Published:Updated:

‘பெண்’ எனும் தொழிற்சாலை?

சிறுநீரகம், கருமுட்டை, கர்ப்பப் பை...பாரதி தம்பி படங்கள்: எம்.விஜயகுமார், ஓவியம்: ஹாசிப்கான்

‘பெண்’ எனும் தொழிற்சாலை?

சிறுநீரகம், கருமுட்டை, கர்ப்பப் பை...பாரதி தம்பி படங்கள்: எம்.விஜயகுமார், ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
‘பெண்’ எனும் தொழிற்சாலை?

2006-ம் ஆண்டு சகுந்தலாவுக்குத் திருமணமானபோது 20 வயது. தறிப் பட்டறையில் தன்னுடன் பணிபுரிந்த நவராஜை, காதல் திருமணம் செய்துகொண்டார். வெவ்வேறு சாதி என்பதால், இரு தரப்பு எதிர்ப்புகளையும் மீறித்தான் திருமணம் நடந்தது. மகிழ்ச்சியான மண வாழ்க்கையின் மூன்றாவது மாதத்தில் நவராஜ் மெள்ள ஆரம்பித்தான். தனக்குத் தெரிந்த ஒருவர் இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி சாகக்கிடப்பதாகவும், 'நீ ஒரு சிறுநீரகத்தைத் தானமாகத் தந்து உதவினால், அவர் உயிர் பிழைப்பார்’ என்றும் சகுந்தலாவிடம் சொன்னான். இரக்க

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உணர்வு மிகுந்த பழங்குடிக் கலாசாரத்தில் வளர்ந்த சகுந்தலா, தன் கணவனின் வேண்டுகோளை ஏற்றார். குமாரபாளையத்தில் இருந்து, கோயம்புத்தூர் அழைத்துச் செல்லப்பட்டு சகுந்தலாவின் வலது பக்கச் சிறுநீரகம் அகற்றப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் தரகர்கள், நவராஜிடம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தைத் தந்தபோதுதான், அது தானம் அல்ல, வியாபாரம் என்று சகுந்தலாவுக்குப் புரிந்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு... சகுந்தலாவிடம் இன்னொரு 'தானத்துக்கு’ அடிபோட்டான் நவராஜ். இந்த முறை குரலில் பணிவு இல்லை. அதிகாரம் எஞ்சியிருந்தது. செயற்கைக் கருத்தரித்தல் மையங்களில் குழந்தையின் கருவை உருவாக்கத் தேவைப்படும் கருமுட்டைகளை சகுந்தலா தானமாகத் தர வேண்டும் என்றான் நவராஜ். 'மாதவிடாய் நேரத்துல வீணாப் போறதுதானே... அதை வெச்சு ஒரு பெண்ணுக்குக் குழந்தை பாக்கியம் கிடைச்சா நல்லதுதானே?’ என்றான். இந்த முறை இவன் இதற்காகப் பணம் பெறுவான் என்பது தெரிந்தும், வேறு வழியின்றி அதற்குச் சம்மதித்தார் சகுந்தலா. ஈரோடு தனியார் மருத்துவமனையில் 10 நாட்கள் ஹார்மோன் ஊசி போடப்பட்டு கருமுட்டைகள் சேகரிக்கப்பட்ட பின்பு அனுப்பிவைக்கப்பட்டார். இதற்காக நவராஜ் பெற்ற தொகை, 15 ஆயிரம் ரூபாய். இப்படி ஒன்றல்ல... இரண்டல்ல... கடந்த ஐந்து ஆண்டுகளில் 18 முறை சகுந்தலாவை கருமுட்டை வியாபாரத்தில் ஈடுபடுத்தியுள்ளான் நவராஜ்.

ஒரு வாகனத்தின் உதிரி பாகங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி விற்றுச் செலவழிப்பதைப் போல, சகுந்தலாவின் உடலைப் பயன்படுத்தியிருக்கிறான் நவராஜ். இரு குடும்பங்களையும் எதிர்த்துக்கொண்டு நடந்த திருமணம் என்பதாலும், வருமானத்துக்கு வேறு வழி இல்லை என்பதாலும் சகித்துக்கொண்டு இவற்றுக்குச் சம்மதித்த சகுந்தலாவால், ஒரு கட்டத்துக்கு மேல் இதைப் பொறுக்க முடியவில்லை. எதிர்த்தார். அதன் விளைவோ... பயங்கரம்!

சேலம் - அரசு மருத்துவமனையில் தலை முதல் கால் வரை கட்டுகளுடன் படுத்துக்கிடக்கும் சகுந்தலாவின் வலிமிகு குரலைக் கேளுங்கள்.

‘பெண்’ எனும் தொழிற்சாலை?

''என் வீட்டுல ரொம்ப வறுமைங்க. ரெண்டு பேரும் மில் வேலைக்குப் போனாலும் குடும்பத்தை ஓட்ட முடியலை. அதனால பணத்துக்காகத்தான் செய்றார்னு தெரிஞ்சும் வேற வழி இல்லாம இதுக்கு ஒப்புக்கிட்டேன். ஆனா, வாங்குற காசுல 1,000, 2,000 ரூபா வீட்டுக்குக் குடுக்குறதே பெரிசு. மீதி எல்லாத்தையும் குடிச்சே தீர்த்திடுவார். ஒவ்வொரு ட்ரிப்பும் அவருதான் யாரையாச்சும் புரோக்கரை அழைச்சுக்கிட்டு வருவார். புரோக்கருங்க வந்து, எந்த ஊர், எந்த ஆஸ்பத்திரி, என்னைக்கு வரணும்னு எல்லாத்தையும் சொல்லுவாங்க. பக்கத்து ஊரா இருந்தா, நானே போயிட்டு வந்திருவேன். சில தடவை மதுரை, பெங்களூரு, மெட்ராஸ்னு தூரமான ஊரா இருக்கும். அப்பல்லாம் அவரும் என் மாமியாரும் கூட வருவாங்க.

போனதுமே நம்ம உடம்பு நல்லா இருக்கானு பார்க்க, ஒரு ஊசி போடுவாங்க. அது சரியா இருந்தா, அப்புறம் 10 நாளைக்கு தினமும் மூணு ஹார்மோன் ஊசி போடுவாங்க. 13-வது நாள் மயக்க ஊசி போட்டு கருமுட்டைங்களைச் சேகரிச்சுக் குவாங்க. மயக்கம் தெளிஞ்சுதுனா, அன்னைக்கு நைட்டே அனுப்பி வெச்சுடுவாங்க. இல்லைன்னா அடுத்த நாள் காலையில அனுப்பிடுவாங்க.

பணத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு இடத்துலயும் ஒரு மாதிரி. 10,000, 15,000, 25,000 ரூபா வரைக்கும் கொடுப்பாங்க. சில சமயம் என்கிட்ட தருவாங்க. சில சமயம் என் புருஷன்கிட்டத் தருவாங்க. எல்லாமே புரோக்கருங்க வாங்கித் தர்றதுதான். அவங்க எவ்வளவு வாங்குறாங்கனு தெரியாது.

கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லயே என் புருஷன் வீட்டுல உள்ளவங்க வந்து சேர்ந்துட்டாங்க. இந்தக் கருமுட்டைகளைக் கொடுக்க ஊர், ஊரா என்னை அழைச்சுட்டுப் போகும்போது என் புருஷனும் மாமியாரும் கூடத்தான் வருவாங்க. பணத்தை வாங்கி எண்ணி வெச்சுக்கிறது அவங்கதான். எங்கே போனாலும் என் அஞ்சு வயசுப் பொண்ணையும் கூட்டிக்கிட்டுத்தான் அலைவேன். நான் மலைவாழ் சாதி. அவர் முதலியார். இதனால் அதை வேற சொல்லி சொல்லிக் காட்டுவாங்க. 'பொண்டாட்டி தீட்டு ரத்தத்தை எடுத்து வித்துப் பொழைக்கிறதுதான் பெரிய சாதியா?’னு கேட்டுப் பார்த்துட்டேன். அடி, உதைதான் கிடைச்சதே தவிர, யாரும் மாறலை. இது கொஞ்ச நாளா ரொம்ப அதிகமாகியிடுச்சு. என்னை வெச்சுப் பணம் சம்பாதிச்சு சுகம் கண்டுட்ட புருஷன், எந்த வேலைவெட்டிக்கும் போறது இல்லை. வீட்லயே உட்கார்ந்துகிட்டு விதவிதமா புரோக்கர்களை அழைச்சுக்கிட்டு வர்றதுதான் வேலை. எனக்கும் உடம்புக்கு முடியாமப்போய் ரொம்ப மெலிஞ்சு போயிட்டேன். இதுக்கு மேலயும் இந்தாளு சொல்றதைக் கேட்டுக்கிட்டு இருந்தா நம்ம உயிர் போயிடும்... என் பொண்ணு அநாதை ஆகிடுவானு பயந்து, எனக்குத் தெரிஞ்சவங்ககிட்ட கேட்டேன். அவங்கதான் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ-எம்.எல்.) ஆபீஸைக் காட்டிவிட்டாங்க. அதுக்குப் பிறகுதான் அங்கே போனேன்'' என்கிறார் சகுந்தலா.

சகுந்தலா குமாரபாளையம் சி.பி.ஐ-எம்.எல். அமைப்பு அலுவலகம் சென்றார். கட்சி உறுப்பினர்களின் வழிகாட்டுதல்படி குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வக்கீல் மூலம் சகுந்தலாவும் நவராஜும் பிரிந்துவிடுவதாக எழுதிக் கொடுத்துவிட்டுப் பிரிந்தனர். அதில் இருந்து நான்காம் நாள் திடீரெனக் கட்சி அலுவலகத்துக்குள் வெறிகொண்டு நுழைந்தான் நவராஜ். அங்கு கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரும், ஓவியருமான பொன்.கதிரவன் இருந்தார். அவரைச் சரமாரியாக வெட்டியவன், சற்று தூரத்தில் ஒரு வீட்டில் இருந்த சகுந்தலாவையும் வீடு புகுந்து வெட்டித் தள்ளினான். ரத்தம் படிந்த அரிவாளுடன் வீதியில் ஓடி வந்தவனை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இப்போது நவராஜ் சிறையில். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பொன்.கதிரவன் இப்போதுதான் சற்றே உடல்நலம் தேறியுள்ளார். தலை முதல் கால் வரை கட்டுகளுடன் சகுந்தலா, சேலம் - அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.

இப்போது சகுந்தலாவுக்கு யாருமே இல்லை. சோறு ஊட்டவும், கழிப்பறை சென்று வர உதவவும் ஒரே ஒரு உறவுப்பெண் உடன் இருக்கிறார். மற்றபடி அவர் அநாதையைப் போல தனியே கிடக்கிறார். உடலின் எந்த உறுப்புகள் தொடர்ந்து இயங்கும், எவை இயங்காது என்பதைச் சொல்ல முடியாது. இன்னும் சில அறுவைசிகிச்சைகள் மிச்சம் இருக்கின்றன.

இது தனி ஒரு சகுந்தலாவின் கதை இல்லை. பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதி நெசவாளர்கள், வறுமை தாங்காமல் தங்கள் சிறுநீரகங்களை விற்பனை செய்வது பல வருடங்களாக நடந்துவருகிறது. சகுந்தலாவும் தனது ஒரு சிறுநீரகத்தை இழந்துள்ளார். இவரைப் போல வெளியில் தெரியாமல் ஒற்றைச் சிறுநீரகத்துடன் வாழ்பவர்கள் இந்தப் பகுதியில் அநேகம் பேர். அந்தக் கோர வறுமையின் இன்னொரு முகம்தான், இந்தக் கருமுட்டை வியாபாரம்.

''நான் ஒவ்வோரு ஆஸ்பத்திரிக்குப் போகும்போதும் அங்கே என்னை மாதிரியே நிறைய பேர் கருமுட்டை கொடுக்க வர்றதைப் பார்த்திருக்கேன். எல்லாருமே என்னை மாதிரி ஏழைப்பட்டவங்கதான். வர்ற எல்லார் கிட்டேயும் 'தானம் பண்றோம்’னுதான் எழுதி வாங்கிக்குவாங்க. ஆனால், 10 நாள் கூலியை விட்டுட்டு, வேற ஊர்ல வந்து தங்கியிருந்து தானம் பண்றதுக்கு அங்க வர்ற யாரும் வசதியானவங்க இல்லை. எல்லாருமே பணம் வாங்கிட்டுத்தான் கருமுட்டை கொடுக்கிறாங்க'' என்று சகுந்தலா தெளிவாகச் சொல்கிறார்.

‘பெண்’ எனும் தொழிற்சாலை?

ஆக, இது மிகப் பெரிய மாஃபியா பிசினஸ். மருத்துவமனைகள், மருத்துவர்கள், தரகர்கள் என இதற்கு ஒரு நெட்வொர்க் வேண்டும். ''அப்படிப்பட்ட நிழல் உலக நெட்வொர்க், மாநிலம் முழுவதும் செயல்படுகிறது'' என்கிறார் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சிலின் மாநிலத் தலைவர் என்.கே.நடராஜன்.

''சகுந்தலா மூலமாகத்தான் எங்களுக்கு கருமுட்டை வியாபாரம் பற்றி தெரியவந்தது. விசாரித்தால், சேலத்தின் முன்னணி மருத்துவமனைகள் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பல பெரிய தனியார் மருத்துவமனைகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. இதற்காகவே புரோக்கர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வறுமையில் உழலும் நெசவாளர் குடும்பங்களை மனம் மாற்றி இதற்கு அழைத்து வருகின்றனர். இந்தப் பகுதியின் நெசவாளர் குடும்பங்கள் கடுமையான வறுமையிலும் கடன் தொல்லையிலும் சிக்கியிருக்கின்றன. குறிப்பாக, ஏதேனும் ஒரு தறிப் பட்டறை முதலாளியிடம் 50 ஆயிரம், 1 லட்சம் முன்பணம் வாங்கிக்கொண்டு, குடும்பத்துடன் சில ஆண்டுகளுக்கு அரைக் கொத்தடிமைகளாக உழைக்கின்றனர். அந்தக் கொத்தடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வர தன் ஒரு சிறுநீரகம் பயன்படும் என்றால், அதையும் விற்கத் துணிகின்றனர். கருமுட்டை விற்பனை என்பதும் இந்த அடிப்படையில்தான் நடக்கிறது'' என்கிறார்.

தற்போது சகுந்தலாவுக்கு உதவிகள் செய்துவரும் வழக்கறிஞர் தமயந்தியிடம் பேசியபோது, ''அந்தப் பெண்ணைப் பார்க்கும்போது மனம் கனத்துப்போகிறது. ஒரு கிட்னியை இழந்து, 18 முறை கருமுட்டை வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு, இன்று உடல் எங்கும் வெட்டுக் காயங்களுடன் நடைப்பிணம் போல படுத்துக்கிடக்கிறார். இந்தக் குற்றத்தைச் செய்த நவராஜ் மட்டும் இதில் குற்றவாளி அல்ல. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு பெண்ணின் சம்மதத்துடன் கருமுட்டையைத் தானம் பெறலாம் என்கிறது சட்டம். ஆனால் சகுந்தலாவோ, சராசரியாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். 'தானம்’ என்ற பெயரில் சகுந்தலாவிடம் இருந்து கருமுட்டை எடுத்து வியாபாரம் செய்த டாக்டர்கள், மருத்துவமனைகள், புரோக்கர்கள்... என அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களின் தொழில் உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்'' என்கிறார்.

‘பெண்’ எனும் தொழிற்சாலை?

ந்த நெட்வொர்க், மாநிலம் முழுக்கப் பரவியிருக்கிறது என்பதற்கு இன்னோர் உதாரணம், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சாந்தி. தான் குடியிருக்கும் பகுதியில் பல பெண்கள் இப்படி கருமுட்டை வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், அண்ணாநகர், தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று கருமுட்டைக் கொடுத்துவருவதாகவும் சொல்கிறார். இதற்கென வியாசர்பாடி, தண்டையார்பேட்டை பகுதிகளில் நிறையப் புரோக்கர்கள் இருக்கின்றனர். ஆனால் சாந்தி, கருமுட்டை வியாபாரத்தில் ஈடுபடுபவர் அல்ல. அவர், ஒரு வாடகைத் தாய். கடந்த ஆண்டுதான் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். ஆனால் அது ஆணா, பெண்ணா என்பதுகூட அவருக்குத் தெரியாது. ''குழந்தையோட முகத்தைக்கூட நான் பார்க்கலை'' என்கிறார்.

இவரும், இவர் அறிமுகப்படுத்திய இன்னும் மூன்று பெண்களும் விவரிக்கும் வாடகைத் தாய்களின் அனுபவங்கள், வேறு ஓர் உலகத்தை திறந்துவிடுகின்றன.

''எல்லாத்தையும் புரோக்கருங்க பார்த்துக்குவாங்க. குறைஞ்சது மூணு லட்சம். சில பேருக்கு அஞ்சு லட்சம்கூட கிடைக்கும். கரு உருவானதும் அவங்க சொல்ற ஆஸ்பத்திரிக்கு ரெகுலரா செக்-அப் போகணும். மாத்திரை, மருந்து எல்லாம் தருவாங்க. முறையாச் சாப்பிடணும். ரெண்டு, மூணு மாசத்துலயே தங்குற இடம் எங்கேனு சொல்லுவாங்க. பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே ஒரு ரூம் இருக்கும். இல்லைனா ஆஸ்பத்திரிக்குப் பக்கத்துலயே ஒரு வீடு பிடிச்சு தங்கவைப்பாங்க. பிரசவம் வரைக்கும் அங்கேதான் தங்கணும். மூணு வேளையும் நல்ல சாப்பாடு. அதை எல்லாம் அதுக்கு முன்னாடி நாங்க கண்ணுலயே பார்த்திருக்க மாட்டோம். அவ்வளவு டேஸ்ட்டா, சத்தானதாக் கொடுப்பாங்க. பழங்கள் தருவாங்க. எல்லாத்தையும் முறையாச் சாப்பிடணும். அப்போதானே வயித்துக்குள்ள இருக்கிற அவங்க குழந்தை நல்லா வளரும். ஆனா, அந்த நேரத்துல வீட்டுல புருஷனும் சொந்தப் பிள்ளையும் எப்பவும் போல சோத்துக்குக் கஷ்டப்படுவாங்க. 'நம்ம பிள்ளை என்னைக்கு இப்படி சத்தானதாச் சாப்பிடும்’னு ஏக்கமா இருக்கும். ஆனா, என்ன பண்றது?

நாள் முழுக்க டி.வி. பார்க்கிறதும், செல்போன்ல பேசுறதும்தான் வேலை. வெளியில் போகவோ, வேற யாரையும் பார்க்கவோ அனுமதி இல்லை. வீட்டுல ஏதாச்சும் நல்லது, கெட்டதுனா, ஒரு நாள் 'லீவு’ கொடுப்பாங்க. ஆனா, பெரும்பாலும் வாடகைத் தாயா இருக்கிறவங்க பெத்துக் கொடுக்குற வரைக்கும் வீட்டுக்குப் போக மாட்டாங்க. ஏன்னா, வீட்டு சுத்துவட்டாரத்துல 'வெளிநாட்டுல வேலை; ஊருக்குப் போறோம்’னு ஏதாச்சும் பொய் சொல்லிட்டுத்தான் வந்திருப்பாங்க. இடையில் வயித்தைத் தள்ளிக்கிட்டுப் போய் நின்னா, தெரிஞ்சுபோயிடும். அதனால் யாரும் போறது இல்லை. பிள்ளைங்ககிட்ட ஏதாச்சும் பொய் சொல்லிச் சமாளிச்சுக்கிறது. அப்பப்போ போன் பண்ணிப் பேசிக்குவோம்'' என்கிறார் சாந்தி.

ஏற்கெனவே ஆரோக்கியமான ஒரு குழந்தையைப் பெற்றிருப்பவர்தான் வாடகைத் தாயாக இருக்க முடியும். அதேபோல, சுகப் பிரசவத்துக்கான சாத்தியம் இருந்தாலும், கட்டாயம் அறுவைசிகிச்சையின் மூலமே குழந்தை எடுக்கப்படும். காரணம், என்னதான் சுகப்பிரசவம் என்றாலும் கடைசி நேர சிக்கல்களால் குழந்தைக்கு ஏதேனும் நேர்ந்துவிடக் கூடாது என்பது முதல் காரணம். இன்னொன்று, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெரும்பான்மையானோர் நல்ல நேரம் பார்க்கின்றனர். அவர்கள் குறிப்பிடும் நாள், நட்சத்திரத்தில், நல்ல நேரத்தில் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை எடுக்கப்படுகிறது. மூன்றாவது, அறுவைசிகிச்சை மூலம் குழந்தையை எடுக்கும்போதுதான் தாய்க்கும்-சேய்க்குமான பந்தம் குறைகிறது.

‘பெண்’ எனும் தொழிற்சாலை?

குழந்தை எடுக்கப்பட்ட உடனேயே வேறு அறைக்கு மாற்றப்படும். அதன் முகத்தைப் பார்க்கவோ, என்ன குழந்தை என்று தெரிந்துகொள்ளவோ வாடகைத் தாய்க்கு உரிமை இல்லை. அதேபோல அந்தக் குழந்தையை வளர்க்கப்போகிறவர்கள் யார் என்பதையும் ஒரு வாடகைத் தாய் தெரிந்துகொள்ள முடியாது. இரு தரப்புக்கும் இடையில் உணர்ச்சிபூர்வமான பந்தம் உருவாகிவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கின்றனர்.

ஆனால், தாய்மைக்கு வாடகை உண்டா? 'பேமென்ட்’ கை மாறியதும் 10 மாதங்கள் சுமந்த தாய்மை காலாவதியாகிவிடுமா? ''குழந்தை பிறந்ததும் இன்னும் ஒரு வாரமோ, 10 நாளோ ஆஸ்பத்திரியில் வெச்சிருந்து போகச் சொல்லிடுவாங்க. முதல் பிரச்னை, தாய்ப்பால் கட்டிக்கும். அது பெரிய வேதனை. அப்புறம் ஆபரேஷன் காயம் ஆறி நார்மலாக ஒரு வருஷமாவது ஆகும். சிலருக்கு உடம்பு குண்டாகிடும். அதை எல்லாம் நாமதான் பார்த்துக்கணும். காசுக்காகத்தான் செய்றோம். ஆனால், நம்மளை வெச்சு யாரோ ஒரு குடும்பம் சந்தோஷமா இருக்குதுல்ல... நம்ம வயித்துல வளர்ந்தப் புள்ளை ஏதோ ஒரு பணக்கார வீட்டுல வளர்றதை நினைச்சு திருப்தி அடைஞ்சுக்க வேண்டியதுதான்'' என்று பெருந்தன்மையாகப் பேசுகிறார் பானுமதி.

ஆனால் இந்தப் பெருந்தன்மை எதிர்த் தரப்பிடம் இருப்பது இல்லை. வாடகைத் தாய்க்குக் கொடுக்கப்படும் உணவை, அவர் தன் சொந்தப் பிள்ளைகளுக்குக் கொடுத்து அனுப்பாமல் தானே சாப்பிடுகிறாரா என்று கண்காணிக்கப்படுகிறார். வாங்கும் பணத்தில் சரிபாதிகூட இவர்களுக்கு வந்து சேர்வது இல்லை. ஒரு வாடகைத் தாயின் சம்பளம் மூன்று லட்சம் என்றால், புரோக்கருக்கு இரண்டு லட்சம் வரை போகிறது. மருத்துவமனை நிர்வாகமோ, 10 லட்சத்துக்கும் மேல் சம்பாதிப்பதாகச் சொல்கின்றனர்.

'குழந்தையின்மை என்பது பெரிய மனரீதியிலான பிரச்னைதான். ஆனால் அதை இப்படி லட்சம், லட்சமாகச் செலவழித்துத்தான் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றக் குழந்தைகள் அநாதைகளாக வளர்கிறார்கள். அவர்களில் ஒருவரை எடுத்து வளர்க்கலாம். ஏழைப் பெண்களின் கருமுட்டையை வாங்கி, கருப்பையை வாடகைக்கு எடுத்து அதில் வளர்த்தால்தான் குழந்தை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பணம் இருந்தால் எதையும் வாங்கிவிட முடியும் என்பதை, அவர்கள் ஓர் உயிர் விஷயத்திலும் நிரூபிக்கின்றனர்’ என்று இதை வேறு ஒரு கோணத்தில் பார்ப்போரும் உண்டு.

வாடகைத் தாயாக இருந்து சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதியை பிள்ளைகளின் கல்விக்கும், குடும்ப மற்றும் மருத்துவ செலவுகளுக்குமே பயன்படுத்துகின்றனர். கொஞ்சம் பணம் கிடைக்குமே என்று ஆசைப்பட்டு இதில் ஈடுபட்டாலும் அந்தப் பணம் வந்த வேகத்தில் கரைந்துபோகிறது. மேலும், ஒரு குழந்தையை சுமந்ததால் ஏற்படும் உடல் உபாதைகள் அவர்களுக்கு ஆயுள் முழுவதும் தொடர்கின்றன. ஹார்மோன் மாற்றம் காரணமாக பலருக்கு உடல் பருமனாகிவிடுகிறது.

எப்படி இருப்பினும் வாழ்வின் நெருக்கடிகளும், வறுமையும், சூழ்ந்திருக்கும் கடனுமே தங்கள் உடலைப் பணயம் வைக்கும் இடம் நோக்கி மக்களை இட்டுச் செல்கின்றன.

உண்மையில் இது ஓர் அவலம். தங்கள் உடம்பை வாடகைக்கு விட்டுத்தான் வாழ்க்கை நடத்த முடியும் என்ற நிலையில் தன் குடிமக்களை வைத்திருப்பது இந்த அரசுக்கு பெரும் அவமானம். இதைக் களைவதை விட்டுவிட்டு, 'தமிழ்நாடு, இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்’ என்று பெருமை பேசித் திரிவது,  நாறும் கூவத்தின் மீது நறுமணத் திரவியம் அடிக்கும் வேலை மட்டுமே!

என்றால் என்ன?

வாடகைத் தாய்: பல்வேறு உடல்ரீதியிலான காரணங்களால் குழந்தைப் பேறு அடைய முடியாத தம்பதியினர் வாடகைத் தாய்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். இதன்படி அந்தத் தம்பதியினரின் விந்தணு மற்றும் கருமுட்டை சேகரிக்கப்பட்டு, செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் கரு உருவாக்கப்பட்டு, பிறகு அந்தக் கரு, ஒரு வாடகைத் தாயின் கர்ப்பப் பையில் வைத்து வளர்த்து பிரசவிக்கப்படுகிறது!

கருமுட்டை தானம்: சில பெண்களுக்கு கருமுட்டையை உருவாக்க இயலாத உடல் பலவீனங்கள் இருக்கலாம். அத்தகைய சூழலில் மற்ற பெண்களிடம் இருந்து கருமுட்டையைத் தானம் பெறுகின்றனர். ஒவ்வொரு மாதமும் பெண்ணின் மாதவிடாய் நாட்களின்போது கருமுட்டைகள் உற்பத்தியாகின்றன. அவை கருவாக மாறாத நிலையில் வெளியேறுகின்றன. அவற்றை தானமாகப் பெற்று, கணவனின் விந்தணுவுடன் இணைத்து, செயற்கை முறை கருத்தரித்தல் முறையில் கரு உருவாக்கி, சம்பந்தப்பட்ட மனைவியின் கர்ப்பப் பையில் வைத்து சிசுவை வளர்க்கிறார்கள்!

குஜராத்  வாடகைத் தாய்களின் தலைநகரம்

குஜராத்தில் இருக்கும் ஆனந்த் நகரம் ஒரு காலத்தில் வெண்மைப் புரட்சியின் அடையாளம். புகழ்பெற்ற அமுல் பால் நிறுவனத்தின் பிறப்பிடம் இந்த ஊர்தான். ஆனால் இன்றோ, ஆனந்த் நகரம் வாடகைத் தாய்களின் தலைநகரமாக அறியப்படுகின்றது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர் உலகம் முழுவதும் இருந்தும் ஆனந்த் நகரத்துக்குக் குவிகின்றனர்.

இங்கு இந்த முறையில் ஓர் ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் பெற்றெடுக்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவிலேயே வாடகைத் தாய்க்கு மிகவும் குறைந்தத் தொகை வழங்கப்படுவது இங்குதான். அதிகபட்சமே 50 ஆயிரம் ரூபாய்தான்! எனினும் அந்தப் பணத்தை சம்பாதிக்கக்கூட வேலைவாய்ப்பு இல்லாத சூழலில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏழைகள் வாடகைத் தாய்களாக இருக்கப் போட்டி போடுகின்றனர்!

‘பெண்’ எனும் தொழிற்சாலை?

''புற்றுநோய் வரலாம்!''

''அடிக்கடி கருமுட்டை கொடுப்பதால் ஒரு பெண்ணுக்கு உடல்ரீதியாகப் பாதிப்பு ஏற்படுமா?'' - மகப்பேறு மருத்துவர் சாதனாவிடம் கேட்டபோது,

''நிச்சயம் பாதிப்பு ஏற்படும். அதனால்தான் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தரலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு பெண்ணுக்கு ஒரு மாதத்தில் ஒரு கருமுட்டைதான் வரும். கருமுட்டை தானம் என்று வரும்போது ஒரே ஒரு முட்டை மட்டும் வந்தால் அதில் தோல்விக்கான வாய்ப்புகள் அதிகம். அதனால்தான்  கருமுட்டையின் எண்ணிக்கையை அதிகரிக்க ஹார்மோன் ஊசி போடப்படுகிறது. இந்த ஹார்மோன் ஊசியை அடிக்கடி போட்டுக்கொள்ளும்போது, அது நிச்சயம் பெண்ணின் உடலைக் கடுமையாகப் பாதிக்கும். ஹார்மோன் கோளாறு காரணமாக உடல் நலிவுறும். முக்கியமாக, கர்ப்பப் பை புற்றுநோயும், கர்ப்பப் பை வாய் புற்றுநோயும் வருவதற்கான வாய்ப்புகள் மிக, மிக அதிகம்!''

சகுந்தலா உடல்நலம் தேறி வரவும், வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் நிறைய பொருளாதார உதவி தேவைப்படுகிறது. உதவ விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளவும். info@vasancharitabletrust.org.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism