Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

ஓவியங்கள்: ரவி

நானே கேள்வி... நானே பதில்!

ஓவியங்கள்: ரவி

Published:Updated:

''உலகத்திலேயே பெரிய பணக்காரர் யார்?''

'' 'தன் கடந்த காலத்தைத் திரும்ப வாங்கும் அளவுக்கு இங்கு யாரும் பணக்காரர் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார் ஆஸ்கர் வைல்டு!''

- கே.முத்துச்சாமி, ராமநாதபுரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நானே கேள்வி... நானே பதில்!

''சமீபத்தில் உங்கள் மனதைப் பாதித்த சம்பவம்?''

''சமீபத்தில், நாளிதழில் படித்த செய்தி ஒன்று... பவானியில் வயதான தம்பதியினர் ஆட்டோ ஒன்றில் ஏறி பவானி காவிரி ஆறு சங்கமிக்கும் கூடுதுறைக்கு போகச் சொல்லியுள்ளனர். ஆட்டோ அங்கு சென்றதும் இருவரும் தட்டுத்தடுமாறி இறங்கிச் சென்று, சென்ற வேகத்தில் திரும்பி வந்திருக்கிறார்கள். வந்தவர்கள், 'அந்த ஆற்றங்கரைக்குப் போ... இந்தப் படித்துறைக்குப் போ...’ என ஆட்டோக்காரரை அலைக்கழித்திருக்கிறார்கள். ஆனால், இறங்கிச் சென்ற அனைத்து இடங்களிலும் சென்ற வேகத்தில் திரும்பி வந்திருக்கிறார்கள். சந்தேகத்தில், 'என்ன விஷயம்?’ என விசாரிக்க, 'நாங்கள் எங்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள். ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்யலாம் எனச் சென்றால் எங்குமே முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் வரவில்லை’ எனக் கூறினார்களாம்.

அவர்களை காவல் நிலையத்தில் விட்டார் ஆட்டோக்காரர். தம்பதியினரின் பிள்ளைகளை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர் போலீஸார். இதில் தற்கொலை செய்துகொள்ள விரும்பிய பெற்றோரின் துயரம் ஒருபுறம் என்றால், ஆறுகள் 'கொலை’ செய்யப்பட்ட வேதனை மறுபுறம்!''

- சத்தி ஏ.ஜே.ஜப்பார், சத்தியமங்கலம்.

''மு.க.அழகிரியைப் போல சொந்தக் கட்சியில் கலகம் விளைவிக்கும் தில் வேறு யாருக்கேனும் வருமா?''

''அத்வானியைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தெரிகிறது!?''

- அ.பேச்சியப்பன், இராஜபாளையம்

'' 'செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?’ என்று கூட்டத்தினரைப் பார்த்து 'ஜெ’ கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது?''

''ஏன் பதில் சொல்ல வேண்டும்? வாக்கு சேகரிக்க அ.தி.மு.க. வேட்பாளர்கள், அமைச்சர்கள் வரும்போது, 'நீங்கள் சொன்னதைச் செய்தீர்களா? மின்சாரம் கொடுத்தீர்களா? சாலை வசதியைச் சரி செய்தீர்களா?’ என்று பதில் கேள்வி கேளுங்கள்!''

- மங்கையர்கரசி, சென்னை.

''அதென்ன 'சூறாவளி சுற்றுப்பயணம்’?''

''அரசியல் தலைவர்கள் வந்து சென்ற பிறகு, அந்த இடங்களைப் போய் பாருங்கள். 'சூறாவளியை’விட மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும்!''

- கி.ரவிக்குமார், நெய்வேலி.

''அதீத ஆர்வக்கோளாறு ஏன் தவறு?''

''அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பேட்ரிக் என்பவர், ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக ஒப்பந்தத்தின் பேரில் பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்துக்குப் பிறகு அவரது வயது மூப்பைக் காரணம் காட்டி, பேட்ரிக்கின் ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்துவிட்டது பள்ளி நிர்வாகம். பேட்ரிக், நீதிமன்றம் சென்றார். பள்ளி நிர்வாகம், அவருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு வருடம் கழித்தே  இழப்பீடு வழங்குவோம் என்று பேட்ரிக்கிடம் ஒப்பந்தம் செய்துகொண்டது பள்ளி நிர்வாகம்.

நானே கேள்வி... நானே பதில்!

தனது தந்தைக்கு 50 லட்சம் இழப்பீடு கிடைக்கப்போகிறது என்று ஃபேஸ்புக்கில் பேட்ரிக்கின் மகள் ஸ்டேட்டஸ் வெளியிட்டார். அதை அவரது ஃபேஸ்புக் நண்பர்கள் 1,200 பேர் பகிர்ந்துகொள்ள, அது பள்ளி நிர்வாகத்துக்குத் தெரியவந்தது. 'இழப்பீடு ஒப்பந்த விவரத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டது, ஒப்பந்த ஷரத்துகளை மீறும் செயல்’ என்று பள்ளி நிர்வாகம் வழக்குத் தொடுக்க, அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இழப்பீடு வழங்க வேண்டாம் என்று தீர்ப்பளித்தது. அதீத ஆர்வக் கோளாறு இப்படியும் சோகத்தைப் பரிசளிக்கும்!''

- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.

''வாக்களிக்கும் இடத்துக்கு ஏன் 'வாக்குச் சாவடி’ என்று பெயர்?''

''நமது வாக்கைப் பெற்று வெற்றி பெற்ற பின், நம்மை எப்படியெல்லாம் சாவடிக்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள்... அதனால் இருக்குமோ!''

- சம்பத் குமாரி, திருச்சி

''இத்தனை வருடங்களில் தமிழ் சேட்டிலைட் சேனல்களின் பரிணாம வளர்ச்சியை எப்படிக் கணக்கிடுவீர்கள்?''

''80-90களில் 'டி.டி.’ என்றால்  தூர்தர்ஷன். அதுவே இப்போ, திவ்யதர்ஷினி. அவ்ளோதான்!''

- எம்.ஹரிஹரன், சென்னை.

''தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை மாற்றக்கோரி அந்தக் கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்களே!''

'' 'பசிக்கு பச்சத்தண்ணியைக் குடிச்சு வயிறு நிரப்பினாலும், பந்தாவா பல்லு குத்துவோம்ல’ என்ற வடிவேலு பன்ச்தான் நினைவுக்கு வருகிறது!''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

'' 'பா.ஜ.க-வை ஜெயலலிதா ஏன் விமர்சிப்பது இல்லை?’ என்று கேட்கிறாரே கம்யூனிஸ்ட் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்?''

'' 'அ.தி.மு.க. கூட்டணியில் சீட் இல்லை’ என்று தெரிவதற்கு முன், அவர் ஏன் அ.தி.மு.க-வை விமர்சிக்கவில்லையாம்!?''

- மங்கையர்கரசி, சென்னை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism