ஸ்பெஷல் -1
Published:Updated:

டீன் தமிழச்சிகளின் கொரிய காதலர்கள்!

ந.கீர்த்தனா

##~##

 லீமின் ஹோ, ஜுங் யோங் ஹ்வா, ஜாங் கியூன் சுக்... இவர்கள் யார்? இந்தியாவுக்கு யாத்திரை வந்த சீனத் துறவிகள் அல்ல!

கல்லூரி டீன் டிக்கெட்டுகளின் மொபைல், லேப்டாப், ஃபேஸ்புக் புரொஃபைல்களில் வால் பேப்பர்களாக இடம் பிடித்திருக்கும் கொரிய நடிகர்கள். 'ஓ..! டாம் க்ரூஸ், ஜார்ஜ் க்ளூனி போன்ற சினிமா நடிகர்களோ!’ என்று நீங்கள் நினைத்தால்... அதுவும் தவறு. இவர்கள் டி.வி. தொடர் நடிகர்கள்!

கொரியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காதல் சீரியல்கள், தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், நேபால் என்று கடல் தாண்டி, கண்டம் தாண்டி தமிழகம் வரை ரசிகைகளை ஈர்த்திருக்கின்றன. இத்தனைக்கும் சில வருடங்களுக்கு முன்னரே ஒளிபரப்பான தொடர்கள் அவை. ஆனால், அதை டவுன்லோடி அடிக்கடிப் பார்த்துப் பார்த்து உருகுகிறார்கள் ஜீன்ஸ் தமிழச்சிகள்.

தொடரின் கேரக்டர்கள் உடுத்தும் ஆடைகள் முதல் மொபைல், ஹேர் கிளிப் வரை தேடிப் பிடித்து ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்குகிறார்கள். 'லீ மின், கிம் ஹ்யூனைப் பார்த்துக்கிற மாதிரி என்னை நல்லாப் பாத்துக்கிற பையன் வேணும்!’ என்று மேட்ரிமோனி குறிப்பில் என் தோழி குறிப்பிடும் அளவுக்கு, கொரியன் சீரியலுக்கு அடிமையாகிக்கிடக்கிறார்கள் கல்லூரிப் பெண்கள்.

அப்படி என்ன மேஜிக் இருக்கிறது அந்தத் தொடர்களில்..? டாப் ஹிட் அடித்த மூன்று தொடர்களின் கதைச் சுருக்கம் இங்கே...

டீன் தமிழச்சிகளின் கொரிய காதலர்கள்!

பாய்ஸ் ஓவர் ஃப்ளெவர்ஸ்: நான்கு வருடங்களுக்கு முன்பு தென் கொரியாவின் கே.பி.எஸ். சேனலில் ஒளிபரப்பான இந்தத் தொடர், மொத்தமே 25 அத்தியாயங்கள்தான். ஆனால், மீண்டும் மீண்டும் ரிப்பீட் அடிக்கிறது. கதை..? பணக்காரக் காதலன், ஏழைக் காதலி, காதலனின் வில்லி அம்மா... இதுதான் கதை. ஆனால், ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு வசனமும் கொரிய இளசுகளிடையே ஆல்டைம் அல்ட்டிமேட் ஹிட்.

கோடீஸ்வர வீட்டின் வாரிசான லீ மின்-ஹோ, தன் தந்தை நடத்தும் கான்வென்ட் பள்ளியில் படிக்கிறான். மிகவும் வசதியான வீட்டுப் பிள்ளை கள் மட்டுமே படிக்கும் பள்ளி அது. அந்தப் பள்ளியில் நல்ல பண்பு காரணமாக ஏழையான கு ஹு-சுன் (பெண்!) சேர்த்துக் கொள்ளப்படுகிறாள். தன் நண்பர்களோடு சேர்ந்து ஹு-சுன்னை ராக்கிங் செய்கிறான் லீ மின். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொள்கிறாள் ஹு-சுன். இது நாளடைவில் காதலாகிக் கசிந்துருக, அதை லீ மின்னின் அம்மா எதிர்த்து இருவரையும் சதி செய்து பிரிக்க, ஒரு விபத்தில் லீ மின்னுக்குப் பழைய சம்பவங்கள் அனைத்தும் மறக்க, காதலனுக்கு நினைவை மீட்டுவதற்காக உயிரைப் பணயம் வைக்கும் எல்லைக்கு ஹு-சுன் செல்ல... ஆல் இஸ் வெல் சுபம்!

படிப்பு, வேலை, குடும்பக் கடமை என்று மிகவும் கண்டிப்புடன் இருக்கும் கொரிய சமூக அமைப்பில், காதலுக்கு மரியாதை கொடுத்து விண்ணைத் தாண்டும் காதல் கதை ஹிட்டானதில் ஆச்சரியம் இல்லை. முரட்டுத்தனமாக இருக்கும் ஆண்களை, காதல் அழகிய மலரைப் போல மாற்றிவிடும் என்பது அந்தத் தொடரின் கான்செப்ட். அதனால், தொடரின் நாயகன் போல கொரிய இளைஞர்கள் மேக்கப் போட்டுக்கொள்வது, பெண்களுக்குப் பிடித்த பிங்க் நிறத்தில் ஆடை அணிவது, நளினமாகப் பழகுவது என்று ஸ்டைலாக மாறிவிட்டனர். இதில் நம் ஊர் பெண்களுக்கு மிகவும் பிடித்த அம்சம், எத்தனையோ பிரச்னை வந்தபோதும் ஹீரோ, ஹீரோயினைப் பிரியாமல் இருந்ததுதானாம்!

ஹார்ட் ஸ்ட்ரிங்க்ஸ்: இசை தவிர வேறு எதுவும் தெரியாத/புரியாத ஒருவன், காதல் கீதம் வாசிக்கும் கதை. கொரியாவில் ஒளிபரப்பாகும் முன்னரே, சீனா முதல் வட அமெரிக்கா வரை எட்டு நாடுகளுக்கு இதன் ஒளிபரப்பு உரிமை விற்கப்பட்டது. ஓர் இசைக் கல்லூரியின் 100-ம் ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளே தொடரின் பின்புலம்.

தொடரின் ஹைலைட், மென்மெலடி பாடல்கள். அரியர் சோகம், பிரேக்-அப் வருத்தங்களின்போது நம் பெண்களுக்கு ஆறுதல் சொல்லும் தேன்கிண்ணமாக ஒலிப்பது இந்தத் தொடரின் பாடல்களே!

டீன் தமிழச்சிகளின் கொரிய காதலர்கள்!

யு ஆர் பியூட்டிஃபுல்: ஒரு பெண்ணால், தன் காதலுக்காக/காதலனுக்காக எதையும் சாதிக்கவும், எந்தத் தியாக எல்லைக்கும் பயணிக்கவும் முடியும் என்பதே கதை. இதில் ஹீரோவின் இசைக் கனவை நனவாக்குவதற்காக, ஹீரோயின் தன் அண்ணனைப் போல ஆண் வேடம் அணிந்து ஹீரோவுக்கு உதவுகிறாள். தன் உதவியாளர் பெண் என்பதைக் கண்டுபிடிக்கும் ஹீரோ, நாளடைவில் அவள் மீது காதல் கொள்கிறார். நடுவில் அந்த இசைக் குழுவில் இருக்கும் இன்னும் இருவரும் ஹீரோயின் மீது காதல் கொள்கிறார்கள். மூவரின் பாச மழையையும் தாக்குப்பிடிக்க முடியாமல், தலைமறைவாகிறாள் ஹீரோயின். சில நாட்களுக்குப் பிறகு, சேர்ந்திருக்கும் மூன்று காதலர்களையும் தொலைபேசியில் தொடர்புகொள்ளும் ஹீரோயின், 'என் காதல் ஜெயிக்காது என்றாலும், நீங்கள் மூவரும் நல்லவர்கள். ஒவ்வொருவரும் என்னைக் காதலிக்கும் அளவினை ஒப்பிட முடியாது. ஒருவர் காதலை ஏற்றுக்கொண்டு மற்ற இருவரையும் நான் நோகடிக்க விரும்பவில்லை!’ என்று கண்ணீர் மல்கத் தேம்பித் தேம்பி அழும்போது, கல் மனசும் கரையும், இரும்பு நெஞ்சும் இளகும்! 'காதலுக்கு மரியாதை’யின் க்ளைமேக்ஸ், '7ஜி ரெயின்போ காலனி’யின் 'நினைத்து நினைத்துப் பார்த்தேன்...’ பாடல், 'விண்ணைத் தாண்டி வருவாயா’வில் பூங்காவில் வைத்து த்ரிஷாவிடம் சிம்பு பேசும் காட்சி... ஆகிய க்ளாஸிக் காதல் காட்சிகளுக்கு நிகரான உரையாடல் அது என்று சவால்விட்டுச் சிலாகிக்கிறார்கள் நம் டீன் டிக்கெட்டுகள்!