Published:Updated:

புதைகுழி தேசம்!

டி.அருள் எழிலன்

புதைகுழி தேசம்!

டி.அருள் எழிலன்

Published:Updated:

'புத்தன்பாதம், செத்த பிணங்கள் புதையும் கல்லறையோ..!’ இது ஈழத்து வில்லிசைப் பாடல் வரிகள். ஈழத் தமிழர் படுகொலைகளுக்குப் பின்னர், இலங்கையில் சிங்களர்கள் பாதம் பதித்த இடங்கள் எல்லாம் இப்போது மனிதப் புதைகுழிகளாக உருமாறிவிட்டன. திருக்கேதீஸ்வரம், இறுதிப் போர் நடந்த மூங்கிலாறு பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதே, இப்போது ஈழக் கொலைக் களத்தின் சாட்சி.

இந்தியா, தேர்தல் ஜுரத்தில் தகித்துக் கொண்டிருக்க, தமிழகம் கூட்டணிக் கணக்குகளுக்குள் சிக்கி உழன்றுகொண்டிருக்க... ஈழ நிலவரம் கண்டுகொள்ளப்படாத செய்தியாகி விட்டது இப்போது!

குடிநீருக்காகத் தோண்டியபோது திருக்கேதீஸ்வரத்திலும், நிலத்தை உழுதபோது மூங்கிலாறு பகுதியிலும் மனித எலும்புக்கூடுகள் தென்பட்டிருக்கின்றன. அதிர்ச்சியில் விதிர்விதிர்த்து, அரசுக்குத் தகவல் தெரிவித்து மேலும் தோண்டினால், தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்! அரைகுறையாகக் குழி தோண்டி அதில் குறுக்கும் நெடுக்குமாக மக்களைப் போட்டு மண் மூடியிருக்கிறார்கள். 'உயிரோடு புதைத்தார்களா... கொன்று புதைத்தார்களா... அல்லது போரில் கொல்லப்பட்ட மக்களின் பிணங்களா?’ என்பதெல்லாம் புத்தனுக்கே வெளிச்சம். இதனால், அடிப்படைத் தேவைகளுக்காக மண்ணைத் தோண்டக்கூட அச்சமடைந்துள்ளனர் ஈழ மக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதைகுழி தேசம்!

''திருக்கேதீஸ்வரம், மூங்கிலாறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் பெரும்பாலும் எலும்புகள் சிதைந்தும், மண்டை ஓடுகள் உடைந்தும் காணப்படுகின்றன. 'ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் புதைக்கப்பட்டவர்களாக இருக்க வாய்ப்பு இருக்கிறது’ என்கிறது மருத்துவர் குழு அறிக்கை. ஆனால், அதை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த எலும்புக்கூடுகளுக்கு உரியவர்கள் இலங்கை ராணுவத்தின் குண்டு வீச்சில் கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம். அல்லது இறுதிப் போரில் பிடிபட்ட, சரணடைந்த போராளிகளைக் கொன்று இலங்கை ராணுவமே புதைத்திருக்கலாம். ஏனென்றால், போர் முடிந்து மூன்று வருடங்களாக இந்தப் பகுதிக்குள் வேறு யாரும் நுழையாதபடி ராணுவமே தன் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. நிலைமை சகஜமடைந்து ஓரளவு மக்கள் தங்களின் இயல்பு வாழ்வைத் தொடங்கும்போது, இந்த மரணக் குழிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.

இப்போது மக்களிடையே இரண்டுவிதமான அச்சம். எங்கெங்கு மனிதப் புதைகுழிகள் இருக்குமோ என்பது ஒன்று; காணாமல்போன தங்கள் சொந்தபந்தங்கள் எலும்புக்கூடுகளாக அந்தப் புதைகுழிகளில் இருப்பார்களோ என்பது இன்னொன்று!'' என்கிறார் கிளிநொச்சியில் வசிக்கும் சாந்தரூபன்.

போரில் கொல்லப்படுவதைத் தவிர்க்க பதுங்கு குழி தோண்டிப் பழக்கப்பட்ட மக்கள், இப்போது கிணறு தோண்டவோ, வீட்டுத் தேவைக்காகச் சிறிய பள்ளம் ஒன்றைத் தோண்டக்கூட பயப்படுகிறார்கள். போருக்குப் பிறகான உளவியல் போரின் முதல் புள்ளி... புதைகுழி. வருங்காலங்களில் இன்னும் பல பூதங்கள் கிளம்பும். இந்தப் புதைகுழிகளை இலங்கை ராணுவத்தின் இனஅழித்தொழிப்பு வேலைகளின் ஆதாரமாகச் சுட்டிக்காட்டக் கிடைத்த வாய்ப்பையும் கபளீகரம் செய்யப் பார்க்கிறது இலங்கை அரசு.

''ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை அமர்வுகள் தொடங்கியிருக்கும் நிலையில் தன் மீதான சர்வதேச அழுத்தங்களைத் தவிர்க்க, இந்தப் புதைகுழிகளை தனக்குச் சாதகமான கோணத்தில் அணுகி இருக்கிறது இலங்கை அரசு.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கோபால் கோடீஸ்வரன் என்பவரிடம் புதைகுழி தொடர்பான புகார் மனுவைப் பெற்ற இலங்கை போலீஸார், அதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வழக்குப் பதிந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணிபுரிந்த குணராஜ் என்பவரைத் தேடுவதாக அறிவித்துள்ளது இலங்கை ராணுவம். விடுதலைப் புலிகள், பொது மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக் கொன்று புதைத்தப் புதைகுழிகள்தான் இவை என்று பழியை புலிகள் மீது திருப்பி, ஐ.நா. விசாரணையை எதிர்கொள்வது இலங்கை அரசின் திட்டம்.

இந்த நிலையில் ஐ.நா. ஆண்டுதோறும் நடத்தும் மனித உரிமை அமர்வு, இந்த ஆண்டு ஜெனீவாவில் தொடங்கிவிட்டது. ஐ.நா-வின் மனித உரிமை ஆணையாளரான நவி பிள்ளை நேரடியாக இலங்கைக்கு வந்துசென்று தயாரித்த அறிக்கை,    ஐ.நா-வில் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை அரசிடம் அனுப்பி, அவர்கள் கூறிய திருத்தங்களுடன்தான் சமர்பிக்கப்பட்டுள்ளது என்று தந்தியடிக்கிறது தகவல்.

அதோடு ஐ.நா-வில் அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானம், ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணையைக் கோரவில்லை. இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக் குழுவின் மூலமான விசாரணையைத்தான் மீண்டும் மீண்டும் கோருகிறது. ஆனால், கொல்லப்பட்ட மக்களுக்கும், உயிர்தப்பி எஞ்சியிருக்கும் மக்களுக்கும் நீதியும் அச்சமற்ற வாழ்வும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றால், சுதந்திரமான விசாரணைதான் குறைந்தபட்சத் தேவை!'' என்கிறார் ஈழத்துக் கவிஞர் சேரன்.

''இலங்கைத் தீவில் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் அரசியல் பிரச்னையாகக் கொழுந்துவிட்டு எரிந்த 'இனப் பிரச்னை’ என்பது தீர்மான வரைவில் குறிப்பிடப்படாமல், வெறும் 'மனித உரிமை மீறல்’ என்ற அளவில் ஈழத் தமிழர் பிரச்னையாகச் சுருக்கப்பட்டுவிட்டது. இதுவே இலங்கை அரசுக்குக் கிடைத்த வெற்றி என்றே கொள்ளலாம். அத்துடன் ஈழத் தமிழருக்கு இழைக்கப்பட்டுவரும் அரசியல் அநீதிக்கும், இன அடையாளப் படுகொலைக்கும், வாழ்வியல் இருப்புக்கான அச்சுறுத்தலுக்கும் அனைத்துலக சமூகமும் துணைபோவதாகவே நினைக்க முடியும். 'இலங்கையில் இனப் பிரச்னை என்று எதுவும் இல்லை’ எனும் இலங்கை அரசின் கூற்றுக்கு வலு சேர்ப்பதாகவே இந்தத் தீர்மான வரைவு அமைந்துள்ளது என்பதே பரவலான கருத்து!'' என்கிறார் பிரான்ஸில் வாழும் முன்னாள் போராளியான கி.பி.அரவிந்தன்.

புதைகுழி தேசம்!

இலங்கை காவல் துறை, 'புலிகள் கொன்று புதைத்தப் பிணக்குவியல் அது’ என்று குற்றம்சாட்ட, இலங்கை அரசின் தொல்லியல் துறையோ, 'மனிதப் புதைகுழிகளை ஆதிகாலக் கல்லறைகள்’ என்கிறது. போர் முடிந்த பகுதிகளில் வந்து குடியேறிய புத்தனாலும் பேச முடியாது; போரில் தப்பி வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களாலும் பேச முடியாது என்பதே அவர்களின் இந்தத் துணிச்சலுக்குக் காரணம்!

ழத்தில் யுத்தம் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இறுதி இன அழிப்பு யுத்தத்தில் காணாமல்போன தங்களின் உறவுகளைத் தேடி மக்கள் நடத்திய அத்தனை ஆர்ப்பாட்டங்களிலும் தனிக் கவனம் பெற்ற கண்ணீர், சிறுமி விபூசிகாவினுடையது. 13 வயதே ஆன விபூசிகா, காணாமல்போய் ராணுவத்தின் பிடியில் இருக்கும் தன் அண்ணன் மகிந்தனை ஒப்படைக்குமாறு தன் தாய் ஜெயக்குமாரியோடு போராட, அது உள்ளூர் மற்றும் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. நவி பிள்ளை வந்தபோது போராடிய விபூசிகா, இப்போது ஐ.நா. அமர்வு நடப்பதையொட்டிப் போராட, 13 வயது விபூசிகாவையும், அவரது அம்மா ஜெயக்குமாரியையும் கைது செய்திருக்கிறது ஸ்ரீலங்கா பயங்கரவாதத் தடுப்புப் போலீஸ். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்தார் என்ற பெயரில் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரியை, பூசா தடுப்பு முகாமுக்கு அனுப்பிய போலீஸார், விபூசிகாவை இளஞ்சிறார் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனால், அந்த விபூசிகாவின் கண்ணீர் உலகத் தமிழர்களை உசுப்பியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism