எம்.பரக்கத் அலி, படங்கள்: ஆ.முத்துக்குமார்
##~## |
100 நாட்களுக்கும் மேல் தினமும் நேரில் சென்று பார்வையிட்டு கருணாநிதியின் கனவாகச் செதுக்கிச் செதுக்கி உருவாக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம், இப்போது 'பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை’யாக அவதாரம் எடுத்துவிட்டது. அப்போது டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங் சட்டசபையாகத் திறந்துவைத்த வளாகத்தை, இப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் 'மருத்துவமனை’யாகத் திறந்துவைத்திருக்கிறார்.
முன்னாள் சட்டமன்றம் உள்ளபடியே 'மருத்துவமனை’யாக மாறியிருக்கிறதா?
தலைமைச் செயலகக் கட்டடம் நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கட்டப்பட்டிருந்தது. அதில் முதல் பிரிவான 'ஏ’ பிளாக்கின் ஐந்தாவது தளத்தில் முதல்வரின் அறை அமைக்கப்பட்டு இருந்தது (அப்போது கருணாநிதியின் அறை). அந்த அறைக்கு அருகிலேயே சுமார் 4,000 சதுர அடியில் ரூஃப் கார்டன் மற்றும் நீருற்றுகள் ரம்மியமாக அமைக்கப்பட்டிருந்தன. அந்த நீருற்று மீன்களுக்கு, அப்போது தினமும் கருணாநிதி உணவிட்டுக்கொண்டிருந்தார். மருத்துவமனைகளுக்கான பணியின்போது, அந்த ரூஃப் கார்டன் நீருற்றுக்கு எடுத்த எடுப்பிலேயே சமாதி கட்டிவிட்டார்கள். நீருற்றில் மண் கொட்டி மூடப்பட்டு புற்களும் முளைத்துவிட்டன.
பொதுமக்கள் வந்து செல்வதற்கான 'பப்ளிக் பிளாசா’வாக வடிவமைக்கப்பட்ட பகுதியிலும், வட்ட வடிவில் பிரமாண்ட நீர்த் தொட்டியும் நீருற்றும் இருந்தன. அரசியலில் அனல் பறந்த சந்தர்ப்பங்களில் 'முதல்வர்’ கருணாநிதி நள்ளிரவின்போதெல்லாம் திடீர் திடீரென அங்கு வந்து மீன்களுக்கு உணவிட்டு ரிலாக்ஸ் ஆவார். அந்த மீன் தொட்டி, நீருற்றுகளிலும் மண் கொட்டி வைத்திருக்கிறார்கள். விரைவில் மூடுவிழா நடக்குமாம். நுழைவுவாயில் மன்மோகன் சிங், சோனியா, கருணாநிதி... ஆகியோர் பெயர்களுடன் இருந்த கல்வெட்டு பெயர்க்கப்பட்டு 'முதல்வர் ஜெயலலிதா’ பெயர் மட்டுமேகொண்ட கல்வெட்டு முளைத்திருக்கிறது.

நுழைவுவாயில் போர்ட்டிகோ அருகிலேயே அவசரச் சிகிச்சைப் பிரிவு. பொதுவாக நிறையப் படுக்கைகளுடன் விசாலமான பரப்பில்தான் அவசரச் சிகிச்சைப் பிரிவு அமைந்திருக்கும். ஆனால், இங்கோ மொத்தமே நான்கு படுக்கைகள்தான் இருந்தன. அடுத்தடுத்து அவசரச் சிகிச்சைக்கு வருபவர்களை எப்படிச் சமாளிப்பார்கள் எனத் தெரியவில்லை.
உள் வளாகம் முழுக்கவே பளபள டைல்ஸ், பளிச் சோபா என நட்சத்திர ஹோட்டல் தொனியில் இருக்க, 108 ஆம்புலன்ஸ், சர்க்கரை நோய், இதயம் தொடர்பான விளம்பர போர்டுகள் மூலம் அங்கு மருத்துவமனை சூழலைக் கொண்டுவர மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆக்சிஜன் கொண்டுசெல்லும் குழாய் மற்றும் மின்சார வொயர்களை புத்தம் புதிய சுவரைத் துளைத்து வெளியே தெரியும்படி அமைத்திருக்கிறார்கள். கட்டடத்தில் சூரியனின் வெப்பத் தாக்குதலைத் தடுப்பதற்காக விசேஷக் கண்ணாடிகள் முன்பு வெளிப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்தன. அந்தக் கண்ணாடித் தடுப்புகளுக்கு அருகிலேயே இப்போது நோயாளிகளுக்கான படுக்கைகளை அமைத்திருக்கிறார்கள். கண்ணாடித் தடுப்பைத் தாண்டினால், அதலபாதாளத்தில் விழவேண்டியதுதான்.

வள்ளுவர் கோட்டத்தின் கோபுரத்தை நினைவுபடுத்தும் வகையில் கட்டடத்தின் மேலே 100 அடி உயரத்தில் பிரமாண்ட 'டூம்’ அமைக்கப்பட்டிருந்தது. தேர் வடிவமைப்பு கொண்ட இதன் எடை 800 டன். 12 மீட்டர் விட்டம்கொண்டது இந்த டூம். இதற்கு நேர் கீழே பழைய சட்டசபை அமைந்திருந்தது. அதாவது சட்டசபைக்குள் இயற்கையான 'சூரிய ஒளி’ வர வேண்டும் என்று

அமைக்கப்பட்டது அந்த டூம். அந்தக் கூரையின் உச்சியில் கண்ணகி சிலையை அமைப்பதும் கருணாநிதியின் திட்டம். ஆனால், இப்போது எல்லாமே பணால். கூரையின் முக்கியத்துவம் குறையும் வகையில் சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்.
ஏனோ, இந்த மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை அறையும் பிணக்காப்பகமும் இல்லை. ஒருவேளை நோயாளிகள் இறந்தால், பிரேதப் பரிசோதனை மற்றும் மற்ற சம்பிரதாயங்கள் எங்கே நடக்கும் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. முன்னர் எதிர்க் கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்ட விசாலமான அறையை நரம்பியல் ஆய்வகமாக மாற்றி விட்டார்கள். கருணாநிதியின் ஓய்வு அறை, மூளை, ரத்த நாள ஆய்வகமாக மாறிவிட்டது.
உடற்பயிற்சி, புகைப்பழக்கம் தவிர்த்தல் உள்ளிட்ட ஐந்து விஷயங்களைக் குறிப்பிட்டு, 'இதயம் காக்க தேவை பஞ்ச தந்திரம்’ என்ற விளம்பரமும், 'சர்க்கரை நோய்க்கு இந்த நாட்டாமையின் தீர்ப்பு இது’ என்ற இன்னொரு விளம்பரமும் மருத்துவமனை வளாகத்தில் பளிச்சிட்டன. சட்டசபையை மருத்துவமனையாக மாற்றிய 'நாட்டாமை’யின் 'பஞ்ச தந்திரங்களை’க் கோடிட்டுக் காட்டுவது போல அமைந்திருந்தன!