Published:Updated:

இவளும் நம் சகோதரிதான்!

பாரதி தம்பி

##~##

 டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரம், இந்தியாவைப் பற்றி எரியச்செய்தது. ஆனால், இதோ காரைக்காலில் ஒரு பெண்ணை வெறிபிடித்த எட்டு காமுகர்கள் பாலியல் வன்முறைக்குப் பிறகு கசக்கி வீசியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒழுக்கத்தையே கேள்விக்கு உட்படுத்தி குற்றவாளிகளை நியாயப்படுத்தும் அசிங்கமும் நடக்கிறது. என்ன நடந்தது காரைக்காலில்?

இந்த விஷயத்தை காவல் துறையின் கவனத்துக்குக் கொண்டுவந்து நடவடிக்கை எடுப்பதற்கு முழுமுதல் காரணமாக இருந்த புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாறன் விவரித்த சம்பவம் அப்படியே...

''காரைக்கால் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ப்ரியா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 21. திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்குத் தாய். கணவரைப் பிரிந்து வாழ்கிறார். நன்னிலம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளுடன் கணவரைப் பிரிந்து வாழ்கிறார். ப்ரியாவும் சாந்தியும் உறவினர்கள் மற்றும் தோழிகள். இதில் சாந்தி, காரைக்காலைச் சேர்ந்த மதனுடன் பழக்கத்தில் இருந்துள்ளார். கடந்த 24-ம் தேதி மதனைப் பார்ப்பதற்காக காரைக்காலுக்குச் சென்ற சாந்தி, துணைக்கு ப்ரியாவையும் அழைத்துச் சென்றுள்ளார். ஒரு குளக்கரையில் அமர்ந்து சாந்தியும் மதனும் பீர் அருந்தியிருக்கிறார்கள். ஆனால், ப்ரியா பீர் அருந்தாமல் அவர்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்துள்ளார். இவர்களை சில இளைஞர்கள் நோட்டம் விட்டபடியே சென்றுள்ளனர். இந்த நிலையில் பீர் குடித்த சாந்திக்கு, ஒவ்வாமையால்  குமட்டல் வந்துள்ளது. இதனால் சாந்தி, ப்ரியா இருவரையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள, கணபதி என்ற தன் நண்பரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் மதன். வீட்டுக்குள் சென்று சாந்தி முகம் கழுவிக்கொண்டிருக்க, மதன், கணபதி, ப்ரியா ஆகியோர் வெளியே காத்து நிற்கிறார்கள்.

இவளும் நம் சகோதரிதான்!

அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் வந்து, 'நாங்க போலீஸ். குளக்கரையில் உட்கார்ந்து குடிச்சுக் கூத்தடிச்சு விபசாரம் பண்றீங்களா? எங்ககூட வாங்க... விசாரிக்கணும்’ என்று சொல்லியுள்ளனர். இரு தரப்புக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்தப் பரபரப்பில் ப்ரியாவை மட்டும் அவர்கள் கடத்திச் சென்றுவிடுகின்றனர். மேன்ஷன் போன்ற அறை உள்ள ஒரு கட்டடத்தில் ப்ரியாவை அடைத்துவைக்கின்றனர். அந்த மூவரில் ஒருவன் வெளியில் கிளம்பிச் சென்றுவிட, இருவர் ப்ரியாவை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகின்றனர்.

இதற்கிடையே, மதனும் கணபதியும் சேர்ந்து சாந்தியை திருநள்ளாறில் ஒரு லாட்ஜில் தங்க வைத்துவிட்டு ப்ரியாவைத் தேடத் தொடங்குகின்றனர். உதவிக்கு சில நண்பர்களையும் அழைக்கிறார் மதன். அவர்களும் வந்து சேர, சற்று நேரத்தில் ப்ரியா இருந்த இடத்தைக் கண்டுபிடிக்கின்றனர். அங்கு ப்ரியாவை வல்லுறவு செய்த இருவருக்கும் இவர்களுக்கும் தகராறு மூள்கிறது. ஒருவழியாக ப்ரியாவை மீட்டுக்கொண்டு திரும்பி வரும் வழியில் அரங்கேறுகிறது அடுத்த அதிர்ச்சி. ப்ரியாவை மீட்பதற்கு உதவிக்கு வந்த அதே நண்பர்கள் குழு, ப்ரியாவைத் தூக்கிக்கொண்டு ஒரு குளக்கரைக்குச் செல்கிறது. ப்ரியாவின் வாக்குமூலப்படி, குளக்கரையில் வைத்து ஆறு பேர் அவரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகின்றனர். இந்தச் சம்பவம் இரவு 1.30-ல் இருந்து அதிகாலை 5 மணிக்குள் நடக்கிறது. இதற்கிடையில் இந்தக் குழுவினரில் ஒருவன் போலீஸில் சிக்க... அவன் மூலம் மொத்தம் 10 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறது போலீஸ். ப்ரியாவையும், லாட்ஜில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தியையும் மீட்டு, திருநள்ளாறு அருகே ஒரு வீட்டில்  தங்க வைக்கின்றனர்.

இவளும் நம் சகோதரிதான்!

காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த 10 பேரும் உள்ளூரில் அரசியல் தொடர்பில் உள்ளவர்கள் என்பதால் வழக்குப் பதியாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. டிசம்பர் 25-ம் தேதி அதிகாலையில் தொடங்கும் இந்தப் பேரம், மதியம் வரையிலும் நீள்கிறது.

இதற்கிடையே சில நண்பர்கள் மூலமாக எனக்கு இந்தத் தகவல் தெரியவந்தது. போலீஸ் இந்த விவகாரத்தை மூடி மறைக்கப் பார்ப்பதும் தெரியவந்தது. உடனடியாக நான் காரைக்கால் சீனியர் எஸ்.பி., மோனிகா பரத்வாஜுக்கு விரிவான ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அவர் காரைக்கால் ஸ்டேஷனுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தபோது, 'அப்படி யாரையும் பிடித்து வரவில்லை’ என்று கூறியுள்ளனர். சந்தேகம் அடைந்த எஸ்.பி., நேரடியாக ஸ்டேஷனுக்குக் கிளம்பிச் சென்றிருக்கிறார். அங்கே உண்மை நிலவரம் தெரியவர, கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட்டு, நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததற்காக ஒரு எஸ்.ஐ., மற்றும் ஏட்டு ஆகியோரை சஸ்பெண்ட் செய்தார் மோனிகா. இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் இருவர் தேடப்பட்டு வருகிறார்கள்.

இதுதான் நடந்தது. இதில், ஓர் ஆணுடன் அமர்ந்து ஒரு பெண் குடிப்பதைப் பார்த்ததும், அந்த இரண்டு பெண்களுமே பாலியல் தொழிலாளிகள் என குற்றவாளிகள் நினைத்துள்ளனர். அப்படி நினைத்துத்தான் ஒரு வீட்டு வாசலில் இருந்தே ப்ரியாவை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றுள்ளனர்.

ப்ரியா, ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்துப் பெண் என்று தெரிகிறது. அவருக்குப் பெரிய பின்னணி எதுவும் இல்லை. அவரது ஒழுக்கம் குறித்தும் யாரும் எதுவும் குறைகூறவில்லை. தன் தோழி அழைக்கிறார் என்பதற்காகத் துணைக்கு வந்தவருக்கு, இந்த நிலை. விஷயம் தெரிந்த உடனேயே விரைந்து நடவடிக்கை எடுத்த, சீனியர் எஸ்.பி., மோனிகா இதில் பாராட்டுக்கு உரியவர். வட இந்திய அதிகாரியான அவர், துடிப்புடன் நடவடிக்கை எடுத்ததால்தான் இத்தனை வேகமாக குற்றவாளிகளைக் கைதுசெய்ய முடிந்துள்ளது. ஆனால், கைதானவர்களுக்கு அரசியல் செல்வாக்குகள் இருப்பதை மறுப்பதற்கு இல்லை. அவர்கள் அதைப் பயன்படுத்தி தப்பிக்க நிச்சயம் முயற்சி செய்வார்கள்!'' என்கிறார் சுகுமாறன்.

21 வயதே ஆன ஓர் இளம் பெண்... ஓர் இரவு முழுவதும் நாசப்படுத்தப்பட்டுள்ளார். காமவெறியிலும் குடிவெறியிலும் திரிந்த மிருகக் கூட்டம் அந்தப் பெண்ணின் எந்த வேதனையையும் கண்டுகொள்ளவில்லை. குளக்கரையில் திறந்தவெளியில் அடுத்தடுத்து ஆறு பேர் ஒரு பெண்ணுடன் வன்முறையாக உறவுகொள்ளும் அளவுக்கு வெறிநாய்களாக இருந்துள்ளனர். அந்தப் பெண் கதறி அழுதபோதும், தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியபோதும் அவர்கள் யாரும் அதற்காக மனம் இறங்கவில்லை என்பதும் கூட்டு வெறியாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதும், சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ள வழக்கின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இவளும் நம் சகோதரிதான்!

ப்ரியாவின் நிலை குறித்து காரைக்கால் சீனியர் எஸ்.பி., மோனிகா பரத்வாஜிடம் கேட்டோம். ''பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இருக்கிறார். அவரை நான் என் நேரடி கண்காணிப்பில் வைத்துள்ளேன். ஒருவர் விடாமல் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து, நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். தடயவியல் சோதனைகளில் நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, பாதிக்கப்பட்டப் பெண்ணின் நடத்தைக் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதில் கொஞ்சமும் உண்மை இல்லை. எங்கள் விசாரணையின்படி அந்தப் பெண்ணுக்கு பெற்றோர் இல்லை. தன் அம்மாவின் சகோதரியால் வளர்க்கப்பட்டவர்!'' என்றார்.

இந்த விவகாரத்தைக் கவனிக்கும் பலரின் எண்ணம், 'அந்தப் பெண்கள் எதற்காக ராத்திரி நேரத்தில் காரைக்காலுக்குச் செல்ல வேண்டும்? யாரோ ஒருவன் அழைக்கிறான் என்றால் சென்றுவிடுவதா?’ என்பதாகவே உள்ளது. கூடவே மதனின் வற்புறுத்தலில் சாந்தி குடிக்க வேறு செய்திருக்கிறார். இது இரண்டையும் இணைத்து, 'ராத்திரி நேரத்தில் ஓர் ஆணுடன் குளக்கரையில் அமர்ந்து குடிக்கும் பெண் ஒழுக்கக்கேடாகத்தான் செயல்படுவாள்’ என்ற மனநிலைக்கு மக்கள் வருகின்றனர். அருகில் குடிக்காமல் அமர்ந்திருந்தாலும் ப்ரியாவையும் இதே அளவுகோளில்தான் பொதுமக்களின் மனம் மதிப்பிடுகிறது.

ஆனால், நம் நாட்டில் மது அருந்தும் பெண்கள் மட்டும்தான் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்களா? டெல்லி மாணவி அந்தச் சம்பவத்தின்போது மது அருந்தியிருக்கவில்லை. மும்பையில் சீரழிக்கப்பட்ட பெண் புகைப்படக்காரர் குடித்திருக்கவில்லை. பாலியல் வன்முறை செய்து, திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையில் கொன்று புதைக்கப்பட்ட ரஞ்சிதா குடித்திருக்கவில்லை. ஆகவே, இங்கு பெண்கள் குடித்திருந்தனர் என்பது ஒரு வாதமே அல்ல. நமது ஆண்கள் வெறியேறிய மனநிலையில் மிருகங்களாக அலைகின்றனர். அவர்களிடம் இந்தப் பெண் சிக்கிக்கொண்டுவிட்டார், அவ்வளவே.

இவளும் நம் சகோதரிதான்!

''இது மாதிரியான பிரச்னைகளை நாம் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் அணுகாமல், அறிவுபூர்வமாக பரந்த தளத்தில் ஆராய வேண்டும்'' என்கிறார் பெரியாரிய-பெண்ணியச் சிந்தனையாளர் ஓவியா. ''நவீன காலத்தில், கல்வி, வேலைவாய்ப்பு இவற்றின் மூலம் பெண்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது, அவ்வளவுதான். ஓர் இடத்தில் ஒரு பெண் நிற்கிறாள் எனில், அந்த இடத்துக்கும் அவளுக்கும் குடும்பம் சார்ந்த அல்லது கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும். அப்படி சம்பந்தம் இல்லாத இடத்தில் ஒரு பெண் இருந்தால், அவள் ஆண்களின் பசிக்கு இரையாவதற்கு தகுதியானவள் என்று ஆண் புத்தி நினைக்கிறது. காரைக்கால் பெண் விஷயத்திலும் அதுதான் நடந்துள்ளது.

எவ்வளவு திரைப்படங்களும் திரைப்படப் பாடல்களும் அசிங்கமாக வருகின்றன? 'அசிங்கமாக’ என்றால் ஆபாசம் என்ற பொருளில் மட்டும் நான் சொல்லவில்லை. 'வாடி’, 'போடி’ என்பதில் தொடங்கி, 'அடிப்பேன்டி’, 'கொல்லுவேன்டி’ என்பதை மிகவும் சாதாரணமாக மாற்றி, அதை ஒரு ரசனையாகப் பயிற்றுவிக்கின்றனர். காதலை ஏற்றுக்கொள்ளாத கதாநாயகியை, கதாநாயகன் கொலை செய்தாலும் தவறு இல்லை என்பதே பார்வையாளனின் மனநிலையாக உள்ளது. பெண்ணின் உடல் என்பது முழுக்க, முழுக்க ஆணுக்குப் படைக்கவேண்டிய ஒரு பண்டம்... இன்றைய நவீன ஆணின் மனநிலையும் இதுதான்.

அந்த 16 பேரை மட்டும் குற்றவாளிகளாகச் சுட்டிக்காட்டி, மொத்த கோபத்தையும் அவர்கள் மீது மட்டும் திருப்பி, இந்தச் சமூகம் தன் தவறுகளையும் பிற்போக்குத் தனங்களையும் தொடர்ந்து பாதுகாத்துக்கொள்வதைத் தடுக்க வேண்டும். அதற்கு முதலில் இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். பாலியல் வன்முறை என்பது ஒரு தனி நிகழ்வு அல்ல. அது, மொத்தமாகச் சீரழிந்துகிடக்கும் ஒரு சமூகத்தின் அரசியல், பண்பாட்டு, கலாசாரக் கேடுகளின் வெளிப்பாடு'' என்கிறார் ஓவியா.

பெண்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் ஆண்களின் மனநிலையில் சமநிலையை உண்டாக்க, இன்னும் இன்னும் நிர்பயாக்களை ப்ரியாக்களை நாம் பலி கொடுக்க வேண்டுமா?