Published:Updated:

மண் காப்போம்... பெண் போற்றுவோம்!

ஆ.அலெக்ஸ்பாண்டியன்படங்கள்: ஆ.முத்துக்குமார், ச.இரா.ஸ்ரீதர்

மண் காப்போம்... பெண் போற்றுவோம்!

ஆ.அலெக்ஸ்பாண்டியன்படங்கள்: ஆ.முத்துக்குமார், ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:
மண் காப்போம்... பெண் போற்றுவோம்!

 லறும் ஹார்ன்கள், ஆக்ஸிலேட்டர் வாகனங்கள், பேருந்து நிறுத்த நெரிசல்கள், சிக்னல் சீறல்கள்... என, சென்னை டிராஃபிக்கின் 'ஒரு சோறு பதம்’ ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியை ஒட்டிய கதீட்ரல் சாலை. அங்கு உச்சி வெயில் உள்ளங்கை வரை சூடு கிளப்பும் நண்பகல் நேரத்தில் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் பிரஷ§ம் கையுமாக அரை கிலோமீட்டர் நீள கல்லூரி சுவரை அழகழகான நிறங்களால் ஓவியங்களாக உருமாற்றிக்கொண்டு இருந்தார்கள். கடந்த வாரம் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் கவின் கலைத் துறை, ஆர்ட் சென்னை அமைப்பு மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான எபிலிட்டி ஃபவுண்டேஷனுடன் இணைந்து நடத்திய 'சென்னை கலை திருவிழா 2014’-க்கான ஓவியக் காட்சி அது!

பெண்கள் முன்னேற்றம், உலக வெப்பமயமாதல், காடுகள் அழிக்கப்படுவது முதலான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவற்றை முன்னிருத்தி 'தி ட்ரீஸ் அண்ட் தி ஸ்கைஸ்’ என்ற தலைப்பில் நிகழ்ந்தது அந்த வண்ணத் தூரிகைக் கொண்டாட்டம். கல்லூரியின் வளாக சுவர் முழுக்க ஏறக்குறை 26 ஓவியங்களை ஆறு நாட்களில் வரைந்து முடித்தார்கள் இளம் பெண்கள்.

''பரபரப்பான சாலை, ஆளுயர கேன்வாஸ், ஓவியத்தில் ஒரு தீம், வெட்ட வெயில்ல வரையணும்... இவ்வளவு நிபந்தனைகளோட இப்பத்தான் ஓவியம் வரையிறோம். அதனால என்ன வரையிறதுனு முடிவு பண்ணி, ரிகர்சல் பண்ணிட்டுதான் வந்தோம். ஒவ்வொரு படத்துக்கும் ஜூனியர்கள், சீனியர்கள்னு கலந்துகட்டி ஆறு பேர் டீம். ஆறு நாளுக்குள்ள ஓவியத்தை முடிக்கணும். என் ஓவியம் அஞ்சு நாள்லயே முடியப்போகுது!'' பார்வையைத் திருப்பாமல், சுவரில் இருந்து கைகளை எடுக்காமல் வரைந்துகொண்டே பேசுகிறார் ரீட்டா.

மண் காப்போம்... பெண் போற்றுவோம்!

''இயற்கையும் பெண்ணும் ஒண்ணு. இருவரிடமும் அளவுகடந்த சக்தி இருக்குனு சொல்றதுதான் எங்க ஓவியத்தின் கான்செப்ட். அதான் ஒரு பெண்ணின் முகம், ஒரு மரம், இடையில் ஐம்பூதங்கள்னு எங்க ஓவியத்தை டிசைன் பண்ணியிருக்கோம். எப்படி நம்ம ஐடியா?'' என்று ஆர்வமாக ரியாக்ஷன் எதிர்பார்க்கிறார் ஹர்ஷவர்த்தினி.

அழகான பெண்களின் முகம், பூக்கள், மரங்கள் என ஓவியங்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, ''என்னம்மா... லவ்வர்ஸ் டே ஸ்பெஷலா? இப்பல்லாம் காலேஜ்லயே இதெல்லாம் பண்ணச் சொல்றாங்களா?'' என 'உச்’ கொட்டிய சீனியர் சிட்டிசன்களிடம் சிரித்துக்கொண்டே விஷயத்தை விளக்குகிறார்கள் ஜீன்ஸ் யுவதிகள்.

''நம்ம மக்கள்கிட்ட சொன்னா உடனே புரிஞ்சுக்கிறாங்க. குட்டிப் பசங்கள்ல ஆரம்பிச்சு, தாத்தா, பாட்டி வரை எல்லாரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பத்தி ஆர்வமாக் கேட்டுத் தெரிஞ்சுக்கிறாங்க. வீட்டுக் குப்பையை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாம எப்படி வெளியேத்தணும், மின்சாதன பயன்பாட்டை எப்படிக் குறைக்கணும்னு ஏகப்பட்ட டிப்ஸ் சொன்னோம். அதோட நிறைய பேர் அவங்க வீட்ல, அலுவலகங்கள்ல ஓவியம் வரையச் சொல்லி எங்ககிட்ட ஆர்டர் கொடுத்துட்டுப் போயிருக்காங்க. சுற்றுச்சூழல் போராளியாகவும், வளரும் இளம் தொழிலதிபராகவும்... இந்த ஷோ டபுள் ஜாக்பாட் அடிச்சுக் கொடுத்திருக்கு!'' என்று உற்சாகமாக தம்ஸ்-அப் சொல்கிறார் சிக்கிதா ரவி.

ஆக, இந்தக் கட்டுரையின் மெசேஜ் என்ன? வேறென்ன... 'பூமியைக் காப்போம்... பெண்மையை மதிப்போம்!’