Published:Updated:

தண்ணீரைக் காதலியுங்கள்!

ஆர்.சரண்

தண்ணீரைக் காதலியுங்கள்!

ஆர்.சரண்

Published:Updated:

சேகர் கபூரையும் அவர் இயக்கிய 'பண்டிட் குயின்’ படத்தையும் மறக்க முடியுமா? ஒரே படத்தில் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கிய இந்த இயக்குநர், இப்போது 'விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். சமூகநலனுக்காக இவர் செய்த ஒரு விஷயம் பளிச் கவனத்தை ஈர்த்துள்ளது!

 கேரளாவின் கோழிக்கோட்டில் ஐ.ஐ.எம். ஆண்டு விழாவின் 'எக்கோஸ்’ கலை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் சேகர் கபூர். வெறுமனே உற்சாக உரையோடு முடித்துக்கொள்ளாமல், 'ஐ லவ் பானி’ (தண்ணீரைக் காதலிக்கிறேன்) என்ற தலைப்பில் நீரின் அருமையைச் சொல்லும் ஒரு நிமிடக் குறும்படங்களை உருவாக்குமாறு மாணவர்களுக்குப் போட்டி வைத்தார்.

 'ஒரு துளியோ, பெருங்கடலோ உங்கள் பார்வையில் நீர் என்றால் என்ன? அதை வெளிப்படுத்துங்கள். உங்களின் சிறிய சிந்தனை, உலகம் எதிர்நோக்கி இருக்கும் பூதாகரத் தண்ணீர் பிரச்னைக்கு ஒரு தீர்வாக இருக்கட்டும். இந்த ஒரு நிமிடக் குறும்படத்தை மொபைல் போனில்கூட எடுத்து அனுப்புங்கள். ஐடியாதான் முக்கியம்!’ என்று வெளியான அறிவிப்புக்கு அபார வரவேற்பு. வீரியமான, ஆச்சரியமான எண்ணங்களுடன் வந்து குவிந்தன குறும்படங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்ணீரைக் காதலியுங்கள்!

முதல் பரிசு வென்றது பிரகாஷ் கௌடா இயக்கிய 'Paani’ என்ற குறும்படம். அதில் தண்ணீரைச் சொட்டிக்கொண்டே இருக்கும் குழாய், தண்ணீரைச் சிந்தும் லாரி, அலங்கார நீரூற்று போன்ற நீர் விரயமாகும் இடங்களை வித்தியாசமான கோணங்களில் காட்சிப்படுத்தி, தண்ணீர் சேமிப்பின் அவசியத்தைக் காட்சிப்படுத்தியிருந்தார். நீர் விரயமாகும் தொகுப்புகளின் இறுதியில், சொட்டு நீர்கூட இல்லாமல் குழாய் வறண்டு இருப்பதைப் பார்க்கும்போது திகீர் என்கிறது. 'Dedicated to all the leaking taps’ (நீரை விரயமாக்கும் அனைத்து தண்ணீர்க் குழாய்களுக்கும் சமர்ப்பணம்) என்ற வரிகளோடு முடிந்திருந்த படத்துக்கு செம அப்ளாஸ்!

இரண்டாவது பரிசைத் தட்டிச் சென்றது 'INSURANCE’  குறும்படம். காப்பீட்டு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவர், ஒரு தம்பதியிடம் தன் நிறுவனத்தின் மாதாந்திர, வாராந்திர, தினசரி, ஒரு மணி நேரக் காப்பீட்டுத் திட்டங்களை விளக்குகிறார். 'ஒரு மணி நேரத்துக்குக்கூட காப்பீடு இருக்கிறதா?!’ என்று ஆச்சரியப்படும் குடும்பத்தலைவருக்கு விக்குகிறது. தண்ணீர்

தண்ணீரைக் காதலியுங்கள்!

குடிக்காமல் சமாளித்துக்கொள்கிறார். வாராந்திரத் திட்டத்துக்கான காப்பிட்டுத் தொகையைக் கேட்டதும் அதிர்ச்சியாகும் தம்பதி, மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டு அதில் இணைகிறார்கள். காப்பீட்டுத் தொகையை வழங்கிவிட்டு ஒரு புட்டித் தண்ணீரை அந்த விற்பனைப் பிரதிதியிடம் அளிக்கிறார்கள். அவர் அந்தப் புட்டியில், அந்தக் குடும்பத்தின் பெயர் மற்றும் காப்பீட்டு எண் எழுதிய ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு, தனது பெட்டியில் வைத்துப் பூட்டிக்கொள்கிறார். ஒரு வாரத்துக்கு தண்ணீரைப் பத்திரமாகப் பாதுகாக்கும் காப்பீட்டுத் திட்டம் அது. வருங்காலத்துக்கு வேண்டிய தண்ணீரைச் சேமிப்பதில், பத்திரப்படுத்துவதில் நாம் எந்த அளவுக்குக் கவனம் செலுத்த வேண்டும் என்பதன் சுரீர் கற்பனையாக அமைந்திருந்தது அந்தப் படம்!

'The Ritual’ குறும்படத்தில் வறட்சிக் காலத்தில் கடவுளுக்கு அபிஷேகம் செய்ய ஒரு செம்பு நீரை இருப்பு வைத்திருக்கிறார் ஒரு கோயில் பூசாரி. அபிஷேகம் செய்யப்போகும் கடைசி நொடியில் மனம் மாறி, பட்டுப்போக இருக்கும் ஒரு செடிக்கு அந்தச் செம்பு நீரை ஊற்றுகிறார். தண்ணீரை எதற்குச் செலவழிக்க வேண்டும் என்பதை நறுக்கெனக் காட்சிப்படுத்தி இருந்தது அந்தப் படம்.

இப்படி ஒவ்வொரு குறும்படமும் தண்ணீர் மேல் காதல்கொள்ள வைக்கும் மைக்ரோ சிந்தனை. பரிசு பெற்ற படங்கள் மட்டுமல்லாமல், கவனம் ஈர்த்த மற்ற படங்களையும் தான் இயக்க இருக்கும் 'பானி’ படத்தில் ஆங்காங்கே இணைத்துக்கொள்ள இருப்பதாக உறுதிமொழி கொடுத்திருக்கிறார் சேகர் கபூர்.

'' 'பானி’ எனக்குள் நெடுநாளாகப் புதைந்து கிடக்கும் கதை. மூன்றாம் உலக யுத்தம் நீருக்காக நிகழும் என உறுதியாக நம்புபவன் நான். அதனால் நீரின் மகத்துவத்தைச் சொல்லும் சினிமாவை உருவாக்க வேண்டும் என்று பல வருடங்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

தண்ணீரைக் காதலியுங்கள்!

பணக்கார வீட்டுப் பெண் ஒருத்திக்கும் ஏழை இளைஞன் ஒருவனுக்கு இடையில் காதல். நகரத்தின் சமூக ஏற்றத்தாழ்வுக்கு நீரும் ஒரு காரணமாக இருப்பதை உணர்கிறான் ஹீரோ. தன் குடியிருப்புக்குத் தேவையான நீரை ராபின்ஹுட் ஸ்டைலில் திருடுகிறான் ஹீரோ. இந்தப் பின்னணியில் நகரும் கதை. இதில் இளைஞர்களின் நீர் குறித்த பார்வையை என் ஸ்கிரிப்ட்டில் அவர்கள் அனுமதியோடு இணைத்துள்ளேன். அதற்கு வாய்ப்பு அளித்த கோழிக்கோடு ஐ.ஐ.எம்.-க்கு நன்றி!'' என்று பூரிக்கிறார் சேகர்.

இப்படியான சிந்தனைகளும் படைப்புகளும்தான் எதிர்கால சினிமாவாக இருக்கப்போகிறது. இது நம் தமிழ் இயக்குநர்களின் கவனத்துக்கு..!

மூன்று குறும்படங்களின் லிங்க்:

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism