ஸ்பெஷல் -1
Published:Updated:

தூக்குத் தண்டனைக்கு முற்றுப்புள்ளி!?

டி.அருள் எழிலன், ஓவியம்: ஹாசிப்கான்

##~##

'குடியரசுத் தலைவரும் ஆளுநரும், ஒரு கருணை மனு மீது முடிவெடுக்க கால அவகாசம் எதையும் அரசியல் சட்டத்தை எழுதியவர்கள் நிர்ணயிக்கவில்லை. அது அவர்களின் பதவிக்கு வழங்கப்பட்ட மாண்பு. தூக்குக் கைதிகள் தங்களிடம் அளிக்கும் கருணை மனுக்களைப் பரிசீலித்து ஒரு காலவரம்புக்குள் நியாயமான முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள். கருணை மனுக்கள் மீது நியாயமே இல்லாமல், அளவு கடந்த கால தாமதம் எடுத்துக்கொள்ளப்படுமானால், அதில் தலையிட்டு அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை. சிறைவாசிகளுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையைப் பாதுகாக்கும் வகையில்தான் நீதிமன்றம் தலையிடுகிறதே தவிர, குடியரசுத் தலைவர், ஆளுநரின் அதிகாரங்களில் தலையிடுவதாக இதைக் கருதக் கூடாது!’ - இந்தியா முழுவதும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரின் தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது இது!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூவர் நீதிபதி குழுவே, 'கருணை மனுக்களின் மீது நியாயமற்ற கால தாமதம்’ என்று காரணம் சொல்லி வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பை அளித்திருக்கிறார்கள்.

தூக்குத் தண்டனைக்கு முற்றுப்புள்ளி!?

அந்த 15 பேரில் பாலாறு வெடிகுண்டு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பிலவேந்திரன், சைமன், ஞானபிரகாசம், மாதையன்... ஆகியோரும் அடக்கம். இது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு கால சிறைவாசத்தை எட்ட இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன்... ஆகியோருக்குப் புது நம்பிக்கையை அளித்திருக்கிறது.

15 பேரின் தூக்கு, ஆயுளாகக் குறைக்கப்பட்ட வழக்கில், ராம்ஜெத்மலானி, காலின் கன்சால்வேஸ் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் பலர் வாதாடியிருந்தாலும், வழக்குக்குத் தேவையான அடிப்படை ஆவணங்களைச் சேகரித்தது, மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் யுக் மோகித் சௌத்ரி தலைமையிலான ஐந்து வழக்கறிஞர்கள் குழுதான். தமிழகத்தைச் சேர்ந்த பிரபு, பாரி ஆகியோர் அந்தக் குழுவின் உறுப்பினர்கள். பிரபு, இந்தத் தீர்ப்பு தொடர்பான சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

''நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற சிறைவாசிகள், 'கருணை மனு மீதான முடிவெடுப்பில் கால தாமதம்’ என்ற கோரிக்கையோடு நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி மொத்தமாக 15 பேரும் தண்டனைக் குறைப்பு பெற்றிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை. தண்டனைக் குறைப்பு பெற்ற 15 பேரில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ், ராம்ஜி அதிகபட்சமாக 12 வருடங்களையும், உத்திராஞ்சலைச் சேர்ந்த சுந்தர் சிங் மூன்றரை ஆண்டுகளையும், ஐந்து பெண் குழந்தைகளைக் கொன்ற மகன்லால் பெரெலா ஒரு வருட கால தாமதத்தையும் கொண்டிருந்தனர். மிகக் குறைவாக கால தாமதத்தைக்கொண்ட சுந்தர் சிங், மகன்லால் பெரேலா ஆகியோர் உளவியல் சிதைவுக்கு ஆளானதால் அவர்களும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு,  பிற தூக்குக் கைதிகளின் தண்டனைக் குறைப்புக்கு நிச்சயம் வழிகாட்டும்!''

இந்தத் தீர்ப்பின் எதிர்த் திசை விவாதமாக, 'தூக்குத் தண்டனை இறுதி செய்யப்படுபவர்கள் அளிக்கும் கருணை மனு உடனடியாக நிராகரிக்கப்பட்டு, சடுதியில் தூக்கில் ஏற்றப்படும் அபயாம் உருவாகுமா?’ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

தூக்குத் தண்டனைக் கைதியாக இருந்து பின்னர் விடுதலையான தியாகு, இது தொடர்பாக விளக்கம் அளிக்கிறார்.

தூக்குத் தண்டனைக்கு முற்றுப்புள்ளி!?

''நிச்சயம் அப்படி உடனடியாக யாரையும் தூக்கிலிட முடியாது. இந்தத் தீர்ப்பில் கருணை மனு நிராகரிக்கப்பட்டு 14 நாட்கள் கழித்தே தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த 14 நாட்களில் தூக்குத் தண்டனைக் கைதிக்கு தன் உயிரை நீதிமன்றத்தின் வழியாகக் காப்பாற்றிக்கொள்ளும் உரிமை உண்டு. குடும்பத்தாருக்குக்கூடத் தெரிவிக்காமல், ரகசியமாக அதிகாலையில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவை மனதில்கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப் பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மரண தண்டனைக்கு எதிரான பயணத்தில் இந்தத் தீர்ப்பு ஒரு மைல்கல் வெற்றி!'' என்கிறார் தியாகு.

இந்தத் தீர்ப்பு, மரண தண்டனை தொடர்பான பல விவாதங்களைக் கிளறிவிட்டிருக்கும் நிலையில், சட்டக் கமிஷன் இந்தத் தீர்ப்பு தொடர்பாக பலகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மரண தண்டனையை அரசியல் சட்டத்தில் இருந்து நீக்கும் பரிந்துரையை, மத்திய அமைச்சரவைக்கு அனுப்பலாமா என்று சட்டக் கமிஷன் யோசனையில் இருப்பதாகக் கூறுகிறார்கள் தலைநகரின் மூத்த வழக்கறிஞர்கள்.

''இந்தத் தீர்ப்பை முன்வைத்து இந்தியாவில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்படுமா?''-இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறார் நீதியரசர் சந்துரு.

''இந்தத் தீர்ப்பு, கடந்த 30 ஆண்டுகளாக கருணை மனு தொடர்பாக நடந்துவந்த சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதே சமயம், இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து 'மரண தண்டனையே சட்டவிரோதம்’ என அறிவிக்க வாய்ப்பும் இல்லை!

தூக்குத் தண்டனைக்கு முற்றுப்புள்ளி!?

1973-ம் வருட குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி விதிக்கக்கூடிய தண்டனைகளில் மரண தண்டனையும் ஒன்று. அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அந்தத் தண்டனையைச் சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்க அதிகாரம் உண்டு. ஆனால், எந்தெந்தச் சூழ்நிலைகளில் மரண தண்டனையை நீதிமன்றங்கள் விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் வழிகாட்டியுள்ளது. அதில் ஒன்று 'அரிதிலும் அரிதான காரணங்களுக்கு மட்டுமே விதிக்கலாம்’ என்று கூறியது. அப்படிப்பட்ட காரணத்தை எந்தக் கோணத்தில் இருந்து நோக்க வேண்டும் என்பதில் சர்ச்சைகள் எழும்.

இதுவரை விதிக்கப்பட்ட பல மரண தண்டனை தீர்ப்புகளின் அடிப்படைக் காரணங்கள் மூன்று வகைப்படும்.

1. கைதிக்குச் சரியான சட்ட உதவி கிடைக்காமை.

2. கைதிகள் பெரும்பாலும் பொருளாதார, சமூகரீதியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது.

3. தண்டனை வழங்கும் நீதிபதி, தனது எதிர்காலப் பதவி உயர்வைக் கருத்தில்கொன்டு, தன்னைக் கண்டிப்பானவன் என்று காட்டிக் கொள்ளும் முயற்சி.

கிட்டத்தட்ட மரண தண்டனை நடைமுறையில் உள்ள நாடுகள் அனைத்திலுமே இதுதான் நிலை. ஆகவே, மக்கள் மன்றத்திலும் சட்ட அரங்கிலும் அரிதிலும் அரிதான சில சம்பவங்கள் அரங்கேறினால் மட்டுமே இந்தியா வில் மரண தண்டனை நீக்கப்படும்!'' என்கிறார் சந்துரு.

அந்த அதிசயமும் விரைவில் அரங்கேறட்டும்!

தூக்குத் தண்டனைக்கு முற்றுப்புள்ளி!?

என்ன சொல்கிறார் பேரறிவாளன்?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் வாடும் பேரறிவாளனிடம் வழக்கறிஞர் மூலமாகப் பேசினோம்...

''இந்தத் தீர்ப்பு என்னை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. என் கருணை மனு மீது விரைந்து முடிவெடுக்கும்படி ஐந்து முறை நான் குடியரசுத் தலைவருக்கும், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நினைவூட்டல் மடல்களை அனுப்பியிருந்தேன். அந்த ஐந்து கடிதங்களிலும்  தாமதத்தால் ஏற்படும் வேதனையை, மன உளைச்சலை விவரித்து இருந்தேன். இழப்புகள், ஆரோக்கியக் கேடு, உயிரைச் சுண்டும் பயங்கரக் கனவுகள்... என உடல், மன வேதனைகள் அளிப்பவை. யாருமற்ற தனிமை தரும் கொடிய அனுபவத்தை ஒரு கட்டத்துக்குப் பிறகு சுவைக்கக் கற்றுக்கொண்டேன். ஆனால், மிக நீண்ட தனிமைச் சிறைவாசம், சமூக - கூட்டு வாழ்வை வாழத் தகுதியற்றவனாக ஒருவனை மாற்றிவிடும். இதுதான் தனிமைச் சிறைவாசி எதிர்கொள்ளும் ஆழமான உளவியல் தாக்குதல். இப்போது அதற்கு நிவாரணம் அளிப்பதாக வந்திருக்கும் இந்தத் தீர்ப்பு, எங்கள் அடுத்தகட்டப்  போராட்டத்தை உற்சாகத்துடன் மேற்கொள்ள வைத்திருக்கிறது. மேல் முறையீட்டு விசாரணை முடிவுக்காக உயிரைக் கையில் பிடித்துக் காத்திருக்கிறோம்!''