைகளைக் கட்டுப்படுத்துவது என்ற அளவில் மட்டும் நின்றுவிடாது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அரசு முயற்சிக்கும்'' என்கிறார் பல தலைமுறைகளாக சிங்கப்பூரில் வாழும் கார்த்திகேசு பரமேசு.

'வெளிநாட்டுத் தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டும்’ என்ற குரல் சிங்கப்பூரில் அவ்வப்போது ஒலிக்கும். தற்போதைய கலவரங்கள், இத்தகைய வாதத்துக்கு வலுசேர்க்கப் பயன்படலாம். 'பிழைக்கச் சென்ற இடத்தில் அடக்க ஒடுக்கமா இருக்க வேண்டாமா?’ என்று பலர் கேட்கிறார்கள். ஆனால், தொழிலாளர்களின் இந்த வார இறுதிக் கேளிக்கைகளை சிங்கப்பூர் அரசு அனுமதித்துள்ளது. 'அவர்கள் வாரம் முழுவதும் நமக்காக உழைக்கிறார்கள். வார இறுதியில் கொஞ்சம் இளைப்பாறட்டும். அதைக் கட்டுப்படுத்தினால் பெரிய பிரச்னைகள் வெடிக்கும்’ என்கிறார் சிங்கப்பூர் பிரதமர் லீ ஸுன் லூங்.

இந்தப் பின்னணியில்தான் சிங்கப்பூரை கட்டுப்பாடான நாடு என்கின்றனர். கட்டுப்பாடுதான்... ஆனால் யாருக்கு? சாலையில் எச்சில் துப்பினாலே போலீஸ் வந்துவிடும் என்பது பலரும் சொல்லும் வசனம். ஆனால், எட்டு மணி நேர வேலையோ, முறைப்படியான சம்பளமோ எந்தத் தொழிலாளர்களுக்கும் இல்லையே... ஏன்? எச்சில் துப்பினால் போலீஸ் வரும் என்றால், எச்சில் இலைகளைப் போல தொழிலாளர்கள் நடத்தப்படுவதை யார் கேட்பது?

சிங்கப்பூர் தமிழர்கள்... எதிர்காலம் என்னவாகும்?

இந்த நிலையில், குமாரவேலின் மரணத்தை சிலர் தமிழ்த் தேசியப் பிரச்னையாகவும், இன்னும் சிலர் குடிவெறிப் பிரச்னையாகவும் அணுகுகின்றனர். இரண்டுமே தவறு. 20-ம் நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டிஷார் தேயிலைத் தொழிலுக்காக தமிழர்களைப் பல நாடுகளுக்கும் அனுப்பியதுபோல, சிங்கப்பூரின் கட்டுமானத் தொழிலுக்கும் அனுப்பினார்கள். இன்றைய நவீன சிங்கப்பூரின் மேன்மைக்குப் பின் ரத்தமும் சதையுமாக இருப்பது இறக்குமதி செய்யப்பட்ட இந்தத் தமிழர்கள்தான். இன்று சிங்கப்பூரின் மக்கள்தொகை 53 லட்சம் பேர். இதில் 15 லட்சம் பேர் கூலித் தொழிலாளர்கள். பிற நாடுகளில் இருப்பதுபோன்று ஊதிய வரம்பு எதுவும் இல்லாத சிங்கப்பூரில், ஏஜென்ட்கள் அல்லது கட்டுமான நிறுவனங்கள் கொடுப்பதுதான் ஊதியம். எப்படி வட இந்தியத் தொழிலாளர்கள் இன்று தமிழகத்தில் நடத்தப்படுகிறார்களோ, அப்படியேதான் சிங்கப்பூரில் தமிழகத் தொழிலாளர்கள் நடத்தப்படுகிறார்கள்.

''காலை 6 மணிக்கே பேருந்தில் அழைத்துச் சென்றுவிடுவார்கள். வேலை எப்போது முடியும் என்று சொல்ல முடியாது. ஓவர்டைம் பார்த்தால் ஒரு நாளைக்கு 25 வெள்ளி சம்பாதிக்கலாம். ஆனால், இந்தப் பணத்தை பல நிறுவனங்கள் நேரடியாக எங்களிடம் தருவது இல்லை. ஏஜென்டிடம் தருவார்கள். அவர் நாள்தோறும் எங்கள் ஊதியத்தில் இருந்து ஐந்து வெள்ளியை எடுத்துக்கொண்டு மீதி உள்ளதைக் கணக்கிட்டுத் தருவார். இவற்றை நாங்கள் சிங்கப்பூரில் எங்கும் முறையிட முடியாது. ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட ஐந்து வெள்ளி செலவாகும். ஒரு சிறிய அறையில் நான்கு பேர் நெருக்கியடித்துத் தங்கியிருக்க, ஓர் ஆளுக்கு 200 வெள்ளி செலவாகும். இதில் மிச்சம் பிடித்து இந்திய மதிப்பில் 20,000 ரூபாய் மாதம் வீட்டுக்கு அனுப்பினாலே பெரிய விஷயம்'' என்கிறார் தஞ்சையைச் சார்ந்த கட்டடத் தொழிலாளி சரவணன்.

சிங்கப்பூர் தமிழர்கள்... எதிர்காலம் என்னவாகும்?

குமாரவேலின் மரணமும் அதையொட்டி நடந்த கலவரங்களும் சிங்கப்பூரில் உள்ள பிற பிரச்னைகளுக்கு முன்மாதிரி ஆகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது சிங்கப்பூர் அரசு. புதிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்போது கைதுசெய்யப்பட்டுள்ள 24 பேரும் வன்முறையாளர்கள் இல்லை. முறையற்ற வேலை நேரமும், தாயகம் பிரிந்த தவிப்பும், குடும்பத்தை ஈடேற்ற உழைத்தே ஆக வேண்டிய நிர்பந்தமுமாக அவர்கள் தொலைத்துக்கொண்டி ருக்கும் கனவின் உஷ்ணம்தான் இந்த வன்முறை. இவர்களின் விடுதலையில் தமிழக அரசு உடனடியாக அக்கறை காட்ட வேண்டும்!

யார் இந்த குமாரவேல்?

புதுக்கோட்டை மாவட்டம் ஓணாங்குடிச் சத்திரத்தைச் சேர்ந்த சக்திவேல் - ராஜலெட்சுமி தம்பதியின் இரண்டாவது மகன் குமாரவேல். தந்தை சக்திவேல் 2007-ல் இறந்துபோக, குடும்பத்தை நடத்தும் பொறுப்பு குமாரவேல் தலையில் விழுந்தது. 2011-ல் வெல்டிங் வேலைக்காக சிங்கப்பூர் சென்றார். பெரிய வருவாய் ஏதும் இல்லாத நிலையில் சில காலம் ஊருக்குத் திரும்பிய குமாரவேல், மீண்டும் சிங்கப்பூர் சென்று சுமாராக வருவாய் உள்ள நிறுவனத்தில் சேர்ந்தார். இதற்கிடையில் குமாரவேலின் சகோதரி மகேஸ்வரி கொள்ளை நிகழ்வொன்றில் கொல்லப்பட்டார். இப்போது குமாரவேலும் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். மகனின் மரண இழப்பீட்டுக்காகக் காத்திருக்கிறார் அந்த ஏழைத் தாய் தனியாக!

கைதுசெய்யப்பட்ட 24 பேரின் கதி?

சிங்கப்பூரில், போதைப் பொருள் கடத்தல், கொலை, இனக் கலவரங்களில் ஈடுபடுவோருக்குக் கடும் தண்டனை வழங்கப்படும். குமாரவேலின் மரணத்தையட்டி நடந்த நிகழ்வுகளில் கைதுசெய்யப்பட்டுள்ள 24 பேருக்கும் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும், பிரம்படியும் தண்டனையாகக் கிடைக்கும். அநேகமாக இந்தத் தண்டனைகளின் பாதிப்பை 24 பேரும் ஆயுள் முழுக்க அனுபவிக்க வேண்டிவரும். அபராதத்தை எப்படிக் கட்டப்போகிறார்கள் என்பது தெரியாத நிலையில், பிரம்படி என்பது சிங்கப்பூரில் நடைமுறையில் இருக்கும் கொடூரமான தண்டனை வடிவம். மிக மோசமான குற்றங்களுக்கு அதிகபட்சமாக 24 பிரம்படிகள் வரை வழங்கப்படும்.

குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப இவர்களுக்கு வழங்கப்படும் பிரம்படியை இவர்கள் சிறையில் இருக்கும் தண்டனைக் காலத்தில் படிப்படியாக நிறைவேற்றுவார்கள். சர்க்கரை நோயாளிகளாக இருந்தாலும் தப்ப முடியாது. ஒருமுறை கொடுக்கப்படும் பிரம்படியில் உருவாகும் புண் ஆறிய பிறகு, அடுத்த பிரம்படி வழங்கப்படும். இப்படி முழுப் பிரம்படிகளையும் பெற்று முடிப்பது படிப்படியாக நிறைவேற்றப்படும். 'இதுவும் மரணதண்டனை போன்றதுதான்’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism