Published:Updated:

“கருணாநிதி, விஜயகாந்தைத் திட்டுற மாதிரி கேள்வி கேளுங்க!”

நா.சிபிச்சக்கரவர்த்தி படங்கள்: எம்.விஜயகுமார், ரா.ராம்குமார்

“கருணாநிதி, விஜயகாந்தைத் திட்டுற மாதிரி கேள்வி கேளுங்க!”

நா.சிபிச்சக்கரவர்த்தி படங்கள்: எம்.விஜயகுமார், ரா.ராம்குமார்

Published:Updated:

'தம்பி... கன்னியாகுமரியில பிரசாரத்துக்கு வந்திருக்கேன். இங்கே சிக்னல் இல்லை... கொஞ்ச நேரம் கழிச்சு நானே கூப்பிடுறேன்!'' - சொன்னபடியே சிக்னல் கிடைத்ததும் கேள்விகளை எதிர்கொண்டார் பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

 “கருணாநிதி, விஜயகாந்தைத் திட்டுற மாதிரி கேள்வி கேளுங்க!”

'காலையில வாக்கிங், ஜிம் பயிற்சிக்கு வந்திருக்கேன். கேள்விகளை இப்பவே சொல்லுங்களேன்... எக்ஸர்சைஸ் முடிச்சதும் பதில் சொல்றேன்!'' என்றவரிடம், 'அப்படில்லாம் கொஸ்டீன் அவுட் பண்ண முடியாது சார். அஞ்சே நிமிஷம்... அஞ்சு கேள்வி. ஈஸியா முடிஞ்சிரும்!'' என்றதும் யோசனையுடனே, ''ம்... சரி... கேளுங்க!'' என்றார் தே.மு.தி.க-வின் மாநில இளைஞர் அணி செயலாளர் சுதீஷ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எவ்ளோ ஜாலியா வேணும்னாலும் கேளுங்க. ஆனா, எல்லாம் அரசியல் சம்பந்தமாத்தான் இருக்கணும்!'' - உடனே உற்சாகமானார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.

'இன்டர்வியூதானே..? அமர்க்களப்படுத்திரலாம். அம்மா ஆட்சியின் வளர்ச்சி பத்திப் பேசிட்டு அப்படியே கருணாநிதி, விஜயகாந்தைக் காட்டமாத் திட்டிட்டு... இந்த காங்கிரஸை... என்னது... அதெல்லாம் வேண்டாமா! பொது அறிவுக் கேள்விகளா? பதில் சொல்லணுமா? என்ன தம்பி... காரசாரமாப் பேசுறேன்னு சொல்றேன்... வேண்டாம்னு சொல்றீங்களே... சரி கேளுங்க!'' - கரகர குரலில் ஆதங்கத்துடன் தமிழக சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி.

''நோட்டா வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள சின்னம் எது?''

பதில்: நான்கு முனைகளிலும் மடிக்கப்பட்ட செவ்வகம்!

பொன்.ராதாகிருஷ்ணன்: ''நேத்துதானே தேர்தல் ஆணையம் அறிவிச்சாங்க. என்கிட்டகூடச் சொன்னாங்களே... நேரம் பார்த்து ஞாபகம் வர மாட்டேங்குதே...'' என்றவர் நீண்ட யோசனைக்குப் பிறகு, ''தேர்தல் பரபரப்புல நியூஸ் பேப்பரும் படிக்கலைப்பா!'' என்றார்.

சுதீஷ்: ''தம்ஸ்-அப் மாதிரி தம்ஸ்-டவுண் விரல் சின்னம்தான் நோட்டா சின்னம். சரியா?''

வேல்முருகன்: ''இந்தியா முழுக்கவே நோட்டாவுக்கு ஒரே சின்னம்தான். நோட்டாங்கிற எழுத்தையே ஒரு டிசைனா மாத்தி சின்னமாக்கிட்டாங்க!'' என்றவரிடம் 'அது என்ன சின்னம்? சின்னத்தின் வடிவம் என்ன?’ என்று மீண்டும் மீண்டும் கேட்டாலும், ''அதான் நோட்டா சின்னம். நோட்டாவைச் சின்னமாக்கிட்டாங்க!'' என்று அதே பதிலில் விடாப்பிடியாக இருந்தார்.

வளர்மதி: ''தெரியலையே..! என்னப்பா நீ, ஸ்கூல் வாத்தியார் மாதிரி ஏதேதோ கேட்குற?'' என்று அதட்டுகிறார்.

 “கருணாநிதி, விஜயகாந்தைத் திட்டுற மாதிரி கேள்வி கேளுங்க!”

'' 'எனக்கு 68 வயதாகிவிட்டது. ஆகவே, நான் மக்களுடன் நிம்மதியாக இருக்க விரும்புகிறேன். அதனாலேயே இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை!’ என்று அறிவித்திருக்கும் மத்திய அமைச்சர் யார்?''

பதில்: ப.சிதம்பரம்

பொன்.ராதாகிருஷ்ணன்: சட்டென பதில் வருகிறது... ''ப.சிதம்பரம். ஆனா, அதெல்லாம் சும்மா சால்ஜாப்பு. டெபாசிட்கூட கிடைக்காதுனு பயந்துட்டுத்தான் அவர் போட்டி போடலை. மகன் எக்கேடு கெட்டா என்னன்னுகூட நினைக்கலை பாருங்க அவரு. சிதம்பரத்துக்கு மக்களாவது, மகனாவது... எல்லாமே சுயநலம்தான் தம்பி!''

சுதீஷ் ''நம்ம ஊர்க்காரர் ப.சி-தானே! பெர்சனலா எனக்கு ரொம்ப சந்தோஷம். காங்கிரஸ் தோத்துடும்கிற பயத்துல பின்வாங்கிட்டாரு. ஆனா, அவரு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தணும். இந்த எலெக்ஷன்ல போட்டியிட மாட்டேன்னு சொல்றாரா... இல்லை அரசியல்ல இருந்தே விலகி மக்கள் கூடவே இருக்கப் போறேன்னு சொல்றாரா? நாளைக்கு வேற ஏதாவது பதவி கொடுக்குறேன்னு சொன்னா, உடனே வேட்டியை மடிச்சுக் கட்டிட்டு வரக் கூடாதுல்ல!''

வேல்முருகன்: ''மத்திய அமைச்சரா?'' என யோசித்தவர், ''காங்கிரஸ்ல எல்லாருமே ஏஜ்டு பார்ட்டிங்கதானே! ஜெயந்தி நடராஜன், சிதம்பரத்துக்குலாம் கிட்டத்தட்ட அதே வயசு தான். தெரியலையே... நீங்களே சொல்லிடுங்க!'' என்றவரிடம் பதிலைச் சொன்னதும், ''அட... நீங்க வேற! பிரதமர் பதவிக்கு வாய்ப்பு இருக்குனு சொன்னா, 98 வயசுலகூட குடுகுடுனு டெல்லிக்கு ஓடுவாரு. அவர் சொல்றதைப் போய் சீரியஸா எடுத்துக்கிட்டு...''

வளர்மதி: ''ப.சிதம்பரம். போன தடவையே குறுக்கு வழியில ஜெயிச்சவர்தானே இவரு!''

 “கருணாநிதி, விஜயகாந்தைத் திட்டுற மாதிரி கேள்வி கேளுங்க!”

''தேர்தல் நீண்ட காலம் நடைபெறுவதால், நீங்கள் வசிக்கும் ஊரில் ஒரு வாக்களித்துவிட்டு அந்த மையை அழித்துவிட்டு, உங்கள் சொந்த ஊரில் இன்னொரு வாக்கை அளியுங்கள்!'' என்று சொன்ன அரசியல் தலைவர் யார்?''

பதில்: சரத் பவார்.

பொன்.ராதாகிருஷ்ணன்: 'சரத் பவார். இதுதான் இவங்க லட்சணம்!''

சுதீஷ் ''சரத் பவாரா?'' என்று பதிலை ஊர்ஜிதப்படுத்திக்கொள்பவர், ''ஒரு கட்சியின் மூத்த தலைவரு... அவர் சொல்ற இந்த மெசேஜை இந்தியா முழுக்க பார்ப்பாங்களேனு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா?'' என்கிறார் கடுகடுப்பாக.

வேல்முருகன்: ''சரத் பவார். சிதம்பரத்தைவிட இவருக்கு வயசு ஜாஸ்தியா இருக்கும். அதான் கோக்குமாக்காப் பேசுறார்!''

வளர்மதி: கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பவர், ''இப்படிச் சொல்றவங்க கண்டிப்பாக தி.மு.க-காரங்களாத்தான் இருப்பாங்க. இல்லைனா விஜயகாந்தா இருக்கணும். ஏன்னா, அவங்களை மாதிரி வேற யாராலயும் இப்படி உளற முடியாதே. இந்த மாதிரி குறுக்கு வழில போங்கனு மக்கள்கிட்ட சொல்றவங்க, தமிழ்நாட்டிலேயே அவங்க ரெண்டு கோஷ்டிதான். ஆனா, நீங்க தப்பான முடிவு எடுத்துராதீங்க. இப்போ எலெக்ஷன் கமிஷன் ரொம்ப ஸ்ட்ரிக்ட்!'' என்று சொல்லிக்கொண்டே இருந்தவர் கடைசி வரை கேள்விக்கான பதிலையும் சொல்லவில்லை. அதைத் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை.

''தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகை ஒருவருக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் முத்தம் கொடுத்துள்ளதாகச் சர்ச்சை கிளம்பியுள்ளது. அந்த நடிகை யார்? அது எந்தத் தொகுதி?''

பதில்: நக்மா. மீரட்.

பொன்.ராதாகிருஷ்ணன்: ''என்ன தம்பி... எல்லாமே காங்கிரஸ் பெருமைகளாகவே அடுக்குறீங்க!'' என்று சிரிப்பவர், ''நக்மா. ஆனா 'எந்தத் தொகுதி?’னு தெரியலை. தங்கள் கட்சி வேட்பாளரைக்கூட நிம்மதியா பிரசாரம் பண்ணவிட மாட்டேங் கிறாங்க இந்த காங்கிரஸ்காரங்க!''

சுதீஷ் ''நாட்டு மக்கள் இதைத் தெரிஞ்சுட்டு என்ன பண்ணப்போறாங்க? இந்தக் கேள்வி இப்ப ரொம்பத் தேவையாங்க? வேணாங்க... அடுத்த கேள்விக்குப் போகலாம்!''

வேல்முருகன்: 'வட இந்தியாவில், நடிகை நக்மா. வாக்குக் கேட்கச் சென்றபோது ஒரு எம்.எல்.ஏ. தன் நீண்ட நாள் ஆசையைத் தீர்த்துக்கிட்டார். கருமம்... கருமம்!'' என்று சிரிக்கிறார்.

வளர்மதி: ''தமிழ்நாட்டுலயா... இந்தியாவுலயா?'' என யோசிக்கிறார். ('தமிழ்நாடு என்றால் யார்மீது பழி போடலாம் என்று யோசிக்கிறார் போல. அதிர்ச்சி கலந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன்) ''தம்பி... இந்த மாதிரி நடிகை, சினிமா பத்தி என்கிட்ட கேட்காதீங்க. வேற ஏதாவது கருணாநிதி, விஜயகாந்தைத் திட்டுற மாதிரி அரசியல் கேள்வியாக் கேளுங்க!'' என்றார். (கிரேட் எஸ்கேப்!)

 “கருணாநிதி, விஜயகாந்தைத் திட்டுற மாதிரி கேள்வி கேளுங்க!”

''இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழகத் தலைமையகம் எங்கு செயல்படுகிறது?''

பதில்: சென்னை தலைமைச் செயலகத்தில்... (செயின்ட் ஜார்ஜ் கோட்டை)!

பொன்.ராதாகிருஷ்ணன்:  ''சென்னையிலயா? கோயம்பேட்ல இருக்கே... அதானே!'' என்றவரிடம் 'அது மாநிலத் தேர்தல் ஆணையம்’ என்று சொல்லி சரியான பதிலைச் சொன்னதும், ''ஓஹோ... தலைமைச் செயலகத்துலதான் இருக்கா?'' என்று கேட்டுக்கொண்டார்.

சுதீஷ் ''சென்னையில... நம்ம கோட்டையில! டெல்லி எலெக்ஷன் மீட்டிங்லாம் போயிட்டு வந்தவன் நான். எங்ககிட்டயேவா!'' என்று சிரிக்கிறார்.

வேல்முருகன்: ''கோட்டையில இருந்துச்சு. இப்ப ஏதோ புதுக் கட்டடத்துக்கு மாத்திட்டதாச் சொன்னாங்களே!'' என்று உஷாராகச் சொல்லிவிட்டு, பதிலைக் கேட்டுத் தெரிந்துகொண்டவர், ''அட... சரியாத்தான் சொல்லியிருக்கேன்!'' என்று சிரித்துக்கொள்கிறார்.

வளர்மதி: ''வடபழனில இருக்கு தம்பி!'' என்றவரிடம் 'யோசித்துச் சொல்லுங்க’ என்ற போதும் மீண்டும் மீண்டும் அதே பதிலைச் சொன்னார். சரியான பதிலைச் சொன்னதும், ''தம்பி... ஏதோ கலெக்டருக்கு ஆள் எடுக்கிறாப்ல இப்படிக் கேள்வி கேட்கிறீங்க! கருணாநிதி, விஜயகாந்தைத் திட்டுறதுதான் எங்க அரசியல் அஜெண்டா. அதை விட்டுப்புட்டு ஸ்கூல் புள்ள, காலேஜ் புள்ள மாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்களே. பரவால்ல... இதுவும் ஜாலியாத்தான் இருந்துச்சு!'' என்று சிரிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism