Published:Updated:

தண்ணீர் கண்ணீர்!

பாரதிதம்பி, ஓவியங்கள்: ஹாசிப்கான்

பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர் கண்ணீர்!

ஒரு குடம் நீருக்கு கையேந்தி அலைகிறார்கள் மக்கள். கோடையின் வெப்பம் அதிகரிக்க... அதிகரிக்க... தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. நகரம், கிராமம் என எந்த வேறுபாடும் இல்லை. ''டவுன்லதான் தண்ணீர் பிரச்னை. கிராமத்துல பரவாயில்லை'' என்ற நிலை, பழங்கதையாகிவிட்டது. இட பேதமின்றி எங்கும் வியாப்பித்திருக்கிறது தண்ணீர் தட்டுப்பாடு. குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ மற்றும் இன்னபிற அத்தியாவசியத் தேவைகள் எதற்கும் தண்ணீர் இல்லை. தினசரி குளியல் என்பது குறைந்து, இரு நாள்களுக்கு ஒரு முறை என்று முறைவைத்து குளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். தண்ணீர் சிக்கலின் கோரமுகம் இனியும் சகித்துக்கொள்ள முடியாத நிலையை அடைந்துவிட்டது.

நகரங்களில், குடிப்பதற்கு கேன் தண்ணீர்தான் என்பது பல ஆண்டுகளாக மக்களுக்குப் பழகிவிட்டது. இப்போது, வீட்டில் புழங்குவதற்கான நீரைக்கூட காசு கொடுத்து வாங்கவேண்டிய நிலை. ''நிலத்தடி நீர் ரொம்பக் கீழே போயிட்ட தால எங்க அப்பார்ட்மென்டில் போர்வெல் தண்ணீர் சொட்டுச் சொட்டாத்தான் வருது. அதனால் ரெண்டு, மூணு வருஷமா நாங்க லாரி தண்ணீர் வாங்கித்தான் பயன்படுத்துறோம். 12,000 லிட்டர் கொண்ட லாரி தண்ணீர் 1,200 ரூபாய். இங்கே மொத்தம் 16 வீடுகள் இருக்கு. ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் மட்டும் இந்தத் தண்ணீரைத் திறந்துவிடுவோம். ஒரு வீட்டுக்கு ஒரு மாசத்துக்கு 1,000 ரூபாய் செலவாகும்'' என்கிறார் சென்னை கிழக்கு அண்ணாநகர் வ.உ.சி. நகரில் உள்ள ஓர் அடுக்ககத்தின் நிர்வாகி ராஜகோபால்.

இது நடுத்தர மக்கள் வசிக்கும் அடுக்ககம் என்பதால், நான்கு மணி நேரம் மட்டும் தண்ணீரைப் பயன்படுத்தி, செலவைக் கட்டுக்குள் வைத்துள்ளனர். ஆனால், பல நவீன அடுக்கங்களில் லாரி தண்ணீருக்கான கட்டணம் மாதம் 2,000 - 3,000 ரூபாயை எட்டிவிடுகிறது. இத்தகைய தனியார் அடுக்ககங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தேவையான தண்ணீரை விநியோகிப்பதற்கு என்றே சென்னை நகரத்தில் மட்டும் சுமார் 2,000 தனியார் லாரிகள் இயங்குகின்றன. இதைத் தவிர மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திடமும் பணம் செலுத்தி லாரி தண்ணீரை வாங்கலாம்.

இப்படி லாரி தண்ணீர் வாங்கித்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்பது, கோடைகாலத்துக்கான சிறப்பு ஏற்பாடு அல்ல; ஆண்டு முழுவதுமே இது நடைமுறையில் இருக்கிறது. பணம் இருப்பவர்களுக்கு இது பிரச்னை இல்லை. ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமானது இல்லையே..! மாதம் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கி, அதில் 4,000  ரூபாய் வாடகை தந்து, 3,000 ரூபாய்க்கு மளிகை பொருள்கள் வாங்கி, மீதி 3,000 ரூபாயில் மருத்துவம், கல்வி, பெட்ரோல், செல்போன், துணிமணிகள்... என்று விழிபிதுங்கி நிற்போரிடம் தண்ணீருக்கு 1,000 ரூபாய் செலவழிக்கச் சொல்வது அராஜகம். எனில், அவர்கள் என்னதான் செய்கின்றனர்?

தண்ணீர் கண்ணீர்!

''என்னா செய்றது..? கார்ப்பரேசன் தண்ணீ என்னிக்கு வருதோ, அன்னிக்குப் பிடிச்சு வெச்சுக்கணும். இல்லேன்னா எந்தத் தெருவுல வருதோ, அங்கே போய்ப் பிடிச்சுட்டு வரணும். அதுவும் இல்லைன்னா... வீட்டுல வர்ற போர்வெல் தண்ணீ அழுக்கும் சேறுமா இருந்தாலும், தெளிய வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிப் பயன்படுத்திக்கணும். வேற என்ன வழி..?'' என்று கேட்கிறார் அமைந்தகரை அய்யாவு காலனியில் வசிக்கும் ராஜலட்சுமி.

தண்ணீரை, பணம் கொடுத்து வாங்குவது சாதாரண மக்களைப் பொறுத்தவரை ஆடம்பரச் செலவே! இந்தத் தண்ணீர் பஞ்சம், ஏழை மக்களை அவலத்திலும் அவலமாகத் தாக்குகிறது. ஆனால், அவர்களால் இதை எதிர்த்து எதுவுமே செய்ய முடியவில்லை.

நடுத்தரவர்க்க மக்களோ, குடியிருக்கும் வீட்டை மாற்றுவதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், தண்ணீர் பிரச்னை எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதால் எங்கு ஓடினாலும் இந்தப் பிரச்னையில் இருந்து அவர்களால் தப்பிக்க முடிவதில்லை. இன்னொரு பக்கம், நடுத்தர வர்க்க குடும்பங்கள் பலவும் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே வீடு பிடித்துக் குடியேறுகின்றன. தண்ணீர் இல்லை என்றதும் அவர்களால் திடுதிப்பென்று வீட்டைக் காலி செய்துவிட முடியாது. சொந்த வீடு வைத்திருப்பவர்கள், வேறு வழியின்றி அதில் குடியிருக்கின்றனர் அல்லது வீட்டை வாடகைக்கு விட்டுவிடுகிறார்கள். மொத்தத்தில் யாராலும் இந்தச் சுழலில் இருந்து தப்பிவிட முடிவதில்லை.

தமிழகம் முழுக்கவே இப்போது தண்ணீருக்குப் பிரச்னைதான். ஓசூர், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரைப் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்து 15 நாள்களாகிவிட்டன. கரூர் மாவட்டம், இனாம் கரூர் பேரூராட்சியில் 20 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம். ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள குருக்கத்தியில் வாரம் ஒரு முறை வரும் நீரும் இப்போது வருவது இல்லை. ஒட்டுமொத்த சிவகங்கை மாவட்டத்தின் நிலையும் மோசமாக இருக்கிறது. ராமநாதபுரத்துக்குச் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் சில கிராமங்கள் பயன் அடைந்தபோதிலும் செலுகை, குருந்தணாக்கோட்டை, தூணுகுடி, பீசர்பட்டினம், மீனாட்சிபுரம், மேலராங்கியம், புலியூர், நெடுவயல் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் குடிநீர் பஞ்சத்தில் தத்தளிக்கின்றன. மதுரை மாநகராட்சியில், ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் அதிகாலை 3.30 மணிக்குத் தொடங்கும் குடிநீர் விநியோகம், இரவு 12 மணி, நள்ளிரவு 2 மணிக்குக்கூட பெண்கள் குடங்களுடன் குடிநீர்க் குழாய்களில் காத்திருக்கின்றனர். தூங்கா நகரமான மதுரை, நான்கு குடம் தண்ணீர் பிடிப்பதற்காக இப்போது உண்மையாகவே 'தூங்கா நகரமாக’ விழித்திருக்கிறது. இப்படி அரிதாக விடப்படும் தண்ணீரும்கூட தேர்தலுக்குப் பிறகு அடியோடு நிறுத்தப்பட்டுவிடுமோ என்று மக்கள் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அச்சம், இந்தப் போராட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்குதான். நட்சத்திர விடுதிகளுக்கான தண்ணீர் விநியோகத்துக்குக் குறையொன்றும் இல்லை.

2012-ம் ஆண்டின் கணக்குப்படி, சென்னை நகரத்தில் உள்ள 4,656 உயர்தர விடுதி அறைகளில், ஓர் அறைக்கு சுமார் 1,500 லிட்டர் வீதம், நாள் ஒன்றுக்கு சுமார் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. நீச்சல் குளங்களில் தூய நீர் இடைவிடாமல் நிரப்பப்படுகிறது. மக்கள் தாகத்தில் சாகும்போது, இவர்கள் இவ்வாறு கூத்தடிப்பது என்ன நியாயம்? மக்கள் குடியிருப்பு நெருக்கமாக உள்ள பகுதிகளில், பல அடுக்கு ஷாப்பிங் மால்களுக்கு அனுமதி வழங்குவது எப்படி முறையாகும்? அதன் பிரமாண்ட இயந்திரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி இழுக்கும்போது, அதைச் சுற்றியுள்ளப் பகுதிகள் உடனடியாகப் பாதிக்கப் படுகின்றன. இதைச் சரிசெய்யவேண்டிய அரசோ, நமக்கு 10 ரூபாய் தண்ணீர் பாட்டிலைக் கையில் கொடுத்து, 'தண்ணீர் சிக்கனம்’ குறித்து வகுப்பு எடுக்கிறது. இது கோடை காலம் மட்டுமல்ல... கொடிய காலமும்கூட!

ற்போதைய தண்ணீர் பிரச்னை ஒரு மாதத்தில், ஓர் ஆண்டில் நடந்தது அல்ல. பல ஆண்டுகளாக நமது மொத்த நீர் ஆதாரங்களையும் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கியதன் எதிர்விளைவு. ஏரிப்பாசனத்தை முக்கியமாகக் கொண்ட தமிழ்நாட்டில், அவை அடியோடு அழிக்கப்பட்டுவிட்டன.

தண்ணீர் கண்ணீர்!

மறுப்பக்கம் போர்வெல்களின் எண்ணிக்கைத் தாறுமாறாக அதிகரித்துவிட்டன. ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்பீட்டின்படி, மதுரை நகரத்தில் உள்ள போர்வெல்களின் எண்ணிக்கை 44,218. இடைப்பட்ட காலத்தில் இது இன்னொரு மடங்கு அதிகரித்து ஒரு லட்சமாக மாறியிருக்கும். தமிழகம் முழுக்க உள்ள பெரு மற்றும் சிறு நகரங்களில் உள்ள போர்வெல்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் அது நம்மை மலைக்க வைக்கும். இதுபோக, இந்தியாவிலேயே மிக அதிகமான பாசன போர்வெல்கள் இருப்பதும் தமிழ்நாட்டில்தான் (19 லட்சம்)!

ஏரிகளை அழித்து மேற்பரப்பு நீர் ஆதாரத்தை ஒழித்தோம். நிலத்தடி நீர் ஆதாரத்தை இரக்கமின்றி இடைவிடாமல் உறிஞ்சுகிறோம். போதாக்குறைக்குத் தொழிற்சாலைக் கழிவுகள், குடிமைக் கழிவுகள் அனைத்தையும் முறையாகச் சுத்திகரிக்காமல் நீர்நிலைகளிலும் நிலத்துக்குள்ளும் விடுகிறோம். இவ்வளவு கொடுமைகளையும் செய்துவிட்டு, பூமிக்குள் இருந்து இடைவிடாமல் பாலும் தேனும் வர வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி?

'விதைநெல்லை விற்றுத் தின்றவனின் இரவு விடியாது’ என்பார்கள். இன்று நம்மைச் சூழ்ந்துள்ள கரிய இருள் அதுதான். சிலர், மழை பெய்தால் இந்த நிலை சரியாகிவிடும் என்று நினைக்கின்றனர். சரியானாலும்கூட அது மிக மிகத் தற்காலிகமானதே. ஏனெனில், மழைநீரைச் சேமிக்கும் நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பெய்யும் மழைநீரை எதில் சேமித்து வைப்பது? பெய்யும் மழைநீரில் 16 சதவிகித நீராவது நிலத்துக்குள் செல்ல வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர் சரியான மட்டத்தில் பராமரிக்கப்படும். ஆனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் 8 சதவிகித நீர்கூட நிலத்தடிக்குச் செல்வதில்லை. அந்த அளவுக்கு நிலம் நாசமாக்கப்பட்டுள்ளது.

ஆனால், தண்ணீர் வியாபாரிகளுக்கு  மட்டும் எங்கு இருந்து தண்ணீர் கிடைக்கிறது? அவர்கள், நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீரை இடைவிடாமல் உறிஞ்சப்படும்போது, அதுவும் ஒருநாள் தீர்ந்துபோகும். அந்த 'ஒருநாள்’ நூற்றாண்டுகளுக்குப் பின் வரப்போவது இல்லை. நம் காலத்திலேயே மிக விரைவில் வந்துவிடலாம். அந்தச் சமயத்தில் தண்ணீர் மேலும் விலைமதிப்பற்ற செல்வமாக மாறும். கேன் தண்ணீர் வாங்கவும், லாரி தண்ணீர் பெறவும் முன்பதிவு செய்து காத்திருக்கும் நிலை வரலாம்.

தண்ணீர் கண்ணீர்!

ராஜஸ்தான், குஜராத் போன்ற வட இந்திய மாநிலங்களில் 'வாட்டர் ஏ.டி.எம்’ என்ற முறை இப்போதே வந்துவிட்டது. ரீ-சார்ஜ் செய்து அட்டையை இயந்திரத்தில் செருகினால் தண்ணீர் வரும். காசு தீர்ந்துவிட்டால் தண்ணீர் வராது. டாப்-அப் செய்துகொள்ள வேண்டும். இந்த வாட்டர் ஏ.டி.எம்-கள் எதிர்காலத்தில் தமிழகத்தின் வீதிகளையும் ஆக்கிரமிக்கும். யார் கண்டது, தண்ணீர் பிடிக்க தட்கல் முறையும் அமலுக்கு வரலாம்.

ட்டுமொத்த தமிழ்நாடும் தாகத்தால் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், மேலும் கூடுதலாகச் சம்பாதித்து நம் திறமையாலும் சாமர்த்தியத்தாலும் தண்ணீர் பிரச்னையைச் சமாளித்துவிடலாம் என்று நினைப்பது அறியாமை. இது தனிநபர்களின் உழைப்பால் தீர்க்கக்கூடிய சிக்கல் அல்ல. அரசாங்கம் முழு வீச்சில் இறங்கிச் செயலாற்ற வேண்டும். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழித்து கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை வகுப்பது, ஓர் ஊரில் உள்ள நீரை உறிஞ்சி இன்னோர் ஊருக்குக் கொடுப்பது எல்லாம் சில ஆண்டுகளுக்கான தற்காலிகத் தீர்வுகளே. ஏரி, குளங்களைச் சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றுக்கு நீர் கொண்டுவந்து சேர்க்கும் வாய்க்கால்கள், ஓடைகளைச் சீர் செய்வதில்தான் நமது சிக்கலுக்கான நிரந்தரத் தீர்வு இருக்கிறது.

இப்போதுகூட அரசு கறாராக நடவடிக்கை எடுக்குமானால் தமிழ்நாட்டின் கணிசமான ஏரிகளை மீட்க முடியும். தற்காலிகத் தீர்வுகளில் தொடர்ந்து கவனம் செலுத்தும் அரசு, நிரந்தரத் தீர்வை நோக்கிய முதல் அடியை இப்போதேனும் எடுத்து வைக்க வேண்டும்.

செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா?

தண்ணீர் கண்ணீர்!

மிழ்நாட்டில் ஆற்றுப்பாசனம்தான் பெருமிதமாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், வரலாற்று நோக்கில் ஏரிப்பாசனம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான நீர் ஆதாரம். ஏனெனில், 73 சதவிகிதம் பாறைப்பரப்பைக் கொண்ட தமிழ்நாட்டில், ஆண்டு முழுவதும் மழை பெய்வது இல்லை. ஆகவே, பெய்யும் மழையைச் சேமித்து வைத்தாக வேண்டிய கட்டாயம், தமிழர்களுக்குப் புவியியல்ரீதியாகவே இருக்கிறது. இதனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏரிகளை உருவாக்கி ஏரிப் பாசன முறையில் உலகுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தனர்.

• பொதுப்பணித் துறை கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 38,202 ஏரிகள் இருக்க வேண்டும். ஆனால், பாதிக்கும் மேற்பட்ட ஏரிகள் அழிக்கப்பட்டு, இப்போது சுமார் 18 ஆயிரம் ஏரிகள் மட்டுமே மிச்சம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

• தமிழக ஏரிகளின் சிறப்பு, இதன் சங்கிலித்தொடர் தன்மைதான். ஓர் ஏரி நிரம்பினால் அதில் இருந்து நீர் வழிந்து இன்னொன்றில் நிரம்பும். அதுவும் நிரம்பினால் அடுத்த ஏரி. இப்போது இந்தச் சங்கிலி அறுக்கப்பட்டு ஏரிகள் அழிக்கப்பட்டுவிட்டதால் அவை நிரம்புவதும் இல்லை; வழிந்து ஓடுவதும் இல்லை.

• மாநிலம் முழுக்க பரந்துபட்ட நிலப்பரப்பில் ஆங்காங்கே ஏரியில் நீர் தேங்கி நிற்கும்போது நிலத்தடி நீர்வளம் சீராக இருக்கும். ஏரிக்கரைகளில் நிற்கும் மரங்கள், சூழலைக் குளிர்விக்கும். ஏரியில் நீர் இல்லை; கரையில் மரங்களும் இல்லை என்பதால் நிலத்தடி நீர்வளமும் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.  

• ஏரிகளுக்கு நீர் கொண்டுவந்து சேர்க்கும் வாய்க்கால்களும் சிற்றோடைகளும், 'ஏரி’ என்னும் உடலின் நரம்புகள். இவை மாநிலம் முழுக்க குறுக்கும் நெடுக்குமாக ஓடி, நீரை ஏரிக்குச் சுமந்துவரும். இந்த நரம்புகள் அறுத்து வீசப்பட்டுவிட்டதால், உயிரற்றச் சடலமாகக் கிடக்கிறது ஏரி.

தண்ணீர் வழக்குகள்!

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல ஊர்களில், குடிதண்ணீர் பிரச்னை அடிதடிகளில் முடிந்து சட்டம்-ஒழுங்கு சிக்கலை உருவாக்கியிருக்கிறது. அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் ஒரு பெண்ணுக்குக் காயம்; மூன்று பேர் மீது வழக்கு. கந்தர்வக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டியில் நடந்த தண்ணீர் அடிதடியில் இரண்டு பேருக்குக் காயம்; மூன்று பேர் மீது வழக்கு. கீரனூர் அருகே உள்ள வெம்மேனியில் ஏற்பட்ட குடிநீர் மோதலில் ஒருவருக்குக் காயம்; மூன்று பேர் மீது வழக்கு. அறந்தாங்கி அருகே களப்பக்காட்டில் நடந்த தண்ணீர் மோதலில் ஒரு பெண் காயம் அடைய, ஒரு பெண் கைது செய்யப்பட்டார். இவை எல்லாம் காவல் துறையில் புகார் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள். இவை போக, நாள்தோறும் மக்களிடையே சச்சரவுகளை உருவாக்கிப் பெரும் மனக்கசப்புகளையும் பகையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்தத் தண்ணீர்த் தட்டுப்பாடு.

நீர் பஞ்சத்தின் சாட்சிகள்!

கடந்த இரு வாரங்களில் மூன்று குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில் விழுந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் நம் அலட்சியத்தை மட்டும் உணர்த்தவில்லை... கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள், நமது நீர் பஞ்சத்தின் கொடிய சாட்சிகள். தண்ணீருக்காகத் தோண்டப்பட்ட இந்த ஆழ்துளை கிணறுகள், தண்ணீர் கிடைக்கவில்லை என்பதால் அப்படியே கைவிடப்பட்டுள்ளன. இப்படி மாநிலம் முழுக்க ஆயிரக்கணக்கான கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் இருக்கின்றன. ஒரு போர்வெல் தோண்ட, பல ஆயிரம் ரூபாய் செலவாகிறது. தற்போதைய நிலையில் 300 அடி வரைக்கும் தோண்ட ஓர் அடிக்கு 65 ரூபாய். அதன்பிறகு ஒவ்வொரு 100 அடிக்கும் 10 ரூபாய் அதிகரித்துக்கொண்டே செல்லும். இதன்படி, ஒரு போர்வெல் அமைக்க சராசரியாக 35,000 ரூபாய் செலவாகிறது. இவ்வளவு செலவழித்துத் தோண்டியும் தண்ணீர் இல்லை என்ற நிலையில் மக்கள் மனம் வெறுத்து, துளையை அப்படியே விட்டுவிடுகின்றனர். வெறும் 50 ரூபாய், 100 ரூபாய் செலவில் அதை மூடிவிட முடியும் என்ற நிலையில், மூடாமல் விடுவது மிகவும் தவறானதுதான். எனினும் இந்தப் பிரச்னையின் ஆணிவேர் தண்ணீர் சிக்கலில்தான் இருக்கிறது!

மிழகப் பொதுப்பணித் துறை, கடந்த மார்ச் மாதத்தில், தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் குறித்த வருடாந்திர ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இதன்படி மாநிலத்தின் 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் முந்தைய ஆண்டைவிட 2 மீட்டருக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 6-7 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு