Published:Updated:

இனிது இனிது காதல் இனிது!

டி.அருள் எழிலன்

இனிது இனிது காதல் இனிது!

டி.அருள் எழிலன்

Published:Updated:
##~##

 காதலர் தினத்தை இப்படியும் கொண்டாடலாம்’ எனப் பிரமிப்பூட்டுகிறார்கள் டெல்லியைச் சேர்ந்த அலோக் தீட்சித்-லட்சுமி ஜோடி! எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிட் வீச்சு ஒன்றில் முகம் சிதைக்கப்பட்ட லட்சுமியும் சமூக சேவகர் அலோக் தீட்சித்தும் இணைந்து வாழ்வதோடு, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழிகாட்டும் அமைப்பு ஒன்றை நடத்துகிறார்கள்! 'STOP ACID ATTACKS’ எனும் அந்த அமைப்புக்கு பெண்களிடையே ஏக வரவேற்பு.

டெல்லியில் இருந்த அலோக் தீட்சித் திடம் அவரது காதல் மற்றும் அமைப்பு குறித்துப் பேசினேன்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சமூகம் சார்ந்து இயங்க வேண்டும் என்ற எண்ணம் வந்த போது, நான் பார்த்து வந்த விமானப் பணியை உதறிவிட்டு ஊடகவியலாளர் ஆனேன். 2012-ல் இந்தியா முழுக்க அரசியல்வாதிகளை விமர்சித்து இணையங்களில் எழுதிய, கார்ட்டூன் வெளியிட்ட பலரும் கைது செய்யப்பட்டார்கள். ஊழலுக்கு எதிராக வெகு வீரியமான கார்ட்டூன்களைப் பதிவுசெய்து, தேசம் முழுக்க பரபரப்பு கிளப்பிய அசீம் திரிவேதி என் நண்பர். இந்திய அரசியல்வாதிகள், தேசியச் சின்னங்களை அவமதிப்பது போல கார்ட்டூன் வரைகிறார் என்று கைது செய்யப்பட்டாரே... அவரேதான்! கருத்துச் சுதந்திரம் அடக்கப்படுவதற்கு எதிராக நானும் அவரும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடினோம். அருந்ததி ராய் தொடங்கி அரவிந்த் கெஜ்ரிவால் வரை அப்போது எங்கள் போராட்டத்தை ஆதரித்தார்கள். நாட்டின் கௌரவத்தைச் சீர்குலைத்ததாகச் சொல்லி, எங்களைக் கைதுசெய்து அப்புறப்படுத்தினார்கள். அரசாங்கம் எளியவர்களைக் கிள்ளுக்கீரையாக நடத்தும் அந்த அராஜகம்தான் நலிவுற்றவர்களுக்காக என்னை முழுமூச்சாகப் போராடச் செய்தது!

இனிது இனிது காதல் இனிது!

அப்படி நான் இயங்கிக்கொண்டிருந்தபோதுதான், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்திக்க நேர்ந்தது. நம் இந்திய சமூக அமைப்பினால் பாதிக்கப்பட்டோரில் மிகவும் பரிதாபமானவர்கள் அவர்கள்தான் என உணர்ந்தேன். அவர்களின் வேதனையை வெறுமனே எழுதிக்கொண்டிருக்கக் கூடாது என்று முடிவெடுத்தேன். அவர்களுக்கு வழிகாட்டவும் ஆலோசனைகள் அளிக்கவும், Stop Acid Attacks’ அமைப்பைத் தொடங்கினோம். அமைப்பின் பிரசார நடவடிக்கைகளுக்காகப் பல இடங்களுக்குச் சென்றபோது லட்சுமியைப் பற்றி சொன்னார்கள். ஆசிட் வீச்சின் துணிச்சலான சாட்சியமாக இருந்ததால், அவரை எனது இயக்கத்தில் இணைக்க விரும்பித் தேடினேன். ஒருநாள் அந்தச் சந்திப்பு நடந்தது!'' சின்ன இடைவெளி கொடுத்துத் தொடர்கிறார் அலோக்.

''ஆசிட் தாக்குதலுக்கு ஆளான பல பெண்கள் சிதைந்த தங்களின் முகத்தை மூடியபடி கூனிக் குறுகி நடக்கும்போது, லட்சுமி முகத்தை மறைக்காமல் நேரான பார்வையுடன் என்னைச் சந்தித்தார். அந்த மனத் திடம் முதல் சொடுக்கிலேயே என்னை ஈர்த்தது. அநேகமாக அவர் மீதான என் காதலின் தொடக்கப் புள்ளி அதுவாகத்தான் இருக்க வேண்டும்!

இனிது இனிது காதல் இனிது!

களையான அழகுடன் இருந்த லட்சுமி, தன் 15-வது வயதில் ஆசிட் தாக்குதலை எதிர்கொண்டாள். அவரைவிட 15 வயது மூத்தவனான குட்டு என்பவன் அவரைக் காதலிப்பதாகச் சொல்லி இருக்கிறான். அந்தக் காதலில் தனக்கு சம்மதம் இல்லை என்று லட்சுமி சொல்ல, பரபரப்பான டெல்லியின் கான் மார்கெட் பகுதியில் வைத்து அவர் முகத்தில் ஆசிட் வீசியிருக்கிறான். யாரும் உதவிக்கு வராமல் பயந்து ஓட, துடித்துப் புரண்ட லட்சுமி, ஏழு அறுவை சிகிச்சைகளை எதிர்கொண்டிருக்கிறார்.

நாங்கள் காதலித்தோம். இணைந்து வாழ முடிவெடுத்தோம். திருமணம் என்ற சடங்கின் பெயரால் கூட்டம் கூட்டி லட்சுமியின் கழுத்தில் தாலி கட்ட நான் விரும்பவில்லை. காரணம், அங்கு வரும் அனைவரும் லட்சுமியின் அழகு பற்றி பேசுவார்கள். பண்பாட்டின் பெயரால் நடைபெறும் உடல் வன்முறையாகத் திருமணம் மாறிவிடக் கூடாது என்பதால், திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ முடிவெடுத்தோம்; வாழ்ந்து வருகிறோம். 'இரக்கத்தின் பேரில் உருவான காதலா இது?’ என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. இரக்கத்தின் பேரில் வரும் எந்த உணர்வும் நிலைக்காது. அது தன் அகங்காரத்தை வளர்த்து, ஒரு கட்டத்தில் தான் நேசிக்கும் ஜீவன்களை முடக்கிவிடும். இது மிக இயற்கையான உறவு!'' என்று மென்மையாகச் சிரிக்கிறார் அலோக் தீட்சித்.

''ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண்களுக்கு உங்கள் பிரதான ஆலோசனை என்ன?''

''ஆசிட் வீச்சில் சிதைந்த உங்கள் முகத்தை மறைக்க வேண்டாம். அந்தப் பாதிப்பை இந்தச் சமூகம் தெரிந்துகொள்ளட்டும் என்றுதான் முதலில் அவர்களிடம் எடுத்துச் சொல்வோம். ஏனென்றால், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான அக்கறை சமூகத்தில் இல்லை. ஆசிட் வீசியவன் சிறைக்குச் சென்று சில மாதங்கள் கழித்து ஜாமீனில் வெளிவருகிறான். பல ஆண்டுகள் வழக்கு நடைபெற்று, போதிய சாட்சிகள் இல்லாமல் விடுதலையாகிறான். இடையில் அவனுக்கு தனது மகளையோ, சகோதரியையோ திருமணம் செய்துவைக்கிறது இந்தச் சமூகம்!

'ஒரு பெண்ணின் முகத்தை, எதிர்காலத்தைச் சிதைத்தவனாயிற்றே’ என்ற கூச்சம் கொஞ்சமும் இன்றி எப்படி அவனுக்கு தங்கள் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துவைக்கிறார்கள்? 'நம் பெண்ணை இவன் பத்திரமாகப் பார்த்துக்கொள்வான்’ என்று எதன் அடிப்படையில் நம்புகிறார்கள்? ஆக, நாங்கள் மாற்றத்தை உண்டாக்க வேண்டியது சமூகத்தின் ஆதார நம்பிக்கையில்தான் என்று தீர்மானித்தோம். அதை நோக்கியே முன்னேறுகிறோம்.

ஆசிட் வீச்சுக்குள்ளான பெண்களின் அவஸ்தையை நம்மால் துளியும் உணரமுடியாது. மரணம் வரை அவர்களுக்குத் தனிமையே துணை. சமூகமும் குடும்பமும் அவர்களை ஏற்றுக்கொள்வது இல்லை. லட்சுமியுடன் நான் இருந்த முதல் 24 மணி நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் இன்னமும் என் மனதில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது. அதுதான் என்னை இன்னும் இன்னும் வீரியமாக இயங்கச் சொல்கிறது!''

''உங்கள் அமைப்பின் சேவை டெல்லியோடு மட்டும் முடங்குவது சரியா?''

''ஆசிட் வீச்சைப் பொறுத்தவரை நாடு முழுக்க நடைபெறும் வன்முறை வெளியில் தெரிவதில்லை. தமிழகத்திலேயே கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வினோதினியின் மரணம் பரபரப்பான அளவுக்கு, வித்யாவின் மரணம் விவாதிக்கப்படவில்லை. இந்த இருவரின் மரணம் பேசப்பட்ட அளவுக்கு பீகார், ராஜஸ்தான், உ.பி. போன்ற மாநிலங்களில் நடைபெறும் பெண்

இனிது இனிது காதல் இனிது!

கொடுமைகள், ஆசிட் வீச்சு சம்பவங்கள் பற்றி வெளியில் தெரிவதே இல்லை. டெல்லி தவிர்த்த பிற மாநிலங்களில் நிலைமை இப்படித்தான் உள்ளது. தற்சமயம் எங்கள் இயக்கம் இந்தியாவின் ஒன்பது நகரங்களில் விரிவடைந்திருக்கிறது. விரைவில் தமிழகத்திலும் எங்கள் நடவடிக்கைகள் தொடங்கும்!''

என்ன சொல்கிறார் லட்சுமி?

''ஆசிட் வீச்சுக்கு ஆளான நாளில் இருந்து எட்டு வருடங்களாக என் வீட்டில்தான் முடங்கிக்கிடந்தேன். ஆசிட் வீச்சின் கொடுமை ஒரு பக்கம், சமூகமும் உறவுகளும் என்னைப் புறக்கணித்தது மறு பக்கம் எனத் தனிமைத் துயரால் சபிக்கப்பட்டிருந்தேன். எந்த வேலைக்கும் என்னால் செல்ல முடியவில்லை. எதிரில் வருகிறவர்கள் முகம் சுழித்து அருவருப்பாக ஒதுங்கிச் சென்றபோது, இனி எனக்கு ஒரு வாழ்வு இல்லை என்றே நம்பினேன். ஆனால், அதெல்லாம் வாழ்வின் கறுப்புப் பக்கங்கள். அதிலிருந்து மீண்டு அலோக்கைச் சந்தித்த பிறகு, வாழ்க்கையின் புதிய அத்தியாயம் பிறந்தது! இப்போது எங்கள் இல்லறத்தையே ஓர் இயக்கமாக்கி இருக்கிறோம். ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களே... உங்கள் மீது ஆசிட் வீசியவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள்..  'என் முகத்தை மாற்ற முடிந்த உன்னால், என் மனதை மாற்ற முடியவில்லையே.  அதனால் நீ தோல்வியடைந்தவன்தான்’ என்று!''