Published:Updated:

பிராய்லர் பள்ளிகள்...

ஃபாலோ அப் பார்வைகள்பாரதிதம்பி

பிராய்லர் பள்ளிகள்...

ஃபாலோ அப் பார்வைகள்பாரதிதம்பி

Published:Updated:
##~##

 நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள், மதிப்பெண்களைக் குவிப்பதற்காக மாணவர்களை மிரட்டி வதைக்கும் அவலம் குறித்து கடந்த இதழில் வெளியான 'பிராய்லர் பள்ளிகள்’ கட்டுரையில் எழுதியிருந்தோம். அதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் இருந்து ஆவேசமும் ஆதங்கமுமான உணர்வுப் பகிரல்கள்!

நாமக்கல் பள்ளி ஒன்றில் படித்து, இப்போது சேலத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் பேசினார். அவரது பெயரை குமார் என்று வைத்துக் கொள்ளுங்கள். குரல் உடைந்திருந்தது. திக்கித் திக்கிப் பேசினார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதாகக் கருதினேன். ஆனால், உண்மை அதுவல்ல!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''திருச்செங்கோட்டுக்குப் பக்கத்துல இருக்கும் ஒரு பிரைவேட் ஸ்கூல்லதான் படிச்சேன். நீங்க சொல்லியிருந்த எல்லா டார்ச்சரும் எங்க ஸ்கூல்லயும் உண்டு. சுதந்திர தினம், குடியரசு தினங்களுக்குக்கூட லீவு கிடையாது. எந்த நேரமும் படிப்பு, படிப்புதான். ராத்திரி ரெண்டு மணி வரைக்கும்கூட படிக்கச் சொல்வாங்க. ப்ளஸ் ஒன் சேர்ந்த முதல் நாள்ல இருந்து ப்ளஸ் டூ புத்தகத்தைத்தான் படிச்சோம். ப்ளஸ் ஒன் புத்தகங்களை நாங்க பார்த்ததே இல்லை.

சின்ன வயசுல எனக்குப் பேச்சு கொஞ்சம் திக்கும். அதைப் பயிற்சி மூலமா கொஞ்சம், கொஞ்சமாக் குறைச்சேன். ஆனா, இந்தப் பள்ளிக்கூடத்துக்கு வந்ததும் அவங்க பண்ண டார்ச்சர் தாங்காம மறுபடியும் எனக்குத் திக்க ஆரம்பிச்சிருச்சு. எதுக்கு எடுத்தாலும் பயப்பட ஆரம்பிச்சேன். திக்குவாய் இன்னும் அதிகமாச்சு. ஒரு பக்கம் ஸ்கூல்ல திட்டு, அடி, பனிஷ்மென்ட்... மறுபக்கம் 'லட்சம், லட்சமாப் பணம் கட்டிப் படிக்கவைக்கிறோம். படிக்கலைனா எல்லாம் வேஸ்ட்டாப் போயிடும்’னு அப்பா-அம்மாவோட சென்ட்டிமென்ட்டல் மிரட்டல்.

பிராய்லர் பள்ளிகள்...

'செத்துப்போயிடலாமா’னுகூடத் தோணும். பல நாள் தற்கொலைக்கு முயற்சி பண்ணி, தைரியம் இல்லாம விட்டிருக்கேன். அந்த ஸ்கூல்ல இருந்து வெளியே வந்து இப்போதான் மெதுவா மீண்டு வர்றேன். இந்தத் தனியார் பள்ளிக்கூடங்கள் எல்லாத்தையும் இழுத்து மூடணும் சார். அங்கே படிச்சா மார்க் கிடைக்கலாம்; வேலைகூட கிடைக்கலாம். ஆனா, யாரும் மனுஷனா இருக்க மாட்டாங்க. வாழ்நாள் முழுக்க நடைபிணமாத்தான் இருக்கணும்!'' என்று கண்ணீர் ததும்பப் பேசினார்.

பிராய்லர் பள்ளிகள்...

'பிராய்லர் பள்ளி’களில், பெரும்பாலும் வசதியான உயர் நடுத்தர வர்க்கத்தினர்தான் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். அதற்கான பின்னணி, பொருளாதாரக் காரணிகளாக அமைந்திருக்கிறது. இவர்களுக்கு, பொதுவாக எந்த அரசுத் துறைகளின் மீதும் மரியாதை இல்லை. ஆனால், தங்கள் பிள்ளை மருத்துவமோ, பொறியியலோ படிக்க வேண்டுமெனில், அது அரசுக் கல்லூரியில்தான் படிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஏனெனில், அங்குதான் கட்டணம் மிகக் குறைவு. ஒருவேளை பிள்ளைகள் குறைந்த மதிப்பெண் எடுத்து தனியார் மருத்துவ/பொறியியல் கல்லூரிகளில் சேர்க்க வேண்டுமென்றால், 50 லட்சம் முதல் 1 கோடி வரை நன்கொடை அளிக்க வேண்டியிருக்குமே. அதற்குப் பதிலாக நான்கைந்து லட்சம் செலவழித்து நாமக்கல் பள்ளியில் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ சேர்த்துவிட்டால் எப்படியும் ஸ்டேட் லெவல் மதிப்பெண் எடுக்க வைத்துவிடுவார்கள். நல்ல கட்-ஆஃப் வாங்கி அரசுக் கல்லூரியில் இடம் வாங்கிவிட்டால், 50 லட்சம் லாபம். இதுதான் அவர்களின் கணக்கு!

இத்தனை வியூகம் வகுக்கும் அவர்கள், ஏனோ பிராய்லர் பள்ளிகளின் நடத்தை மீது மட்டும் கவனம் செலுத்துவதே இல்லை. பிள்ளைகளின் மனநலன் எந்த அளவுக்கு சீர்குலைகிறது என்பதை அவர்கள் கொஞ்சமும் கவனத்தில் கொள்வதே இல்லை. மாநில அளவிலான மதிப்பெண் களுக்காக எத்தகைய துன்பத்தையும் ஏற்றுக் கொள்கின்றனர். மாதம் ஒரு நாள் பிள்ளைகளைச் சந்திக்க பெற்றோர்களுக்கு இரண்டு மணி நேரம் ஒதுக்கப்படும். அந்த இரண்டு மணி நேரக் காட்சியைக் காண நேர்ந்த ஒருவர், அதை இப்படி விவரிக்கிறார்...

''அந்த நேரத்துல ஸ்கூல் கேம்பஸ் முழுக்க எங்க பார்த்தாலும் பென்ஸ், ஆடி, ஹம்மர், பி.ம்.டபிள்யூ, ரோல்ஸ்ராய்ஸ்னு உலகத்தோட அத்தனை சொகுசுக் கார்களும் நிக்கும். பிள்ளைகளை அழைச்சுட்டு வந்து கார்ல வைச்சு சாப்பாடு ஊட்டி, வீடியோ கேம்ஸ் விளையாடி, உறவினர்களிடம் செல்போனில் பேசினு... ஒரே அழுகையாக இருக்கும். நேரம் முடிஞ்சதும் கண்ணீருடன் கை அசைத்து விடை பெறுவார்கள். அச்சுஅசலாக ஒரு சிறைக் கைதியை மனு கொடுத்து பார்த்துட்டுப் போற மாதிரியே இருக்கும்!''

'சரிங்க.. அரசுப் பள்ளிகள்தான் தரம் இல்லாம மோசமா இருக்கே. தனியார் பள்ளிகள்ல சேர்க்கிறதைத் தவிர வேற என்ன வழி?’ என்று பாவப்பட்ட பெற்றோர்கள் கேட்கலாம். அந்த வழியை நாம்தான் உருவாக்க வேண்டும். தனியார் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு மூளையை மழுங்கடித்து, உயிரைப் பலிகொடுப்பதற்குப் பதிலாக, அருகில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டு அங்கு தரமான கல்விக்காகப் போராட வேண்டும். இது ஒன்றும் மலையைப் பிளக்கும் வேலை அல்ல. பெற்றோர்கள் ஒன்றிணைந்தால் இது முடியாத காரியமும் அல்ல. தனியார் பள்ளியின் வாசலில் அடிமைகளைப் போல அஞ்சி நிற்பதற்குப் பதில், அரசுப் பள்ளி வாசலில் உரிமையுடன் நெஞ்சு நிமிர்த்தி போராடலாம். அது ஒன்றே இந்தப் பிரச்னைக்கான ஒரே தீர்வு... சாத்தியமான தீர்வு!

பிராய்லர் பள்ளிகள்...

“ஆசிரியர்களே காரணம்!”

சந்திரசேகரன் - ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர், கந்தசாமி கண்டர் கல்லூரி, பரமத்தி வேலூர்:

''என்கிட்ட படிச்ச பல மாணவர்கள், இந்தப் பகுதியில் இப்போது தனியார் பள்ளிகளை நடத்துகின்றனர். நாமக்கல் மாவட்டத் தனியார் பள்ளிகளின் பெருக்கத்துக்குக் காரணமே அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்தான். 50 ஆயிரம், 80 ஆயிரம் சம்பளம் வாங்கும் இவர்கள் 10, 20 பேர் ஒன்றுசேர்ந்து ஒரு பள்ளிக்கூடம் தொடங்கிவிடுகின்றனர். கல்வித் துறை அதிகாரிகளைத் தெரியும் என்பதால் யாரைப் பிடிக்க வேண்டும், எப்படிக் காய் நகர்த்த வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிந்துள்ளது. 'கல்வி’ என்ற புனிதமான சேவைப் பணியை, பணம் பார்க்கும் வியாபாரமாக மாற்றிய அயோக்கியர்கள் இவர்கள்தான்!''

 “2-ம் வகுப்புக்கு 10 லட்சம்!”

மலர்க்கொடி - தனியார் பள்ளி முன்னாள் ஆசிரியை, நாமக்கல்.

''பாவம் சார் பசங்க... ஆடு, மாடுங்க மாதிரி அவங்களை ஸ்கூல்லயும் ஹாஸ்டல்லயும் அடைச்சுவெச்சிருக்காங்க. அந்தப் பசங்க சிரிச்சிப் பேசி சந்தோஷமா இருந்து நான் பார்த்ததே இல்லை. எப்பவும் பேய் அறைஞ்ச மாதிரியே இருப்பாங்க. வீட்டு ஞாபகத்துல சுணங்கிப்போயிடுவாங்க. போன்லகூட அம்மா-அப்பாகூட பேச முடியாது. படிக்கச் சொல்லி பண்ற டார்ச்சர் தனி. என்னால இந்தக் கொடுமை யைப் பார்த்துக்கிட்டு வேலை பார்க்க முடியலை. மன உளைச்சல் தாங்காம வேலையை ரிசைன் பண்ணிட்டேன்.

என் அம்மா-அப்பா ரெண்டு பேருமே ஆசிரியரா இருந்தவங்க. கல்வியை வியாபாரம் ஆக்கக் கூடாதுன்னு டியூஷன்கூட எடுக்க மாட்டாங்க. ஆனா, இந்தப் பள்ளிக்கூடங்கள் முழுக்க, முழுக்கக் கொள்ளைக்கூடங்களா நடக்குது.

சொன்னா நம்ப மாட்டீங்க. சமீபத்தில் ஒரு பெற்றோர், தங்களோட பையன் ஸ்கூல் அட்மிஷனுக்காக ஆங்கிலத்தில் பேசணும்னு என்னை அழைச்சுட்டுப் போயிருந்தாங்க. ஊட்டி கான்வென்ட்ல 2-ம் வகுப்பு அட்மிஷனுக்கு அவங்க கொடுத்த நன்கொடை 10 லட்சம். எனக்கு மயக்கமே வந்திடுச்சு. நம்ம பள்ளிக் கூடங்கள் செயல்படும் முறையை நினைச்சு, அதில் வீணடிக்கப்படும் பசங்களோட எதிர் காலத்தை நினைச்சு எனக்குத் தூக்கமே வர்றது இல்லை. அரசாங்கம் ஏதாச்சும் பண்ணணும் சார்... இல்லைன்னா மொத்தத் தமிழ்நாடும் பாழாப்போயிடும்!''

 “போலி ஆசிரியர்கள்... போலி பள்ளிகள்!”

பிராய்லர் பள்ளிகள்...

இமையம் - எழுத்தாளர், அரசுப் பள்ளி ஆசிரியர், விருத்தாசலம்.

''அரசுப் பேருந்துகள் ஓடாத கிராமங்கள், தமிழகத்தில் இருக்க முடியும். ஆனால், தனியார் பள்ளிப் பேருந்துகள் ஓடாத கிராமங்களே இல்லை. அரசு அங்கீகாரம் பெற்றப் பள்ளிகளைவிட அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம். சேலம் மாவட்டத்தில் 80 பள்ளிகளும், கன்னியாகுமரியில் 54 பள்ளிகளும் அங்கீகாரம் பெறாமல் பல ஆண்டுகளாக இயங்கிவருகின்றன என்பதை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களே அறிவித்துள்ளனர். இதுமாதிரி ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கீகாரம் பெறாத நூற்றுக்கணக்கான பள்ளிகள் இன்றும் இயங்கி வருகின்றன.

தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்கள், சரியான பயிற்சியோ, பட்டமோ பெறாதவர்கள்தான். மருத்துவப் படிப்பு படிக்காமல் மருத்துவம் செய்பவர்களை போலி மருத்துவர்கள் என்று அரசு கைதுசெய்கிறது. போலி மருந்துகள், போலி மதுபாட்டில்கள், போலி சாமியார்கள், போலி குடும்ப அட்டைகள், போலி நிதி நிறுவனம், போலி ஆவணம் தயாரித்தவர்கள் மீது கடமையாக நடவடிக்கை எடுக்கிற அரசு, போதிய பயிற்சியோ, பட்டமோ பெறாமல் பாடம் நடத்துகிற போலி ஆசிரியர்கள் மீதும், அரசு அங்கீகாரம் பெறாமல், கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நடத்தப்படுகிற போலி தனியார் பள்ளிகள் மீதும் ஏன் நடவடிக்கை எடுப்பது இல்லை?''

பிராய்லர் பள்ளிகள்...

 “தேர்விலும் தில்லுமுல்லு!”

தளபதி - வழக்கறிஞர், கோபிசெட்டிபாளையம்.

''இந்தத் தனியார் பள்ளிகள் பெரும்பாலானவை தேர்வு மையங்களாகவும் உள்ளன. தங்கள் பள்ளியிலேயே தேர்வு மையம் இருப்பதால், இவர்கள் தேர்வில் செய்யும் தில்லுமுல்லுகள் சொல்லி மாளாது.

கடந்த ஆண்டு ஒரு பள்ளியில் அரசுப் பொதுத் தேர்வின்போது ஒரு போர்டில் விடைகளை எழுதிப் போட்டார்கள். இங்குள்ள ஆசிரியர்கள், 'பேப்பர் சேசிங்’கில் கை தேர்ந்தவர்கள். இந்தத் தனியார் பள்ளிகளுக்கு மேற் பார்வையாளர்களாக வரும் ஆசிரியர்களுக்கு, நாள் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் தரும் பள்ளிகளும் உண்டு. சில பள்ளிகளில் ஒரு பவுன் மோதிரம் போடப்படுகிறது. முதலில் இந்தத் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்வு மைய அந்தஸ்தை உடனே திரும்பப் பெற வேண்டும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism