Published:Updated:

“ஆத்மார்த்த திருப்தியளிக்கும் சேவை இது!”

பாரதி தம்பி, படம்: ப.சரவணகுமார்

##~##

ம்மாவும் மகளும் எதிரெதிரே அமர்ந்துள்ளனர். அந்த மகள், அம்மாவைப் பார்த்து, ''உனக்கு பல பேருடன் தொடர்பு இருக்கிறது'' என்று நேருக்கு நேராகக் குற்றம் சாட்டுகிறாள். அம்மாவின் முகம் வெளிறிப்போகிறது. ''உங்கப் பொண்ணு சொல்றது மட்டும் பொய்யா இருந்தா, இந்நேரத்துக்கு நீங்க அவளை அடிச்சிருப்பீங்க'' என்கிறார் அந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். சற்றுநேரத்தில் அந்தத் தாய் செருப்பைக் கழற்றி மகளை அடிக்கிறார். அனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன.

- இது ஓர் உதாரணம் மட்டுமே. 'அப்பாவுக்கும் மகளுக்கும் உறவு’, 'மனைவியின் கள்ளக்காதல்’, 'மகளை விபசாரத்தில் தள்ளிய அம்மா’ என விதவிதமான தனிமனித வக்கிரங்கள், பொதுவில் பேசத் தகுதியற்ற ஆபாசங்கள் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பது பெரும்பாலும் சாதாரண ஏழை அடித்தட்டு மக்கள்தான். ஏன் இத்தகைய நிகழ்ச்சிகளில் ஏழைகள் மட்டுமே அழைத்து வரப்படுகின்றனர்? 'சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் இது தொடர்பாகப் பேசினேன்...  

''நீங்கள் ஏன் அவர்களை ஏழை என்று பார்க்கிறீர்கள்? பணம் இல்லாதவன் ஏழை, பணம் உள்ளவன் பணக்காரன் என்று பொருளாதாரக் கோணத்தில் மட்டும் பார்க்காதீர்கள். இன்று மாடி வீட்டில் வாழும் பணக்காரர்கள்தான் மனதளவில் ஏழைகளாக இருக்கின்றனர். சாதாரண மக்கள்தான் மனம் திறந்து வெளிப்படையாகப் பேசுகின்றனர். இன்றைய நமது வாழ்க்கை முறையில் மக்களுக்கு நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றைக் காதுகொடுத்துக் கேட்டு தீர்வு சொல்ல யாருக்கும் நேரம் இல்லை. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். அதில் நேர்மையாகச் செயல்படுகிறோம்!''

“ஆத்மார்த்த திருப்தியளிக்கும் சேவை இது!”

''அதே நேர்மையுடன் சொல்லுங்கள்... நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த பிறகு அவர்களின் உணர்ச்சிகளை நீங்கள் திட்டமிட்டுத் தூண்டிவிடுவது இல்லையா?''

''ஒருபோதும் இல்லை. இது ஒரு டி.வி. நிகழ்ச்சி; இதற்கு டி.ஆர்.பி. உண்டு; ஒரு பிசினஸ் உண்டு... எல்லாம் தெரியும். ஆனால், அதற்காக ஒருபோதும் இத்தகைய ஏமாற்று வேலைகளைச் செய்தது இல்லை. இதில் கலந்துகொள்ள வருபவர்கள் யாரும் முட்டாள்களும் இல்லை. நிகழ்ச்சிகளின் நிகழ்வுகள் அனைத்தும் மனிதர்களின் உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டது. அது இப்படித்தான் நடக்கும் என்று யூகிக்க முடியாது. திடீரென கட்டுப்படுத்தவும் முடியாது. அப்படி யாராவது அடித்துக்கொண்டால், உடனே எங்கள் குழுவினர் வந்து தடுப்பார்கள். யாரும் வேடிக்கை பார்க்க மாட்டோம்!''

'''ஏழை மக்களின் குடும்பப் பிரச்னைகளை பொழுதுபோக்காக மாற்றுவதன் மூலம், ஏழைகளின் கண்ணீரைக் காசாக்குகிறீர்கள்’ என்று ஏன் சொல்லக் கூடாது?''

''அது எப்படிச் சொல்ல முடியும்? ஒரு மருத்துவர், நோயாளிக்கு சிகிச்சை அளிக்கிறார் என்றால், அவர் நோயாளியை வைத்து காசு பார்க்கிறார் என்று சொல்வீர்களா? இந்த நிகழ்சியைப் பார்த்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் எனக்குப் பேசுகின்றனர். இது மிகப் பெரிய விழிப்பு உணர்ச்சியை உருவாக்கி இருப்பதாக கல்லூரி மாணவிகள் சொல்கின்றனர். எழுத்தாளர் சிவசங்கரி முதல் சாருஹாசன் வரையிலும் பலர் பாராட்டுகின்றனர். நான் பணத்துக்காக மட்டும் இந்த நிகழ்ச்சியைச் செய்யவில்லை. செய்யும் வேலையில் ஒரு திருப்தி வேண்டும். ஆத்மார்த்தமாகவே இந்த நிகழ்ச்சியைச் செய்கிறேன்!''

''உங்கள் சொந்தக் குடும்பத்தில் ஒரு பிரச்னை என்றால், இப்படிப்பட்ட ஒரு டி.வி. நிகழ்ச்சிக்குச் செல்வீர்களா?''

''அது என் சொந்த முடிவு. அதேபோலதான், இந்த நிகழ்ச்சிக்கு வருபவர்களும் சுயமாக முடிவெடுத்துதான் வருகின்றனர். யாரையும் விருப்பம் இல்லாமல் அழைத்து வருவது இல்லை!''  

''அவர்கள் விருப்பத்துடன் வருவதாகவே இருக்கட்டும். ஆனால், இப்படிப்பட்ட ஒழுக்கக்கேடுகளை தொடர்ந்து செய்முறை விளக்கம் அளித்து ஒளிபரப்புவது, சமூகத்தின் வக்கிரத்துக்குத் தீனி போடாதா?''

''அது எப்படி வளர்க்கும்? 'ஒரு விஷயம் நடப்பது தவறு இல்லை; அதை வெளியில் கொண்டு வருவதுதான் தவறு...’ என்கிறீர்களா? அப்பா-மகள் தகாத உறவு என்றால்... அப்படி ஓர் ஒழுக்கக்கேடான விஷயமே நடக்கக் கூடாது. அதைத் தடுக்க வேண்டும். மாறாக, அதை மூடி மறைப்பதால் எதுவும் நடந்து விடாது. அப்படி வெளியே சொல்வதன் மூலம், மக்கள் ஒரு படிப்பினையைப் பெறுகின்றனர். தங்கள் வாழ்க்கையைச் சீரமைத்துக்கொள்கின்றனர். அப்படி மனம் திருந்திய எத்தனையோ பேர் என்னைத் தொடர்பு கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வரும் 60 சதவிகிதம் பேர் தங்கள் பிரச்னைகளைச் சரிசெய்துகொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கின்றனர்.''

''மீதம் உள்ள 40 சதவிகித பங்கேற்பாளர்களின் நிலை என்ன? உங்கள் நிகழ்ச்சிக்கு வருவதால் அவர்களின் பிரச்னை தீர்கிறதா, அதிகரிக்கிறதா?''

''எல்லோரையும் நாங்கள் பின்தொடர்ந்து கொண்டிருக்க முடியாது. இது ஒரு டி.வி. நிகழ்ச்சி. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். எல்லோரையும் எப்படிப் பின்தொடர முடியும்? நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு நான் என் தனிப்பட்ட தொடர்பு எண்ணைக் கொடுத்து எப்போது வேண்டுமானாலும் பேசச் சொல்கிறேன். அப்படிப் பேசவும் செய்கின்றனர். ஆனால், இங்கு வருவதால் ஒருபோதும் யாருடைய பிரச்னையும் அதிகரிப்பது இல்லை. காவல் துறையினர்கூட தங்களிடம் வரும் குடும்பச் சிக்கல் பிரச்னைகளை 'சொல்வதெல்லாம் உண்மை’க்கு அனுப்பி வைக்கின்றனர்!''

''ஆக, திரையில் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா?''

''101 சதவிகிதம் நாங்கள் உண்மையை மட்டுமே சொல்கிறோம்!''