Published:Updated:

சாமாவின் நிரந்தர துயரம்!

வீயெஸ்வி

சாமாவின் நிரந்தர துயரம்!

வீயெஸ்வி

Published:Updated:

ஒரு யானையே பரவசமூட்டும்... சுமார்      90 யானைகளை ஒரே இடத்தில் பார்க்கும் வாய்ப்பு கிட்டினால்..? அண்மையில் கிட்டியது! வெவ்வேறு வயதில், பல்வேறு சைஸில் யானைகள் மிக அருகில் நடந்து வர, கை குலுக்கும் தொலைவில் நின்று, ''ஹலோ... எப்படி இருக்கீங்க?'' என்று கேட்க முடிந்தது!

கொழும்பில் இருந்து கண்டி செல்லும் நெடுஞ்சாலையில் 90 கிலோமீட்டர் பயணித்து இடதுபுறம் திரும்பினால் வருவது பின்னவாலா கிராமம். இங்கு 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது, பின்னவாலா யானைகள் சரணாலயம் அல்லது யானைகள் இல்லம்!

நுழைவுக் கட்டணம், உள்ளூர்வாசிகளுக்கு 100 ரூபாய் (ஸ்ரீலங்கா கரன்சி), சார்க் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 700 ரூபாய், மற்ற வெளிநாட்டுக்காரர்கள் என்றால் 2,000 ரூபாய்! கவுன்டரில் இருப்பவர், உஷாராக பாஸ்போர்ட் வாங்கி சரிபார்த்துக்கொள்கிறார். உள்ளே சென்று குட்டியூண்டு யானைகளுக்கு பாட்டிலில் பாலூட்ட விரும்புபவர்கள் தனியாக டிக்கெட் வாங்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாமாவின் நிரந்தர துயரம்!

நுழைந்ததும் கண்களில் படுவது குழந்தை யானைகள். அவற்றுக்கான ஷெட்டில் ஏழு மாத பாப்பா முதல் ஒரு வயது குட்டி வரை உள்ளன. காலில் கட்டப்பட்டிருக்கும் இரும்புச் சங்கிலியை அறுத்துவிடும் துடிப்புடன் முன்னேறி, அது முடியாமல் பின்வாங்கும் துறுதுறு சுட்டிகள். டிக்கெட் வாங்கியவர்களின் கையில் பால் பாட்டில்களைக் கொடுக்கிறார்கள் பாகன்கள். பாசத்தோடு பேபி யானைக்குப் பால் ஊட்டிவிடுகிறார்கள் பார்வையாளர்கள். கண் இமைக்கும் நேரத்தில் சுமார் ஓர் அடி நீள பாட்டில் பாலை ஒரே மடக்கில் லபக்கிவிடுகின்றன குட்டீஸ். மற்றவர்கள் தங்கள் கேமராவைச் சரியாக ஃபோகஸ் செய்யக்கூட அவை அவகாசம் கொடுப்பது இல்லை. ஒரு ரவுண்ட் பால் பருகி முடித்தாகிவிட்டது. அடுத்த ஃபீடிங் சில மணி நேரத்துக்குப் பின்னர். ஜீரணம் ஆக வேண்டுமே!

சுமார் 10 அடி தொலைவில் பெரிய யானை ஒன்றின் உயரத்துக்கு மரத்தினால் ஆன மேடை அமைத்திருக்கிறார்கள். படி ஏறி மேலே சென்றேன். ஊழியர்கள் இரண்டு பேர், மேஜை மீது கோயில் அர்ச்சனைத் தட்டு மாதிரியாக வரிசையாக அடுக்கிவைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு தட்டிலும் பழ வகைகள். தர்பூசணி, அன்னாசி, வாழைப்பழங்கள். 200 ரூபாய்க்கு ஒரு பழத்தட்டு, மேடைக்கு அருகே தும்பிக்கையை நீட்டிக்கொண்டு வாய்த் திறந்து நிற்கும் யானைக்கு இந்தப் பழங்களை ஊட்டிவிட்டு மகிழலாம். பயத்துடனும் பதற்றத்துடனும் உட்கார்ந்து, கை நடுங்க பழங்களை யானையின் வாயில் விசிட்டர்கள் போடுவது கண்கொள்ளாக் காட்சி. பழங்களைச் சாப்பிட இல்லத்து யானைகளை தினமும் முறை வைத்து நிற்கவைப்பார்களாம். சத்துள்ள ஆகாரம் பாரபட்சம் இல்லாமல் எல்லா யானைகளுக்கும் உண்டு!

நான் யானைகளையே பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தபோது சாமாவைப் பார்க்க அழைத்துப்போனார் உள்ளூர்வாசி ஒருவர்.

இருள் படர்ந்த கொட்டகை ஒன்றில் உயரமான யானை ஒன்று பக்கத்து இரும்புத் தூணில் சாய்ந்து கம்பீரம் இழந்து நின்றுகொண்டிருந்தது. அதன் விழியோரம் கண்ணீர்த் துளிகள். முன் வலது கால் தரையில் வைக்காமல் தூக்கியபடியே இருந்தது. டூரிஸ்ட்களுக்கு தான் ஒரு வேடிக்கைப் பொருளாகிவிட்ட வேதனை அதன் முகத்தில். இந்த யானைக்கு 'சாமா’ என்று பெயர். நிரந்தர அமைதி என்று அர்த்தமாம்!

சாமாவின் நிரந்தர துயரம்!

இப்போது 22 வயது சாமாவுக்கு. 15 வருடங்களுக்கு முன்பு, அதாவது ஏழாவது வயதில் யாழ்பாணத்தில் வலியோயா காட்டுப் பகுதியில் சாமா நடந்து வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கண்ணிவெடி ஒன்று பூமியைப் பிளந்து வெடிக்க, அந்த வெடி விபத்தில் சிக்கியிருக்கிறாள் சாமா. முன் வலது கால் பாதிக்கப்பட்டுவிட்டது. அப்படியே சரிந்திருக்கிறாள்.

கிரேனின் உதவியால் சாமாவை வேனில் ஏற்றி, பின்னவாலா இல்லத்துக்கு அழைத்து வந்து சிகிச்சை கொடுத்திருக்கிறார்கள். பழுதான காலை குணப்படுத்த முடியவில்லை. கால்நடை மருத்துவத் துறையின் ஆர்த்தோ நிபுணர்களை வரவழைத்துப் பார்த்திருக்கிறார்கள். அவர்களின் யோசனையின் பேரில் சாமாவுக்கு செயற்கைக் கால் ஜெர்மனியில் இருந்து வரவழைத்துப் பொருத்தப்பட்டது. சில நாட்களிலேயே அதை நிராகரித்துவிட்டாள் சாமா. 'எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் என் சொந்தக் கால்களிலேயே நிற்பதுதான் எனக்குப் பெருமை!’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டது போலும்!

சாமா விரைவில் குணமடைய தும்பிக்கை ஆழ்வானைத் துதித்தபடியே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன் - சாமாவைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism