Published:Updated:

நீர்ப்பாய்ச்சி

கதிர்பாரதி, படம்: ஆ.வின்சென்ட்பால்

நீர்ப்பாய்ச்சி

கதிர்பாரதி, படம்: ஆ.வின்சென்ட்பால்

Published:Updated:
நீர்ப்பாய்ச்சி

''இதுதான் தி.க.சி-யிடம் இருந்து எனக்கு வந்த கடைசிக் கடிதம். இந்தக் கடிதத்தை, தி.க.சி-யை தாமிரபரணியின் நதிக்கரையில் தகனம் செஞ்ச அடுத்த நாள் மறுபடியும் எடுத்துப் பார்க்கிறேன். இந்தக் கடிதத்தோட வார்த்தைகள்ல ஒருவித இறுக்கம் இருக்கிறது இப்பதான் எனக்கு மட்டுப்படுது. என்னமோ சொல்ல வந்திருக் கார். ஆனா, என்னனுதான் எனக்கு மட்டுப்படலை. ஆனாலும் என்ன... எனக்கும் தி.க.சி-க்கும் மட்டுப்படறது மாதிரி எத்தனையோ ஞாபகங்கள் இருக்கே... சம்பவங்களும் நாள்களும் இருக்கே. அதுங்க போதும்னு நினைக்கிறேன். என்னைப் போல தி.க.சி-யைத் தேடி வந்துபோன மனிதர்கள் இன்னும் இருக்காங்களே... அவங்க போதும்னு நினைக்கிறேன். இதுக்கு மேல ஒரு மனிதரைப் பத்தி வேற என்ன நினைச்சுட முடியும்; சொல்லிட முடியும்! இதுபோல ஆயிரமாயிரம் கடிதங்கள்...  உற்சாகமூட்டுற வேலைகள்னு கடைசி வரைக்கும் இயங்கிட்டே இருந்தார்'' என்று தி.க.சி-யின் நினைவுகளை ஈரமும் பாரமுமாக வார்த்தைகளில் இறக்கிவைக்கிறார் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

''தி.க.சி-யைப் பத்தி ஒரு வார்த்தையில சொல்லணும்னா அவர் ஒரு நீர்ப்பாய்ச்சி. அதனால்தான் வேர்கள் எல்லாம் அவரை நோக்கி நீண்டுக்கிட்டே இருந்துச்சு. இங்க வேர்கள்ங்கிறது ஆரம்பக் காலப் படைப்பாளிகள் உள்பட என்னையும் சேர்த்துதான் குறிக்குது. 'தன் படைப்புகள் குறித்து அவர் என்ன நினைக்கிறார்?’னு தெரிஞ்சிக்கறதுல நிறையப் பேருக்கு அலாதியான ஆர்வம். தி.க.சி-யும் சின்னவன் பெரியவன் வயசு வித்தியாசமெல்லாம் பாக்காம அவ்வளவு அரவணைப்பு; அவ்வளவு ஆதுரம். ஆனா, தான் வரிச்சுக்கிட்ட கொள்கையிலும் விமர்சனத்துலயும் கடைசி வரைக்கும் கறார்தனத்தோடதான் இருந்தார். அவர் விமர்சனத்துல காட்டும் கண்டிப்புல நாம கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போகணும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீர்ப்பாய்ச்சி

எனக்கு நிறைய புஸ்தகங்களைக் குடுத்து படிக்கவெச்ச தமிழ் எழுத்தாளர்கள் ரெண்டு பேர். ஒருத்தர் தி.க.சி., இன்னொருத்தர் தஞ்சை ப்ரகாஷ். 'இந்தப் புத்தகத்தை நான் வெச்சுக்கிடட்டுங்காளா?’னு தி.க.சி-கிட்ட கேட்பேன். 'வெச்சுக்கிடுங்களேன்...’னு மெள்ளமா ஒரு சிரிப்பு சிரிப்பார். இனிமே அந்தச் சிரிப்பைத்தான் பார்க்க முடியாது.

தூத்துக்குடி எஸ்.ஏ.முருகானந்தத்துக்குப் பிறகு 'சாந்தி’ பத்திரிகையை தொ.மு.சி. நடத்தினார். அதுல தி.க.சி. எழுதின சினிமா விமர்சனம் பரவலாப் பேசப்பட்டுது. அதுலதான் முதன்முதலா சினிமா டெக்னிக்கல் விஷயங்களை அதாவது கேமரா ஆங்கிள், எடிட்டிங், லைட்டிங் பத்தியெல்லாம் தி.க.சி. எழுதினார். 'சாந்தி’ பத்திரிகை சார்பா 'புதுமைப்பித்தன் மலர்’ கொண்டுவந்தாங்க. அதுல சுந்தர ராமசாமியோட முதல் சிறுகதை, 'தண்ணீர்’ வெளிவந்துச்சு. அதுக்குப் பிறகுதான் அவர் தொடர்ந்து எழுத ஆரம்பிச்சார். அப்போ நான், தொ.மு.சி., தி.க.சி., சு.ரா. எல்லாரும் சேர்ந்து திருநவேலியை நடந்தே சுத்தி வருவோம். எங்களுக்கு அந்த இடமெல்லாம் ஏற்கெனவே பழக்கம். ஆனா, சுந்தர ராமசாமிக்குப் புதுசு. அப்போதான் ஒரு இடத்தைக் காண்பிச்சு, 'இதுதான் மாடத்தெரு’னு தி.க.சி. சொன்னார். அதைத் தாண்டினா தேரடி, அப்புறம் வாகையடி முக்கு. அங்கே தேர் நின்னுடும். கதை பாதிலேயே நின்னுடுச்சுனா புதுமைப்பித்தன் 'வாகையடி முக்குல படுத்துட்டது’னு சொல்வார். அந்தச் சொற்பிரயோகம் நவீன இலக்கிய உலகத்துல பின்னாடி பிரபலமாச்சு.

இலக்கியத்துல விஷமான கருத்துகளை எதிர்க்கிற வேலையை தி.க.சி. பண்ணினார். அதன் மூலம் அவர் நம்பின இலக்கியத்தை அறிமுகத்தினார். அது நிறையப் பேருக்கு உபயோகமா இருந்துச்சுன்னு  என்னால உறுதியாச் சொல்ல முடியும்'' என்கிறார் கி.ரா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism