Published:Updated:

“சுப்பிரமணியம் சார் ரொம்பப் பாவம்!”

கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: எம்.விஜயகுமார்

“சுப்பிரமணியம் சார் ரொம்பப் பாவம்!”

கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: எம்.விஜயகுமார்

Published:Updated:

20 வருடங்களுக்கு முன்...

சேலம், ஜலகண்டபுரம் அருகே, கட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு மாணவி, தனம். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். பள்ளிக்கூடத்தில் குடிநீர் வைத்திருந்த குடத்தில் தனம் போய் தண்ணீர் குடிக்க, கொதித்துப்போனார் ஆசிரியர் சுப்பிரமணியம். 'பைப்புல குடிக்காம எப்படி குடத்துல தண்ணி குடிக்கலாம்?’ என்று பிரம்பை எடுத்து விளாசினார். ஆசிரியரின் பிரம்பு, தனத்தின் வலது கண்ணைக் கீறியது. காயம் ஏற்பட்டு கருவிழியில் புரை படிந்தது. இதனால் வலது கண்ணில் இருந்து தொடர்ந்து நீர் வழிய ஆரம்பித்தது. சாதிவெறியின் உச்சமாக நடந்த அந்தக் கோர சம்பவம் மீடியாமூலம் வெளியே வர, தமிழகத்தின் தலைப்புச் செய்தியானாள் தனம்.

“சுப்பிரமணியம் சார் ரொம்பப் பாவம்!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தனத்தை அடித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார். தனத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து தமிழ்நாடு முழுக்க ஆதரவாகக் குரல்கள் உயர்ந்தன. கமல்ஹாசன் உள்பட பலரும் தனத்தின் சிகிச்சைக்கு உதவினார்கள். அரசு அனைத்து மருத்துவ உதவிகளையும் பார்த்துக்கொண்டது. அந்தச் சமயத்தில் சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் சேர்க்கப்பட்டாள் தனம். ஆனால், அங்கே அவளால் படிப்பைத் தொடர முடியவில்லை.

மீண்டும், அதே கட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கே வந்து சேர்ந்தாள். தனத்துக்குப் பறிபோன பார்வையை மீட்க, மருத்துவக் குழு ஒன்று போராடியது. அப்போது தனத்துக்கு ஓரளவு பார்வை தெரிந்தாலும், அடிபட்ட கண்ணை முழுமையாகக் குணப்படுத்த முடியவில்லை.

இப்போது எப்படி இருக்கிறார் தனம்?

“சுப்பிரமணியம் சார் ரொம்பப் பாவம்!”

கை நிறைய வளையல்கள் சிணுங்குகின்றன. மஞ்சள் பூசிய முகம். கழுத்தில் தொங்குகிறது புத்தம் புது மஞ்சள் கயிறு. ''போன வாரம்தான் கல்யாணம் நடந்துச்சு!'' - சொல்லும்போதே வெட்கத்தில் சிவக்கிறது தனத்தின் முகம்.

''இவரு எங்க மாமா பையன். பேரு வெங்கடேசன். சின்ன வயசுல இருந்தே அவருக்கு நான், எனக்கு அவருனு வீட்டுல முடிவு பண்ணிட்டாங்க. எங்க ஊருக்கும் அவங்க ஊருக்கும் 25 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். எப்பவாச்சும் லீவுக்கு வரும்போது பார்ப்போம். மத்தபடி லவ்வெல்லாம் கிடையாது. 'நான் இன்னும் நிறையப் படிக்கணும். இப்போதைக்குக் கல்யாணமே வேண்டாம்’னு வீட்ல சொன்னேன். அப்பா, மாமா ரெண்டு பேரும் கேட்கலை. 'கல்யாணம் பண்ணிட்டு எவ்வளவு வேணும்னாலும் படி. நான் பார்த்துக்கிறேன்’னு மாமா சொன்னார். எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை. சரினு சம்மதிச்சேன். கல்யாணம் முடிஞ்சதும் இவர், 'சீக்கிரம் காலேஜுக்குக் கிளம்பு. 'சூரியவம்சம்’ படத்துல வர்ற தேவயானி மாதிரி நீ ஆசைப்பட்டதெல்லாம் படி. நான் உன்னைப் படிக்க வெக்கிறேன்’னு சொல்றார்'' - பூரிப்பும் அன்பும் வழிகின்றன தனத்தின் குரலில்.

“சுப்பிரமணியம் சார் ரொம்பப் பாவம்!”

தனத்தின் கணவர் வெங்கடேசன், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தத் தொழிலாளராக வேலை பார்க்கிறார். அ.தி.மு.க-வில் இளைஞர் பாசறை செயலாளராகவும் இருக்கிறார்.

''சின்ன வயசுல இருந்தே தனத்தை எனக்குத் தெரியும். சின்ன வயசுல அவ ரொம்பக் கஷ்டப்பட்டுட்டா. அந்த வயசுலேயே மீடியா, ஹாஸ்பிட்டல், வலினு ரொம்பப் பட்டுட்டா. எனக்கு விவரம் தெரிஞ்சப்ப, 'இனிமே தனத்தை ஒருநாளும் அழவிடக் கூடாது. அவளை எப்பவும் நல்லாப் பார்த்துக்கணும்’னு நினைச்சேன். அது மாதிரி கல்யாணம் பண்ணி சந்தோஷமா வெச்சிருக்கேன்!''- தனத்தின் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறார் வெங்கடேசன்.

“சுப்பிரமணியம் சார் ரொம்பப் பாவம்!”

பழைய சம்பவத்தைப் பற்றிக் கேட்டால் தனத்தின் முகம் மாறுகிறது. ''அந்தச் சமயத்துல நான் ஒண்ணாவது படிச்சுட்டு இருந்தேன். ஸ்கூல் இன்ட்ரோல் நேரம்ல தண்ணி குடிக்கப் போனேன். எல்லாப் புள்ளைங்களும் குடத்துத் தண்ணியை டம்ளர்ல பிடிச்சுக் குடிச்சுட்டு இருந்தாங்க. நானும் போய் வரிசையில நின்னு தண்ணி குடிச்சேன். 'யாரு புள்ள அது. நீயெல்லாம் இங்கே டம்ளர்ல தண்ணி குடிக்கக் கூடாது. பைப்ல போய்த்தான் குடிக்கணும்னு சொல்லி இருக்கேன்ல’னு சுப்பிரமணியம் சார் பிரம்பு எடுத்து என்னை அடி அடினு அடிச்சிட்டே இருந்தார். நான் அழுதும் அவர் விடலை. அவர் அடிச்சதுல அந்தக் குச்சி என் கண்ணுல பட்டிருச்சு. கண்ணுல ரத்தம் வர்றதைப் பார்த்ததும், எங்கப்பாவை வரச் சொல்லி என்னையைக் கூட்டிட்டுப் போகச் சொல்லிட்டாங்க. காரணம் கேட்ட என் அப்பாகிட்ட, 'பிள்ளைங்களோட விளையாடும்போது தனத்தோட கண்ணுல நகம் பட்டுருச்சு’னு சமாளிச்சிட்டாங்க.

வீட்டுக்குப் போனதும் அப்பாகிட்ட என்னை சுப்பிரமணியம் சார் அடிச்சதைச் சொன்னேன். அதுக்கு அப்புறம்தான் ஏதேதோ பிரச்னைகள் நடந்துச்சு. என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனாங்க. கண்ணுக்குக் கட்டு போட்டாங்க. யார் யாரோ என்னைப் பார்க்க தேடி வந்தாங்க. மெட்ராஸ்ல இருக்கிற ஒரு பெரிய பள்ளிக்கூடத்துல என்னைச் சேர்த்துவிட்டாங்க. எனக்கு இங்கிலீஷ் படிக்கத் தெரியலை. அதனால நான் ஊருக்கே போறேன்னு அழுதேன். அதனால என்னைத் திரும்பக் கூட்டிட்டு வந்துட்டாங்க.

“சுப்பிரமணியம் சார் ரொம்பப் பாவம்!”

அன்னிக்கு சுப்பிரமணியம் சார் எதுக்கு என்னை அடிச்சார்னு தெரியலை. ஆனா, விவரம் தெரிய ஆரம்பிச்சதும் நல்லாப் புரிஞ்சது. நாங்க தலித்.  அதனால மேல் சாதிக்காரங்க குடிக்கிற டம்ளர்ல நாங்க தண்ணி குடிக்கக் கூடாதாம். அது தெரியாம நான் தண்ணி குடிச்சதால சார் என்னை அடிச்சிருக்கார்'' - தனத்தின் கண்களில் நீர் கோக்கிறது. சிகிச்சைக்குப் பிறகு தனத்துக்கு நன்றாகவே பார்வை தெரிகிறது.

தனத்துடன் பிறந்தவர்கள் மூன்று பேர். மூத்த அக்கா பழனியம்மாவுக்குத் திருமணமாகிவிட்டது. தனத்தின் தங்கை சித்ரா, படிக்க வசதி இல்லாததால் செங்கல் சூளைக்கு வேலைக்குப் போகிறார். தம்பி ஆறுச்சாமி ஆறாம் வகுப்புப் படிக்கிறான்.

''டீச்சர் ட்ரெய்னிங் படிப்பை முடிச்சிட்டேன். இப்போ பி.ஏ., ஆங்கில இலக்கியம் படிச்சிட்டு இருக்கேன். டீச்சர் ஆகணும்ங்கிறதுதான் என் ஆசை. குழந்தைகளுக்கு நல்ல படிப்பையும், சமத்துவத்தையும், நல்ல பண்பையும் கத்துக்கொடுக்கணும். முக்கியமா, என்கிட்ட படிக்கும் குழந்தைகளை அடிக்க மாட்டேன். எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான். என்னை அடிச்ச சுப்பிரமணியம் சாரை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. ஊரே திட்டின மன உளைச்சலில் வீட்டைவிட்டு வெளியில் வராமலேயே இருந்தார். அடுத்த ரெண்டு வருஷத்துல இறந்தும் போய்ட்டார். அவர் ரொம்பப் பாவம் சார்!'' சுப்பிரமணியம் சாரால் காயப்பட்ட அதே கண் கலங்குகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism