Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

மற்றவர் யார் மக்கள்?

நானே கேள்வி... நானே பதில்!

மற்றவர் யார் மக்கள்?

Published:Updated:

''ஜெயலலிதா சொல்வது போல், 'பிரதமர் ஆவோம்’ என்று தி.மு.க-வில் யாரும் சொல்லவில்லையே ஏன்?''

''அவர்களுக்கு 'பிரதர்’ பிரச்னைகளைத் தீர்க்கவே நேரம் போதாது..! இதில் எங்கிருந்து பிரதமர் ஆவது?''

- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''விமர்சனமும் அதற்கான பதிலடியும் நாகரிகமாகவே இருக்க முடியாதா?''

''ஏன் முடியாது? எல்லோரையும் கிண்டலடிப் பதிலும் விவாதத்தில் எதிராளி பதில் சொல்ல முடியாதபடிக்கு மடக்குவதிலும் வல்லவர், நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட் ஷா.

ஒருமுறை இங்கிலாந்து நாடாளு மன்றத்தில் பிரதமர் சர்ச்சில் கொண்டுவந்த தீர்மானத்துக்குக் கடும் எதிர்ப்பு. பெர்னாட் ஷா தன் கண்டனத்தைத் தெரிவிக்க, தான் எழுதி அரங்கேற்ற இருக்கும் புதிய நாடகத்துக்கு இரண்டு இலவச டிக்கெட்டுகளை சர்ச்சிலுக்கு அனுப்பினார். அதோடு அனுப்பிய பின்குறிப்பில், 'அன்புள்ள சர்ச்சிலுக்கு, என் புதிய நாடகத்தைக் காண இத்துடன் இரண்டு டிக்கெட்டுகளை அனுப்பியுள்ளேன். ஒன்று உங்களுக்கு; மற்றொன்று உங்கள் ஆதரவாளர் ஒருவருக்கு, அப்படி யாராவது உங்களுக்கு இருந்தால்!’ என்று எழுதியிருந்தார்.

நானே கேள்வி... நானே பதில்!

அதற்கு சர்ச்சில் அனுப்பிய பதில் குறிப்பு: 'அன்புள்ள பெர்னாட் ஷாவுக்கு, நன்றி! எனக்கு உங்களுடைய நாடகத்தின் முதல் காட்சிக்கு வர இயலாது. நேரம் இல்லை. அதன் இரண்டாம் காட்சிக்கு வருகிறேன், தங்களின் புதிய நாடகம் அப்படி இரண்டாம் காட்சிக்குத் தகுதியாகி நடைபெற்றால்!’

மேதைகள் என்றால், ஆளுமை இப்படித்தான் இருக்கும்!''

- எம்.எஸ்.மணி, பெங்களூரு.

''நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கூட்டணி அமைக்க, கட்சிகள் ஆலாய்ப் பறப்பதைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?''

''கூடி வாழ்ந்தால் கோடி கோடியாய் நன்மை!''

- தீ.அசோகன், சென்னை.

'' 'கோயில்கள், பள்ளிகளுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது’ என்ற சட்டவிதியை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்தானே..?''

''அந்த ஊரில் இரண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் 100 அடி தூரத்தில் உள்ளன. இதற்கிடையில் மாவட்ட நீதிமன்றமும், தி.மு.க. கட்சி அலுவலகமும் எதிரெதிரே அமைந்துள்ளன. அ.தி.மு.க. தொடர்ந்த ஒரு வழக்கில் ஆஜராக மு.க.ஸ்டாலின் அந்த ஊருக்கு வருகிறார். அப்போது தி.மு.க. - அ.தி.மு.க-வினர் கடுமையாக மோதிக்கொள்ள, போர்க்களமாக மாறுகிறது அந்த இடம். ஆயிரக்கணக்கான மாணவிகளின் பெற்றோர்கள் கதிகலங்கி பள்ளிகளில் தஞ்சம் அடைகிறார்கள். இது நடந்தது திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் அருகில். மதுக்கடைகளை விடவும் மிகக் கொடுமையான சூழலில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதால், அந்தச் சட்டவிதியைப் பற்றி நாம் அலட்டிக் கொள்வதில்லைபோலும்!''

- ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்.

''பெரியவர்கள் சொல்வதெல்லாம் வேதமாகிவிடுமா?''

''காந்தியடிகள், தலித் மக்களை 'கடவுளின் மக்கள்’ என்றார். அவரைப் பார்த்து அம்பேத்கர் கேட்டார், 'அப்படியென்றால் மற்றவர்கள் யாருடைய மக்கள்?’ ''

- சுரா.மாணிக்கம், புதுக்கோட்டை.

''மன்மோகன் சுயசரிதை எழுதினால், புத்தகத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?''

''மௌனம் பேசியதே!''

- பெ.பாண்டியன், திருவானைக்காவல்.

''இந்தியா இன்று சந்திக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் என்ன காரணம்?''

''நிதி நெருக்கடியும் நீதி நெருக்கடியும்.''

- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

'' 'மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது’ என்பது போல வேறு ஏதேனும் கூற முடியுமா?''

''நிலையாமை ஒன்றுதான் நிலையானது!''

- எம்.எஸ்.மணி, பெங்களூரு.

''முத்தமிழ் அறிஞருக்கு மிகவும் பிடித்தது?''

''அவ்வப்போது 'இயல்’, 'இசை’; எப்போதும் 'நாடகம்’!''

- எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. 'நானே கேள்வி - நானே பதில்’ என்று தலைப்பிட்டு தபாலில் அனுப்பவும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism