Published:Updated:

“தனி மனுஷியா ஜெயலலிதா எதுவும் செய்யமுடியாது!”

டி.அருள் எழிலன், படம்: கே.ராஜசேகரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

 ''நான் ஏன் தமிழ்ல எழுதணும்? அதுக்கு நீங்க ஒரே ஒரு காரணம் சொல்லுங்க! 'நான் ஏன் தமிழ்ல எழுதக் கூடாது?’னு ஆயிரம் காரணங்களை அடுக்கவா?!''- 'நீங்க ஏன் தமிழில் நாவல் எதுவும் சமீபத்தில் எழுதவில்லை?’ என்று விடம் கேட்டேன். குமுறிக் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டார்.

''என் புக் எதுவும் வராததால, இந்த வருஷப் புத்தகக் காட்சியை 'கறுப்புப் புத்தகக் காட்சி’னு சொல்றாங்க என் வாசகர்கள். கேரளாவில் எம்.டி.வாசுதேவன் நாயரோட 'நாலுகட்டு’ நாவல் லட்சம் லட்சமா பிரதிகள் விக்குது. ஆனா, தமிழ்நாட்ல எட்டுக் கோடிப் பேர் இருக்காங்க. ஆனா, 3,000 பேர்தான் வாசிக்கிறாங்க.

அந்தக் காலத்துல சி.சு.செல்லப்பா, புத்தகம் போட்டு அதைத் தூக்கிட்டுத் தெருத் தெருவா அலைஞ்சு 100 காப்பி வித்தார். இன்னைக்கு டீக்கடை, பெட்டிக்கடை, ஆன்லைன்ல எல்லாம் எழுத்தாளனோட புத்தகம் விக்குது. ஆனா, இப்பவும் 3000-தான் விக்குது. 80 ரூபாய் கொடுத்து புக் வாங்காதவங்களுக்காக நான் எதுக்கு எழுதணும்? அதான் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பிச்சுட்டேன்.

“தனி மனுஷியா ஜெயலலிதா எதுவும் செய்யமுடியாது!”

என் எழுத்தைப் படிச்ச ஜெர்மன்காரன், 'ஏன் உங்களோட புத்தகங்களைக் குரல் பதிவுகளாகக் கொண்டுவரக் கூடாது?’னு கேட்கிறான். அப்படிக் கொண்டுவந்தா, என் புத்தகங்களை கமல்ஹாசனும் சமந்தாவும் வாசிக்கணும். அது முடியுமா இங்கே? எல்லா எழுத்தாளனுக்கும் இங்கே அங்கீகாரம் கிடைக்கணும்னுதான் நான் போராடுறேன். ஆனா, சாரு ஏதோ காமெடி பண்றார்னு எல்லாரும் நினைக்கிறாங்க.

அதுவும் போக... என்னை ஏதோ எம்.ஜி.ஆர். பட வில்லன் நம்பியார் மாதிரியே பார்க்கிறாங்க. 'ஏண்டா... நீ எம்.ஜி.ஆரையும் சரோஜா தேவியையும் நிம்மதியாவே வாழ விட மாட்டியா?’ங்கிற மாதிரி ஒரு குரோதப் பார்வையோடவே என்னை அணுகுறாங்க. அவங்க எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்லிக்கிறேன்... தம்பிகளா, நான் ரௌடி இல்லை... ஞானி; சந்நியாசி. தவம் பண்ணிட்டு இருக்கேன். அதனால நீங்க பாட்டுக்கு உங்க வேலையைப் பாருங்க. நான் என் வேலையைப் பார்க்கிறேன்!''

''வாசகர் வட்டம்கிற பேர்ல, பார்ட்டி, குடிக் கூட்டம்னு அடுத்த தலைமுறை இளைஞர்களை நீங்க தவறாக வழிநடத்துறீங்களா?''

''உள்ளேயும் வெளியேயுமா 5,000 பேர் என் வாசகர் வட்டத்தில் இருக்காங்க. புத்தகங்கள் வாசிக்காத யாரும் அந்த வட்டத்தில் இருக்க முடியாது. ஒவ்வொரு வருஷமும் படிக்க வேண்டிய புத்தகங்களோட பட்டியல் கொடுக்கிறேன். திருப்பூர்ல ஒரு பனியன் கம்பெனி ஓனர், அரபி இசை கேட்கிறார். 'எப்படி இதெல்லாம் அறிமுகமாச்சு?’னு கேட்டா, 'உங்க எழுத்துக்களால்தான்’னு கையைப் பிடிச்சுக்கிறார். வாழ்க்கையைக் கொண்டாட, நான் கத்துத்தர்றேன். அதைத் 'தவறான வழிநடத்தல்’னு நினைக்கிறது, சம்பந்தப்பட்டவங்களோட தவறான புரிதல்!''

''சமூகம், எழுத்தாளனைக் கொண்டாடவில்லைனு வருத்தப்படுறீங்க. விவசாயிகள் தற்கொலை, மீனவர் படுகொலை, தனியார் மயம்... இவை பற்றி எல்லாம் எழுத்தாளர்கள் வாயே திறப்பதில்லையே?''

''நானும் என் சக இந்தி எழுத்தாளரும் வட இந்தியாவில் ஒரு சுற்றுப்பயணம் போயிருந்தோம். அங்கே ஒரு கடையில் பீடா வாங்கிப் போட்டோம். கடைக்காரர், எங்களைப் பத்தி விசாரிச்சார். நாங்க எழுத்தாளர்கள்னு தெரிஞ்சதும் அந்தக் கடைக்காரர் எங்ககிட்ட காசே வாங்கிக்கலை. அங்கே எழுத்தாளனை ஒரு கதை சொல்லியாப் பார்க்கிறாங்க. என் படைப்புகளில் மனுஷனோட பசி, பட்டினி, துன்பம், துயரம்... எல்லாமேதான் இருக்கு. அதனால ஏதாவது சாக்குச் சொல்லி என்னைக் கொண்டாடாம இருக்க முடியாது. இந்த சாரு நிவேதிதாவை நீங்க கொண்டாடியே ஆகணும்!

ஆனா, இந்த ஜெனரேஷனை நாம சரியாப் புரிஞ்சுக்கலை. ஒரு இளைஞர் வந்தார். எனக்குக் கை கொடுத்தார். நானும் கை கொடுத் தேன். ஆனா, அவர் ஃபேஸ்புக்குல, 'சாருவைச் சந்தித்தேன். கை கொடுத்தேன். அவர் கை நடுங்கியது’னு எழுதுறார். இதுவே நான் பழைய சாருவா இருந்தா, வேற மாதிரிப் பதில் சொல்லி யிருப்பேன். ஆனா, இப்போ அந்த வம்புதும்பு எல்லாம் சலிச்சுப்போச்சு.

இப்போ உள்ள ஆளுங்களுக்கு நெகட்டிவாவோ, பாசிட்டிவாவோ பப்ளிசிட்டி தேவைப் படுது. அதுக்கு நான் இனிமே ஊறுகாய் ஆக மாட்டேன். ஆனா பாருங்க, நாம சும்மா இருந்தாலும் 'ஸ்டிங் ஆபரேஷன்’ வெச்சு சிக்கவெச்சிடுறாங்க. ஏன்னா, சாரு பேர் அடிபட்டா, ஆளோ, புத்தகமோ ஓவர் நைட்ல பப்ளிசிட்டி அள்ளிடலாம்ல!''

''பொதுவா, ஜெயலலிதாவை விமர்சிச்சு யாரும் பேச மாட்டேங்கிறாங்களே... நீங்களாவது அவங்க ஆட்சியின் ப்ளஸ், மைனஸ் சொல்வீங்களா?''

''ஒரு காமன்மேனா சொன்னா... தி.மு.க. மோசம். கன்னாபின்னா ஊழல். ஆனா, இவங்க வந்து ஓரளவு சரிபண்ணிட்டாங்க. மின்சாரம் இருக்கு, தண்ணீர் இருக்கு. ஆட்டோ பிரச்னை சரிபண்ணாங்க. ஆனா, தனி மனுஷியா இவங்களால் எதுவும் செய்ய முடியாது. அதுதான் நிதர்சனம்!''

''உங்க முன்னாள் நண்பர் மிஷ்கின் இயக்கி நடிச்ச 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் உங்களுக்குப் பிடிச்சிருந்ததா?''

''நல்லா இல்லை. கிராஃப்ட்டே இல்லாத சினிமா!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு