Published:Updated:

பயங்கரமான பச்சப்புள்ள!

ஞா.சுதாகர், படம்: ர.சதானந்த்

##~##

 யானைகள் புத்துணர்வு முகாம் காரணமாக மேட்டுபாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி, குபீர் சுற்றுலா தலமாக மாறிவிட்டது! கண்காணிப்புக் கோபுரங்கள், கேமராக்கள், சுழல் விளக்குகள், மின் வேலிகள், சோதனைச் சாவடிகள்... என சகல பாதுகாப்பு வசதிகளுடன் 'ஹாலிடே’வைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன யானைகள்!

கும்கி மற்றும் கோயில் யானைகள்... என சுமார் 50 யானைகள் முகாமில் பங்கேற்றுள்ளன. யானைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குறிப்பேடுகள் தயார் செய்யப்பட்டு, தினமும் அவற்றின் கழிவு, சிறுநீர் ஆகியவை கண்காணிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்படுகின்றன. நோய் தாக்குதல் அல்லது உடல் உபாதைகள் இருப்பின் அதற்கேற்ப உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்படும். கொள்ளு, பச்சைப் பயறு போன்றவை வேக வைக்கப்பட்டு கவளமாக யானைகளுக்கு வழங்கப்படுகின்றன. கூந்தல் பனை, பலா இலை, கரும்பு சோகை, கரும்பு ஆகியவையும் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சாடிவயல் முகாமில் இருக்கும் பாரி மற்றும் நஞ்சன் ஆகிய யானைகள்தான், தமிழ்நாட்டில் கும்கி யானைகளிடையே சூப்பர் ஸ்டார்! நீண்டகாலமாக இவை இரண்டும் கும்கி யானைகளாக இருப்பதோடு, பல கும்கிகளை உருவாக்கிய பெருமையும் இவற்றுக்கு உண்டு. கும்கி யானைகளின் செயல்பாட்டில் பாகன்-யானை உறவுதான் மிக முக்கியம். ஏனெனில், யானைகள் பாகன்களை நம்பியே எதையும் செய்யும். பாகனும் யானையின் தைரியத்தை நம்பியே காட்டு யானைகளை விரட்டச் செல்வார். அப்படி யானைகளை விரட்டச் செல்லும் சமயத்தில் யானை, பாகன்... இருவரில் ஒருவருக்குப் பயம் வந்துவிட்டாலும், கதை முடிந்தது. அந்தப் பயம் பரஸ்பரம் பரவி சூழ்நிலையைச் சிக்கலுக்கு உள்ளாக்கிவிடும். யானைகளைக் கட்டுப்படுத்த பிரத்யேக பாஷை உண்டு. கும்கி யானைகளிடம் 'பார்கே’ என்றால் எதிரில் இருக்கும் எதையும் அடித்துத் துவம்சம் செய்துவிடும். காரணம், 'பார்கே’ என்றால் 'அடி’ என்று அர்த்தமாம்.

பயங்கரமான பச்சப்புள்ள!

கோயில் யானைகளின் முகாமான சென்னை அஹோபில மடத்தில் இருந்து கொண்டுவரப் பட்டிருக்கும் யானை, செம சேட்டை பார்ட்டி. ''இந்த யானைக்கு இப்போது வயசு 23. முகாமில் இதற்கு பட்டப்பெயர் 'மன்மத ராசா’. ஏனென்றால், முகாமில் இருக்கும் அனைத்துப் பெண் யானைகளுடனும் இன்ஸ்டன்ட் நண்பனாகிவிடும். ஒவ்வொரு யானையிடமும் சென்று வம்பிழுத்துச் சேட்டை செய்யும். அதனாலேயே இவனை தடுப்புகளுக்குள் அடைத்துவிட்டனர்!'' என்று பூரிக்கிறார் அந்த யானையின் பாகன் சிவராஜ்.

'யானைக்கு பலம், தும்பிக்கையில்’ என்பார்கள். முகாமில் இருக்கும் யானைகளிலேயே நீளமான தும்பிக்கை கொண்டது பழநியைச் சேர்ந்த யானை கஸ்தூரி. மற்ற யானைகளுக்கு கால் வரை தும்பிக்கை நீளும். ஆனால் கஸ்தூரியின் தும்பிக்கை, தரையில் படர்ந்து உருண்டு புரளும். இதனால், நடக்கும்போது தும்பிக்கையைச் சுருட்டி வைத்துக்கொள்கிறாள் கஸ்தூரி.

பெரும்பாலான யானைகள் மலையாளத்தை நன்கு புரிந்துகொள்கின்றன. சில யானைகளுக்கு மட்டுமே தமிழ் தெரிகிறது. இது பற்றி பாகன்களிடம் கேட்டபோது, ''பெரும்பாலான யானைகள் அஸ்ஸாம் யானை சந்தையில் வாங்கப்பட்டு வேறு மாநிலங்களில் வளர்க்கப்படும். இங்கு இருக்கும் பெரும்பாலான யானைகள் கேரளாவில் வளர்க்கப்பட்டவை.எனவே, அவற்றுக்கு மலையாளப் பரிச்சயம் உள்ளது. மொழியைவிட யானைகளுக்கு பாகன்களின் அரவணைப்புதான் முக்கியம்.முகாமில் இருக்கும்போது அவை வேறு ஒருவரின் வீட்டில் இருப்பதாகவே எண்ணும். அப்போது நம்பிக்கையான ஒருவர் இல்லாவிடில் உணவுகூட உண்ணாது. யானைகளுக்கு அந்த அரவணைப்பான நம்பிக்கையை அளிப்பது பாகன்கள்தான். பழகிவிட்டால் யானை ஒரு பச்சைக்குழந்தை. கோபம் வந்தால் அடக்கமுடியாத காட்டாறு. அதனால்தான் யானைகளைப் போல பாசமான மிருகமும் கிடையாது. பயங்கரமான மிருகமும் கிடையாது'' என்று கோரஸாக முடித்தனர்.