Published:Updated:

குழந்தை விழுங்கிக் கிணறுகள்!

டி.அருள் எழிலன், படங்கள்: தே.சிலம்பரசன், கா.முரளி

பிரீமியம் ஸ்டோரி

போர்வெல் இயந்திரங்களால் பூமியைத் துளைத்துப் போடப்படும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு ஒரே ஒரு பெயர்தான்... குழந்தை விழுங்கிக் கிணறுகள்! இதை எழுதும் இந்த நேரத்தில்கூட, சுமார் 1,000 போர்வெல் இயந்திரங்களாவது தண்ணீர் தேடி தமிழகத்தில் பூமியைத் துளைத்துக்கொண்டிருக்கும். சுமார் 200 அடியில் தொடங்கி 1,000 அடி வரை தண்ணீரைத் தேடி பூமியில் துளையிடுகிறார்கள். தண்ணீர் இல்லை என்றால், மூடாமல் அப்படியே கைவிடப்படும் ஆழ்துளைக் கிணறுகள்தான் குழந்தைகளின் உயிருக்கு எமன்!

ஹரியானா மாநிலம் குர்ஹானில் பிறந்த மஹிக்கு, 2012-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி ஐந்தாவது பிறந்த தினம். கேக் வெட்டி, மிட்டாய் கொடுத்து, கொண்டாடிய குழந்தை, உற்சாக மிகுதியில் இரவு 11 மணி வரை விளையாடிக் கொண்டிருந்தது. ஐந்தாவது பிறந்த நாள் முடிய ஒரு மணி நேரம் இருந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது. பிறந்த நாளில் மஹி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததால், அத்தனை ஆங்கில சேனல்களும் அதை 24 மணி நேர லைவ் ஆக்க, இந்தியா முழுக்க மஹி நினைவுகூரப்பட்டாள். இறுதியில் 85 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் அழுகிய நிலையில் அவளது சடலம்தான் மீட்கப்பட்டது.

மஹியின் மரணம், மத்திய-மாநில அரசுகளுக்குச் சங்கடங்களை உருவாக்க, சில அதிரடி அறிவிப்புகளை அரசுகள் வெளியிட்டன. ஆனாலும் என்ன? மஹியின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.

குழந்தை விழுங்கிக் கிணறுகள்!

ஒவ்வோர் ஆழ்துளைக் கிணறு மரணத்தின்போதும் அதிகாரிகளைக் கூட்டி சில அறிக்கைகளை வெளியிட்டு அமைதியாகிவிடும் அரசு இயந்திரம், இந்த முறை அதிக அக்கறை காட்டியிருக்கிறது. காரணம்... தேர்தல்!

திருவண்ணாமலை சுஜித்தின் மரணத்தை அடுத்து விழித்துக்கொண்ட தமிழக அரசு, தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர் ஆகியோரின் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தமிழகத்தில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாகக் கண்டறிந்து மூடுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருப்பதோடு, 12,620 உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது தமிழக அரசு.

கண்மாய்கள் தூர்ந்து, கிணறுகள் மூடி, வாய்க்கால்கள் வற்றி தண்ணீர் இல்லாமல் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பிரச்னை வந்தபோது, அதிவேக இயந்திரங்களைக் கொண்டு போர்வெல் போடும் பழக்கம் சந்து பொந்துகளில் எல்லாம் வளர்ந்தது. சுமார் 200 அடியில் தொடங்கி 1,000 அடி வரை போர்வெல் போடுவது என்பதும், 5 ரூபாயில் தொடங்கி 5,000 ரூபாய் வரை லாட்டரி வாங்குவதும் ஒன்றுதான். லாட்டரியில் நிச்சயம் பரிசு விழும் என்பதற்கு, எப்படி எந்த உத்தரவாதமும்  கிடையாதோ, அப்படித்தான் போர்வெல்களும்.

பல அடி ஆழம் தோண்டிய பின்னர் தண்ணீர் இல்லை என்றால், தோண்டிய குழியை மூடாமல் செல்வது ஒரு பிரச்னை. ஆனால், போர்வெல் தோண்டும்போது அதைச் சுற்றி அமைக்கப்படும் அவுட்டர் பைப் பூமியில் இருந்து சில அடி உயரத்தில் இருக்கும். போர்வெல் போடுகிறவர்கள் 'தண்ணீர் வராத குழிக்கு, எதுக்கு வீணாக பைப் ஃபிட்டிங்’ என்று நினைத்து அந்தப் பைப்பை உருவி எடுத்துவிட்டு குழியை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள். பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து போர் போடுகிறவர்கள், சில நூறு ரூபாய் செலவழித்து குழியை மூடாததோடு பைப்பையும் பிடுங்கிச் சென்றுவிடுவதால், இந்தக் குழிகள் தரையோடு தரையாக இருப்பதே கண்ணுக்குத் தெரிவது இல்லை. பல ஆண்டு களுக்கு முன்னர் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான குழிகளில்கூட செடிகளும் புதர்களும் உருவாகி, மூடப்பட்ட ஆபத்தாக இன்னும் உள்ளதாகத் தகவல் சொல்கிறார்கள் கிராமப்புறங்களில்.

கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 ஆழ்துளைக் கிணறு சம்பவங்கள் இதுபோல் நடந்திருக்கின்றன. இதில் உயிரோடு மீட்கப்பட்ட குழந்தைகள் இரண்டே இரண்டுதான். அதுவும் சுமார் 20 அடி ஆழத்துக்குள் விழுந்த குழந்தைகளை மட்டுமே மீட்க முடிகிறது. 2014-ல், கடந்த 15 நாட்களுக்குள் மட்டும் மூன்று குழந்தைகள் குழிக்குள் விழுந்து அதில் இரண்டு குழந்தைகள் இறந்திருப்பது, பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதில் நாம் காட்டும் அலட்சியத்தையே உணர்த்துகிறது.

ஆழ்துளைக் கிணற்றில் விழும் பெரும்பாலான குழந்தைகள் இறந்துபோகும் நிலையில், எவ்வளவுதான் துரித கதியில் சாத்தியமுள்ள வழிமுறைகளைக்கொண்டு குழந்தையை மீட்டாலும்கூட அரிதினும் அரிதாகவே வெற்றி கிடைக்கிறது.

குழந்தை விழுங்கிக் கிணறுகள்!

மிழகத்தின் பெரும்பாலான ஆழ்துளைக் கிணறு விபத்துகளில் குழந்தை மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன்.

''2008-ம் ஆண்டில் இருந்து ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் பணியில் என் ரோபோ இயந்திரத்தைப் பயன்படுத்தி வருகிறேன். எங்கள் குழுவினரின் மீட்புப் பணி வெற்றி அளித்தது சங்கரன்கோவிலில் மட்டும்தான். காலை 10 மணிக்குத் தகவல் கிடைத்ததும் மதுரையில் இருந்து கிளம்பி மதியம் 1 மணிக்கு சங்கரன்கோவில் சென்றோம். அங்கே 20 அடி ஆழத்தில் சிக்கியிருந்த ஹர்ஷனை மீட்க முடிந்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள்... ஒன்று, தாமதமின்றி சென்று சேர்ந்தது. இன்னொன்று குழிக்குள் மண் மூடவில்லை. ஆனால், மறுநாளே திருவண்ணாமலையில் விழுந்த குழந்தையை மீட்க நாங்கள் செல்வதற்குள் குழந்தை மீது மண் மூடிவிட்டது'' என்று சொல்லும் மணிகண்டன், அரசுத் துறையோடு இணைந்து செயல்பட வேண்டிய நெருக்கடி இருப்பதால் அளந்து பேசுகிறார்.

ழ்துளைக் கிணறுகளுக்குள் குழந்தைகள் விழுந்ததும் மக்கள் பதற்றமாகி, அந்தப் பகுதியில் உள்ள போர்வெல்காரர்களின் ஆலோசனைப்படி குழிக்குள் அவுட்டர் பைப்புகளை இறக்கிவிடுகிறார்கள். அவுட்டர் பைப்பை இறக்கும்போதே மண் உதிர்ந்து உள்ளே சிக்கியிருக்கும் குழந்தையின் மீது விழுகிறது. அடுத்து தீயணைப்புத் துறையோ, பேரிடர் மீட்புக் குழுவினரோ வந்து ராட்சத ஜே.சி.பி. இயந்திரங்களைக்கொண்டு பக்க வாட்டில் குழிகள் தோண்டத் தொடங்கி விடுகிறார்கள். இப்படித் தோண்டும்போதும், பாறைகளில் துளையிடும்போதும் நில அதிர்வில் மண் கணிசமாகச் சரிந்து உள்ளே சிக்கியிருக்கும் குழந்தையை மூடிவிடுகிறது.

பெரும்பாலான மீட்பு முயற்சிகள், தோல்வியில் முடிய காரணம், திட்டமிடாமல் அவசரகதியில் செயல்படுவதே. ஆனால், இதை வைத்து பக்கவாட்டில் தோண்டுவது தவறு என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. நிலம் அதிர்ந்து குழிக்குள் மண் சரியாத வகையில் தோண்டுவதன் தேவையை, குழந்தைகள் மண் மூடி இறக்கும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

''கிராமப் பகுதிகளில் போர்வெல் தொழில் நடத்துகிறவர்கள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஒரு பக்கம் போர்வெல் தொழில் செய்கிறவர்கள், இன்னொரு பக்கம் நில உரிமையாளர்கள். இவர்கள் இருவருக்கும் போர்வெல் அமைக்க அனுமதி கொடுக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த மூன்று தரப்பினருமே இதில் தவறு இழைக்கிறார்கள். எங்கு, யாருடைய நிலத்தில் எப்போது போர்வெல் அமைக்கப்படுகிறது என்பது, கிராம அலுவலகர்களுக்கு நிச்சயம் தெரியாமல் இருக்காது. இந்த நிலையில், போர்வெல் கொலைகளை தடுக்க இனியாவது கிராம நிர்வாகத்தை முறைப்படுத்த வேண்டும்.

ஆற்றுப்பாசனப் பகுதிக்கு அருகே போர்வெல் அமைக்கக் கூடாது என்ற விதி உள்ள நிலையில், பல கிராமப் பஞ்சாயத்துகளில் சட்டவிரோத போர்வெல்கள் அமைக்கப்படுகின்றன.அரசு, போர்க்கால அடிப்படையில் கிராமங்கள்தோறும் மூடப்படாத போர்வெல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார், திருவண்ணாமலையைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம்.

ரியானாவில் நடந்த மஹியின் மரணம், நாடு முழுக்க போர்வெல் மரணங்கள் தொடர்பான மரண பீதியை உருவாக்க, தொடுக்கப்பட்ட பொதுநல மனுவின் முடிவில், ஆழ்துளைக் கிணறுகள் தொடர்பாக சில நடைமுறைகளைப் பின்பற்றச் சொன்னது உச்ச நீதிமன்றம். ஆழ்துளைக் கிணறு தோண்டுபவர்கள் 15 நாள்களுக்கு முன்னரே மாவட்ட ஆட்சியரிடமும் உள்ளாட்சி அமைப்பிடமும் போர்வெல் நிறுவனத்தைப் பதிவதோடு, நில உரிமையாளரின் முகவரி, தோண்டுகிற போர்வெல் உரிமையாளரின் முகவரி அடங்கிய விவரங்களோடு அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். ஆழ்துளைக் கிணற்றின் வாயைக் கடினமான தகடுகளால் மூடி, கான்கிரீட் மேடை அமைத்து, கிணற்றைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும். 'பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளை அதன் அடி வரை மண்ணைக்கொண்டு மூடவேண்டும்!’ என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்த வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப் பட்டுள்ளதா என்பதை, மாவட்ட ஆட்சியர், வேளாண்மை, பொறியியல் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கண்காணித்து, மக்கள் அறியும் வகையில் நாளிதழ், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பான ஆவணங்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது. மாதம்தோறும் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசித்து இந்த நடைமுறைகளை மீறுகிற நில உரிமையாளர்கள், ஆழ்துளையிடும் ஒப்பந்தக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரிவாகவே பரிந்துரைத்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் விரிவான இந்தத் தீர்ப்பை எத்தனை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறியே?

ரோபோ உள்பட எந்த நவீனத் தொழில்நுட்பமும் இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வாக நிச்சயம் இருக்க முடியாது. பாரம்பரியமான நமது நீர் ஆதாரங்களை மீட்டெடுப்பதன் மூலம், ஆழ்துளைக் கிணறுகளுக்கே விடை கொடுத்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்!

கவனத்தில் கொள்ளவேண்டிய குறிப்புகள்...

• ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை விழுந்ததும், தீயணைப்புத் துறை, கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

•  குழிக்குள், பைப்புகளையோ அல்லது வேறு பொருள்களையோ நுழைக்கக் கூடாது.

•  மிக முக்கியமாக, குழந்தை விழுந்த குழியில் இருந்து விலகி இருந்து, அந்தக் குழிக்குள் மண் விழாதபடி பாதுகாக்க வேண்டும்.

•  மீட்புக் குழு வந்த பின்னர், குழந்தை பேசும் நிலையில் இருந்தால் பெற்றோரை வைத்து குழந்தையிடம் பேச்சுக் கொடுத்து அதன் பயத்தைப் போக்க வேண்டும்.

•  தடையற்ற ஆக்சிஜன் வழங்க வேண்டும்.

•  தட்பவெப்பத்தைக் கருத்தில்கொண்டு அதற்கேற்ப உரிய ஆலோசனையின்படி குழியைச் சுற்றி தண்ணீர் தெளித்து ஓரளவுக்கு வெப்பத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

•  நவீன கேமராவை குழிக்குள் பொருத்தி குழந்தையின் ஒவ்வோர் அசைவையும் கண்காணிக்க வேண்டும். உள்ளுக்குள்  வெளிச்சம் தெரியும்படி இருக்க வேண்டும்.

•  குழந்தை விழுந்த குழியின் பக்க வாட்டில் தோண்டும்போது, கனரக இயந்திரங்களைக்கொண்டு நிலம் அதிரும் அளவுக்கு தோண்டாமல், அதிர்ச்சி ஏற்படாவண்ணம் தோண்டும் சாத்தியங்களை ஆராய வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு