Published:Updated:

லவ் சீன் மா லவ் சினிமா!

க.நாகப்பன்

##~##

 'லவ் இஸ் வெல்... லவ் இஸ் வெல்’ என காதலுக்காக உருகும் மருகும் படங்களில் இருந்து காதல் சீன்களின் டிரெய்லர் இங்கே...  

படம்: சிப்பாய்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இயக்குநர்: சரவணன்

இடம்: கல்லூரியின் பெண்கள் விடுதி/வெளிப்புறம்/இரவு.

நடிகர்கள் : 'ஜீவா’ கௌதம் கார்த்திக். 'தேன் தமிழ்’ லட்சுமி மேனன்.

சூழல்: சினிமா, டிஸ்கொதே என்று ஜாலி இளைஞன் ஜீவா. மகளிர் கல்லூரி மாணவி தேன்தமிழ், கம்யூனிஸச் சிந்தனைகளோடு செயல்படுபவர். கல்லூரித் தேர்தலில் போட்டியிடும் தேன் தமிழுக்கு உதவுகிறார் ஜீவா.

தேன் தமிழ், விடுதியில் தூங்கிக்கொண்டிருக்க, திடீரென விளக்கு வெளிச்சம் முகத்தில் பட்டு எழுந்துகொள்கிறார். வெளியே எட்டிப்பார்த்தால் விடுதி முழுக்க, நியான் விளக்குகளால் 'VOTE FOR  தேன் தமிழ்’ என்று அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. ஆச்சரியத்துடன் அதை சுற்றிச் சுற்றிப் பார்க்கும்போது, அங்கு நிற்கும் ஜீவாவைப் பார்க்கிறார்.

தேன்: ''ஜீவா... நீங்களா? நீங்க ஒருத்தராவா இவ்வளவு வேலையும் பண்ணீங்க?''

ஜீவா:  ''நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா, ஒரு தனி மனுஷன் கஷ்டப்படுறது தப்பே இல்லை தோழர்!''

அப்போது சத்தம் கேட்டு வாட்ச்மேன் விசில் அடித்தபடி வருகிறார்...

தேன்:  ''ஐயோ வாட்ச்மேன் முழிச்சிக்கிட்டாரு!'' என்று ஜீவாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு மறைவான ஓர் இடத்தில் ஒளிந்துகொள்ளும் தேன்தமிழ், ஜீவாவிடம் குறும்பாகக் கேட்கிறார்...

தேன்: ''என் மேல மட்டும் என்ன தனிப்பட்ட அக்கறை?''

ஜீவா: ''இல்ல... எல்லாரும் நல்லா இருக்கணும்னு நீங்க நெனைக்கிறீங்க. நீங்க நல்லா இருக்கணும்னு நான் நெனைக்கிறேன். ஆமா... இந்த வாட்ச்மேன் பேரு என்ன?''

லவ் சீன் மா லவ் சினிமா!

தேன்: ''சந்திரமௌலி.''

ஜீவா: ''என்னது சந்திரமௌலியா?''

தேன்: ''ம்...''

ஜீவா: (உடன் சத்தமாக 'மௌனராகம்’ கார்த்திக் போல) ''சந்திரமௌலி... மிஸ்டர் சந்திரமௌலி..!''

தேன்: ''ஐயோ! ஜீவா... சத்தம் போடாதே. மாட்டிக்கப்போறோம்!''

ஜீவா:  ''சந்திரமௌலி... சந்திரமௌலி, மிஸ்டர் சந்திரமௌலி!'' என்று கத்தியபடியே மறைவிடத்தில் இருந்து வெளியே வருகிறார். வாட்ச்மேன், ஜீவாவை மடக்கிப் பிடிக்க முயல்கிறார். ஜீவா அவரிடமிருந்து தப்பித்து...

ஜீவா: ''எங்க பரம்பரைல யாருமே சந்திர மௌலிகிட்ட மாட்டினது இல்ல. பை மிஸ்டர் சந்திரமௌலி!'' என்று ஓடுகிறார். சுவற்றின் பின்னால் ஒளிந்துகொண்டிருந்த தேன்தமிழ் இதைப் பார்த்துச் சிரிக்கிறார்.

படம்: பூலோகம்

இயக்குநர்: கல்யாண கிருஷ்ணன்

நடிகர்கள்: பூலோகமாக ஜெயம் ரவி, சிந்துவாக த்ரிஷா, பொன்வண்ணன், சாம்ஸ், மற்றும் பலர்.

இடம்: உள் விளையாட்டரங்கம்/உட்புறம்/மாலை

சூழல்: வடசென்னையின் பாரம்பரியமிக்க பாக்ஸிங் பரம்பரையைச் சேர்ந்தவர் டான்ஸிங் பூலோகம். அவருடைய நடை, உடை, பாவனை மற்றும் பாக்ஸிங் ஸ்டைல் பார்த்து அவர் காதல்கொள்கிறார் சிந்து.

இந்த நிலையில் பூலோகம் கலந்துகொள்ளும் ஒரு போட்டி. அரங்கத்தில் ரசிகர்களின் கைதட்டல்களும் விசில் சத்தமும் ஆர்ப்பரிக்கிறது. பூலோகம் தன் கைகளை முறுக்கும்போது திமில் திமிலான புஜங்கள் தெரிகின்றன. அது கேமராவின் லைவ் கவரேஜில் வர, அரங்கத்தில் இன்னும் அதிகரிக்கிறது ஆர்ப்பரிப்பு. அந்த ஆரவாரங்களுக்கு இடையில், 'பூலோகம்... I Love You… Will You Marry Me?’ என்று எழுதப்பட்ட சார்ட் பேப்பரை காட்டுகிறது ஒரு கை. அந்தச் சார்ட் பேப்பரை கேமரா நெருங்கிப் படம் பிடித்துக் காட்ட, பூலோகம் உற்சாகமடைகிறார்.

லவ் சீன் மா லவ் சினிமா!

அதே உற்சாகத்தோடு மேடை ஏறி ஆவேசத்தோடு முதல் குத்தை எதிரியின் முகத்தில் இறக்குகிறார். அரங்கம் அதிர்கிறது. தொடர்ந்து பன்ச்கள் கொடுத்து முன்னேறும் பூலோகம், அந்தச் சார்ட்டைக் காண்பிக்கும் பெண் யார் எனத் தேடுகிறார். சார்ட் பேப்பருக்குப் பின், பொல்லாத காதலுடன் தாளாத குதூகலத்துடன் சிந்துவின் முகம் தெரிகிறது. சிந்துவைப் பார்த்ததும் பூலோகத்துக்கு எதிரியின் மீது கவனம் குறைகிறது. வயலென்ட் மூடில் இருந்து ரொமான்ஸ் மூடுக்கு பூலோகம் மாற, அந்த இடைவெளியில் அவர் முகத்தில் எதிரி ஒரு குத்து விடுகிறான். எதிரி விட்ட குத்தில் எகிறி விழுகிறது பூலோகத்தின் ஒரு பல்.

ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அமைதியாகிறார்கள். குதூகலித்த சிந்து, அதிர்ச்சியில் சிலையாகிறார். நிலைகுலைந்த பூலோகம் நிமிர்ந்து எழுகிறார். எதிரி மீது கோபத்தைத் திரட்டி, அடி ஒவ்வொன்றையும் இடியாக இறக்குகிறார். அதிரிபுதிரி தாக்குதலில் எதிரி சிதறிப்போகிறான். போட்டியில் பூலோகம் ஜெயிக்கிறார்.

(இப்படி விழுந்த பல்லுக்குப் பதிலாக தங்கப்பல் பொருத்திக்கொள்கிறார் பூலோகம். அதனாலேயே, டான்சிங் பூலோகம் அதன் பிறகு, 'தங்கப்பல்’ பூலோகம் ஆகிறார்!)

லவ் சீன் மா லவ் சினிமா!

படம்: பென்சில்

இயக்குநர்: மணி நாகராஜ்

நடிகர்கள்: 'சிவா’வாக ஜி.வி.பிரகாஷ்குமார், 'மாயா’வாக ஸ்ரீதிவ்யா.

இடம்: பூங்கா / உட்புறம் / காலை

சூழல்: காதலர் தினத்தன்று காதலி மாயாவை சந்திக்க தாமதமாக வருகிறார் சிவா.  

பைக்கிலிருந்து இறங்கி பூங்கொத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் சிவா வாட்ச்சில் மணி பார்த்துவிட்டுப் பதறுகிறார்.                          

சிவா: ''ஒரு மணி நேரம் லேட். நான் செத்தேன்... என்ன பண்ணக் காத்திருக்காளோ மாயா?''

தாமதத்துக்கு என்ன காரணம் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டே வர, அங்கு மாயா தனக்குத்தானே கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டிக்கொண்டு நிற்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியாகும் சிவா, பதறி ஓடி வருகிறார்...

சிவா: ''ஐ யம் ரியலி ஸாரி மாயா. கொஞ்சம் லேட் ஆயிடுச்சி. உன்னைவிட அழகான பூவா பார்த்து வாங்கிட்டு வந்து காதலர் தினத்துக்கு கொடுக்கணும்னு தேடி அலைஞ்சதால லேட் ஆகிடுச்சு. நம்பு... மதர் பிராமிஸ்!''

மாயா: (கோபமாக) ''வாங்கிட்டு வந்த பூவை என் காதுல வைக்காத. கெட் லாஸ்ட். என் முன்னாடி நிக்காத... ஐ ஹேட் யூ!''

சிவா தரையில் முழங்காலிட்டு பொக்கேவை நீட்டுகிறார்.  

சிவா: ''இந்தக் கடைசிப் பூ சாகிற வரை உன்னைக் காதலிச்சிக்கிட்டே இருப்பேன் மாயா..!''

மாயா: (நக்கல் குரலில்...) ''இந்தப் பூ மாதிரியே உன் காதலும் சீக்கிரம் வாடிப்போயிடும்னுதானே சொல்ற!''  

சிவா: ''சேச்சே... இல்லை மாயா. மதர் ப்ராமிஸ்..! ஐ லவ் யூ. (மேலும் பலப்பல சமாதானங்களுக்குப் பிறகு...) பக்கத்துல இன்னைக்கு ஒரு நல்ல ஐஸ்க்ரீம் பார்லர் திறந்திருக்காங்க. அங்கே போலாமா..?''

மாயா: ''ஐ லவ் யூ டூ!''

மாயா கழுத்தில் இறக்கும் கயிறை எடுத்து சிவாவின் கழுத்தில் போடுகிறார். இருவரும் நடக்கிறார்கள்.

மாயா: (மைண்ட் வாய்ஸ்) : 'தெருமுனையில பூ வாங்கிட்டு வந்து, என்னைவிட அழகான பூ வாங்க தேடி அலைஞ்சானாம்!’

சிவா: (மைண்ட் வாய்ஸ்): 'தற்கொலை பண்ணிக்கப் போறவ எதுக்கு கயித்தைக் கையில பிடிச்சுட்டு நிக்கணும்? கலர் கலரா ராக்கி கயிறைக் கையில வெச்சுகிட்டு... தற்கொலைனு பொய் சொல்றா!’

மாயா: (வெளிப்படையாக) ''டேய்... டேய்... நீ யோசிக்கிறது எனக்குக் கேக்குது. அந்தக் கயிறு எனக்கு இல்லைடா... உனக்கு!'' என்று செல்லமாக அடிக்க வர, சிரித்துக்கொண்டே ஓடுகிறான் சிவா.