Published:Updated:

“கத்தோலிக்கத்தின் கள்ள மௌனத்தையே விமர்சிக்கிறேன்!”

டி.அருள் எழிலன், படம்: கே.ராஜசேகரன்

##~##

 நெய்தல் நில மைந்தனாக, முதன்முதலாக 'சாகித்ய அகாடமி விருது’ பெற்றிருக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குரூஸ். திருநெல்வேலி, உவரி கரையோரத்தில் பிறந்த ஜோ டி குரூஸ், கடலோர மக்களின் வாழ்வை, மீனவர்களின் துயரத்தை, தன் படைப்பில் பதிந்து வருபவர். முதல் நாவலான 'ஆழி சூழ் உலகு’க்கு ஆரவார அங்கீகாரம் பெற்றவர், இரண்டாவது நாவலான 'கொற்கை’ மூலம் விருது கொய்திருக்கிறார்!

''எழுத்தாளனின் பயணம், விருதுகளை நோக்கியது அல்ல. இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் இந்த விருது, சின்ன சந்தோஷத்தைக் கொடுக்கிறதே தவிர, ஆர்ப்பட்டமாகக் கொண்டாட இதில் ஏதும் இல்லை. யாராவது பாராட்டினால் கொஞ்சம் பீதியடைகிறது மனசு. மற்றபடி இலக்கியத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் எழுதுவதை உன்னதமான இலக்கியம் என்றோ, இதுதான் இலக்கியம் என்றோ சொல்லவே இல்லை!'' என்று மென்மையாகச் சிரிக்கும் ஜோ டி குரூஸ், ஆரம்பத்தில் திரைக்கடலோடியவர். இப்போது என்.டி.சி. லாஜிஸ்டிக்ஸ் (பி) லிட்., என்ற கப்பல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி.

'' 'கொற்கை’யின் விதை எங்கு விழுந்தது?''

'' 'ஆழி சூழ் உலகு’ நாவல் கொடுத்த உற்சாகத்துடன் தூத்துக்குடியை மையமிட்டு அடுத்த நாவலைப் படைக்க நினைத்தேன். தூத்துக்குடி கிராமம், மீனவர்களின் பழைய தலைநகரம். போர்த்துக்கீசியர், பாதுகாப்புக் காரணங்களுக்காக புன்னைக்காயலைக் கைவிட்டு, தூத்துக்குடியை உருவாக்கினார்கள். மீனவர்களின் தாய் கிராமமாக விளங்கிய தூத்துக்குடியில், யவனர், சோனகர், சீனர் ஆகியோர் வணிகம் செய்தனர். ஆனால், தற்போதைய தூத்துக்குடியில் மீனவ மக்களின் வாழ்க்கை, துயரப் பெருங்கடலில் அமிழ்ந்துள்ளது.

பனிமய மாதா கோயிலுக்கு ஒரு நாள் சென்றபோது, என் முன்னால் கிழிந்த ஆடைகளோடு பெரியவர் ஒருவர் நடந்து சென்றார். மூன்று ரப்பர் செருப்புகளை ஒன்றாக்கித் தைத்துப் போட்டிருந்தார். தூத்துக்குடித் துறைமுகத்தில் கோலோச்சிய கப்பல் வணிகக் குடும்பத்தின் கடைசி வாரிசு அவர். அவருக்கு இப்போது வாழ வழி இல்லை. சாக்கடையைவிடக் கேவலமான ஓர் இடத்தில் அவரது வீடு இருந்தது. ஏன் அவர் அப்படி ஆனார்? உப்பு நிலமான இந்தத் தூத்துக்குடியை எது புரட்டிப்போட்டது? இந்த வினாக்களுக்கான விடை தேடலாகத் தொடங்கியதுதான் 'கொற்கை’யின் பயணம்!''

“கத்தோலிக்கத்தின் கள்ள மௌனத்தையே விமர்சிக்கிறேன்!”

''பொதுவாகவே கத்தோலிக்கத்தைக் கடுமையாக விமர்சிக்கிறீர்களே... அதன் மீது அப்படி என்ன கோபம்?''

''நான் இப்போதும் ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவனாகவே வாழ்கிறேன். அதற்காக எனக்கு ஒரு பக்குவம் வரக் கூடாதா என்ன? எனது மூதாதையர்களை வணங்க ஆசைப்படுகிறேன். குமரித்தாயை வணங்குகிறேன். அவள்தான் என் மூதாதை. அவள் ஒரு மீனவத் தெய்வம். இது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால், கத்தோலிக்கத்துக்கு நான் துரோகம் செய்வதாகச் சொல்கிறார்கள். எனக்கு கத்தோலிக்கத்தின் மீது எந்த வன்மமும் இல்லை!''

''யாரும் எந்தக் கடவுளையும் வழிபடலாம். ஆனால், நீங்கள் இந்துத்வ மேடைகளில் ஏறி கத்தோலிக்கத்தை விமர்சிக்கும்போது, அது மதவெறி என்றுதானே கொள்ளப்படும்?''

''மதவாதம், எனக்குத் தெரியாத ஒன்று. எல்லா மதங்களிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றேன். அந்த நூல் எனக்குப் பிடித்திருந்த காரணத்தால், அதைப் புகழ்ந்து பேசினேன். அதில் என்ன தவறு இருக்கிறது? ரோம சாம்ராஜ்ஜியம், எங்கள் முன்னோர்களைச் சிந்திக்கவிடாமல் சிலுவையைச் சாத்தி அமைதியாக்கியது போல, நானும் சிந்திக்காமல் அமைதியாகிவிட முடியாது.

பைபிளையும், ஜெப மாலையையும், பிரமாண்ட தேவாலயங்களையும் எங்கள் பொறுப்பில் விட்டுவிட்டு, எங்கள் சொத்துகளை அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டார்கள். தொழிலை, மீனவர்களின் தலைமையை அழித்தார்கள். ரோமர்கள், தங்களின் நாடு பிடிக்கும் ஆசையால் எங்களை ரோமன் கத்தோலிக்கர்களாக மாற்றினார்கள். இது எப்படி ஆன்மிகம் ஆகும்? கத்தோலிக்கம், தன்னை வளர்த்த வேருக்கு வெந்நீர் ஊற்றிவிட்டது. தென்தமிழக மீனவர்களின் கடல்சார் வாழ்வு முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுள்ளது. நாகையில் பல்லாயிரம் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அணு உலைக்கு எதிராக பல ஆண்டுகளாக மக்கள் போராடுகிறார்கள். ஆனால், கத்தோலிக்கம் மிகப் பெரிய கள்ள மௌனம் சாதிக்கிறது. இந்தப் பிரச்னைகளில் மதம் ஏன் தலையிட வேண்டும் என நீங்கள் கேட்கலாம். கொல்லப்பட்ட மீனவர்களில் பெரும்பான்மையானவர்கள் கத்தோலிக்கர்கள் எனும்போது அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு கத்தோலிக்கத்துக்கு இல்லையா?

இந்த நிலையில் கத்தோலிக்கத்துக்கு எதிரான விமர்சனம் மீனவர்களிடம் பரவலாக உருவாகி வருகிறது. அதை நான் பிரதிபலிக்கிறேன்!''

''உங்கள் அடுத்த நாவல்?''

''கட்டுமரம் சார்ந்து 'ஆழி சூழ் உலகு’ எழுதினேன். பரதவர் வாழ்வு, முத்து வணிகம் தொடர்பாக 'கொற்கை’. 26 ஆண்டுகளாக கப்பல் பணியில் இருக்கிறேன். தென் தமிழரின் கடல் கடந்த கப்பல் வணிகம் தொடர்பாக அடுத்த நாவலை எழுத ஆசை. அதற்கான ஆயத்தங்களில் இருக்கிறேன் இப்போது!''