Published:Updated:

கொடி இல்லாமல் ‘கொடி’ நாட்டியவர்!

நானே கேள்வி... நானே பதில்!

##~##

 ''இந்தியாவிலேயே, முதன்முதலாக ஒரு கட்சி 'கொடி’யே இல்லாமல் (ஆம் ஆத்மி) ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறதே?''

''அதனால் என்ன? 'கொள்கை’யே இல்லாமல் எத்தனையோ கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும்போது, கொடி இல்லாமல் ஆட்சியைப் பிடிப்பது ஒன்றும் குற்றம் இல்லையே!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- கி.ரவிக்குமார், நெய்வேலி.

''பேருந்து நிலையங்களிலும் பொது இடங்களிலும் கட்டணக் கழிப்பிடங்களைப் பார்க்கும்போது என்ன தோன்றும்?''

'' 'ஒன்றுமில்லாதவன்
ஒன்றுக்குக்கூடப்
போக முடியாது.
அதற்கும் குறைந்தது
ஐம்பது காசு வேண்டும்’ என்ற ஏர்வாடியாரின் கவிதை தோன்றும். ஆனால், அந்த ஐம்பது காசும் மூன்று ரூபாயாக உயர்ந்துவிட்டது!''

- கே.சரஸ்வதி, ஈரோடு.

'' '40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி’ என ஜெயலலிதா அறிவித்ததன் மூலம் அதன் தோழமைக் கட்சிகளுக்குச் சொல்லப்பட்ட செய்தி என்ன?''

''கார் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள்... சேர் மட்டும் கேட்காதீர்கள்!''

- ஏ.கே.சம்சுதீன், சிதம்பரம்.

''ஜெயலலிதா பிரதமராகவும், கருணாநிதி தமிழக முதல்வராகவும் இருந்தால் எப்படி இருக்கும்?''

''தமிழகம், இன்னும் இருண்ட, வறண்ட பிரதேசமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் நல்லது எதுவும் நடந்துவிடக் கூடாது என்று ஜெயலலிதா நினைத்துவிட்டால், கருணாநிதி மத்திய அரசுடன் முட்டல் மோதல் போக்கைக் கடைப்பிடித்தால்... அய்யோ பாவம் தமிழன்... அந்தோ பரிதாபம் தமிழகம்!''

- விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

கொடி இல்லாமல் ‘கொடி’ நாட்டியவர்!

''கால மாற்றத்துக்கு ஏற்ப அப்டேட் ஆவது என்றால் என்ன?''

''சமீபத்தில், ஒரு பிரபல பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் எம்.பி.ஏ., தேர்வு எழுதினேன். தேர்வு அறைக்குத் திடீர் என ஆய்வுக்கு வந்த பறக்கும் படையினர், பேப்பர் வைத்து பிட் அடித்த மாணவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து வெளியேற்றினர். பறக்கும் படையினர் தேர்வு அறையைவிட்டு நகர்ந்தவுடன், சில மாணவர்கள் ஒளித்து வைத்திருந்த ஸ்மார்ட் போன்களை எடுத்து, விடைகளை கூகுளில் தேடத் தொடங்கினர். அந்தக் காலத்தில் பிட்டு. இந்தக் காலத்தில் நெட்டு. இதுதான் நீங்கள் கேட்ட அப்டேட்டு!''

- ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்.

''அமெரிக்கா, தொடர்ந்து இந்தியாவை அவமதித்து வருகிறதே?''

'' 'மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு அவுன்ஸ் கழிவை வயிற்றுக்குடலிலும், ஒரு அவுன்ஸ் அவமானத்தை மூளையிலும் சுமந்து கொண்டுதான் இருக்கிறார்கள்!’ என்று சொல்லியிருக்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்டு. அந்த வாசகத்தில் 'மனிதர்கள்’ என்பதற்குப் பதில் 'இந்தியர்கள்’ எனவும் பொருத்திக்கொள்ளுங்கள். வேறென்ன சொல்ல?!''

- சுரா.மாணிக்கம், புதுக்கோட்டை.

'' 'தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் தனித்தே நின்றாலும் வெற்றி பெறுவோம்’ என்கிறார்களே தமிழக காங்கிரஸ் பிரபலங்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ஞானதேசிகனும்...''

''சாலையோரத்தில் வித்தை காட்டுபவர்கள், 'எல்லாரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க’னு சொன்னா கை தட்டுறோம். காங்கிரஸ்காரர்கள் கருத்து சொன்னால் மட்டும் கேள்வி கேட்கிறோமே... ஏன்? அவங்க தன்னம்பிக்கைக்கு ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க சாமிகளா! ஆனா, 'கை’ தட்டுறதோட நிறுத்திக்கங்க... 'கை’ தவறி பட்டனை அழுத்திடாதீங்க!''

- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

''ஒரு நாடு குறித்த முதல் அபிப்ராயம் யாரால் ஏற்படுகிறது?''

''ஆட்டோ அல்லது டாக்ஸி டிரைவர்களால்! பிரபல எழுத்தாளரான ஷிவ் கேரா, சிங்கப்பூர் சென்றிருந்தபோது ஒரு டாக்ஸியில் ஏறி அதன் ஓட்டுநரிடம் ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுத்து அதிலுள்ள முகவரியில் கொண்டுசேர்க்கும்படி கேட்டார். குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று இறங்கிய உடன், ஷிவ் கேரா மீட்டரில் காட்டிய 11 டாலர்களைத் தர, டாக்ஸி டிரைவரோ

10 டாலர்களை மட்டும் பெற்றுக்கொண்டு ஒரு டாலரைத் திருப்பித் தந்தார். காரணம் கேட்டதற்கு, 'போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகச் சற்றே சுற்று வழியில் வந்தேன். நேர் வழியில் வந்திருந்தால், 10 டாலர்கள்தான் ஆகியிருக்கும்’ என்றார் அந்த ஆட்டோ ஓட்டுநர். அதன் பிறகு சிங்கப்பூரில் என்ன மோசமான அனுபவம் ஏற்பட்டிருந்தாலும், அது ஷிவ் கேரா மனதைப் பாதித்திருக்குமா என்ன!?''

- அ.க.இராஜராமன், திருவண்ணாமலை.

ல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. 'நானே கேள்வி - நானே பதில்’ என்று தலைப்பிட்டு தபாலில் அனுப்பவும்!