ஸ்பெஷல் -1
Published:Updated:

சிறுதானியம் தரும் பெருவாழ்வு!

பாரதி தம்பி

##~##

 யற்கையைக் காக்கும் தொடர் ஓட்டத்தில் இந்த ஆண்டு, 'ஐம்பூதங்கள்’ என்ற சுடரை ஏந்தியிருக்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. 'ஐந்திணை விழா’, 'முந்நீர் விழவு’ நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, என்விரோ கிளப் லொயோலா கல்லூரி ஒருங்கிணைக்கும் 'ஐம்பூத சுற்றுச்சூழல் விழா’ என்ற பெயரில் இந்த வருடம் களம் காண்கிறார்கள்!

பிப்ரவரி 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை, லொயோலா கல்லூரியில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்வு, இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பகலில் கருத்தரங்கங்கள். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்... என்ற மனித வாழ்வின் ஆதாரங்களாக இருக்கும் ஐம்பூதங்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது, இவற்றை மேம்படுத்தி, இயற்கையோடு இயைந்த வாழ்வுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் இந்தக் கருத்தரங்கின் மையம். பல்வேறு சூழலியல் நிபுணர்கள் கலந்துகொண்டு பேச இருக்கிறார்கள். சுற்றுச்சூழல் நூல்களும் வெளியிடப்பட உள்ளன. இந்தக் கருத்தரங்குக்கு அனைவரையும் வரவேற்கிறோம். அனுமதி இலவசம்.

மாலை 7 மணிக்கு சிறுதானிய உணவு விருந்து! திணை பர்பி, வரகு கட்லெட், சோள ரோஸ்ட் தோசை, சிறுதானிய சிக்கன் பிரியாணி, குதிரைவாலி தயிர்ச்சோறு... என ஆதித் தமிழர்களின் ஆரோக்கிய உணவை நவீன காலத்தில் கொண்டுவந்து சேர்க்கும் வித்தியாச விருந்து இது. மாற்று உணவும் மாற்றமும் வெறுமனே பேச்சாக நின்றுபோகாமல், அதை ஒரு வாழ்க்கைமுறையாக மாற்ற முயலும்  உணவுத் திருவிழா இது. இரவு விருந்தில் பங்கெடுக்க மட்டும் ஒரு நபருக்கு 250 ரூபாய் கட்டணம்.

இப்படியான சுற்றுச்சூழல் விழாக்கள் மூலம், மக்கள் என்ன நன்மைகளைப் பெற்றுவிட முடியும்? 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் கு.சிவராமனிடம் கேட்டபோது... ''நம் பாரம்பரிய அறிவு, எதையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கவில்லை. ஐந்திணைகளின் ஒருங்கிணைப்பில்தான் ஆரோக்கியம் சாத்தியம் என்பதை அவை திரும்பத் திரும்பச் சொல்கின்றன. அறிவியல் புரட்சியும், காப்புரிமை முறைகளும் வந்த பின்பும் அனைத்தும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொன்றுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டு, வர்த்தகப் பண்டமாக்கப்பட்டன. இப்போது ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு நோயாளி இருக்கிறார். ஒவ்வொரு குடும்பமும் மருந்து வாங்க பெரும் பணம் செலவிட வேண்டியுள்ளது.

சிறுதானியம் தரும் பெருவாழ்வு!

இந்த நிலையை மாற்ற, இரண்டு வகையான சூழல் விழிப்பு உணர்வுகள் தேவைப்படுகின்றன.

ஒன்று, நமது சுற்றுச்சூழல் பிரச்னைகளை அறிவுத்தளத்தில் புரிந்துகொள்ள வேண்டும். காற்றிலும் நீரிலும் மிகுந்துவிட்ட மாசு, வெறுமனே சுற்றுச்சூழல் சிக்கல் மட்டுமே அல்ல. அதற்குப் பின்னால் பெரும் நிறுவனங்களின் ஈவு இரக்கமில்லாத லாபவெறி இருக்கிறது. அவர்களுக்குத் துணைபோகும் இந்த அரசியல் அமைப்புமுறை இருக்கிறது. இவை எப்படி இயங்குகின்றன என்பதை நாம் உணர வேண்டும். அதன் மூலம்தான் இயற்கையை எப்படிக் காப்பாற்றுவது என்ற உத்வேகத்தைப் பெற முடியும். சூழல் கருத்தரங்குகள் நடத்துவது இதற்காகத்தான். ஒவ்வோர் ஆண்டும் புதிய புதிய இளைஞர்கள் இந்தக் கூட்டத்துக்கு வருகின்றனர். அவர்களைப் பார்க்கும்போது எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஒளி பிறக்கிறது.

இரண்டாவது, நமது நோய்களில் இருந்து விடுதலை பெற, நாம் பாரம்பரிய உணவு முறைக்கு மாற வேண்டும். நவீன அறிவியல் அறிமுகப்படுத்திய விவசாயமுறைக்கு முன்பே நம்மிடம் தொன்மையான விவசாயம் இருந்தது. நூற்றுக்கணக்கான நெல் வகைகளும், சிறு தானியங்களும் இருந்தன. கால ஓட்டத்தில் நாம் அவற்றுக்கு விடை கொடுத்துவிட்டோம்; அல்லது இழந்துவிட்டோம். அந்த இடத்தை ரசாயன உரமிட்ட, பிராய்லர் பயிர்கள் நிறைத்துவிட்டன. அவை நமக்கு அளிக்கும் பரிசுகளே, இந்த நோய்கள். இதில் இருந்து மீள, ஆரோக்கியமான சிறுதானியங்களை அன்றாட உணவுமுறைக்குக் கொண்டுவர வேண்டும். அதற்காகத்தான் உணவுத் திருவிழாவை நடத்துகிறோம். 'சிறுதானிய இடியாப்பம்’, 'வாழைத்தண்டு தயிர் பச்சடி’ என்று எழுத மட்டுமே செய்தால், அது ஏட்டோடு நின்றுவிடும். 'இது நடைமுறைக்கு உதவாது’ என்று எண்ணிவிடுவார்கள். அதையே செய்துகாட்டும்போதுதான், மக்கள் நம்பிக்கை பெறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சிறுதானியங்கள் குறித்து நாங்கள் செய்துவரும் பிரசாரத்தால் தமிழ்நாட்டில் கணிசமான மக்களிடம் இதுகுறித்த விழிப்பு உணர்வு அதிகரித்துள்ளது. இதை இன்னும் விரிவுப்படுத்த வேண்டும்'' என்கிறார் சிவராமன்.

''ஆனால், சிறுதானிய உணவுப்பொருள்களின் விலை அதிகமாக இருக்கிறதே... அதை சாதாரண மக்கள் பயன்படுத்தவே முடியாதது போல் உள்ளதே?'' இதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் சொல்லும் பதில் இது. ''உற்பத்திக்கும் விநியோகத்துக்கும் உள்ள பற்றாக்குறைதான் இதற்குக் காரணம். தமிழ்நாட்டில் சிறுதானிய உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. ஆனால், தற்போது அதன் தேவை அதிகரித்துள்ளதால், இருக்கும் குறைந்த பொருள்களுக்கு அதிக விலை கொடுக்கவேண்டியுள்ளது.

இந்த நிலையை மாற்ற, சிறுதானியங்களின் உற்பத்திப் பரப்பளவை அதிகப்படுத்த வேண்டும். அதுபோலவே, சிறுதானியங்களுக்கான அடிப்படை விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். இதற்கான திட்டவரைவு ஒன்றை அரசுக்குப் பரிந்துரைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளோம். தவிர, தமிழ்நாடு முழுக்க இருக்கும் சிறு விவசாயிகள், சிறு வணிகர்களை இணைத்த கூட்டுறவு அமைப்பை உருவாக்கி, அனைத்து மக்களுக்கும் நியாயமான விலையில் சிறுதானியங்கள் கிடைக்கச் செய்வதற்கான வேலையிலும் ஈடுபட்டுள்ளோம்'' என்கிறார்.

'உடல் வளர்த்தேன்... உயிர் வளர்த்தேனே...’ என்பது திருமூலர் கூற்று. உடலை ஆரோக்கியமாகச் செப்பனிடும் பணியை மேற்கொள்வது நாம் உண்ணும் ஒவ்வொரு கவள உணவுகள்தான். அந்த உணவு குறித்த புரிதலை அறிந்துகொள்ள ஒரு ஞாயிறு மாலை ஒன்றுகூடுவோம்.

வாருங்கள்... எல்லோரும் கொண்டாடுவோம்!

சிறுதானியம் தரும் பெருவாழ்வு!