Published:Updated:

“அம்மா அப்பா கையால சாப்பிடணும்!”

அரித்ராவின் ஆசை டி.அருள் எழிலன், ஓவியம்: ஸ்யாம்

##~##

 யரமான மதில் சுவர்கள் சூழ்ந்த சிறைச்சாலைக்குள் நிழல் சூழ்ந்த ஒரு மரம். அதன் கீழே ஒரு கரும்பலகை. கைதிகளுக்குப் பாடம் நடத்துகிறார் பேரறிவாளன். சிறையில் பிறந்த ஏதோ ஒரு குழந்தைக்கு அழகாக உடை தைத்துக்கொடுக்கிறார் முருகன். தான் சிறையில் கட்டிக்கொண்டிருக்கும் சாய்பாபா கோயிலை மேலும் எப்படி அழகாக்கலாம் எனக் கழிகிறது சாந்தனின் வாழ்வு. 23 ஆண்டுகால சிறை வாழ்க்கை... காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கம்பிகளுக்கு வெளியே சுவர்களுக்குள் சுழலும் வாழ்வு, இருள் கவியும் நேரத்தில் தனிமைச் சிறைக்குள் சென்றுவிடுகிறது.

உச்ச நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு, தமிழக அரசு, ராஜீவ் படுகொலை வழக்கில் ஆயுள் கைதிகளான ஏழு பேரையும் விடுவிக்கும் முடிவை எடுத்தபோது சிறையில் ஒரே ஆரவாரம். முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ்... உள்ளிட்ட ஏழு பேரும், 23 ஆண்டுகால சிறைவாசத்தில் சேகரித்த புத்தகங்களையும் துணிமணிகளையும் எடுத்துவைக்கத் தொடங்கினார்கள்.

பேரறிவாளன் விடுதலையாகி வந்ததும் என்னென்ன செய்ய வேண்டும், யார் யார் வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனப் பட்டியலிடத் தொடங்கினார் அவரது அம்மா அற்புதம் அம்மாள்.

''இத்தனை வருஷத்துல இழந்தவை ஏராளம். ஆனா, பல்லாயிரக்கணக்கான அன்பான உள்ளங்களைச் சம்பாதிச்சிருக்கோம். 'அறிவு’க்காக செங்கொடி தன் உயிரையே கொடுத்தாளே (அழுகிறார்). நீதிக்கான இந்தப் போராட்டத்தில் இறுதியாக எங்கள் வாழ்வில் விளக்கை ஏற்றியது முதல்வர் அம்மாதான். தமிழக முதல்வர் அம்மாதான் என் மகனைக் காப்பாத்துவார்னு நான் 2011-ல் இருந்தே சொல்லிட்டு இருந்தது வீண்போகலை. சீக்கிரமே அறிவு வெளியில் வருவான். இத்தனை வருஷத் துக்கம் முடிவுக்கு வரும்னு நம்பிக்கையோட காத்திருக்கேன்'' என்றார் அற்புதம் அம்மாள்.

“அம்மா அப்பா கையால சாப்பிடணும்!”

விடுதலைச் செய்தி வெளியான உடனேயே, தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் இனிப்புக் கொடுத்துக் கொண்டாடினார்கள். ஆனால் மறுநாளே, ஏழு பேரையும் விடுவிக்கத் தடை கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. விடுதலைக்கு இரு வாரத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனே அந்த உற்சாகம் வடிந்து, கோபமாக மாறியது.

வழக்கறிஞர் மூலமாக பேரறிவாளனிடம் பேசியபோது, ''சிறை என்பதே சுவர்களால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பகுதிதான். அதற்குள் 'உயர் பாதுகாப்புத் தொகுதி’ என்ற பெயரில் 23 ஆண்டுகள் தனிமைச் சிறையிலேயே வாழ்ந்து வருகிறேன். இதற்கெல்லாம் ஒரு முடிவு வருகிறது என்பதை நினைக்கும்போது, அந்த உணர்வைச் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. தண்டனைக் குறைப்பு என்பதைவிட நாங்கள் எதிர்பார்ப்பது விடுதலையை. அது, உச்ச நீதிமன்றம் மூலமாகவும், தமிழக முதல்வர் மூலமாகவும் சாத்தியமாகி இருக்கிறது. எனக்காகப் பல்லாயிரம் பேர் உழைத்திருக்கிறார்கள்.   சிறையில் இருந்து வெளியில் வந்ததும் முதன்முதலாக நான் செல்ல விரும்புவது செங்கொடியின் கல்லறைக்கு. என் தங்கையின் தியாகத்துக்கு முதல் மரியாதை செய்ய விரும்புகிறேன். அடுத்து என் ஆசான் தந்தை பெரியாரின் நினைவிடத்துக்குச் செல்ல வேண்டும். என் சொந்த ஊரில் மக்களைச் சென்று பார்க்க வேண்டும். எஞ்சிய என் வாழ்நாளை சமூகப் பணிகளில் மட்டுமே செலவிடுவேன். என் விடுதலைக்காக உழைத்த மக்களுக்கு நான் செய்யப்போகும் நன்றி இதுதான்' என்கிறார் பேரறிவாளன்.

ளினி - முருகனின் மகளான அரித்ரா, தற்போது லண்டனில் இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் தன் மருத்துவக் கல்வியை நிறைவுசெய்ய இருக்கும் அரித்ரா, ''நான் இரண்டரை வயதுக் குழந்தையாக இருந்தபோது சிறையில் இருந்து வெளியே வந்தேன். பின்னர் ஈழத்தில் வாழ்ந்து லண்டனுக்கு வந்தேன். இத்தனை ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டும் வேலூர் சிறையில் என் அம்மா-அப்பாவைச் சந்தித்தேன். அதன் பிறகு சந்தித்தது இல்லை. இப்போது வரை எனக்குத் தொடர்ந்து விசா மறுக்கப்பட்டு வருகிறது. அம்மா-அப்பாவைச் சந்தித்தபோது, 'நாங்கதான் எங்க வாழ்க்கையைத் தொலைச் சுட்டோம். நீயாவது நல்லா இருக்கணும். உன் கண்கள் வழியாத்தான் நாங்க இந்த உலகத்தைப் பார்க்கிறோம்’ என்று சொன்னார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றும்விதமாக என் மருத்துவக் கல்வியை முதல் தர மதிப்பெண் எடுத்து முடிக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். எனக்கு விவரம் தெரிந்து ஒரு நாள்கூட அம்மாவின் கையால் சாப்பிட்டதே இல்லை. அங்கு வந்து என் அம்மா-அப்பாவோடு அமர்ந்து அவர்களின் கையால் உணவருந்த வேண்டும் என்பதுதான் என் ஆசை!'' என்கிறார் அரித்ரா.

“அம்மா அப்பா கையால சாப்பிடணும்!”

முருகன், சாந்தன், பேரறிவாளன்... விஷயத்தில் பரிதாபத்துக்கு உரியவர் சாந்தன்தான். பெரும்பாலும் தனிமை விரும்பியான சாந்தன், யாருடனும் பேசுவது இல்லை. சிறையில் இருக்கும் இந்த 23 ஆண்டுகளில் உறவினர் என்று ஒருவரும் இதுவரை சாந்தனைச் சந்தித்தது இல்லை. அவரது குடும்பம் பற்றி எந்தச் செய்தியும் வந்ததும் இல்லை.

யாழ்ப்பாணத்தில் உள்ள உடுப்பிட்டி எனும் கிராமத்தில் வசித்துவரும் தில்லையம்பலம்- மகேஸ்வரி தம்பதிக்கு நான்கு பிள்ளைகள். அதில் இரண்டாமவர் சாந்தன். தன் மகனைக் காணமுடியாத கவலையிலேயே போன வருடம் தில்லை மறைந்துவிட்டார். மகேஸ்வரியிடம் பேசினேன்.

''ரொம்ப வறுமை. நான்கு பிள்ளைகளை வளர்க்கவே சிரமப்பட்டோம். நல்ல சாப்பாடு, துணிமணி எதுவுமே கிடையாது. இடியாப்பம் விற்றுத்தான் குடும்ப வாழ்வு ஓடியது. காலையில் இடியாப்பம் விற்றுவிட்டு பின்னர் பள்ளிக்குச் செல்லும் சாந்தன், பள்ளி முடிந்து வந்த பின்னரும் இடியாப்பம் விற்கச் செல்வான். குடும்பத்தின் கஷ்டம் அறிந்து அந்த இளம் வயதிலேயே வேலைக்குச் சென்று உழைப்பான். 'இந்தியா போய் அங்கிருந்து வெளிநாட்டுக்குப் போகப்போறேன்’ என்றுதான் இங்கிருந்து போனான். அவனுக்கும் இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எப்படி ராஜீவ் படுகொலை வழக்கில் தொடர்புபடுத்தினார்கள் என்றும் தெரியவில்லை.

எப்படியாவது என் பிள்ளையை இந்தியா வந்து பார்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால், வாழவே வழி இல்லை. ஆகாயத்துல ஏறிப் போக ஏழை ஆசைப்படலாமா? என் பிள்ளை ஒரே ஒருதடவை கடிதம் எழுதியிருந்தான். அதன் பிறகு எந்தத் தகவலும் இல்லை. இப்போ மகனோட விடுதலை செய்தி கிடைச்சது. என் பிள்ளைக்கு என் கையால் ஒரு வேளை உணவு ஊட்டிவிட்டால் போதும். அந்த நிம்மதியோடு என் வாழ்வை முடித்துக்கொள்வேன்!'' என்ற பாட்டி வயதுடைய மகேஸ்வரியின் ஆசையும், பேத்தி வயதுடைய அரித்ராவின் ஆசையும் ஒன்றுதான்.

19 வயதில் பிடித்துச் செல்லப்பட்ட தன் மகன் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் அற்புதம் அம்மாள், பேரறிவாளன் குறித்து விவரித்த காட்சிதான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள வரிகள். சிறையில் சக கைதிகளுக்கு பேரறிவாளன் வகுப்பு எடுக்கும் அந்தச் சித்திரம் விகடனில் ஓவியமாக வர வேண்டும் என்பது அற்புதம் அம்மாளின் வேண்டுகோள். அவரது ஆசையை இங்கு நிறைவேற்றியுள்ளோம். இன்னும் நிறைவேற்றப்படாத எத்தனையோ ஆசைகளும், கனவுகளும், ஏக்கங்களும் வேலூர் சிறையின் கம்பிகளுக்குள்ளே அலைபாய்ந்தபடியே இருக்கின்றன!

தூக்கு அரசியலின் உண்மை முகம்!

ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனையைக் குறைத்து உத்தரவு பிறப்பித்த அடுத்த நாளே, ஏழு பேரையும் விடுதலை செய்யும் அறிவிப்பை வெளியிட்டார் ஜெயலலிதா. இத்தனை ஆண்டுகளாக இவர்களின் விடுதலைக்காகப் போராடி வந்த பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் மத்தியில் இந்த உத்தரவு பெரும் நம்பிக்கை ஒளியைச் சுடர்விடச் செய்தது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் நளினிக்கு மட்டும் தண்டனை குறைப்பு செய்ததையும் மற்ற மூவருக்கும் தூக்கு தண்ட னையை நீக்காமல்விட்டதையும் இணைத்து, கருணாநிதியைவிட தனக்கே இவர்களின் விடுதலை விஷயத்தில் கூடுதல் பங்கு இருக்கிறது என்பதாக ஜெயலலிதாவின் அறிக்கை அமைந்தது. 'தமிழினத் தலைவர்’ என்ற கருணாநிதியின் பட்டத்தைக்கூட இரவோடு இரவாகப் பறித்து 'தமிழினத் தலைவி’யானார் ஜெயலலிதா. அன்று ஜெயா டி.வி-யில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் அடைமொழி இதுதான்.

அ.தி.மு.க-வினரோ, ஜெயா டி.வி-யோ இப்படிச் சொல்வதில் வியப்பு இல்லை. ஆனால் முற்போக்காளர்களும், எழுத்தாளர்களும், அரசியல் விழிப்புக்கொண்டோரும் இப்படியே பேசினார்கள். 'அது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையாகவே இருந்துவிட்டுப்போகட்டும். எப்படியோ ஏழு பேர் விடுதலையானால் சரிதான். இதை கருணாநிதி ஒருபோதும் செய்திருக்க மாட்டார் இல்லையா?’ என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்கள்.

ஆனால், இந்த விடுதலை உத்தரவு ஜெயலலிதாவின் தேர்ந்த அரசியல் நடவடிக்கை என்று கணிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ''ஜெயலலிதா, ஈழத்துக்கும் ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவாக எந்தக் காலத்திலும் இருந்தது இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புகூட 'புலிகளால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று சொன்னவர். கடந்த மாதம்கூட நளினியின் பரோல் மனுவை நிராகரித்தவர். ஆகவே, இப்போது ஏழு பேரை விடுதலை செய்யும் முடிவை, இதன் அரசியல் நியாயத்தை ஏற்றுக்கொண்டு அவர் செய்யவில்லை. தேர்தல் வருகிறது என்பதால்தான் செய்துள்ளார். எப்படியும் மத்திய காங்கிரஸ் அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும்'' என்கிறார்கள்.

ராஜீவ் காந்தி படுகொலையின்போது எழுந்த அனுதாப அலையில் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா. இப்போது அவர் பிரதமர் கனவில் இருக்கும்போது, மறுபடியும் அதே ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு அவருக்குக் கைகொடுக்கிறது. ராஜீவ் காந்தியால் காங்கிரஸ் அடைந்த ஆதாயத்தைவிட, ஜெயலலிதா அடைந்த/அடையப்போகும் ஆதாயமே அதிகம்!  

- பாரதி தம்பி