Published:Updated:

சென்னைக்கு மிக அருகில் திருச்சி!

ஆர்.சரண், ஓவியம்: கண்ணா

சென்னைக்கு மிக அருகில் திருச்சி!

ஆர்.சரண், ஓவியம்: கண்ணா

Published:Updated:
##~##

ஒரு மட்ட மத்தியானத்துல விட்டத்தைப் பார்த்துத் தூங்கலாம்னா, தூக்கம் வரலை பாஸ். சரி, கழுதையைப் (டி.வி. பொட்டி) பார்த்தா தூக்கம் வருமேனு ஆன் பண்ணினா, விளம்பரங்கள் ஓடிட்டு இருக்கு. முன்னெல்லாம் 'ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பிறகு தொடரும்’கிறது எவ்வளவு பொருத்தமா இருந்துச்சு. இப்போ விளம்பரங்களுக்கு நடுவேதான் நிகழ்ச்சியே! அந்த விளம்பரங்களை விடாமப் பார்த்ததுல நெற்றிக்கண், ஞானக்கண்னு சில கண்கள் எனக்குள்ள திறந்தன. அந்த ஞானப் பார்வையை அப்படியே இங்கே பந்தி வைக்கிறேன்...

தனுஷ் எங்கே போனாலும் 'டுட்டாய்ங்க்க்க்க்க்க்.... ப்ரூரூரூரூம்ம்ம்’ என வாயால் மௌத் ஆர்கன் வாசித்தபடி ஒருவன் பின்னாலேயே வருகிறான். தனுஷ் அவனைப் பார்த்து டென்ஷனாகி உதட்டைக் கடித்துக் கடுப்பாகிறார். கடைசியில் பபிள்கம்மைத் தூக்கிப் போடுகிறார். அது அப்படியே அவனுடைய வாயில் ஜிப் வைத்தது போல கிராஃபிக்ஸில் காட்டுகிறார்கள். கேட்டால் 'வாய்க்குப் போடுமே பூட்டு’னு சொல்றாங்க. எங்க ஆளு 'நய்யாண்டி’யில நடிச்சார்தான் பாஸ். அதுக்காக இப்படியா என்ன? டொட்ட டோ... டொட்ட டோடோடோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டூத் பேஸ்ட்லதான் எத்தனை எத்தனை வகைகள்? அதிலும் ஒண்ணு 'சென்சிடிவ் பற்களுக்கு’னு சொல்றாங்க. இன்னொண்ணு 'நைட் பூரா அலாரம் வெச்சு கிருமியை அழிக்கும்’னு சொல்றாங்க. அதிலும் 'கண்ணுக்குத் தெரியாத கிருமிகளைக்கூட இண்டு இடுக்கெல்லாம் புகுந்து அழிக்கும்’னு சொல்றாங்க. அதென்ன வாயா இல்லை டிரெய்னேஜா? இன்னும் கொலவெறியா, 'உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா?’னு கேட்டவங்க, இப்போ 'எலுமிச்சை இருக்கா?’னு அட்டாக் பண்றாங்க.

எனக்கு ஒரு யோசனை... பேசாம கொஞ்சம் மசாலாவும் சேர்த்து பேஸ்ட்டோட தந்துட்டா, காலை டிபனுக்கு பேஸ்ட்டையே பிதுக்கி சாப்பிட்டுக்கலாம்ல? திருப்புகழைப் பாடி வாய் மணந்த மாதிரியும் ஆச்சு. வயிறு நிறைஞ்ச மாதிரியும் ஆச்சு. எப்பூடி!

சென்னைக்கு மிக அருகில் திருச்சி!

டாக்டர்கள், டெண்டிஸ்ட்கள், சர்வதேச விஞ்ஞானிகள் எல்லோருமே 'எந்திரன்’ படத்துல வர்ற மாதிரியே, ஒரு லேப்ல நின்னுட்டு ஈறு கெட்டுப்போனதையும், அதனால் பேரு கெட்டுப்போனதையும் படம் வரைந்து பாகம் குறித்து ஒரு டூத் பேஸ்ட்டை ரெக்கமெண்ட் பண்ணுகிறார்கள். எல்லாமே நல்லா இருக்கே... அப்போ சரி எல்லாத்தையும் ஒரு பொட்டுப் பிதுக்கி பல்லு வெளக்கலாம்னு பிரஷ் எடுத்தா... அந்த டூத் பிரஷ்லகூட ஜிக்ஜாக், ஸ்பிரிங் ஹெட், வெர்ட்டிக்கிள், ஆரக்கிள் எனப் பலப்பல வடிவங்கள். இன்னும் கொஞ்சநாள்ல ரவுண்டானா, ஆர்ச், எல்.ஐ.சி. பில்டிங் என எல்லா லேண்ட்மார்க் வடிவத்திலும் டூத் பிரஷ் வருமோ?

அண்ணன் சூர்யா, சன்ரைஸ் குடிச்சு உற்சாகமா இருக்கச் சொல்றார். தம்பி கார்த்தி, 'உங்க குடும்பத்துல உள்ளவங்களைப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக்கணும்னா, ஒரு கப் ப்ரூ போதும்’னு அக்கறையா டிப்ஸ் கொடுக்கிறார். இவங்க அப்பா சிவகுமார் சார் கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் 'நிலவேம்புக் கசாயம் குடிங்கப்பா££...’னு அழகாச் சொன்னார். சிவகுமார் சார் குடும்பத்துக்குதான் நம்ம மேல என்ன ஓர் அக்கறை!

'ஓரியோ’ பிஸ்கட் சுவையான பிஸ்கட்தான்... இல்லைனு சொல்லலை. ஆனா, குறுக்கால கோடு கிழிச்சு உட்கார்ந்து பிரிச்சுச் சாப்பிடுறீங்களே... ஏன்? ஒரு பிஸ்கட்டைக்கூட அண்ணனுக்கு விட்டுக்கொடுக்காத தங்கச்சிக்கு பாசமலர் படத்தை 'ரிப்பீட் மோட்’ல பிளே பண்ணவேண்டாமா? தம்மாத்துண்டு பிஸ்கட்டுக்காக 'கோதாவரி... கோட்டைக் கிழிடி’னு விசு ஸ்டைலில் கோடுபோட்ட அண்ணன்காரன், நாளப்பின்ன எப்படி தங்கச்சியோட நல்லது கெட்டதுக்கு விட்டுக்கொடுப்பாரு?

நகைக் கடை விளம்பரங்கள்லாம் ஸ்பெஷல் அட்ராசிட்டி. ஒரு ஜுவல்லரியில் பிரைஸ் டேக் பார்க்கச் சொல்றாங்க. இன்னொண்ணுல செய்கூலி, சேதாரம் முக்கியம்னு சொல்றாங்க. இன்னொருத்தரோ ஹால்மார்க் முத்திரை இருக்கானு பார்க்கச் சொல்றார். ஆனா, ஒருத்தர்கூட, 'நகை வாங்கப் பணம் இருக்கா?’னு கேட்க மாட்டேங்கிறாங்க. பழைய ஈயம் பித்தளைக்குக் கொடுப்பாங்களா பாஸ்?

இதுக்கு நடுவுல, நம்ம பிரபு வேற நாடி, நரம்பு முறுக்கேற புரட்சிப் போராட்டம் பண்ணக் கூப்பிடுறார். அந்தப் புரட்சி ஒரு பக்கம் கெடக்கட்டும்... அமிதாப் பச்சனுக்கு மகனா பிரபு நடிச்சதும், அவருக்குக் குழந்தை பிறந்ததும் விளம்பர உலகில் பெரிய புரட்சிதானே!

ஆனா, பிரபுவுக்கு முன்னாடியே புரட்சிப் போராட்டம் பண்ணினவர் நம்ம அப்பாஸ். வீடுவீடாப் போய் டாய்லெட் க்ளீனர் பயன்படுத்தச் சொன்னவராச்சே! நல்லாக் கவனிச்சிருக்கீங்களா... வீட்டு வாசலுக்கே வந்து புரட்சி பண்றவர் பின்னாடி ஒரு லேடீஸ் கும்பலும் வரும். அவங்கள்லாம் யாரு? 'காதல் தேசம்’ படம் வந்தப்போ அப்பாஸ் மேல கிரேஸாகிக் கிடந்த காலேஜ் கேர்ள்ஸ். அவங்கதான் இப்போ ஆன்ட்டி ஆகி குடும்பத் தலைவியா அப்பாஸுக்கு தோள் கொடுக்கிறாங்க.

மீன் குழம்பு செய்யணும்னா, இனி மார்க்கெட் போய் மீன் வாங்கத் தேவை இல்லையாம். மீன் குழம்பு, பாட்டில்லயே கிடைக்குதாம். இப்படியே போச்சுன்னா அப்புறம், 'இங்கு நல்ல மீன் விற்கப்படும்’ பார்த்திபன் காமெடியைப் புரிஞ்சுக்க முடியாத ஜெனரேஷனை உருவாக்கிடுவோம்!

சென்னைக்கு மிக அருகில் திருச்சி!

காலையில் எல்லா சேனல்லயும் மார்க்கெட் டல்லான நடிகர்கள், இங்கிட்டு திண்டிவனம் அங்கிட்டு திருத்தணி தாண்டி நின்னுக்கிட்டு அழகாப் பொய் பேசுறாய்ங்க. இன்னும் கொஞ்ச நாள்ல, சென்னைக்கு மிக அருகில் திருச்சினு சொன்னாலும் சொல்லிடுவாய்ங்க போல. அட, அதைகூட மன்னிச்சூ! ஆனா, நீச்சல் குளம்னு குட்டையைக் காட்டுறதும், பக்கத்துலேயே காலேஜஸ் இருக்குனு அந்த ஊர்க்காரய்ங்களே காறித் துப்புற டப்பா காலேஜ்களை பில்ட்-அப்போடு காட்டுறதும், எல்லா பஸ்ஸும் நிக்கும்னு, கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாம டெலிஜூம் லென்ஸ் போட்டு ஹைவேஸ் சாலையைக் காட்டுறதும்னு அட்ராசிட்டில பின்னுவாங்க.

'செமத்தியா டெவலப் ஆகுற ஏரியா’னு கீழே கிடக்கும் மண்டை ஓட்டை மிதிச்சுக்கிட்டே இவங்க பேசுறது ரொம்பவே ஓவர்! 'இலவச’ சைட் சீயிங் அனுபவத்தையாச்சும் பெறலாமே என அண்மையில் அவர்களோடு 'மாங்காடுக்கு அருகே’ என்று அழைத்துச் செல்லப்பட்ட லொகேஷன்... ஆந்திரா பார்டரில் இருந்தது. நிச்சயம் ராயலசீமாவாத்தான் இருக்கும்!

சரி... ராத்திரியாச்சும் நிம்மதியா டி.வி-யைப் பார்க்கலாம்னு பார்த்தா, 50 வயசு இளசுங்க ரெண்டு பேர் வியர்க்க, விறுவிறுக்க ரொமான்ஸ் பண்ணுதுங்க. 'ஸ்ஸ்ஸ்ஸ் எப்படிங்க இப்படி..?’னு அந்த ஆயா ஆச்சரியமாக் கேட்கிறதும், அதுக்குக் குப்புறப் படுத்துக்கிட்டுக் குதூகலமா வியர்வையைத் துடைத்தபடி கிடக்கும் தாத்தா 'இனிமே இப்படித்தான்’னு காதல் பார்வையை வழியவிடுறதும்... ப்ப்ப்ப்பா!

ஒரு சேனல்ல, 'அதெல்லாம் கெட்டபழக்கமே இல்லை’னு சொல்லிட்டு இருக்காரு ஒரு டாக்டர். சேனல் மாத்தினா, 'அமுக்குரான் லேகியம் சாப்பிட்டுட்டு ....... இருங்க கோபால்’னு பச்சையாப் பேசிட்டு இருக்காரு இன்னொருத்தர்.

ஒரு குரூப், பக்தி ரசம் சொட்டச் சொட்ட ரிப்பீட் ரிவிட் அடித்து அனுமன் எந்திரம், லட்சுமி கடாட்சம்னு வித்துக்கிட்டு இருக்கு. இன்னொரு பக்கம் உடம்பைக் குறைக்க ஜிம்முக்குப் போகாமலே பல கருவிகள் சுத்தவிட்டு சுண்ணாம்பு அடிக்கும். போதாக்குறைக்கு, 'டேய்... யார் வீட்டுப் பிள்ளையை யார் வயித்துலடா சுமக்குறது? உனக்கு அறிவே இல்லையாடா?’னு ஆளே இல்லாத கடையில் உரிமையோடு 'டா’ போட்டு டீ ஆத்திட்டு இருக்கார் அந்த லாட்ஜ் தாத்தா.

ஊரே ரவுண்டு கட்டி லவ்வர்ஸைத் துரத்துது. அந்தப் பையன் மொபைல்ல ஆன்லைன்ல ஏதோ நோண்டிக்கிட்டே ஓடுறான். டகால்னு ஒரு பஸ் வருது.அவங்க ரெண்டு பேரும் அந்த பஸ்ல ஏறி கிளம்பிப் போறாங்க. 'அப்பாவுக்கு டாடா சொல்லு’னு பையன், பொண்ணுகிட்ட சொல்றான். 'அருமைய்ய்ய்ய்யா’னு சாலமன் பாப்பைய்யா போல சொல்லத் தோணுது. ஆனா, பஸ்ல இவிங்களைக் கடைசி வரை காப்பாத்த 'செந்தூரப்பூவே’ விஜயகாந்தா இருப்பாரு? பொண்ணோட அப்பன் பக்கத்து ஊருக்கு போன் போட்டு 'வண்டியை மறிங்கடா’னு சொல்லிட்டா, சங்குதாண்டி மாப்ளே!

'அடி ஆத்தி... இதென்ன தமிழ் விளம்பரம் எல்லாம் இப்படி நம்மளை தனியா புலம்ப வைக்குதே’னு மலையாளக் கரையோரம் ஒதுங்கலாம்னு 'சூர்யா டி.வி’-க்கு சேனல் மாத்தினா, அங்கே கன்னம் பெருத்த மோகன்லால் எல்லா விளம்பரத்துலயும் வர்றார். ஒரு விளம்பரத்துல தங்கத்தை அடகு வைக்கச் சொல்றார். அடுத்த விளம்பரத்தில் தங்கம் வாங்கச் சொல்றார். கடைசி விளம்பரமா வாழ்க்கையை அனுபவிக்க இன்ஷூர் பண்ணிட்டு டிராவல் பண்ணச் சொல்றார். ஆமா... தெரியாமத்தான் கேட்கிறேன்... தங்கம் வாங்குறதா... அடகு வைக்கிறதா... இல்லை டூர் போறதா..? சொல்லுங்க மோகன்லால் சொல்லுங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism