Published:Updated:

என்னவனே... என்னவளே!

விகடன் டீம், ஓவியங்கள்: ஸ்யாம்

##~##

ப்போ, 'நதியா போல ஒரு பொண்ணு’ என்ற இளைஞர்களின் இந்தத் தலைமுறை வாரிசுகள், 'ஸ்ரீதிவ்யா போல கண்ணு’ என்கிறார்கள். 'மைக்’ மோகனில் இருந்து 'ஸ்பைக்’ ஆர்யாவுக்கு மாறி இருக்கிறது ஜீன்ஸ் தமிழச்சிகளின் ரசனை.

'சினிமா ஹீரோ ஹீரோயின்களை விட்டுத்தள்ளுங்கள்... தோற்றத்திலும் குணத்திலும் உங்கள் வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும்?’ என்று தமிழகத்தின் இளைஞர்கள் - யுவதிகளிடம் ஜாலியாகக் கேட்டோம். ஆளாளுக்கு ஒன்று சொன்னாலும், அதிலிருந்து பொதுவான மனநிலையாக பிரதிபலித்த தோற்றம் மற்றும் குணாதிசயங்களை இங்கே தொகுத்துள்ளோம்... அவர்கள் மனக்கண்ணில் ரசித்த ஆதர்ச ஆண், கனவுப் பெண் இங்கே ஓவியமாக...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆதர்ச ஆண் பற்றி, பெண்களின் எதிர்பார்ப்பு இதோ:

தலைமுடி நல்லா அடர்த்தியா கறுப்பா இருக்கணும். தலையை ஆட்டி ஆட்டிப் பேசுனா டைட்டானிக் ஹீரோ

டி காப்ரியோ மாதிரி அலையடிக்கணும். அதைப் பார்த்தாலே எங்களோட மனசு அலைபாயணும்.

பேச்சு... மூச்! ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா பேசணும். சிம்பிளா... மணிரத்னம் பட ஹீரோ மாதிரி பேசணும். வாய்தான் பேசக் கூடாது. பட்... கண்ணால பேசலாம். நாங்க எவ்ளோ லொடலொடனு பேசினாலும் முகம் சுளிக்காம 'சூப்பர்டி’னு கேட்டுக்கணும். மூக்கு ஷார்ப்பா இருந்தா செமையா இருக்கும். பாலிவுட் ஹீரோ ஹிரித்திக் ரோஷன் மாதிரி இருந்தா டபுள் ஓ.கே. சிரிச்சா ஸ்மைலி மாதிரி கச்சிதமா இருக்கணும். பற்கள் பெருசு பெருசா இருந்தாலும் பரவாயில்லை, தனித்தனியா இல்லாம வரிசையா கச்சிதமா இருக்கணும்.

தனுஷ் போல ஃபீலரா இருந்தா ஓ.கே. ஆனா, தோற்றத்துல அவரைப் போல ஒட்டிப்போன கன்னம் வேண்டாம். அதுக்காக மலையாள சேட்டனாட்டம் உப்பிப் பெருத்த கன்னமும் வேண்டாம். சிம்பு மாதிரி அளவா, சிரிச்சா கன்னத்தில் குழி விழுந்தா நிச்சயமா நாங்க அதுல விழுந்துருவோம்.

என்னவனே... என்னவளே!

மீசையெல்லாம் ஓல்டு பாய்ஸ். தயவுசெஞ்சு வேணாம். அதுக்காக மழு மழுனு ஷேவ் பண்ணி ஷேவிங் ரேசர் விளம்பர மாடலா இருந்தாலும் மொக்கையா இருக்கும். ட்ரெண்டியா ட்ரிம் பண்ணி கொஞ்சம் ஃபிரெஞ்ச் பியர்ட் வைச்சா.. மரண மாஸ். கலர்ன்னு எடுத்துக்கிட்டா அடிக்கிற சிகப்பும் வேணாம்.. அட்டக் கறுப்பும் வேணாம். சிம்பிளா மாநிறமா இருந்தாலே போதும். அஜித் மாதிரி அடிக்குரலும் வேணாம். அதுக்காக மேடி மாதிரி சாஃப்ட் வாய்ஸும் வேணாம்.

'ஹேய் கேர்ள்... இதை நான் சொல்லியே ஆகணும்’ சூர்யா மாதிரி ஸ்வீட்டா இருந்தா... சூப்பர்ப். கோபத்தை கன்ட்ரோல் பண்ற ஆளுமையா இருக்கணும். 'சார் கோபத்துல இருக்காராமாம்!’ங்கிறதை அவரோட சைலன்ட் மோடை வைச்சு நாமப் புரிஞ்சுக்கணும். ஒருவேளை ரொம்பக் கோபம் வந்துட்டா, நறுக்குனு நாலு வார்த்தையில திட்டிட்டு வேகமா அந்த இடத்தைவிட்டு ஆள் போய்ட்டானா.. நாங்க தவிச்சுப்போயிடுவோம்ல!

ஷேக்ஸ்பியருக்கு கொள்ளுப்பேரனாட்டம் இங்கிலீஷ் லிட்ரேச்சர் க்ளாஸ் எடுக்குற ஆள் வேண்டாம். இங்கிலீஷை மேனேஜ் பண்ற அளவுக்கு இருந்தாலே போதும். நல்லா தமிழ்ப் பேசத் தெரிஞ்சிருக்கணும். அர்னால்டு பாடி எல்லாம் அலர்ஜி. ஆறுதலா சாய்ஞ்சுக்கிட்டா மூச்சுத் திணறாத அளவுக்கு மார்பு அளவா இருந்தா போதும். ஆஃப் ஹேண்ட் ஷர்ட் போடும்போது ஆர்ம்ஸ் எட்டிப்பார்த்தா அட்டகாசம். உயரம் எப்படியும் எங்களைவிட மூணுல இருந்து அஞ்சு இன்ச் கூடுதலாக இருக்கணும். அதாவது, நெஞ்சுல சாய்ஞ்சா அவன் இதயத் துடிப்பு எங்க காதில் விழணும்... சூப்பர்ல!

முழுக்கை சட்டை உடுத்தி பட்டன்லாம் போட்டு 'ராம்’ படத்து ஜீவா மாதிரி இருந்தா.. தயிர் சாத பார்ட்டினு அர்த்தம். முழுக்கை சட்டையைக்கூட இன்ஃபார்மலா மடிச்சிவிட்டுட்டு 'சேது’ சீயான் மாதிரி தெனாவட்டு காட்டுனா செம மேன்லி. ஜீன்ஸ்-டிஷர்ட் அடிக்கடிப் போடுற ஆளா இருக்கணும். 'நண்பன்’ விஜய் மாதிரி கலர்ஸ் செலெக்ட் பண்ணி கட்டம் கட்டினா.. நாங்க காலி. ஆனா, நல்ல நாள் விசேஷங்களில் வெள்ளை வேட்டியும் மெரூன் கலர் சட்டையும்தான் ஒரே சாய்ஸ்..!

'சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்’ கட்டாயம் இருக்கணும். அதுக்காக சீரியஸ் மூடுல இருக்குறப்போ கெக்கேப்பிக்கேனு சிரிச்சா கடுப்ஸ் ஆகிடுவோம். நடுரோட்டில் நடந்து வரும்போது, எதிரே வேகமாக கார் வந்தால், எங்களை அணைச்சு இறுக்கிக்கணும். அப்புறம் முக்கியமான விஷயம், எவ்வளவு கலங்கினாலும் கண்ணு மட்டும் வேர்க்கக் கூடாது. கையில் போலீஸ் ஆபீசர்ஸ் போட்டிருக்குற மாதிரி காப்புப் போட்டிருக்கணும். கோபமோ, கொஞ்சலோ அதைத் திருகியபடியே பேசினா.... ஆவ்சம்.. ஆவ்சம்!''

இனி, ஜீன்ஸ் தமிழன்களின் கனவுப் பெண் இங்கே...

''நெத்தி சின்னதா அளவா நயன்தாரா மாதிரி இருக்கணும். தலைமுடிலாம் கேரளத்து ஸ்டைல்ல நிறைய இருக்கணும். முன் நெற்றில இருந்து ரெண்டு கொத்து முடி பிரிஞ்சு கன்னத்தைத் தொட்டுக்கிட்டு இருக்க, அடிக்கடி அதை அவங்க கையால விலக்கிவிட்டுட்டு இருந்தா... லைக்கோ லைக்! கண்ணு ரெண்டும் ஆளை முழுங்குற அளவுக்கு பெருசா இருக்கணும்... நம்மளைப் பேசவிடாத அளவுக்கு எக்ஸ்பிரஸ்ஸிவ்வா இருக்கணும். புருவம்... ராதா பொண்ணு கார்த்திகா போல ஏகத்துக்கும் வளையாம, நஸ்ரியா மாதிரி கரெக்டா இருந்தா.. செம செம. இருக்கானா இல்லையானான்னு இருக்கிறதே தெரியாத அளவுக்கு குட்டியூண்டு பொட்டு வைச்சுக்கிட்டா.. செம கியூட்.

ரொம்ப ஷார்ப்... ரொம்ப ஃப்ளாட்... இல்லாத அளவான மூக்கு இருக்கணும். பூமிகா போல பெரிய உதடா இல்லாம ஸ்ரீதிவ்யா போல சின்னதா உதடு இருக்கணும். உதட்டில் எப்பவும் சின்னச் சிரிப்பு இருக்கணும். லேசாகக் குழி விழுந்த கன்னம் இருந்தா.. மச்சம் பாஸ்! பச்சரிசிப் பல்லா சின்னதா பல் வரிசை இருந்தா பிடிக்கும். கறுப்பாவும் இல்லாம வெள்ளையாவும் இல்லாம ரெண்டும் கலந்த கலவையா மாநிறத்துல இருந்தா போதும். 'சந்தோஷ் சுப்ரமணியம்’ ஜெனிலியா மாதிரி கொஞ்சம் லூஸுத்தனங்கள் இருந்தா ஓ.கே. அதுக்காக இன்னொசன்ட்ங்கிற பேருல எதுவுமே தெரியாம இருக்கக் கூடாது. கழுத்தில் சின்னதா ஒரு செயின் போட்டுட்டு, பேசும்போது அதைக் கடிச்சுட்டோ, விரலால உருட்டிட்டோ பேசுனா... அடியே அள்ளுதே... அழகோ கொல்லுதே..!

என்னவனே... என்னவளே!

சுடிதாரோ, புடவையோ எந்த டிரெஸ் போட்டாலும் பார்க்க பந்தவா இருக்கணும். குண்டாவும் இல்லாம ஒல்லியாவும் இல்லாம மீடியமா பெங்காளி ஸ்வீட் மாதிரி இருந்தா.. செம வெயிட்டு! கண்ணுக்கு மை அழகு.. கைக்கு மெஹந்தி அழகு. அதுக்காக நாட்டியப் பேரொளி ரேஞ்சுக்கு அப்பியிருந்தா.. அப்பீட்டு!

பர்ஸுக்கு பங்கம் வராம சிம்பிளா செலவு வைக்கிற பொண்ணா இருக்கணும். ஓசியில கிடைக்குதேனு வீட்டுக்கும் சேர்த்து பார்சல் வாங்கிட்டுப்போற பொண்ணா இருக்கக் கூடாது. பைக் சாவி, செல்போன் வெச்ச இடம் தெரியாம நாம தேடும்போது கூடவே தேடி எடுத்துக் கொடுக்கணும். திட்டவே கூடாது. அப்படி இல்லைனா ஞாபகமா எடுத்து வைச்சு தேடும்போது கொடுத்து 'அட! அசத்திட்டியே செல்லம்...’னு சொல்ல வைக்கணும்.

காமெடி பண்ணினால் பதிலுக்கு தரை டிக்கெட் லெவலுக்கு இறங்கிக் கலாய்க்கணும். வெட்கப்பட்டாலாம் வேலைக்கு ஆகாது பாஸ். நாங்க கொஞ்சம் சோம்பேறிதான். எங்களுக்காக வீட்டு வேலையில ஷேரிங் பண்ணல்லாம் வேண்டாம். ஆனா, கொஞ்சிக் கொஞ்சியே விடுமுறை நாள்ல சமையல், வீட்டு வேலை செய்ய வைச்சா ரசிப்போம்.

அவங்களுக்குப் பிடிச்ச ஹீரோ நடிச்ச படத்துக்குப் போய் நாங்க பொறுமையா உட்காந்திருக்கிற மாதிரி, எங்களுக்குப் பிடிச்ச ஹீரோயின் நடிச்ச படத்துக்கும் வந்து பொறுமையாக பார்க்கணும். தப்பித் தவறி எங்க ஃபேவரைட் ஹீரோவை கலாய்க்கக் கூடாது. மொக்கைப் படமா இருந்தாலும் 'சூப்பர்டா செல்லம்’னு சொல்லத் தெரிஞ்சா காலமெல்லாம் நாங்க கண்கலங்கி... (ஆனந்தக் கண்ணீருங்க!) அவங்கள கண்கலங்காம பார்த்துப்போம்!''