Published:Updated:

‘ராமா... ராமா... ராசா... ராசா...’

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: கே.தனசேகரன்

பிரீமியம் ஸ்டோரி
‘ராமா... ராமா... ராசா... ராசா...’

''நான் பிரசாரத்துக்குப் போற இடங்கள்ல எல்லாம் மக்கள் எனக்கு அமோக வரவேற்பு கொடுக்கிறாங்க. புரட்சித்தலைவி செய்ற சாதனைகளை எடுத்துச் சொல்றேன். ஆனால், நேரம்தான் பத்தமாட்டேங்குது. சரி, கேள்விகளைக் கேளுங்க' - தயாராகிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.

'வணக்கம்... தேர்தல் களம் சூடு பிடிச்சிருக்கு. கட்சிகளும் சரி, பத்திரிகைகளும் சரி ரொம்பப் பரபரப்பா இயங்கிட்டு இருக்காங்க; கருத்துகள் கேட்டுட்டு இருக்காங்க. ஆனா, ஜாலி கேள்வினு சொல்றீங்க... என்னன்னு பார்க்கலாம்'' - கொஞ்சம் சந்தேகத்தோடு பேசுகிறார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

'இப்ப பிரசாரத்துக்குக் கிளம்பிட்டு இருக்கேன். 10 நிமிஷத்துல முடிச்சிடுவீங்கள்ல?'' - படபடப்பாகத் தயாராகிறார் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார்.

'இப்பதான் பிரசாரம் முடிச்சிட்டு கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். ஜாலி கொஸ்டீன்ஸ்தானே கேட்கப்போறீங்க? விடுங்க... ஜாலி கேலி பண்ணிடலாம்' - செம உற்சாகத்துடன் அ.தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளர் நடிகை விந்தியா.

‘ராமா... ராமா... ராசா... ராசா...’

'' 'NOTA’ விரிவாக்கம் என்ன?''

பதில்: None of The Above.

சரத்குமார்: சட்டெனப் பதில் வருகிறது ''None of The Above. '49 ஓ’ என்பதே இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான். என்னைப் பொறுத்த வரைக்கும் வேட்பாளர்களில் யாருமே எனக்குப் பிடிக்கலைன்னு சொல்லி நோட்டாவுக்கு ஓட்டு போட்டா, அந்த ஓட்டு வேஸ்ட்தான். யாரையுமே எப்படி ஒருத்தருக்குப் பிடிக்காமப்போகும்? நோட்டாவுக்கு ஓட்டு போட்டு, உங்க ஓட்டை வேஸ்ட் பண்ணாதீங்க மக்களே..!''

கொளத்தூர் மணி: 'None of The Above. சரியா?'' 'சரி’ என்றதும் சிரித்துவிட்டு, ' 'ஒரு தொகுதியில் வெற்றிபெற்ற வேட்பாளரைவிட நோட்டா அதிகமான வாக்கு வாங்கினால், தேர்தல் ரத்து செய்யப்படும்’னு தேர்தல் கமிஷன் அறிவிச்சா, தமிழ்நாட்டில் நோட்டாவுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைக்கும்.''

துரை.ரவிக்குமார்: 'ஓட்டிங் மெஷின்ல வைக்கப்போற ஒரு பட்டன்தானே. Nooo...' என யோசிக்கிறார். ''None...'' எனச் சொல்லி மீண்டும் சொல்லிப் பார்த்தவர், None of The Above, சரிதானே? எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தணும்ங்கிற நிர்பந்தத்தை 'நோட்டா’ உருவாக்கும்னு நினைக்கிறேன். அந்தவிதத்தில் நோட்டாவை நான் வரவேற்கிறேன்.'

விந்தியா: சற்று யோசித்தவர் 'விரிவாக்கம்னா என்ன? ஓ... ஃபுல் ஃபாம்மா? யாருக்குமே ஓட்டு போட விருப்பம் இல்லை என்பதுதான் நோட்டா பட்டன்' என யோசித்தவர், 'அதோட ஃபுல் ஃபாம் தெரியலை. ஐ டோண்ட் நோ'' என்கிறார்.

''மோடி, எத்தனையாவது வயதில் யசோதா பென்னைத் திருமணம் செய்துகொண்டார்?''

பதில்: 17 வயதில்.

சரத்குமார்: 'ஆங்... நிச்சயம் பண்ணது 16 வயசுல. யசோதா பென்னைக் கல்யாணம் கட்டியது 22 வயசுல. கரெக்டா... இல்லையா? அப்ப 17 வயசு. தனக்குக் கல்யாணம் ஆனதைச் சொல்ல மோடிக்கு என்ன தயக்கம்? என்ன பயம்? உண்மையை மறைப்பதும் பொய்தானே? 'மிஸ்டர் கிளீன்’ இமேஜ் மோடிகிட்ட இருந்து பறிபோயிருச்சு!''

கொளத்தூர் மணி: '17 வயசுலனு சொல்லி இருக்காரு மோடி. ஆனால், இதை ஏன் மறைக்கணும்னு தெரியலை!'

துரை.ரவிக்குமார்: '17 வயசுல மோடி கல்யாணம் பண்ணினதா, அவர் பிரதர் சொல்லி இருக்காரு. மோடி, கல்யாணம் பண்ணிக்கிறதும் பண்ணிக்காததும் அவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால், அதை மறைத்தது பெரிய தப்பு!''

விந்தியா: '19 இல்லை 20-னு நினைக்கிறேன். சரியா? நான் ஒண்ணு சொல்லட்டா? மோடிக்கும் கருணாநிதிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. மோடி, குடும்பத்தை மறைச்சு அரசியல் பண்றார்; கருணாநிதி, குடும்பத்துக்காகவே அரசியல் பண்றார். மோடி, 'ராமா... ராமா...’னு சுத்துறார்; கலைஞர், 'ராசா... ராசா...’னு சுத்துறார். மோடியைச் சுத்தி நிறையக் காவிங்க; கருணாநிதியைச் சுத்தி நிறையப் பாவிங்க...'' என்று சிரிக்கிறார்.

‘ராமா... ராமா... ராசா... ராசா...’

'' 'சட்டசபையில் என்னோடு நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா?’ என்று கருணாநிதிக்கு, ஜெயலலிதா சவால் விடுத்தது எந்த விவகாரம் குறித்து?''

பதில்: காவிரிப் பிரச்னை.

சரத்குமார்: 'ம்ம்ம்... காவிரிப் பிரச்னை பற்றித்தானே? இந்தப் பிரச்னை பற்றி கலைஞருடன் விவாதிக்கப் புரட்சித்தலைவி அம்மா தயாரா இருக்காங்க. கலைஞர் தரப்புனா, அவர் மட்டும்தான் பேசணும். கூட்டத்தைக் கூட்டக் கூடாது. எங்க தரப்பில் இருந்து அம்மா மட்டும்தான் பேசுவாங்க. ஏன்னா சிங்கம், சிங்கிளாத்தான் பேசும்.''

கொளத்தூர் மணி: 'இந்த ரெண்டு பேரைப் பற்றி எந்தச் செய்தியும் நான் படிப்பது இல்லை. இவங்க வாழ்நாள் முழுக்க மாத்தி மாத்தி சண்டை போட்டுட்டே இருப்பாங்க. தெருச் சண்டையை நாம கண்டுக்க மாட்டோம்ல... அதுபோலதான், இதுவும்!''

துரை.ரவிக்குமார்: 'காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னை பற்றி. ஆனால், கலைஞர் தனது வாதத்திறமையால், வார்த்தைச் சாதுரியத்தால் புகழ்பெற்றவர். ஜெயலலிதா, வெறும் பேப்பரைப் பார்த்துப் படிக்கிறவங்க. எழுதி வெச்ச பேப்பரைப் படிச்செல்லாம் வாதத்தில் வெல்ல முடியாது!''

விந்தியா: 'கலைஞர் தாத்தா... இது என்ன கலைஞர் டி.வி. பட்டிமன்றமா? விவாதம்னு வந்துட்டா, உங்களை உட்கார வெச்சு எங்க அம்மா டார் டாராக் கிழிச்சுடுவாங்க. உங்ககூட விவாதம் பண்ண, எங்க அம்மா 'பெரிய சிங்கம்’ வர வேண்டாம்; 'குட்டி சிங்கம்’ நானே போதும்.

தாத்தா... காவிரி பத்திப் பேசுவோமா... இல்ல கனிமொழி பத்திப் பேசுவோமா? சென்னை சங்கமம் பத்திப் பேசுவோமா... இல்ல செம்மொழி மாநாடு பத்திப் பேசுவோமா? 2ஜி பத்திப் பேசுவோமா... இல்ல உங்க பேரன் துரைதயாநிதி பயந்து ஓடினதைப் பத்திப் பேசுவோமா?'' (இப்படி 21 கேள்விகளை மூச்சுவிடாமல் கேட்கிறார்.)

''இந்திய நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, கூகுளில் அதிகம் தேடப்பட்ட சினிமா நடிகர் யார்?''

பதில்: ஜனசேனா கட்சித் தலைவர், நடிகர் பவன் கல்யாண்.

சரத்குமார்: 'சினிமா வேட்பாளர்னா நக்மா. வேட்பாளர் இல்லைன்னா நடிகர் பவன் கல்யாண். ஆனா, அவர் எந்தத் தொகுதியிலயும் வேட்பாளரா நிற்கலையே. இதுவே நீங்க கூகுளில் தேடப்பட்ட பொலிட்டிகல் லீடர்னு கேட்டீங்கனா மோடி வருவார். இரண்டாவது நம்ம சி.எம். புரட்சித்தலைவி அம்மா. பதில் சரியா?'

கொளத்தூர் மணி: 'யாருங்க...' என யோசிக்கிறார். ''சிரஞ்சீவியா? இல்லையா..! அப்போ தெரியலைனு போட்டுக்கோங்க.''

துரை.ரவிக்குமார்: 'ரஜினியா? ஏன்னா எப்பவுமே எலெக்ஷன் நேரத்தில் ரஜினி எதுவும் வாய்ஸ் கொடுக்கிறாரானு எல்லாரும் கவனிப்பாங்க. அதனால அவர்தான்னு நினைக்கிறேன்!''

விந்தியா: 'கண்டிப்பா நம்ம விஜயகாந்த்தான். ஏன்னா, அவர் பிரசாரம்தான் தமிழ் மக்களுக்கு இப்போ காமெடி டைம்பாஸ்'' என்பவர், பதிலைக் கேட்டதும் ''ஓ... ஸாரிங்க'' என்கிறார்.  

''இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் எத்தனை தொகுதியில் நேரடியாக மோதுகின்றன?''

பதில்: 35 தொகுதிகளில்.

சரத்குமார்: (யோசிக்கிறார்) 'சிதம்பரம், திருவள்ளூர், தென்காசி... போன்ற ஐந்து தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்காக விட்டுக்கொடுத்திருக்காங்க. அப்ப 35 தொகுதிகள் வருது. சரியா?'

கொளத்தூர் மணி: 'இந்தக் கட்சிகளை நான் கண்டுகிறதே இல்லை. இந்த ரெண்டு கட்சியால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை. ரெண்டும் எதிரெதிர் கட்சிங்க. ஆனா, தமிழர்களை ஏமாத்துற விஷயத்தில் மட்டும் ரெண்டு பேரும் ஒற்றுமையா இருக்காங்க!''

துரை.ரவிக்குமார்: '35 தொகுதிகளில். நீண்ட காலத்துக்குப் பிறகு இந்த இரு கட்சிகளும் இவ்வளவு தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.'

விந்தியா: 'ஒரு நிமிஷம் ப்ளீஸ்' என யோசித்தவர், 'சரியாத் தெரியலை... நான் பா.ஜ.க-மேலதான் ஃபுல் ஃபோகஸா இருந்தேன். அந்தக் கூட்டணிக்கு நான் ஒரு பேரு வெச்சிருக்கேன். மசூதியை இடிச்ச பா.ஜ.க., மப்புலயே திரியுற தே.மு.தி.க., மரம் வெட்டுற பா.ம.க., கள்ளை இறக்கிற கொங்கு, மாத்தி மாத்திப் பேசுற ம.தி.மு.க., கல்வியை வித்துக் காசு சம்பாதிக்கிற புதிய நீதி கட்சியும், ஐ.ஜே.கே-வும்...' என்று அடிக்கிக்கொண்டே போனவர், ''நீங்க இப்ப கேள்வியை மாத்திடுங்க. நீங்க பா.ஜ.க. கூட்டணிப் பத்தி கேட்டீங்க. நான் கரெக்டாப் பதில் சொல்லிட்டேன். ஓ.கே-வா..?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு