Published:Updated:

எங்கெங்கு காணினும் என்.ஜி.ஓ..!

பகீர் பின்னணியும் அதிர்ச்சி அரசியலும்பாரதி தம்பிஓவியங்கள்: ஹாசிப்கான், படம்: தி.விஜய்

எங்கெங்கு காணினும் என்.ஜி.ஓ..!

பகீர் பின்னணியும் அதிர்ச்சி அரசியலும்பாரதி தம்பிஓவியங்கள்: ஹாசிப்கான், படம்: தி.விஜய்

Published:Updated:
எங்கெங்கு காணினும் என்.ஜி.ஓ..!

'இந்தத் தொழில் அதிபர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா...’ என்று கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வாரே... அப்படி சமீப காலமாக ஒருவித அயர்ச்சியை உண்டாக்குகின்றன 'என்.ஜி.ஓ.’ (NGO-Non Governmental Organization) என்று அழைக்கப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள்!

தமிழ்நாட்டில் எந்த நகரத்துக்கு, எந்தக் கிராமத்துக்குச் சென்றாலும் இவர்களே நிறைந்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல், மனித உரிமை, குழந்தைகள் நலன், எய்ட்ஸ், கல்வி... என சகல துறைகளிலும் என்.ஜி.ஓ-க்களின் ஆதிக்கமே. இவர்கள் செய்துவரும் 'தொண்டுக்கு’ இந்நேரம் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
ஓடிக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், நடப்பது என்னவோ, மக்களின் அவலங்களை புராஜெக்ட்களாக மாற்றி துட்டு பார்ப்பதும், அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்புகளை மழுங்கடிப்பதும்தான்.

இந்தப் பின்னணியில் என்.ஜி.ஓ-க்களின் மற்றொரு பரிமாணத்தை உரக்கப் பேசுகிறார் எழுத்தாளரும் வழக்கறிஞருமான இரா.முருகவேள்.

'எரியும் பனிக்காடு’, 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ போன்ற முக்கியமான நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்த முருகவேள், புலிகள் காப்பகத்தின் பெயரால் கார்ப்பரேட் என்.ஜி.ஓ- க்கள் செய்யும் அரசியல் குறித்த நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். என்.ஜி.ஓ-க்களின் நோக்கம் முதல் செயல்பாடுகள் வரை பல விஷயங்கள் பற்றி விளக்கமாகப் பேசினார்...

''இன்று 'புலிகளைப் பாதுகாப்போம்’ என்ற குரல் உரக்க ஒலிக்கிறது. இந்தியா முழுக்க 40-க்கும் மேற்பட்ட புலிகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முதல் நிபந்தனையாக அரசும் என்.ஜி.ஓ-க்களும் சொல்வது, 'காட்டுக்குள் பழங்குடிகள் யாரும் இருக்கக் கூடாது’ என்பதுதான். 'பழங்குடிகளும் புலிகளும் ஒருபோதும் சேர்ந்து வாழ முடியாது’ என்ற கருத்தைத் திரும்பத் திரும்பப் பிரசாரம் செய்கிறார்கள். இதற்காக பல நூறு கோடி ரூபாய் நிதி வாரி இறைக்கப்பட்டு, ஆவணப்படங்கள் எடுக்கப்படுகின்றன; புத்தகங்கள் எழுதப்படுகின்றன; கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. ஆனால், உண்மை என்ன?

பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களும் விலங்குகளும் இணைந்துதான் காடுகளில் வாழ்ந்துவருகின்றனர். வனவிலங்குகளுடன் பழங்குடிகளின் உறவுக்கு எத்தனையோ சான்றுகளைத் தர முடியும். ஆனாலும் அரசும் இந்த என்.ஜி.ஓ-க்களும் ஏன் இப்படிச் சொல்கிறார்கள்? ஏனென்றால், பழங்குடிகளை காட்டில் இருந்து விரட்டினால்தான், அங்குள்ள இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையின்றித் தாரைவார்க்க முடியும்.

மேலும், சுரங்கம் தோண்டவும், சாலை அமைக்கவும், அணை கட்டவும் பழங்குடிகளின் இருப்பு இவர்களுக்குத் தடையாக இருக்கிறது. இவை எவற்றையுமே செய்யவில்லை என்றாலும், 'மனிதர்களின் காலடி படாத கன்னி நிலம்’ என்று கூறி 'எக்கோ டூரிஸம்’ நடத்த பழங்குடிகள் அங்கே இருக்கக் கூடாது. இதனால் தந்திரமாக புலியின் பெயரைச் சொல்லி விரட்டுகின்றனர்.

எங்கெங்கு காணினும் என்.ஜி.ஓ..!

இவர்களின் தந்திரத்துக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். தற்போதைய நிலையில் காடுகளில் வசிக்கும் பழங்குடிகளுக்கு, தேன், காட்டுப் பழங்கள், சுள்ளி... போன்றவற்றைச் சேகரிப்பதற்கான உரிமைகள் மட்டும்தான் இருக்கின்றன. இந்தத் திடீர் புலிக் காதலர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், 'நெல்லிக்காய்கள், காட்டின் சிறு உயிர்களுக்கு முக்கியமான உணவு. அந்தச் சிறு உயிர்கள், புலிகளுக்கு உணவு. பழங்குடிகள் நெல்லிக்காய்களை எடுத்துவந்து விற்பதால், சிறு உயிர்களுக்கு உணவு கிடைக்காமல் புலிகள் அழிகின்றன’ என்று புலிக்கும் நெல்லிக்காய்க்கும் முடிச்சுப் போடுகிறார்கள்.

எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக, காட்டில் நெல்லிக்காயும் இருக்கிறது; புலியும் இருக்கிறது. இவர்கள் நுணுக்கமாக ஆய்வுசெய்வது போல தந்திரமாகப் பேசுகிறார்கள். நம்மிடம் வந்து, 'பழங்குடிகள், வனவிலங்குகளை வேட்டையாடுகின்றனர். அதனால் அவர்களை காட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்’ என்று பேசிவிட்டு, பழங்குடிகளிடம் சென்று, 'நீங்களும் சமவெளி மனிதர்களைப் போல நாகரிகமாகக் கல்வி கற்கவும், மருத்துவ வசதி பெறவும் வேண்டாமா?’ என்று வேறுமாதிரி பேசுகின்றனர். அதே காட்டில், சுற்றுலாத் துறையின் பல மாடிக் கட்டடங்கள் கட்டப்படுவதையும், நாள் ஒன்றுக்கு பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதையும் அவர்கள் பேசாமல் மறைக்கின்றனர்!''

''ஆனால், உயிர்ச் சூழல் கன்னியில் புலியின் இருப்பு முக்கியமானது. அது காக்கப்பட வேண்டியது அவசியம்தானே?''

''பெரும்பாலான காடுகளை அழித்து நடத்தப்படும் எஸ்டேட்டுகளிலும், தொழிற்சாலைகளிலும் புலி மட்டுமல்ல... எந்த வனவிலங்குமே வாழ முடியாது. அவற்றுக்கு எதிராக எந்த என்.ஜி.ஓ-வும் 'தொண்டு’ செய்யாதது ஏன்?

1972-ல் இந்திய அரசு புலிகளைப் பாதுகாக்க 'புராஜெக்ட் டைகர்’ திட்டத்தைச் செயல்படுத்திய போது இந்தியக் காடுகளில் 1,827 புலிகள் இருந்தன. 40 ஆண்டுகளில் பல நூறு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட பின்னர், இப்போது புலிகளின் எண்ணிக்கை 1,411. இதுதான் இவர்கள் புலிகளைக் காக்கும் லட்சணம்.

பழங்குடிகள் கடுமையாகப் போராடியதன் பலனாக, 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 'பழங்குடிகள் பாரம்பரியமாக விவசாயம் செய்துவரும் நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும்’ என்றது அந்தச் சட்டம். அதை அமல்படுத்தக் கூடாது என்று வனத்துறையும், என்.ஜி.ஓ-க்களும் வழக்கு மேல் வழக்குப் போட்டுத் தடுத்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் 'காட்டுக்குள் இருந்தால்தானே நிலம் கேட்கிறார்கள்’ என்று தந்திரமாக புலிப் பாதுகாப்பின் பெயரால் பழங்குடிகளைக் காட்டைவிட்டுத் துரத்தி அடிக்கிறார்கள்.

பொதுவாகவே, இந்தியக் காடுகளில் உள்ள கனிம வளங்களைத் தோண்டி எடுக்க, அங்குள்ள பழங்குடிகள் இடையூறாக உள்ளனர் என்பதை, தண்டகாரண்யா காடுகளில் பெற்ற அனுபவத்தின் மூலம் மத்திய அரசு உணர்ந்துள்ளது. ஆகவே, காடுகளை மனிதர்கள் இல்லாத பிரதேசமாக மாற்ற முயற்சிக்கின்றனர். இவர்களால் துரத்தப்பட்ட பழங்குடிகள், காடுகளின் வெளியே செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக ரத்தம் சுண்ட மண் சுமக்கின்றனர். அவர்களை வைத்து புராஜெக்ட் போட்டு சம்பாதித்த என்.ஜி.ஓ-க்களோ, காட்டுக்குள் ஜீப்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றன!''

''புலிகள் பாதுகாப்பைத் தவிர மற்ற துறைகளில் என்.ஜி.ஓ-க்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது?''

''2009-ம் ஆண்டின் கணக்குப்படி இந்தியாவில் 33 லட்சம் என்.ஜி-ஓக்கள் இருக்கின்றன. இது, சராசரியாக 400 இந்தியர்களுக்கு ஒரு என்.ஜி.ஓ. என்ற கணக்கு. இவை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவி, வேலைவாய்ப்பு, பெண்ணுரிமை, உடல்நலம், நுண்கடன், கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள், சுய வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல்... போன்ற பல துறைகளில் செயல்பட்டு வருகின்றன.  

எங்கெங்கு காணினும் என்.ஜி.ஓ..!

இவர்கள் எல்லோரும் எங்கு இருந்து வருகின்றனர் என்றால், உலகமயமாக்கலுக்குப் பிறகு, அரசு தான் செய்ய வேண்டிய பல வேலைகளில் இருந்து பின்வாங்கிவிட்டது. 'கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் பணத்தைச் செலவிடுவதை அரசுகள் நிறுத்த வேண்டும்’ என்று மேற்கத்திய நாடுகள் வற்புறுத்துகின்றன. அப்போதுதானே அந்த இடத்துக்கு தனியார் நிறுவனங்களைக் கொண்டுவர முடியும்? ஆனால், அரசின் செயல்பாடுகள் குறையும்போது இயல்பாகவே மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும். அதை மட்டுப்படுத்தும் வேலையைச் செய்பவைதான் இந்த என்.ஜி.ஓ-க்கள். இதைத்தான் அவர்கள், 'அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை நாங்கள் செய்கிறோம்’ என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால், எந்தக் காலத்திலும் பிரமாண்டமான அரசின் வேலையை என்.ஜி.ஓ-க்கள் செய்யவே முடியாது!''

''அப்படியென்றால், என்.ஜி.ஓ-க்கள் புராஜெக்ட் என்று செயல்படுத்தும் திட்டங்கள், மக்கள் நலனுக்குக் கொஞ்சம்கூட பலனளிக்கவில்லை என்று சொல்கிறீர்களா?''

''ஆமாம். அதுதான் உண்மை. காட்டின் பழங்குடிகள் நெல்லிக்காய் பொறுக்குவது புலிப் பாதுகாப்பு புராஜெக்ட் என்றால், அதே பழங்குடிகள் காட்டைவிட்டு வெளியேறி வாழ வழியற்று ரோட்டில் நின்றால் அது 'பழங்குடிகள் பாதுகாப்பு புராஜெக்ட்’. அவர்களுக்கு வாழ்வின் ஒவ்வொரு கணமும் புராஜெக்ட்தான். இந்தியாவிலேயே அதிக என்.ஜி.ஓ-க்கள் இருப்பது டெல்லியில்தான். இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு. வெளிநாட்டு நிதி அதிகமாகப் பெறுவதில் இரண்டாம் இடத்தில் இருப்பதும் தமிழ்நாடுதான்.

2010-11-ம் ஆண்டு கணக் குப்படி தமிழ்நாட்டு என்.ஜி.ஓ-க்கள் பெற்ற வெளிநாட்டு நிதியின் அளவு 1,557 கோடி ரூபாய். இந்தப் பிரமாண்டத் தொகையைக்கொண்டு இவர்கள் செய்தது என்ன? இதைக் கேள்வி கேட்கும் உரிமை நமக்கு இல்லை. என்.ஜி.ஓ-க்கள் யாருக்கும் கணக்குக் காட்டவேண்டிய அவசியம் இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்.ஜி.ஓ-க்களைக் கொண்டுவர வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்துவருகின்றனர். ஆனால், இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலிக்கக்கூட தயார் இல்லை.

உங்களுக்கு சுவாரஸ்யமான ஒரு தகவல் சொல்கிறேன். இந்தியாவை மீட்க வந்த ரட்சகராகப் போற்றப்படுவருமான அரவிந்த் கெஜ்ரிவால் 'கபிர்’ (kabir) என்ற என்.ஜி.ஓ. அமைப்பை வைத்திருக்கிறார். ஃபோர்டு பவுண்டேஷனிடம் இருந்து கெஜ்ரிவாலின் என்.ஜி.ஓ. 4.5 கோடி ரூபாய் நிதி பெற்றிருக்கிறது. அவர் அந்தப் பணத்தின் கடைசி ரூபாய் வரை நாணயமாகவே செலவு செய்திருக்கக்கூடும். பிரச்னை அதுவல்ல. ஆனால், லோக்பால் சட்ட வரம்பின் கீழ் பன்னாட்டு நிறுவனங்களையும் என்.ஜி.ஓ-க்களையும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை கெஜ்ரிவால் எழுப்ப மறுக்கிறார். இவை இரண்டையும் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்!''

''இந்த ஃபண்டிங் ஏஜென்சிகள் யார்? அவர்கள் ஏன் என்.ஜி.ஓ-க்களுக்கு நிதி கொடுக்கிறார்கள்?''

''இந்திய என்.ஜி.ஓ-க்களுக்கு நிதி அளிப்பதில் அமெரிக்கா முதல் இடத்திலும், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. ஒவ்வொரு வருடமும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இவர்கள் நிதி அளிக்கின்றனர். அரசுகளும், அந்த நாடுகளின் நிறுவனங்களும் நிதி தருகின்றன. ஏன் தருகிறார்கள் என்றால், சுற்றிவளைத்து பன்னாட்டு நிறுவனங்களின் நலன் விளைவதற்காகத்தான்.

உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் எய்ட்ஸ் விழிப்பு உணர்வு என்பது முழுக்க முழுக்க என்.ஜி.ஓ-க்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எய்ட்ஸ் நோயாளி ஒருவர் உடனே இறந்துவிட்டால், அதற்கான மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு என்ன லாபம்? ஆகவே, அவரை உயிரோடு வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கிறது.  

எங்கெங்கு காணினும் என்.ஜி.ஓ..!

அதேபோல, இன்று சூரிய மின்சாரம் உள்ளிட்ட மாற்று எரிசக்தி குறித்து பரவலாகப் பேசப்படுகிறது. இந்தத் துறையில் தமிழ்நாட்டில் நிறைய என்.ஜி.ஓ-க்கள் செயல்படுவதையும், ஜெர்மனியில் ஏராளமான மாற்று எரிசக்தி நிறுவனங்கள் செயல்படுவதையும் கவனத்தில் கொண்டு இதைப் புரிந்துகொள்ள வேண்டும்!''

''நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், ஊருக்குள் நல்ல காரியங்கள் மேற்கொள்ளவும் யார் பணம் கொடுத்தால் என்ன... நல்ல நோக்கத்துக்குப் பயன்பட்டால் சரிதானே?''

''இல்லை... இது மிகத் தவறான பார்வை. பெரும்பாலான மக்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். 'எங்கிருந்தோ வந்து ஊருக்குள் இறங்கும் என்.ஜி.ஓ-க்காரர்கள் நம் ஊருக்குத் தண்ணீர் பம்ப் அமைக்கிறார்கள்; சோலார் விளக்கு அமைக்கிறார்கள்.. பரவாயில்லையே’ என்று மக்கள் வியக்கின்றனர்.

அதன் மறுபுறமாக, அந்தத் தண்ணீர், மின்சார வசதிகளை மக்களுக்குச் செய்து தந்திருக்க வேண்டிய அரசின் மீது உள்ள மக்களின் கோபம் வடியவைக்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் அனைத்தும் அரசு செய்ய வேண்டிய வேலை. இதை எல்லாம் செய்வதற்காகத்தான் நாம் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்; இதற்காகத்தான் நாம் வரி செலுத்துகிறோம். என்.ஜி.ஓ.-க்கள் அமைத்த தண்ணீர் பம்ப் சரியில்லை என்றால், 'நீ செய்த தொண்டில் 10 சதவிகிதம் தரமாக இல்லை. மறுபடியும் தொண்டு செய்’ என்று கேட்க முடியுமா?

அடிப்படையில் இவர்களின் அணுகுமுறையே தவறானது. வறுமையை ஒழிக்க இவர்கள் முன்வைக்கும் செயல்திட்டங்கள் ஊறுகாய் போடுவதும், ஊதுவத்தி உருட்டுவதும், அப்பளம் போடுவதும்தான். அதாவது, நமது திறமையின் மூலம் வறுமையை விரட்டக் கற்றுத்தருகிறார்களாம். இதற்கு சுயமுன்னேற்றம், கிராமத் தற்சார்புப் பொருளாதாரம் என்று விதவிதமாகப் பெயர் வைக்கிறார்கள். ஆனால், வறுமைக்கு மூலக்காரணமாக இருக்கும் இந்த அரசையும், அரசின் பொருளாதாரக் கொள்கைகளையும் விமர்சிப்பது இல்லை.

என்.ஜி.ஓ-க்கள் நுழைந்த எந்தப் பிரச்னையை வேண்டு மானாலும் எடுத்துப் பாருங்கள்... கடைசி வரையிலும், 'அய்யோ... அய்யோ’ என்று அலறல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கும். அதாவது, பிரச்னைக்கான மூலவேர் அப்படியே இருக்கும் அல்லது மேலும் மோசம் அடைந்திருக்கும். இதுதான் நடைமுறை உண்மை!''

எங்கெங்கு காணினும் என்.ஜி.ஓ..!

''ஆனால், 2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த முஸ்லிம் படுகொலைகளை அம்பலப்படுத்தியதிலும், குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் முன்நிற்கும் தீஸ்தா செதல்வாட் ஒரு என்.ஜி.ஓ-தான். அவரை எப்படி மதிப்பிடுவது?''

''தீஸ்தா செய்து வருவது உண்மையிலேயே அர்ப்பணிப்பு மிகுந்த பணி. அவரை உதாரணம் காட்டித் தான் பல என்.ஜி.ஓ-க்கள் தப்பித்துக் கொள்கின்றன. ஆனால், பாலியல் தொழிலாளியின் உரிமைகளுக்காகப் போராடுவது வேறு. பாலியல் தொழிலாளி இல்லாத சமூகத்தை அமைக்கப் போராடு வது வேறு. என்.ஜி.ஓ-க்கள் முன்னதைத்தான் செய்கின்றன. இவர்கள் மனித உரிமை என்று பேசுவது தனி மனித உரிமையைப் பற்றி. இது ஓர் ஐரோப்பிய இறக்குமதிக் கொள்கை. கோடிக்கணக்கான மக்கள் அரை வயிற்று உணவுடன் சேரிகளில் வதைபடும் இந்தியாவில், லட்சக்கணக்கானோர் தினக்கூலிகளாக தொழிற்சாலைகளில் உழைத்துக்கொட்டும் இந்தியாவில் தனி மனித உரிமை, தனி மனித சுதந்திரம் ஆகியவற்றை முதன்மைப்படுத்திப் பேசுவது பிரச்னையைத் திசைதிருப்பும் வேலை!''

''எனில், நல்ல என்.ஜி.ஓ. என ஒன்று இருக்கவே முடியாதா?''

''இதுவரை நாம் பேசியது வெளிநாட்டு நிதிபெறும் என்.ஜி.ஓ-க்களைப் பற்றி. அப்படி நிதிபெறும் யாரையும் சந்தேகிக்கத்தான் வேண்டும். ஆனால், நம் ஊரில் நான்கைந்து பேர் சேர்ந்து, ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைப்பது, ஆதரவற்றோருக்கு உணவு அளிப்பது போன்ற சேவைகளைச் செய்து வருகிறார்கள்.

ஏராளமானோர் இப்படி தங்கள் சொந்தக் காசைச் செலவழித்து சிறிய என்.ஜி.ஓ-க்களை நடத்துகின்றனர். நாம் இவர்களை அங்கீகரித்து ஆதரவளிக்க வேண்டும். உண்மையிலேயே இவர்கள் செய்வதுதான் தொண்டு. வெளிநாட்டு நிதி பெறும் என்.ஜி.ஓ-க்களை 'தொண்டு நிறுவனங்கள்’ என்றே அழைக்கக் கூடாது. அவர்கள் அனைவரும் மாதச் சம்பளம் பெறுகின்றனர். கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றனர். எல்லாம் செய்துவிட்டு சமூக சேவகர்களாக உலா வருவதைத்தான் சகிக்க முடியவில்லை!''

என்.ஜி.ஓ.  சில தகவல்கள்...

2010-11ம் ஆண்டில் அதிக வெளிநாட்டு நிதி பெற்றிருப்பது டெல்லி (2,016 கோடி ரூபாய்). இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழ்நாடு (1,557 கோடி ரூபாய்). மாவட்டரீதியாகக் கணக்கிட்டால், இந்தியாவிலேயே என்.ஜி.ஓ-க்கள் மூலம் அதிகம் நிதி பெறுவதில் முதல் இடத்தில் இருப்பது சென்னை. 2009-10ம் ஆண்டுக் கணக்கின்படி சென்னை என்.ஜி.ஓ-க்கள் பெற்ற தொகை 871 கோடி ரூபாய்.

• என்.ஜி.ஓ-க்கள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு எஃப்.சி.ஆர்.ஏ. (FCRA - Foreign Contribution Regulation Act) உரிமம் பெற வேண்டும். இந்த உரிமத்தை இந்தியாவில் 40,000-த்துக்கும் அதிகமான என்.ஜி.ஓ-க்கள் பெற்றுள்ளன. ஆனால், இதில் பாதி பேர்தான் ஒவ்வோர் ஆண்டும் உள்துறையிடம் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். இப்படி அறிக்கை அளிக்காத 17,700 என்.ஜி.ஓ-க்களின் எஃப்.சி.ஆர்.ஏ. உரிமங்களை, கடந்த 2011-2012ம் ஆண்டில் ரத்துசெய்து உத்தரவிட்டது மத்திய உள்துறை.

ஒரு என்.ஜி.ஓ., வெளிநாட்டு நிதி பெற வேண்டுமெனில், எஃப்.சி.ஆர்.ஏ. பெற்று, குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். இதனால், எஃப்.சி.ஆர்.ஏ. எண் பெற்று மூன்று ஆண்டுகள் ஆன என்.ஜி.ஓ-க்களை விற்பது ஒரு தொழிலாகவே உருவெடுத்துள்ளது!

எங்கெங்கு காணினும் என்.ஜி.ஓ..!

''நிதி பெறுவதில் தவறு இல்லை!''

ஹென்றி டிபேன், மக்கள் கண்காணிப்பகம்.

''மக்களின் துன்பங்களை என்.ஜி.ஓ-க்கள் புராஜெக்ட்களாக மாற்றுவதாகச் சொல்கிறார்களே?''

''இதில் உண்மை இல்லாமல் இல்லை. அரசுசாரா அமைப்புகளுக்கு நிதி உதவி செய்யும் தனி நபர்கள், அமைப்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், வெளிநாட்டு நிதி உதவியைச் சார்ந்து இயங்க வேண்டியுள்ளது. அதைப் பெறுவதற்கு புராஜெக்ட் ரிப்போர்ட் தயாரிப்பதும், நிதி பெறுவதும் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால், ஒரு பிரச்னையின் மீது உணர்வு இல்லாமல் வெறுமனே புராஜெக்டாக அணுகும்போதுதான் சிக்கல் வருகிறது!''

''மேற்கத்திய நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான அரசியல் மற்றும் வியாபாரச் சூழலை உருவாக்க என்.ஜி.ஓ-க்களைக் கருவியாகப் பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டுக் குறித்து...''

''நிதி கொடுப்பவர்கள் யார் என்பதைப் பொறுத்துதான் இதை முடிவு செய்ய முடியும். உலக வங்கி, வெவ்வேறு நாடுகள், தனிப்பட்ட நபர்கள் என பலரும் நிதி தருகின்றனர். அப்படி நிதி தரும் அனைவருக்குமே ஒரு நோக்கம் இருக்கிறது. உதாரணமாக, தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று கருதும் நாடுகள் இதற்கு நிதி தருகின்றன. மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்கு சில நாடுகள் நிதி தருகின்றன. இப்படி அல்லாமல் வேறு தீய நோக்கங்களும் இருக்கலாம். அதைச் சம்பந்தப்பட்ட என்.ஜி.ஓ-க்கள்தான் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்!''