ஸ்பெஷல் -1
Published:Updated:

“எழுத்தாளர்களை உருவாக்குகிறேன்... குடிகாரர்களை அல்ல!”

படம்: கே.ராஜசேகரன்

##~##

 விகடனில் என் பேட்டியை வெளியிட்டதற்கு நன்றி. ஆனால், வெளிவந்திருப்பதை என் பேட்டி என்றே சொல்ல முடியவில்லை. ஏனென்றால், நான் சொன்னதையெல்லாம் எப்படி ஒன்றரைப் பக்கத்தில் அடக்க முடியும்?

எழுத்தாளன் என்பவன், வார்த்தைகளின் ஆசிரியன். வார்த்தைகளில் வாழ்பவன். அவன் சொல்வதில் இருந்து ஒரு வார்த்தையை உருவினாலும் அர்த்தம் வேறாகிவிடும்.

பேட்டிக்கு வந்தவர் என் வாசகர் வட்டத்தை 'குடிக்கூட்டம்’ என்று சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை. அப்படியே கேட்டிருந்தாலும் அது ஒரு மோசமான கேள்வி. அதிலேயே உப கேள்வி, 'அடுத்த தலைமுறை இளைஞர்களை நீங்கள் தவறாக வழிநடத்துகிறீர்களா?’

'எக்ஸைல்’ என்ற என் நாவலின் வெளியீட்டு விழாவை சென்னை காமராஜர் அரங்கில் நடத்தியது, என் வாசகர் வட்டம்தான். 2,000 பேர் கொள்ளளவு உள்ள ஓர் அரங்கில் நாவல் வெளியீட்டு விழா நடத்த வேண்டும் என்றால், என் வாசகர் வட்டம் எவ்வளவு கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும்? குடிகாரர்களால் இதைச் செய்ய முடியுமா? இவ்வளவுக்கும் அதே அரங்கில் இரண்டு முறை புத்தக வெளியீட்டு விழா நடத்தியிருக்கிறோம். இரண்டு முறையும் அரங்கம் நிறைந்தது.

“எழுத்தாளர்களை உருவாக்குகிறேன்... குடிகாரர்களை அல்ல!”

அந்த அரங்கத்தில் பொதுவாக கருணாநிதி, வைரமுத்து மற்றும் சினிமா நட்சத்திரங்களின் விழாக்கள்தான் நடைபெறும். ஆனால், தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே முதல் முதலாக 2,000 பேர் கூடிய கொண்டாட்டமான புத்தக வெளியீட்டு விழாவை நடத்தியது என் வாசகர் வட்டம்தான். இந்த நிகழ்ச்சிக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி, எங்கள் சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. அதனால் என் சாதனையை நானே முறியடிக்கும் விதத்தில் 'எக்ஸைல்’ இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு விழாவை சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளேன் (கொள்ளளவு 4,000).

நான் இதுவரை உலக சினிமா, தத்துவம், இசை, இலக்கியம் குறித்து 45 நூல்களும், 6 நாவல்களும் எழுதியிருக்கிறேன். பக்கம் பக்கமாக இவ்வளவு எழுதியும், 'நீங்கள் ஏன் குடிக்கிறீர்கள்?’ என்றே கேள்வி கேட்டு சித்ரவதை செய்துகொண்டிருக்கும் சாமான்யர்களுக்கு மத்தியில், நீங்களும் இப்படித்தான் என்னிடம் கேட்க வேண்டுமா? சல்மான் ருஷ்டியில் இருந்து சக்கரியா வரை எல்லா எழுத்தாளர்களும்தான் குடிக்கிறார்கள். அவர்களிடம் போய் இப்படிக் கேட்பீர்களா? கண்ணதாசனிடம் கேட்டீர்களா? ஜெயகாந்தன் தன் வாழ்நாளில் அதிக நாட்கள் கஞ்சா குடித்தார். அதுவும் கஞ்சா குடிப்பது சட்டவிரோதமானது. அவரிடம் போய் கேட்டீர்களா? எப்போதும் மனிதனின் ஆரோக்கிய வாழ்வைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருக்கும் என்னிடம் மட்டும் ஏன் இந்தக் கேள்வியையே கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?

என் வாசகர் வட்டம் என்பது, ராணுவத்தைப் போன்ற சட்டதிட்டங்கள் கொண்ட அமைப்பு. இங்கே டாஸ்மாக் அடிமைகளுக்கு இடமே இல்லை. வாசகர் வட்டத்தில் எழுதுவதை 15,000 பேர் படித்தாலும் அதில் உறுப்பினர்களாக இருப்பது 300 பேர்தான். சமகாலத் தமிழ் இலக்கியத்தில் குறைந்தபட்சம் 50 நூல்கள் படித்திருக்காவிட்டால், வாசகர் வட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார். எங்கள் காத்திருப்போர் பட்டியலில் இரண்டு ஆண்டுகளாக 500 பேர் இருக்கிறார்கள். நான் எழுத்தாளர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறேனே தவிர, குடிகாரர்களை அல்ல.

இனிமேலாவது எழுத்தாளர் பேட்டி என்றால், நான்கு பக்கம் ஒதுக்குங்கள். ஒரு முக்கியமான விஷயம், என்னிடம் ஏடாகூடப் பேட்டி எடுத்தால் அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் சீரியஸ் பேட்டியையும் உங்கள் நிருபர் ஏடாகூடப் பேட்டியாக எடுத்துவிட்டார். அதுதான் பிரச்னை. (மற்றபடி, என் ஆருயிர் செல்லக்குட்டி ஸோரோவின் புகைப்படம் நன்றாக வந்திருந்தது. புகைப்படக் கலைஞருக்கு நன்றி.)

அடியேன்,

சாரு நிவேதிதா.