Published:Updated:

சாமான்ய இந்தியனின் சந்தோஷம்!

பாரதி தம்பி

சாமான்ய இந்தியனின் சந்தோஷம்!

பாரதி தம்பி

Published:Updated:

'சஹாரா’ குழும நிறுவனங்களின் தலைவர் சுப்ரதோ ராய், ஒருவழியாகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய முதலாளிகளில் ஒருவரான சுப்ரதோ ராயின் கைது, தேசிய தலைப்புச் செய்தியாகி இருக்கிறது. 'உங்களைக் கைது செய்ய உத்தரவிட வேண்டிய இக்கட்டான நிலைக்கு எங்களைத் தள்ளியது நீங்கள்தான்’ என்று நீதிபதிகள் 'கையறு’நிலையில் கருத்து சொல்ல... 'ஐசப்போர்ட் சஹாராஜி’ என்று சமூக வலைதளங்களில் செயற்கை ஆதரவுகள் உருவாக்கப்பட... முகத்தில் அப்பிய கறுப்பு மையை, புறங்கையால் துடைத்துக்கொண்டு திகார் சிறையில் படுத்துக்கிடக்கிறார் சுப்ரதோ ராய்.

1970-களில் லக்னோவில் 2,000 ரூபாய் சேமிப்பும், ஒரு லேம்ப்ராடர் ஸ்கூட்டரும் வைத்துக்கொண்டு தன் வாழ்க்கையைத் தொடங்கிய சுப்ரதோ ராய், இந்தியாவின் அசைக்கமுடியாத பெரும்புள்ளி. பணத்திலும் அதிகாரத்திலும் சுப்ரதோ எப்போதும் உச்சத்தில் இருப்பவர். இந்தியா முழுவதும் 4,800 நிறுவனங்கள், சுமார் 11 லட்சம் ஊழியர்கள், 8 கோடி முதலீட்டாளர்கள் என்று இவரது சஹாரா முழுமத்தின் விஸ்வரூபம் திகைக்க வைக்கிறது. இந்தியன் ரயில்வேக்கு அடுத்தபடியாக அதிக ஊழியர்கள் பணிபுரிவது இவரது குழும நிறுவனங்களில்தான்.

சாமான்ய இந்தியனின் சந்தோஷம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய கிரிக்கெட் அணியின் நெம்பர் ஒன் ஸ்பான்ஸர், பூனா வாரியர்ஸ் ஐ.பி.எல். அணியின் உரிமையாளர், ஃபார்முலா ஒன் கார் பந்தயம் மற்றும் தேசிய ஹாக்கி அணியின் ஸ்பான்ஸர், இந்தி, உருது உள்ளிட்ட பலமொழிகளில் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் செய்தித்தாள்கள், லண்டன் மற்றும் நியூயார்க்கில் ஹோட்டல், சினிமா தயாரிப்பு நிறுவனம் (பேஜ் 3, வான்டெட் போன்ற படங்கள் இந்த நிறுவனத் தயாரிப்புகளே), கட்டுமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், காப்பீட்டுத் துறை... என சஹாரா கால் பதிக்காத துறையே இல்லை. சமீபமாக சில்லறை வர்த்தகத்திலும் நுழைந்துள்ளது. இன்றைய தேதிக்கு சஹாரா குழுமத்தின் சொத்து மதிப்பு சுமார் 70,000 கோடி ரூபாய். இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் சுப்ரதோ ராய்க்கு எப்போதும் இடம் உண்டு. அதனாலேயே இந்திய அரசியல்வாதிகளின் இதயத்திலும் இடம் உண்டு!

2004-ம் ஆண்டு நடந்த இவரது மகன் சீமாந்தோ ராய் திருமணத்துக்கு வந்து குவிந்த வி.ஐ.பி-களே இதற்குச் சாட்சி. சச்சின் முதல் அனில் அம்பானி வரை, ஷாரூக்கான் முதல் லாலு பிரசாத் யாதவ் வரை அரசியல், சினிமா, விளையாட்டுத் துறைகளில் உச்சத்தில் இருக்கும் அத்தனை பேரும் அந்தத் திருமணத்தின் விருந்தினர்கள். லக்னோவில் 370 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் சஹாரா சஹர் அரண்மனையில், விருந்தினர்களை வரவேற்றது ஐஸ்வர்யா ராய்.

திருமணத்தில் இசைக் கச்சேரி நிகழ்த்தியது, லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா. திருமணத்தை வீடியோ கவரேஜ் செய்தது, பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி. அப்போது துணைப் பிரதமராக இருந்த அத்வானி, தன் அமைச்சரவையின் 10 அமைச்சர்களுடன் வந்து கலந்துகொண்டார். இப்படியாகத் தடபுடலாக நடந்த அந்தத் திருமணத்தின் செலவு, சுமார் 700 கோடி ரூபாய். அதில் மெழுகுவத்தி வாங்கிய செலவு மட்டும் 1.5 கோடி ரூபாய் என்றால், அதன் பிரமாண்டத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

சாமான்ய இந்தியனின் சந்தோஷம்!

வ்வளவு பணம் இருக்கிறது; செல்வாக்கு இருக்கிறது. பிறகு எப்படி, ஏன் கைதானார் சுப்ரதோ ராய்? சாக்குபோக்குச் சொல்லி சமாளிக்கவே முடியாத அளவுக்கு அவரது நிறுவனம் மேற்கொண்ட மோசடிதான் காரணம்.

சஹாரா ஹவுஸிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன், சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, 2009-ம் ஆண்டு,  நாடு முழுவதும் உள்ள மூன்று கோடி மக்களிடம் இருந்து 19,000 கோடி ரூபாய் டெபாசிட் திரட்டியதாகக் கூறியது. இதில், முதலீட்டாளர்களுக்குத் தவறான வாக்குறுதி அளித்து நிதி திரட்டியதாகக் கூறி, திரட்டிய முழுத் தொகையையும் 15 சதவிகித வட்டியுடன் மக்களிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று இந்திய பங்குச் சந்தை வாரியம் (செபி) 2010-ம் ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சஹாரா, உச்ச நீதிமன்றம் சென்றது. அங்கு 'சஹாரா நிறுவனம், 22,885 கோடி ரூபாயை செபியிடம் ஒப்படைக்க வேண்டும். செபி, உரிய முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் தர வேண்டும்’ என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

இதைத் தொடர்ந்து 5,210 கோடி ரூபாயை செபியிடம் ஒப்படைத்த சஹாரா, 'மீதிப் பணத்தை நாங்களே நேரடியாக முதலீட்டாளர்களுக்குத் தந்துவிட்டோம்’ என்றது. இது தொடர்பான பத்திரிகை விளம்பரங்களையும் வெளியிட்டது. அதற்கான ஆதாரத்தைக் கேட்டபோது 127 லாரிகள் நிறைய டாக்குமென்ட்களை ஏற்றி மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிவைத்தது. தலால் தெருவே ஸ்தம்பித்தது. அவற்றில் இருந்து 'ரேண்டம்’ முறையில் 20,000 முதலீட்டாளர்களுக்கு 'உங்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று செபி தகவல் அனுப்பியது. ஆனால் வந்தவர்களோ வெறும் 68 பேர்தான். அதாவது சஹாராவின் பெரும்பாலான முதலீட்டாளர்கள் போலியானவர்கள் என்று தெரியவந்தது. ஆனால் சஹாரா நிறுவனமோ, ''எங்கள் முதலீட்டாளர்கள் வீடு அற்றவர்கள். அவர்களுக்கு செபி அனுப்பிய கடிதமே சென்று சேர்ந்திருக்காது'' என்று சொன்னது. அதாவது வீடு அற்ற மூன்று கோடி ஏழைகளிடம் இருந்து 19,000 கோடி ரூபாய் திரட்டி அதைத் திருப்பியும் கொடுத்துவிட்டாராம் சுப்ரதோ!

இந்தக் கேலிக்கூத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் சுப்ரதோ ராயைக் கைதுசெய்ய உத்தரவிட்டது. அவர் பல காரணங்களைச் சொல்லி இழுத்தடிக்க கடைசியில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அதில்தான் இப்போது சுப்ரதோ கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் நீதிமன்றத் துக்குக் கொண்டுவரப்படும்போது எதிர்பாராதவிதமாக மனோஜ் சர்மா என்கிற வழக்குரைஞர், சுப்ரதோ ராயின் முகத்தில் கறுப்பு மையை வீசினார். இந்தியாவின் பிரமாண்ட சாம்ராஜ்யத்தின் முதலாளி, முகத்தில் வழியும் கறுப்பு மையுடன் ஊடக கேமராக்களுக்குப் புன்னகைக்க முயன்றார்.

சாமான்ய இந்தியனின் சந்தோஷம்!

குற்றம் நடந்த பிறகு இப்படிப் புன்னகைக்கு முயல்வது சுப்ரதோ ராய்க்குப் புதிதல்ல. செபியும் நீதிமன்றமும் தங்கள் நிறுவனத்தின் மீதான பிடியை இறுக்கத் தொடங்கிய கடந்த ஆண்டு மே மாதத்தில், சஹாரா தேசபக்தி உத்தி ஒன்றைக் கையில் எடுத்தது. 2013 மே 1-ம் தேதியன்று சஹாரா நிறுவனத்தின் சார்பில் ஒரு விளம்பரம் தரப்பட்டது. அதில், 'பாகிஸ்தான் தேசியகீதத்தை 42,813 பேர் ஒரே நேரத்தில் பாடியதுதான் இதுவரை உலக சாதனையாக இருந்து வருகிறது. இதை முறியடித்து மே 6-ம் தேதி சஹாராவின் 11 லட்சம் ஊழியர்கள் ஒரே நாளில், ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேசிய கீதத்தைப் பாடி உலக சாதனைப் படைக்கப்போகின்றனர்’ என்று சொன்னது. லக்னோ சஹாரா இந்தியா பரிவார் நிறுவனத்தில் மட்டுமே 1,01,000 பேர் பணிபுரியும் நிலையில் இந்தச் சாதனை தடபுடலாக நடந்து சஹாரா கின்னஸ் சாதனையும் படைத்தது. அதாவது தன் மீதான வழக்குகளின் பிடி இறுகி வருவதை அறிந்து உடனே தேசபக்தியைக் கையில் எடுத்து தப்பிக்க முயன்றார் சுப்ரதோ ராய்.

எதுவும் செல்லுபடியாகாத நிலையில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற நபர்களை, இத்தகைய தருணங்களில்கூட தண்டிக்காமல்விட்டால், மக்களுக்கு இந்தப் பொருளாதார அமைப்பின் மீது இருக்கும் நம்பிக்கைப் போய்விடும் என்பதால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவும்கூட கே.எம்.ஆபிரஹாம் போன்ற திறமையும் நேர்மையும் மிக்க அதிகாரிகள் செபியில் பணியாற்றியதன் விளைவே. கடந்த மூன்று ஆண்டுகளில் ராம் ஜெத்மலானியும், இன்னும் நாட்டின் நம்பர் ஒன் வழக்கறிஞர்களும் சஹாராவுக்காக வாதாடியபோதும் உறுதியாக நின்று வென்றுள்ளார் ஆபிரஹாம்.

வருங்காலத்தில் இன்னும் பல 'சுப்ரதோ’க்கள் உருவாகாமல் இருக்க இந்தச் சம்பவம் குண்டூசி அளவுக்கேனும் உதவினால், சாமான்ய இந்தியன் சந்தோஷப்படுவான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism