ஸ்பெஷல் -1
Published:Updated:

டி ஃபார் மோடி... எல் ஃபார் லவ்!

ம.கா.செந்தில்குமார்

##~##

 ''அட... கருத்து எதுவும் கேட்காம கலாட்டா கேள்விகள்தானே... இப்பவே ஆரம்பிங்க!'' -உற்சாகமாக சுப.உதயகுமாரன்.

''ரெண்டு வாரமாத் தாக்கல் சொல்லிட்டேன். இனிமே முடியாதுல்ல... யெஸ் யுவர் ஹானர்!'' -ஆர்வத்துடன் கோபிநாத்.

''அஞ்சு கேள்விக்கும் பதில் தெரியலைன்னா, தப்பில்லைதானே!'' -கொஞ்சலாக தன்ஷிகா.

''என் சிலபஸ்க்குள்ள இருந்தா சிக்ஸர் அடிக்கலாம். இல்லைன்னா மிக்ஸர்தான்!'' -செம உஷாராக 'மக்கள் தொலைக்காட்சி’ தொகுப்பாளினி சித்ரா.

''மோடியின் சென்னை வருகை தொடர்பான வேலைகள்ல இருக்கேன். நடுவுல இது நிச்சயம் சின்ன ரிலாக்ஸ்!'' -ஜாலி மூடில் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் தமிழிசை சௌந்தரராஜன்.

நாடு எங்கும் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு அருகில், பா.ஜ.க-வினர் டீக்கடை போட்டு போராட்டம் நடத்துகிறார்கள். அந்த டீக்கடைகளுக்கு அவர்கள் வைத்துள்ள பெயர் என்ன?

பதில்: நமோ டீக்கடை!

சுப.உதயகுமாரன்: ''டேலென்ட், டெக்னாலஜி, டிரேடு, டூரிஸம்னு அடுக்கி ஏதோ 'ஃபைவ் டி’ இருந்தா நாடு முன்னேறிடும்னு மோடி பேசினதா நினைவு. அதை வெச்சு 'ஃபைவ் டி டீ’னு கடைக்குப் பேர் வெச்சிருப்பாங்களோ?'' (சரியான பதிலைக் கேட்டதும்) ''அட, பேர் நல்லா இருக்கே!'' எனச் சிரிக்கிறார்.

கோபிநாத்: சட்டென வருகிறது பதில், ''நமோ டீ ஷாப்!''

தன்ஷிகா: சில நிமிடங்கள் யோசிக்கிறார். ''வேணாங்க... நான் ஏதாவது தப்பாச் சொல்லி, அப்புறம் போராட்டம், கேஸ்னு ஏதாவது கிளம்பிடப்போகுது!''

டி ஃபார் மோடி... எல் ஃபார் லவ்!

சித்ரா: ''ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு பேர் வெச்சிருப்பாங்க... அதெல்லாம் எனக்கு எப்படிங்க தெரியும்?!''

தமிழிசை சௌந்தரராஜன்: ''மோடி டீ ஸ்டால்னுதான் வெக்கச் சொன்னோம். ஆனா, சில தீவிரத் தொண்டர்கள் மோடியை அவ தூறாப் பேசின மணிசங்கர் அய்யருக்கு அந்தக் கடையில் வேலை போட்டுக் கொடுத்து, 'மணிசங்கர் அய்யர் டீக்கடை’னும் கூப்பிடுறாங்க!''

திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கும் நஸ்ரியாவும் ஃபஹத் ஃபாசிலும் தற்போது சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் பெயர் என்ன?

பதில்: எல் ஃபார் லவ்!

சுப.உதயகுமாரன்: கேள்வியைக் கேட்டதும் வெடித்துச் சிரிக்கிறார். ''அய்யய்யோ... அந்த ரெண்டு பேரும் யார்னே எனக்குத் தெரியாதே... பேர்களைக்கூட கேள்விப்பட்டது இல்லை. என் பையன்கிட்ட கேட்டா, சரியா சொல்லிடுவான்!''

கோபிநாத்: ''நஸ்ரியா தெரியும்... ஃபஹத் ஃபாசில்  தெரியும்... அவங்க கல்யாண நியூஸும் தெரியும். ஆனா, ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிற படமா? அது தெரியலையே... படம் பேரைச் சொல்லுங்க... தெரிஞ்சுக்குவோம்!'' எனப் பதிலைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்.

தன்ஷிகா: ''ம்ம்ம்... 'எல் ஃபார் லவ்.’ இதை ஒரு வெப்சைட்ல படிச்சப்போ, 'என்னது இது... 'ஏ ஃபார் ஆப்பிள்’, 'பி ஃபார் பால்’னு எல்.கே.ஜி. ரைம்ஸ் மாதிரி பேர் வெப்பாங்க போல’னு  நினைச்சேன். அதனால் பதிலை ஈஸியா கேட்ச் பண்ணிட்டேன். வெரிகுட் தன்ஷிகா!''

சித்ரா: ''ஐயோ! என் மார்க் கம்மி ஆகிட்டே இருக்கே. ஆங்... 'திருமணம் எனும் நிக்காஹ்’..! கரெக்ட்டா?'' ('திருமணம் எனும் நிக்காஹ்’ ஜெய்-நஸ்ரியா நடிக்கும் படம் என்று சொன்னதும்) ''இதுவும் போச்சா... நெக்ஸ்ட்டு!''

தமிழிசை சௌந்தரராஜன்: ''சினிமாக் கேள்வியா? சினிமா சம்பந்தமா நீங்க என்ன கேட்டாலும், என் மார்க் ஜீரோதான்!''

டி ஃபார் மோடி... எல் ஃபார் லவ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் இப்போதைய சின்னம் மாம்பழம். இதற்கு முன் இருந்த சின்னம்?

பதில்: யானை!

சுப.உதயகுமாரன்: ''இதுக்கு முன்னாடி என்ன சின்னம்? ம்ம்ம்... ரெட்டைப் புறாவா? இல்லையே... அது எம்.ஜி.ஆர். இறந்ததும் அ.தி.மு.க. பிரிஞ்சப்ப உருவான ஜானகி அணியோட சின்னம்ல. தெரியலைங்க!''

கோபிநாத்: ''யானை. பா.ம.க. யானையை எங்க ஊர் சுவர்கள்ல பலமுறை பார்த்திருக்கேன். இப்படி பொலிட்டிக்கலா கேட்டா, பொளேர் பொளேர்னு சாத்திடலாம்!''

தன்ஷிகா: (பா.ம.க. எந்தக் கட்சி, அதன் தலைவர் யார் என்ற தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டவர்...) ''விஷப் பரீட்சைக் கேள்விகள் வேணாம் சார்..!'' என்றார்.

சித்ரா: ''ஹைய்யா... வாஷ் அவுட்னு நினைச்சுப் பயந்துட்டே இருந்த சமயத்துல ஆன்ஸர் தெரிஞ்ச ஒரு கேள்வியைக் கேட்டுட்டீங்க... யானை! மக்கள் டி.வி-ல இருந்துட்டு இதுகூடத் தெரியலைனா, யானையே தூக்கிப் போட்டு மிதிச்சிருமே!''

தமிழிசை சௌந்தரராஜன்: ''வன்னியர் சங்கத்தோட சின்னம். அது, தீப்பந்தத்துடன் கூடிய கலசம். வன்னியர் சங்கக் கொடிகளில் பார்த்திருக்கேன்!''

டி ஃபார் மோடி... எல் ஃபார் லவ்!

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் சில தமிழர்களின் பெயர்களைச் சொல்லுங்கள்?

சுப.உதயகுமாரன்: ''நகைச்சுவையா, விஷயமா எழுதுற விவாதிக்கிற நிறைய நண்பர்களோட பெயர்களைப் பார்க்கிறேன். ஆழியாழி, குணசீலன் வேலன்... அப்புறம் ரஷ்யப் பெயர் உள்ள ஒருத்தர். அவர் பேர் சட்டுனு ஞாபகம் வரலை. இப்படி இன்னும் நிறையப் பேர் இருக்காங்களே!''

கோபிநாத்: ''சும்மா அங்கே என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்க, அப்பப்ப ஒரு ரவுண்டு அடிப்பேன். அப்படிப் போகும்போது தோட்டா, அராத்து, வாசன்ஜினு பலரோட ட்வீட்ஸ், ஸ்டேட்டஸ் படிப்பேன். அது ஒரு சமுத்திரம்... சொல்லி மாளாது!''

தன்ஷிகா: ''வெங்கட் பிரபு சார், எஸ்.டி.ஆர்-ங்கிற ஐ.டி-ல சிம்பு, சிவகார்த்திகேயன், கௌதம் கார்த்திக்... இப்படி சினிமா பிரபலங்களின் அப்டேட்ஸ் பார்ப்பேன்!''

சித்ரா: ''பா.விஜய், சிநேகன்னு சில கவிஞர்களைச் சொல்லலாம். யாழ் அகிலன்னு ஒருத்தர் நிறைய நல்ல விஷயங்கள் எழுதுவார்!''

தமிழிசை சௌந்தரராஜன்: ''கலைஞர், ஸ்டாலின் எனப் பல அரசியல் பிரமுகர்கள் இருக்கிறாங்கனு தெரியும்!''