Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

தேவை ‘எடுபிடி’கள்!படம்: எல்.ராஜேந்திரன்

பிரீமியம் ஸ்டோரி

''ஜெயலலிதா, முழுக்கவே ஹெலி வழிப் பிரசாரம் மேற்கொள்வதன் சென்ட்டிமென்ட் காரணம் என்னவாக இருக்கும்?''

''அவருக்கு 'கேப்டன்’ மீது நம்பிக்கை போய்விட்டது. அதனால் 'பைலட்டை’ நம்புகிறார் என்று வைத்துக்கொள்ளலாமா?''

- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

''தமிழகத் தேர்தல் பிரசாரத்தில் அனல் கிளப்பும் பேச்சாளர்களே இல்லாமல் போய்விட்டார்களே?''

''ஹ்ம்ம்... அது என்னவோ உண்மைதான்! தலைவர்களின் பேச்சும் வழவழா கொழகொழாதான். ஈரோடு சூரம்பட்டியில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் வில்லன் நடிகர் பொன்னம்பலம் பேசியது இது...

'முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டு அவரை பிரதமர் ஆக்குங்கள். சினிமாவில் நான் அடிவாங்குவதைப் பார்த்து நீங்கள் சந்தோஷப் படுவீர்கள். ஆனால், வேறு யாருக்காவது ஓட்டு போட்டு நீங்கள் அடிவாங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ -  அரசியல் ஆர்வம் என்பது நாடி, நரம்புகளில் எல்லாம் வெறியாக ஊறித் திளைக்கும் ஒருவரால் மட்டுமே தேர்ந்த பேச்சாளராக ஈர்க்க முடியும்!''

- அ.சா.குருசாமி, செவல்குளம்.

நானே கேள்வி... நானே பதில்!

''பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ஜ.க., அமைத்துள்ள கூட்டணியின் ஒரே ஒரு நல்ல அம்சத்தையேனும் குறிப்பிடுங்கள்!''

''இந்தியாவின் பெருமிதமாகப் பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்படும், 'வேற்றுமையில் ஒற்றுமை’ அந்தக் கூட்டணிக்குத்தானே பொருந்தும்!''

- கே.அகிலாண்டம், காஞ்சிபுரம்.

 '' 'காங்கிரஸ் ஆட்சியில் சில தவறுகள் நடந்திருக்கலாம். தவறுகள் இருந்தால் தலையில் குட்டுங்கள்!’ என்று பேசியிருக்கிறாரே ப.சிதம்பரம்?''

''இந்தத் தேர்தலில் குட்டத்தான் போகிறார்கள். அதுவும் சாதாரணக் குட்டு அல்ல... 'ஓங்கிக் குட்டினா ஒன்றரை டன் குட்டு’!''

- சம்பத்குமாரி, திருச்சி.

''2011-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் அழகிரியை விளாசிய 'ஜெ’, இப்போது அவரைப் பற்றி அடக்கி வாசிப்பது ஏன்?''

''நெப்போலியனின் பொன்மொழி ஒன்று உங்களுக்காக... 'எதிரி தவறு செய்யும்போது குறுக்கிடாதீர்கள்’!''

- மங்கையர்கரசி, சென்னை.

''சமீபத்தில் உங்களைப் பயமுறுத்திய செய்தி எது?''

''டிஸ்கவரி தமிழ் சேனலில், பிளாஸ்டிக் பாட்டிலைச் சாப்பிட்டதால் இறந்துபோன முதலையைப் பற்றி காட்டினார்கள். முதலையால் நம்மைப் போல் கீழ் தாடையை அசைக்க முடியாது. வரிக்குதிரையையோ, மானையோ கொன்று பெரிய பெரிய துண்டுங்களாகக் கடித்து, நான்கு முறை மென்று அப்படியே விழுங்கிவிடும். உறுதியான எலும்புகளையும் கடுமையான கறித் துண்டுகளையும் எளிதாக ஜீரணிக்கும் முதலையால், சின்ன பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை ஜீரணிக்க முடியவில்லை.

உலகெங்கும் கொட்டப்படும் லட்சக் கணக்கான டன் பிளாஸ்டிக் கழிவு, மண் வளம், வனவிலங்குகளை மட்டுமல்ல... மனிதனையும் விரைவில் 'தின்று செரிக்கும்’!''

- எஸ்.மோகன் குமார், சேலம்.

''இந்தத் தேர்தல் களேபரங்களில் உங்களை ஆச்சரியப்படுத்திய விஷயம் எது?''

''வாகன சோதனைகளில் வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் இருந்து கோடிக்கணக்கான பணம், பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆனால், நாடு முழுக்கத் தண்ணீராகப் பணத்தைச் செலவு செய்யும் அரசியல் கட்சியினரிடம் இருந்து ஒரு துளியைக்கூடக் கைப்பற்றியதாகச் செய்தி வரவே இல்லையே. ஆச்சரியம்தான்!''

- அ.சா.குருசாமி, செவல்குளம்.

''தேர்தல் ஆணையம் புதிது புதிதாகச் செய்யும் 'கெடுபிடி’கள் பற்றி வழக்குத் தொடரப்போவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே!''

''இதில் என்ன ஆச்சரியம்? அவருக்கு 'எடுபிடிகள்’தான் பிடிக்கும்; 'கெடுபிடிகள்’ பிடிக்காது!''

- சம்பத்குமாரி, திருச்சி.

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. 'நானே கேள்வி - நானே பதில்’ என்று தலைப்பிட்டு தபாலில் அனுப்பவும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு