Published:Updated:

ஜெர்மனியின் செந்தேன் மழையே...

பாரதி தம்பி

ஜெர்மனியின் செந்தேன் மழையே...

பாரதி தம்பி

Published:Updated:
##~##

'வெளிநாட்டுப் பெண்ணை மணந்த தமிழ் வாலிபர்’ என்ற செய்திகளை அவ்வப்போது நாளிதழ்களில் படித்திருப்பீர்கள். அந்தச் செய்தி தொடர்பான புகைப்படத்தில்,  அந்த வெளிநாட்டு மருமகள் பட்டுப்புடவையை இழுத்துப் பிடித்தபடி சந்தனம், குங்குமம் வைத்து, மல்லிகைப் பூ சூடி வெட்கப்பட்டுச் சிரித்துக்கொண்டிருப்பார். இதுவும் அப்படியான செய்திதான். ஆனால், அதையும் தாண்டி பல சுவாரஸ்யங்கள் உண்டு!  

கடலூரைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணனும், ஜெர்மனியைச் சேர்ந்த ஃப்ரான்ஸிஸ்காவும் ஜெர்மனியில் திரைப்படக் கலை பயிலும் மாணவர்கள். இருவருக்கும் காதல். அடுத்த மாதம் திருமணம். இருவரும் இணைந்து தங்கள் காதலை, இருதரப்புப் பெற்றோர்களும் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பதை 'அம்மா அப்பா’ என்ற பெயரில் ஓர் ஆவணப்படமாக்கியதுதான் அற்புதம். ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இந்தப் படம், பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது! 'அம்மா அப்பா’ ஆவணப்படத்தின் டீஸர்...  செம ரகளை ப்ளஸ் க்யூட் ரசனை. கலகலப்பாக உணர்வுபூர்வமாக நகர்கிறது ஒவ்வொரு ஃபிரேமும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெர்மனியில் இருக்கும் ஜெயகிருஷ்ணனுடன் பேசினேன். ''எனக்கு சொந்த ஊர் கடலூர். சென்னையில் ஃபைன் ஆர்ட்ஸ் படிச்சேன். என் ஓவியங்களை ப்ளாக்ல பதிவேன். அதைப் பார்த்துட்டு ஃப்ரான்ஸிஸ்கா என்னைத் தொடர்பு கொண்டாங்க. அவங்க ஜெர்மனியில் உள்ள மியூனிச் திரைப்படப் பள்ளி மாணவி. ஆவணப்படங்களைப் பத்தி ஆய்வு செய்றது அவங்க புராஜெக்ட்.

ஜெர்மனியின் செந்தேன் மழையே...

நாலு வருஷம் முன்னாடி தன் ஆய்வுக்காக மும்பை வந்தவங்களைச் சந்திச்சேன். ரெண்டு பேரோட ரசனை, ஆர்வம் எல்லாமே ஒரே அலைவரிசையில் இருந்ததும், இயல்பாவே காதல் வந்தது. நான் ஜெர்மனி போய் அவங்களோட சேர்ந்து படிச்சேன்.

என் வீட்ல எங்க காதல் விஷயத்தைச் சொன்னேன். 'வெளிநாட்டுல புருஷன் - பொண்டாட்டி காலம்பூரா சேர்ந்து வாழ மாட்டாங்க, விவாகரத்து வாங்கிடுவாங்க’னு  என் அப்பா, அம்மா பயப்பட்டாங்க. என் தம்பி ஜெர்மனியில் இருக்கார். அவர் ஃப்ரான்ஸிஸ்காவைச் சந்திச்சுப் பேசின பிறகு, என் அப்பா-அம்மாகிட்ட பேசி அவங்களைச் சமாதானப்படுத்தினார்.

ஜெர்மனியின் செந்தேன் மழையே...

பிறகு நானும் ஃப்ரான்ஸிஸ்காவும் கடலூருக்கு வந்தோம். நாங்க முதல்முறையா எங்க அப்பா - அம்மாவைச் சந்திக்கிற அந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பதிவுபண்ண ஆசைப்பட்டோம். அதனால் கூடவே ஒரு கேமராமேனை அழைச்சுட்டு வந்தோம்.  நேர்ல சந்திச்சதும் அப்பா-அம்மாவுக்கு ஃப்ரான்ஸிஸ்காவை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அப்புறம் ஜெர்மனியில் இருந்து ஃப்ரான்ஸிஸ்காவின் பெற்றோர் கடலூருக்குக் கிளம்பினாங்க. அவங்க பயணத்துக்கான ஏற்பாடுகளில் இறங்குவதில் இருந்தே ஷூட்டிங்கை ஆரம்பிச்சுட்டோம். கடலூர்ல எங்க வீட்டில் டைனிங் டேபிள் கிடையாது. ஆனா, ஜெர்மனியில் இருந்து வர்றவங்க சிரமப்படுவாங்களேனு என் அப்பா ஒரு டைனிங் டேபிள் வாங்கிட்டார்.

இப்படி ரெண்டு தரப்பு பெற்றோர்களும் சின்னச் சின்னதா நிறைய விஷயங்கள் பண்ணாங்க. கடலூர் ஸ்டுடியோவில் குடும்பப் புகைப்படம் எடுத்தோம். ரெண்டு குடும்பமும் அவங்கவங்க பாரம்பரிய உடை உடுத்திக்கிட்டு பாரம்பரியத் தோற்றத்தில் படம் எடுத்தோம்.  

நாங்க எடுத்த வீடியோ தொகுப்பை  ஒரு ஆவணப்படமா மாத்துற அதே நேரம், அதுக்குள்ள ஒரு கதை இருக்கணும்னு முடிவு பண்ணோம். ரெண்டு பேரோட பெற்றோர்களும் இந்தக் கல்யாணத்துக்கு எப்படி முதல்ல தயங்கி அப்புறம் அதை ஏத்துக்கிட்டாங்கனு  திரைக்கதை வெச்சுக்கலாம்னு ஃப்ரான்ஸிஸ்கா சொன்னாங்க. அப்படி எடிட் பண்ணிப் பார்த்தப்போ, இரண்டு நாடுகளின் கலாசார வித்தியாசங்களின் பரிமாற்றமாப் படம் இருந்தது. இந்தப் படத்தில் காதல் எங்களோடது. ஆனா, கதை எங்க பெற்றோரைப் பத்தினது!'' என்ற ஜெயகிருஷ்ணன், 'ஜெர்மனியின் செந்தேன் மழையே...’ உள்பட இளையராஜாவின் சில பாடல்களை உரிமம் பெற்று தன் ஆவணப்படத்தில் பயன்படுத்தியுள்ளார்.

ஜோடியாகப் படித்து, ஜோடியாக நடித்து, ஜோடியாகப் படம் எடுத்து வாழ்க்கையில் ஜோடி சேரவிருக்கும் ஜெயகிருஷ்ணன் - ஃப்ரான்ஸிஸ்கா தம்பதிக்கு... அட்வான்ஸ் வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism