Published:Updated:

நிரந்தரமானப் போராளி!

பிரபஞ்சன்

நிரந்தரமானப் போராளி!

பிரபஞ்சன்

Published:Updated:
##~##

95 வயதில் ஒருவர் மரணம் அடைவது இயற்கைதான் என்றாலும், நெல்சன் மண்டேலாவுக்கு மரணம் இல்லை என்றுதான் உலகம் நம்பியது. 'அதுவும் உண்மைதானே’ என்கிறது அவர் வரலாறு. 'ஆபிரகாம் லிங்கனுக்கும் மகாத்மா காந்திக்கும் நிகரான தலைவர்’ என்று வரலாறு ஒப்புக்கொண்ட தலைவராக அவர் இருந்தார்!

அப்பா காட்லா, ஏறக்குறைய ஒரு சிற்றரசர் கௌரவத்தை அனுபவித்துக்கொண்டிருந்த, வசதியான குடும்பச் சூழலில் பிறந்த மண்டேலாவின் குலப்பெயர் ரோலிலாலா. இதன் அர்த்தம் தொந்தரவு தருபவன். உண்மைதானே... நிறவெறி அரசுக்கு அப்படித்தான் அவர் வாழ்க்கை அமைந்தது. பள்ளியில், உலகை உய்விக்க வந்திருக்கும் பிரிட்டிஷ் பேரரசின் வரலாறு, மொழி, பண்பாடுகளை அந்தக் கறுப்புக் குழந்தை கற்கவேண்டி இருந்தது. அதோடு 'ஆப்பிரிக்க மக்களுக்கு என்று பண்பாடோ, கலாசாரமோ, நாகரிகமோ இல்லை’ என்று ஆங்கில ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பதையும் சேர்த்து அந்தக் குழந்தை கற்கவேண்டி இருந்தது. வகுப்பில் முதல் நாள்தான் அவர் பெயர் 'நெல்சன்’ என்று வைக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மண்டேலா, சட்ட வகுப்பில் மாணவராக இருந்தபோது, அவர் ஆடையின் நுனி தீண்டிய காரணத்தால், தள்ளிப்போய் அருவருப்பு தோன்றிய முகத்துடன் அமர்ந்த வெள்ளை மாணவரிடம்தான் 'நிறவெறி’ என்ற கசப்பை முதன்முதலில் சுவைத்தார். 'கோசா’ இனத்தில் முதன்முதலில் படிக்கப்போன - அதுவும் ஆங்கிலம் படிக்கப்போன முதல் கறுப்பு மனிதர் என்ற பெயர் அவருக்கு இருக்கவே செய்தது.

மண்டேலாவின் குணாதிசயங்கள் வித்தியாசமானவை. 'கண்ணீர் உருக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் அவர் சிரிப்பார். கோபம் அடைந்து கொந் தளிக்கவேண்டிய நேரத்தில், பேச்சற்று அமைதி அடைந்துவிடுவார். 'வெள்ளையரை வெறுக்கவேண்டிய நியாயமான காரணங்கள் நூறு இருந்தபோதும், அவர் மனதில் எவர் மீதும் வெறுப்பு என்பதே இல்லை’ என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

ஃபிடெல் காஸ்ட்ரோ ஒருமுறை சொன்னார்... 'மண்டேலா போல அபூர்வமான மனிதரை நான் கண்டது இல்லை. அவரைப் போல, நேர்மையான நிரந்தரமானப் போராளியையும் நான் கண்டது இல்லை. அவர் மனதுக்குள் ஆயிரம் அலைகள் அடித்தாலும், முகத்தில் புன்னகையைத் தவிர வேறு எதையும் நான் கண்டது இல்லை!’ 'நிரந்தரமானப் போராளி’ எவ்வளவு அழகான வார்த்தை. அதுவும் நிகரற்ற மற்றொரு போராளி யிடமிருந்து!

நிரந்தரமானப் போராளி!

காத்மா காந்தி, தென் ஆப்பிரிக்காவில் பேசிய பேச்சை மண்டேலா கேட்க நேர்ந்து, அந்தப் பேருரையே அரசியலில், போராட்டத்தில் அவரை ஆழம் காணச் செய்தது என்பதை அவரே சொல்லியிருக்கிறார். இயல்பாகவே எதையும் சந்தேகிக்கும், எதையும் சுலபமாக ஏற்றுக்கொள்ளாத சுபாவம்கொண்டவர் மண்டேலா. ஆனால், ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்ட பிறகு திரும்பிப் பார்ப்பதோ, சந்தேகம்கொள்வதோ அவர் இயல்பில் இல்லை.

'மடிபா’ என்று (மடிபா என்றால், அரச வம்சம்) அழைக்கப்பட்ட நெல்சன் மண்டேலாவின் முதல் போராட்டப் பங்கேற்பு, 1943-ம் ஆண்டு தொடங்கியது. அலெக்ஸாண்ட்ரா பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய இந்தப் போராட்டம் வெற்றியை ஈட்டியது. உண்மையில் இந்தப் போராட்டத்தில் மக்கள் திரள்வார்களா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் அவருக்கு இருந்தது. மக்கள், தலைமைக்குக் கற்றுக்கொடுப்பதுதானே வரலாறு. மண்டேலா கற்றுக்கொண்டார். அதுமட்டும் அல்ல, மண்டேலாவுக்கு கம்யூனிஸ்ட்கள் மேல் ஒவ்வாமை இருந்தது. அதையும் இந்தப் போராட்டம் தகர்த்தது.

தென் ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களை, வந்தேறிய வெள்ளை அரசு, மனிதர்களாகவே கருதவில்லை என்பதுதான் பிரச்னை. அவர்கள், தங்களுக்காக உழைக்க கடவுள் அனுப்பிய அடிமைகள்; அவர்கள் ஒருவேளை, அதுவும் அரை உணவு உண்ணும் கூலி; மாடுகளை மந்தையில் அடைப்பது போல அவர்களுக்குத் தனிக் குடியிருப்புகள், தனி இருப்பிடம், தனிப் பள்ளி, தனி உணவு விடுதிகள். அவர்கள் பொதுச் சாலையில் நடப்பதும் தீது என மூன்றாம்தரக் குடிகளாக ஒடுக்கப்பட்டனர்.

அவர்கள் மனிதர்களே, மனிதர்களாகக் கௌரவமான வாழ்க்கையை வாழ உரிமை உள்ளவர்களே என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்தார் மண்டேலா. சுதந்திரம் என்பதைப் போராடித்தான் பெற முடியும். அது உணவுத்தட்டில் ரொட்டியோடு சேர்ந்து வழங்கப்படுவது இல்லை என்பதை தன் மக்களை உணரச்செய்ததே, அவருடைய பெரும் தொண்டு.

ண்டேலாவை, நிறவெறி வெள்ளை அரசு ஆயுதப்போர்ப் பக்கம் தள்ளியது. போராளிகள் என்ன ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை எதிரிகள்தானே தீர்மானிக்கிறார்கள். தலைமறைவு வாழ்க்கையும் அவர் மேல் திணிக்கப்பட்டது. கைதாகி, நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டபோது, மண்டேலா சொன்னார்... 'நீர் வெள்ளையர். இங்குள்ள வழக்கறிஞர்கள் வெள்ளையர்கள். நீதிமன்றக் கட்டடம் வெள்ளை நிற அருவருப்பில் மிளிர்கிறது. நான் கறுப்பன். அதுவும் உங்கள் கைதி. எனக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?’ கிடைக்கவில்லை.

மண்டேலாவுக்குத் தூக்குத் தண்டனைதான் என்று அரசு முடிவுசெய்திருந்தது. ஆனால், மக்கள் இயக்கங்கள் செய்த போராட்டம் காரணமாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அந்த நீதிபதியிடம் சொன்னதை பின்னர் மண்டேலா தன் கட்டுரை ஒன்றில் இப்படிக் குறிப்பிட்டார்.

'நானும் என்னைச் சேர்ந்தவர்களும் போராளிகளே தவிர, பயங்கரவாதிகள் அல்ல. கம்யூனிஸ்ட்களை நான் சந்தேகித்தேன் என்பதை மறைக்கவில்லை. ஆனால், உலகம் முழுக்கச் சுதந்திரத்துக்குப் போராடுபவர்கள் அவர்கள்தான் என்பதை இப்போது உணர்கிறேன். எல்லோருக்கும் எல்லாம் சம உரிமை, சம பங்கு என்பது கிடைக்கும் வரைக்கும் என் போராட்டம் தொடரும்...’

27 ஆண்டுகால, அல்லது ஏறக்குறைய 10,000 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையான மண்டேலாவிடம் அவர் நண்பர், இசைக் கலைஞர் போனோ, சிறை அனுபவம் பற்றி கேட்டார். 'நான் மட்டுமா சிறையில் இருந்தேன். தென் ஆப்பிரிக்காவே, 300 ஆண்டுகளாக வெள்ளையரின் சிறையில் இருக்கிறது; வறுமைப் பிடிக்குள் சிறைப்பட்டுக்கொண்டு இருக்கிறது. நிற ஒதுக்கல், நிற இழிவு, வறுமை என்பதெல்லாம் மனிதர்கள் உருவாக்கியவை. அது இயற்கை அல்லவே!’ என்றார் மண்டேலா.

ன்னுடன் போராடிய தோழர் ஒருவரின் மகளான எவலின் மாசேலைக் காதலித்து மணந்தார் மண்டேலா. குழந்தைகள் நால்வர். முழுநேர அரசியல் வாழ்க்கையில் குடும்பத்தை, குழந்தைகளைக் கவனிக்காத கணவனுடன் வாழ விரும்பாத எவலினின், திருமணம் ஆகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு மணவிலக்குப் பெற்றார். அடுத்த மனைவி வின்னி. மண்டேலாவோடு தோளோடு தோள் இணைந்து போராடிய தோழர் அவர். சிறை சென்றவர். மண்டேலா பதவிக்காலத்தில் அவர் மேல் நிறையப் புகார்கள் வரவே, அவரையும் விலக்கினார். கடைசியாக கிராசா மிஷேல்.

புரட்சிக்காரர்கள், குடும்ப வாழ்க்கை எந்தக் காலத்தில் நிம்மதியாக இருந்தது? அப்படி இருக்கும்படியாக அரசுகள் பார்த்துக்கொள்வது இல்லையே! தன் குடும்பப் பிரிவு பற்றி அவர் பேச விருப்பம்கொண்டது இல்லை. 'மாதத்துக்கு ஒருமுறை தன்னைச் சந்திக்க வரும் வழக்கறிஞரிடம் 'மக்கள் எப்படி இருக்கிறார்கள், இயக்கம் எப்படி இருக்கிறது?’ என்று அவர் கேட்டார்’ என்கிறார் ஒரு வழக்கறிஞர்.

அவர் சிறையில் இருந்தபோது, தென் ஆப்பிரிக்கா மீது பொருளாதாரத் தடை விதித்த முதல் நாடு 'இந்தியா’ என்பது இந்தியாவுக்குப் பெருமை. உலக நாடுகளின் நிர்பந்தம் காரணமாகவே, மண்டேலா சிறையில் கொல்லப்படவில்லை என்பதே உண்மை.

தென் ஆப்பிரிக்காவின் பிரதமராக 1994-ல் பதவி ஏற்ற மண்டேலா, ஆட்சிரீதியில் தத்துவார்த்தத் தவறுகள் செய்தார் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்நிய முதலீட்டுக்கு, நம் இந்தியாவைப் போல, அனைத்துக் கதவுகளையும் திறந்துவிட்டார். அவர் ஆட்சியின்போது வேலை இல்லாத் திண்டாட்டம் உச்சத்தைத் தொட்டது. புரட்சிக்காரராக இருந்தபோது வெளியிட்ட அவரது அரசியல் பிரகடனத்தை, செயல்படுத்த இயலாத தோல்வியை, அதிகாரத்துக்கு வந்த மண்டேலா சந்திக்க நேர்ந்தது. புத்திசாலித்தனமாக, அடுத்த பிரதமர் பதவி வாய்ப்பை அவர் நிராகரித்தார்.

1964 ஏப்ரல் 20-ல் அவர் இப்படிச் சொன்னார்:

'என் வாழ்க்கையை ஆப்பிரிக்க மக்களுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டேன். என் வாழ்நாள் முழுக்க வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிராகச் செயல்பட்டேன். ஜனநாயகத்துக்காகவும் சுதந்திர சமூகத் துக்காகவும்தான் உழைத்தேன். எல்லா மக்களும் சமமாக வாழும் விடியலுக்காகத்தான் பாடுபட்டேன். அதற்காக நான் சாகவும் தயாராக இருக்கிறேன்.’

அப்படித்தான் அவர் இறந்தார். ஆனால், அப்படித்தான் வாழ்கிறார். போராளிகளுக்கு சாவும் ஒரு சம்பவம்தான். அது முடிவு இல்லையே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism