Published:Updated:

அழியும் நிலையில் வைக்கோல்!

அபாய அறிகுறிபாரதிதம்பி படங்கள்: கே.குணசீலன், வீ.சிவக்குமார், சி.சுரேஷ்பாபு

மானிய விலையில் வைக்கோல் விற்கத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு. அமைச்சர்களும் கலெக்டர்களும் வைக்கோல் கட்டுகளுடன் நிற்கும் புகைப்படங்களைச் செய்தித்தாள்களில் பார்த்ததும், 'அரசாங்கம் இப்போது வைக்கோலும் விற்க ஆரம்பித்துவிட்டதா?’ என்று ஆச்சரியமாக இருந்தது.

விசாரித்தால், தமிழ்நாடு முழுக்க இப்படி 125 இடங்களில் மலிவு விலை வைக்கோல் விற்கிறார்கள். மாடுகளுக்கு வைக்கோல் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடுவதாலும், வெளிச்சந்தையில் விலை அதிகம் என்பதாலும் அரசே இப்படிக் களம் இறங்கிவிட்டது. அரசின் இந்த நடவடிக்கைகள் சரியா... தவறா... என்பது ஒரு பக்கம் இருக்க, மானியம் கொடுத்து விற்க வேண்டிய அளவுக்கு வைக்கோல் விலைமதிப்புமிக்க பொருளாக மாறிவிட்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி.

ஒரு கிலோ வைக்கோல், சந்தையில் 10 ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு லோடு வைக்கோல், 14 முதல் 20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. விவசாயத்தின் கழிவுப்பொருளாகக் கருதப்படும் வைக்கோல் இப்போது பெருமதிப்புமிக்கதாக மாறியிருக்கிறது. இந்த வைக்கோலை வெளிச்சந்தையில் விலை கொடுத்து வாங்கி, விவசாயிகளுக்கு கிலோ இரண்டு ரூபாய்க்கு விநியோகிக்கிறது அரசு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அழியும் நிலையில் வைக்கோல்!

இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற, புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவ மனையின் மருத்துவரிடம் செல்ல வேண்டும். அவர் 'இவருக்கு இத்தனை கிலோ வைக்கோல் கொடுக்கலாம்’ என்று சீல் வைத்து சான்றிதழ் தருவார். அதை வைத்து வைக்கோல் வாங்கிக்கொள்ளலாம். ஒரு மாட்டுக்கு மூன்று கிலோ வீதம் அதிகபட்சம் ஐந்து மாடுகளுக்கு, ஒரு வாரத்துக்கு 105 கிலோ வைக்கோல் வழங்கப்படும்.

அப்படி வைக்கோல் விற்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவ மனைக்குச் சென்றபோது, அங்கு வைக்கோல் தீர்ந்துவிட்டிருந்தது. 'புதிய பதிவுகள் எதுவும் கிடையாது’ என்ற அறிவிப்பையும் பார்க்க முடிந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐந்து வைக்கோல் விற்பனை நிலையங்களிலுமே இப்போது வைக்கோல் இல்லை. தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் என்ற ஊரில் திறக்கப்பட்டுள்ள வைக்கோல் விற்பனை நிலையத்துக்குச் சென்றபோது, மக்கள் விறுவிறுப்பாக வைக்கோல் வாங்கிச் சென்றுகொண்டிருந்தனர். ''ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு மூன்று கிலோங்கிற கணக்குல தர்றாங்க. இதெல்லாம் எந்த மூலைக்கு? என் மாடு ஒரு நாளைக்கு அஞ்சு கிலோ திங்கும்'' என்கிறார் அங்கு வைக்கோல் கட்டு சுமந்துசென்ற ஆறுமுகம். இருப்பினும் கிடைத்தவரை வாங்கிச் செல்கின்றனர்.

ஒரு லிட்டர் பாலைவிட ஒரு லிட்டர் தண்ணீர் அதிக விலை விற்பதைப் போல, ஒரு கிலோ நெல்லின் விலையை நெருங்கிக்கொண்டிருக்கிறது வைக்கோலின் விலை. திண்டுக்கல் பகுதியில் ஒரு லோடு வைக்கோலின் விலை 18 ஆயிரம் ரூபாய். திருவண்ணாமலையில் இது 16 ஆயிரம் ரூபாய் என்ற அளவிலும், தருமபுரி பகுதியில் 20 ஆயிரம் ரூபாய் என்ற அளவிலும் உள்ளது.

அழியும் நிலையில் வைக்கோல்!

இவ்வளவு விலை கொடுத்து வைக்கோல் வாங்கிப்போட்டு மாடு வளர்த்துக் கட்டுப்படியாகாது என்பது வெளிப்படை. இந்த நிலையில் அரசே வைக்கோல் கொள்முதல் செய்து ஒரு கிலோ இரண்டு ரூபாய் என்ற மானிய விலையில் விற்பது மாடு வளர்க்கும் விவசாயிகளுக்குத் தற்காலிக நன்மை தரக்கூடியதுதான் என்றாலும், அரசு கொள்முதல் செய்யவும் வைக்கோல் வேண்டுமே?

''சட்டியில இருந்தாதானே அகப்பையில் வரும்? ரெண்டு, மூணு வருஷமா சுத்தமா மழை இல்லை. ஊரெல்லாம் காய்ஞ்சுக் கருகிக்கிடக்கு. பயிர் பச்சையைக் காணோம். இதுல வைக்கோலுக்கு எங்கே போறது?'' என்கிறார் திண்டுக்கல் எல்லப்பட்டியைச் சேர்ந்த விவசாயி எல்லையசாமி. இவர் ஐந்து மாடுகள் வளர்க்கிறார்.

''மாடு, நமக்கு சம்பாதிச்சுக் கொடுத்தது ஒரு காலம். இப்போ நாம சம்பாதிச்சுதான் மாடுகளைக் காப்பாத்த வேண்டியிருக்கு. ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு ஐந்து கிலோ வைக்கோல்னு வெச்சா 50 ரூபாய். அதுபோக, ஒரு கிலோ கடலைப் புண்ணாக்கு 20 ரூபாய், ஒரு கிலோ தவிடு 8 ரூபாய்... எப்படிப் பார்த்தாலும் 80 ரூபாய் வருது. இதுபோக ஒரு ஆளு மாடுகளை ஓட்டிட்டுப் போய் மேய்க்கணும். அதுக்கு குறைஞ்ச கூலியே போட்டீங்கனா இந்தக் கணக்கு இன்னும் ஜாஸ்தியாகும். இவ்வளவு செலவு செஞ்சு, வளர்க்குற மாட்டுல இருந்து கறக்குற பால், ஒரு லிட்டர் 18 ரூபாய் விக்குது. எப்படிக் கட்டும்? மனசு கேட்க மாட்டாமத்தான் நாங்க இன்னமும் மாடு வளர்த்துக்கிட்டுத் திரியுறோம். கடைசியில மாடு போடுற சாணியும் கோமியமும்தான் மிச்சம். பேசாம மாடுகளை வித்துப்புடலாம்னு பார்க்கிறேன்!'' என்று இவர் சொல்வதைத்தான் பலரும் சொல்கின்றனர்; செய்கின்றனர். இனிமேலும் மாடு வளர்த்து வாழ இயலாத நிலையை நோக்கி விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர். 50, 100 மாடுகள் வைத்திருந்தவர்கள் பெயருக்கு ஒன்றிரண்டை வைத்துக்கொண்டு மீதி மாடுகளைக் கை கழுவிவிட்டார்கள்.

''மனுஷனுக்கு ஒரு சாண் வயிறு; மாட்டுக்கு உடம்பு எல்லாம் வயிறு'' என்று ஒரு விவசாயி சொன்னார். உடம்பு எல்லாம் வயிறு கொண்ட மாட்டின் பசி தீர்க்கும் வாய்ப்புகள் நம்மிடமே இருந்தன. 'அடி காட்டுக்கு; நடு மாட்டுக்கு; நுனி வீட்டுக்கு’ என்று வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்வார். அதாவது 'நெல்மணிகள் விளையும் நுனிப்பகுதி வீட்டுக்கு. அறுத்ததுபோக உள்ள அடிப்பகுதி தழைச்சத்தாகக் காட்டுக்கு. இடையில் உள்ள வைக்கோல் என்னும் நடுப்பகுதி மாட்டுக்கு’ என்ற இந்த முறை முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டது.

அழியும் நிலையில் வைக்கோல்!

இயந்திரங்களின் வருகைக்குப் பிறகு விவசாயத்தில் மாடுகளின் தேவை குறைந்தது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு நெல் விளைச்சலை மட்டுமே நோக்கமாகக்கொண்டு அறிமுகப் படுத்தப்பட்ட குட்டை ரக நெல்களின் வருகை, நெல் அறுவடை இயந்திரங்கள் வைக்கோலை கூளம், கூளமாக நொறுக்கிவிடுவது... என வைக்கோலின் தட்டுப்பாட்டுக்குப் பல காரணங்கள்.

ப்போது தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் பயன்படுத்தப்படும் அரிசியில் பெரும்பான்மை, ஆந்திராவில் இருந்துதான் வருகின்றன. அதேபோல இனிவரும் காலங்களில் வைக்கோலும் ஆந்திராவில் இருந்து வரக்கூடும். இந்தச் சிக்கலின் வேறொரு கோணத்தைத் தெளிவுப்படுத்துகிறார் விவசாய நிபுணரான ஆறுபாதி கல்யாணம்.

''வைக்கோலின் அழிவு கால்நடைகளின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று சொல்ல முடியாது. பசுந்தீவனங்களைத் தின்றுகூட மாடுகள் வாழ முடியும். ஆனால், வைக்கோலின் வீழ்ச்சி என்பது, வரப்போகும் உணவுப் பஞ்சத்தை நமக்கு முன்பாகவே அறிவிக்கிறது. வைக்கோல் குறைகிறது என்றால், நெல் விவசாயப் பரப்பளவும், இயந்திர அறுவடை மூலம் வைக்கோல் சிதைக்கப்படுகிறது என்றும் பொருள். ஏன் நெல் விவசாயம் குறைகிறது? அது லாபகரமானதாக இல்லை; அதனால் விவசாயத்தைக் கைவிடுகிறார்கள்.

இதைச் சரிசெய்ய, நெல்லின் கொள்முதல் விலையை அதிகரித்துத் தர வேண்டும். ஒரு குவிண்டாலுக்கு 2,500 ரூபாயாவது விலை கிடைத்தால்தான் ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும். கிடைப்பதோ சுமார் 1,400 ரூபாய்தான். ஆனால் அரசு, இந்தப் பட்ஜெட்டில்கூட, 'மானியத்துக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது’ என்று கூறியிருக்கிறது. அதில் முக்கால்வாசி, உற்பத்தி சாராத திட்டங்கள். காலம் முழுதும் சேற்றில் நின்று உழைத்துக்கொட்டும் விவசாயிக்கு, ஒரு குவிண்டால் நெல்லுக்கு 4,000 ரூபாய் மானியம் தந்தால் என்ன தவறு?'' என்ற இவர், குறிப்பிடும் மற்றொரு செய்தி மிக முக்கியமானது.

''எனக்கு 54 வயது ஆகிறது. என் வாழ்நாளில் இதுவரை சந்திக்காத பேரழிவை இந்த ஆண்டு விவசாயிகளாகிய நாங்கள் சந்தித்தோம். கோமாரி நோய் என்ற கொள்ளை நோய், பல்லாயிரக்கணக்கான மாடுகளைக் காவு வாங்கிவிட்டது. மயிலாடுதுறை கோட்டத்தில் மட்டுமே 10 ஆயிரம் மாடுகள் இறந்துவிட்டன. மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் கோமாரி நோயின் தாக்குதல் கொடுமையாக நிகழ்ந்துள்ளது. என் வீட்டில் நின்ற இரண்டு பசுமாடுகளையும் என்னால் காபந்து செய்ய முடியவில்லை. தாய்ப்பசுக்களை இழந்த கன்றுக்குட்டிகளின் ஓலம், கிராமங்கள்தோறும் ஒலிக்கிறது. இந்த அவலத்தை ஈடுசெய்யக் கோரி அரசாங்கத்திடம் மன்றாடுகிறோம். இதுவரை ஒரு பதில்கூட வரவில்லை.

அழியும் நிலையில் வைக்கோல்!

இந்தக் கோமாரி நோய், கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில்தான் ஆரம்பித்துள்ளது. அங்கிருந்து நீர் மூலமும், காற்று மூலமும் பரவி தமிழகத்துக்கும் வந்துவிட்டது. ஆனால், கர்நாடகாவில் இறந்துபோன மாடுகள் ஒவ்வொன்றுக்கும் நஷ்டஈடு பெற்றுவிட்டார்கள். தேசியப் பேரிடர் நிவாரணப்படி மத்திய அரசின் நிதியில் இருந்து ஒரு மாட்டுக்கு 16,400 ரூபாய் கொடுக்க வேண்டும். கர்நாடகாவில் இந்தத் தொகை போதாது என்று சண்டைப் போட்டு ஒரு மாட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை வாங்கியிருக்கின்றனர். நாங்கள் அந்த 16,400 ரூபாயை கேட்டு மனு மேல் மனு கொடுத்தும், அரசுத் தரப்பில் இருந்து பதில்கூட இல்லை. எங்கள் குரலை ஏறெடுத்துப் பார்க்கவும் நாதி இல்லை. இப்படி மாடுகளை இழந்துவிட்டு விவசாயிகள் பரிதவித்து நிற்கும் நிலையில், அரசாங்கம் 'வைக்கோல் தருகிறோம், புண்ணாக்குத் தருகிறோம்’ என்று சொல்வது, அழும் குழந்தையிடம் கிளுகிளுப்பை நீட்டும் வேலை. இப்போதைய நிலைமையில், அந்த வைக்கோலை நாங்கள்தான் தின்ன வேண்டும்'' என்ற அவரது கோபம் மிக நியாயமானது.

வைக்கோலின் மரணம் என்பது தனித்த ஒன்றல்ல. அது விவசாயத்தின் ஒவ்வொரு கண்ணியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, 'வைக்கோல் நிலையங்கள்’ மூலம் கவலையிலும் கண்ணீரிலும் தத்தளிக்கும் உழவனின் வேதனை நிரந்தரமாகத் தீரப்போவது இல்லை. இயற்கையாகவே வைக்கோல் விளைவிக்க வைப்பதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்.

'நோய்நாடி நோய்முதல் நாடி  அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற வள்ளுவர் வாக்குக்கேற்ப அரசு செயல்பட வேண்டிய நேரம் இது!

அழியும் நிலையில் வைக்கோல்!

''பணிச் சுமை பதற வைக்கிறது!''

'அம்மா தண்ணீர் புட்டி’களை இப்போது வரை விற்பனை செய்துகொண்டு இருப்பது அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்தான். இந்த நிலையில், இந்த மானிய விலை வைக்கோல் திட்டத்தை அரசு கால்நடை மருத்துவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள்தான் இப்போது வைக்கோல் வாங்க டோக்கன் கொடுக்கிறார்கள். ஏற்கெனவே கொடுக்கப்பட்ட விலையில்லா ஆடுகள், விலையில்லா மாடுகள் திட்டங்களைக் கவனித்துக்கொள்வதும் இதே கால்நடை மருத்துவத் துறையினர்தான். இத்தகைய வேலைச் சுமையினால் தடுமாறும் நிலையில், வைக்கோல் பிரச்னையில் வேறொரு சிக்கலையும் குறிப்பிடுகின்றனர். ''வைக்கோலை 30 டன், 50 டன் என்று கொண்டுவந்து இறக்குகின்றனர். ஒருசில நாட்களில் அதன் ஈரப்பதம் காய்ந்து எடை குறைந்துவிடுகிறது. ஆனால், எங்களிடம் எப்படியும் முழு எடைக்கு உண்டான பணத்தைக் கேட்பார்கள். இதை யார் தருவது? கடைசியில் சம்பளத்தில்தான் கை வைப்பார்கள்'' என்று இந்தப் பிரச்னை பற்றி வெளிப்படையாகப் பேசக்கூட அஞ்சுகின்றனர் அவர்கள்.